TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது”?

makkal“மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது”? அவர்களின் “மௌனத்தின் வலி” யாருக்குத் தெரியப்போகிறது?

இலங்கைத் தமிழர்களுக்காக கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் தானும் செய்தவற்றை நினைவூட்டி தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அண்மைக்காலமாக அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமிழகத்தின் “நக்கீரன் சஞ்சிகை ஆசிரியர் கோபாலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகளுக்கு தனது பிரதிபலிப்பை வெளிக்காட்டும் நோக்குடன் “முரசொலி யில் நீண்ட அறிக்கையொன்றை கலைஞர் கருணாநிதி கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 1956 இல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவுடன் இணைந்து தி.மு.க. குரல் கொடுத்தது தொடக்கம் அண்மைக்காலம்வரையான தனது செயற்பாடுகள் வரை விளக்கம் அளித்திருக்கும் முதலமைச்சர் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் பின்னடைவிற்கான காரணங்கள் குறித்து தனது வியாக்கியானத்தையும் முன்வைத்திருக்கிறார்.

makkal
இலங்கைத் தமிழ் மக்கள் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது? அவர்களின் மௌனத்தின் வலி யாருக்குத் தெரியப்போகிறது?

தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுக்கு இடையிலான சகோதரச் சண்டை, மிதவாத தமிழ்த்தலைவர்கள் படுகொலை, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்களையெல்லாம் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் கலைஞர் இறுதியாக 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க வேண்டாமென்று வலியுறுத்தியதன் மூலமாக அந்த மக்கள் தங்கள் விருப்பதை வெளிக்காட்டுவதற்கான ஜனநாயக வாய்ப்பை விடுதலைப் புலிகள் பறித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் தேர்தலில் விடுதலைப்புலிகள் அவசரப்பட்டு எடுத்த முடிவே இன்றைய இலங்கைத் தமிழர்களின் அவலங்களுக்கெல்லாம் காரணமாகிவிட்டது என்ற தொனியில் கருத்துத் தெரிவித்திருக்கும் கருணாநிதி தமிழர்களின் போராட்டம் எங்கே போய் முடிந்தது என்பதை எண்ணிப்பார்த்து தாங்கள் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது? மௌன வலி தான் யாருக்குத் தெரியப்போகிறது? என்று வசனம் எழுதியிருக்கிறார்.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னுரிமை கொடுத்திருப்பேன் என்றும் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டுமென்று விடுதலைப் புலிகள் கோரியதால் அவர்கள் வாக்களிக்கவில்லை என்று விக்கிரமசிங்க நக்கீரன் கோபாலுக்கு கூறியதை மேற்கோள்காட்டியே கருணாநிதி விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. அந்த இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தமிழர் நெருக்கடி தொடர்பாக எண்ணற்ற அறிக்கைகளையும் கடிதங்கள் மற்றும் கவிதைகளையும் எழுதிய முதலமைச்சர் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்த விடுதலைப்புலிகளின் செயல் குறித்து கருத்து வெளியிட்டாரா இல்லையே!

இலங்கையில் இருந்து சென்று விக்கிரமசிங்க கோபாலுக்கு பேட்டி கொடுக்கும் வரை தேர்தல் புறக்கணிப்பு குறித்து கலைஞர் உண்மையில் அறிந்திருக்கவில்லையா? வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் நிச்சயமாக வித்தியாசமானதாகவே இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தற்போதைய தருணத்தில் மாத்திரம் விடுதலைப்புலிகளின் தவறுகள் பற்றி கலைஞர் உரத்துப் பேசுவதன் நோக்கம் என்ன? தனது குற்றச்சாட்டுகளுக்கு இலங்கைத் தமிழர் தரப்பில் இருந்து பதிலளிக்க ஆட்கள் இல்லை என்ற நம்பிக்கையில்தான் அவர் இத்தகைய அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை.

மறுபுறத்திலே, கலைஞரின் அறிக்கையை தமிழகத்தின் எதிரணிக் கட்சிகள் கண்டனம் செய்திருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. வீரம் என்கிற போராடும் மனவலிமை தன்னிடம் இல்லையென்பதையும் தனது சூழ்நிலைக்கு இசைவாக செயற்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் அறிக்கை மூலமாக கருணாநிதி தெளிவுபடக்கூறியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கும் முன்னாள் முதலைமைச்சரும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா “தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது மௌன வலியாகத்தானிருக்கும். தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டில்லிவரை ஓங்கி ஒலிக்கக் கூடிய அலறல் வலியாக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம் என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

இலங்கைத்தமிழர் நெருக்கடியைப் பொறுத்தவரையில் தீவிரமான நிலைப்பாட்டைக் கொண்ட மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனும் கருணாநிதியின் துரோகத்தை தமிழினம் ஒருபோதும் மன்னிக்காது என்றும் கூறியிருக்கிறார்கள். அதேவேளை, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்ற இன்னொரு தலைவரான பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் கலைஞரின் பிந்திய அறிக்கை தொடர்பில் இதுவரை எந்த விதமான கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார். எந்தப் பிரச்சினையிலுமே தங்களுக்கிடையிலான வக்கிரத்தனமான கட்சி அரசில் போட்டாபோட்டியை அடிப்படையாக வைத்தே அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் தமிழகத்தின் திராவிட இயக்கக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் அதே அணுகுமுறைகளையே கடைப்பிடித்துவருகின்றன. அந்த அநாகரிகமான அரசியல் கலாசாரத்திற்கு நீண்டதொரு வரலாறே இருக்கிறது. அதிலிருந்து அக்கட்சிகளின் தலைவர்கள் ஒருபோதுமே விடுபடப்போவதில்லை.

கருணாநிதிக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்த விவகாரத்தையும் பிரச்சினையாக்க ஜெயலலிதா தவறமாட்டார். ஜெயலலிதாவுக்கு எதிராகப் பயன்படுத்த முடியுமென்றால் எந்த விவகாரத்தையும் பிரச்சினையாக்க கருணாநிதி தவறமாட்டார். இது தமிழகத்தின் எழுதப்படாத அரசியல் விதி. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னரான காலகட்டத்திலே தமிழ்மக்கள் ஒரு அரசியல் வெற்றிடத்தில் நிராதரவாக விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லை. தமிழ் மக்கள் தங்களது நியாயபூர்வமான குறைந்தபட்ச அரசியல் அபிலாசைகளுக்காகவேனும் குரல்கொடுக்கக் கூடிய மன வலிமையுடன் இன்று இல்லை. மூன்று தசாப்த காலப் போரின் விளைவான அவலங்களிலிருந்து மீள முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று செயற்படக்கூடியவையாக இருக்கும் பரிதாபகரமான நிலைமையையே எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது.

இத்தகையதொரு சூழ்நிலையில் தமிழகத்தில் அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து வெளிவரக் கூடிய கருத்துகள் தமிழ் மக்களுக்கு மேலும் வேதனையைத் தரக்கூடியவையாக இருக்கக்கூடாது. இதை அந்தத் தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். போரில் தமிழ் மக்கள் அழிந்துகொண்டிருந்த வேளையில் கூட கட்சி அரசியல் அடிப்படையிலான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்த தமிழகத் தலைவர்கள் போருக்கப் பின்னரான காலகட்டத்திலும் அந்தவிதமாகவே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 20 மைல்களுக்கு அப்பால் ஆறரைக் கோடி தமிழர்கள் இருந்தும் எந்தப் பயனும் இல்லாமல்போய்விட்டது குறித்து இலங்கைத் தமிழ் மக்கள் மௌனமாக அழுவது யார் காதில் விழப்போகிறது? அவர்களின் மௌனத்தின் வலி யாருக்குத் தெரியப்போகிறது? கடந்த கால அரசியல் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டுதான் தமிழ் மக்கள் தங்களது எதிர்கால அரசியல் பாதையை வகுக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள். அந்தப் படிப்பினைகளில் தமிழக அரசியல் கட்சிகள் தொடர்பான அனுபவங்களும் மிக மிக முக்கியமானவையாகும்.

ஆதவன் இன்போதமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*