TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை அரசியலும் பிராந்திய வல்லாதிக்க போட்டிகளும்

enavari arasiyalதென்னிலங்கையின் அரசியல் நெருக்கடிகள், பூகோள பிராந்திய போட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போது பொதுத் தேர்தலையும், அரச தலைவருக்கான தேர்தலையும் விரைவாக நடத்திவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

எனினும் போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை உயர்த்திய பின்னரே தேர்தலைச் சந்திப்பதற்கு அரசாங்கம் தன்னை தயார்படுத்தி வந்தது. ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டமை பொருளாதாரத்தின் உயர்வுக்கு தடையாக அமைந்து விட்டது. அனைத்துலகத்தின் அழுத்தங்களை மீறி பொருளாதார அழுத்தங்களில் இருந்து மீளமுடியாது என்ற நிலை ஒருபுறம் ஏற்பட மறுபுறம் முன்னாள் இராணுவத்தளபதியும் படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரமும் ஒரு பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்துக்கும் படையதிகாரிகளின் பிரதானிக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பொன்சேகாவின் பதவி விலகல் என்பது அவரது அரசியல் பிரவேசம் என பரவலாக பேசப்பட்ட போதும் அது தொடர்பான உத்தி யோகபூர்வமான அறிவித்தலை அவர் இன்னும் விடுக்கவில்லை. எனினும் அவரின் அரசியல் பிரவேசம் உறுதியானதே என்று பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அரசாங்கத்திடம் போரின் வெற்றி என்ற அஸ்த்திரம் உள்ளது. அதனை உடைப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் எதுவும் இல்லை. ஆனால் பொன்சேகா என்ற அஸ்த்திரம் மூலம் போரின் வெற்றி என்ற வாக்கு வங்கியை உடைத்து விடலாம் என எதிர்க் கட்சிகள் நம்புகின்றன. ஏனெனில் போரை நடத்துவதற்கு ஆணையிட்டவர் என்ற அதிகாரம் ஜனாதிபதி மஹிந்தவை சாரும்போது அதனைக் களத்தில் வழி நடத்தியவர் என்ற நிலையை பொன்சேகா தக்கவைத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. அதாவது எதிர்க்கட்சிகள் தமது வசம் உள்ள வாக்கு வங்கியுடன், போரின் வெற்றி என்ற சொற்பதத்தின் மூலம் பொன்சேகாவால் பெற்றுக்கொள்ளப்படும் வாக்குகளையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளன. தென்னிலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் படை அதிகாரிகளுக்கு அரசியலில் அதிக முக்கியத்துவம் உண்டு. அதனை காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தான் உருவாக்கியிருந்தன.

அதாவது, போர் என்ற உளவியல் உந்து சக்தி ஒன்று தென்னிலங்கை மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எழுச்சிகள் கடந்த மூன்று தசாப்தங்களில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் தான் பல படை அதிகாரிகள் அரசியலில் இலகுவாக நுழைந்து கொண்டுள்ளனர். ஜெனரல் அனுருத்த ரத்வத்த, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் லக்கி அல்கம என அந்த பட்டியல் நீளமானது. அண்மையில் தென்னிலங்கையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் கூட, 1993 ஆம் ஆண்டு அராலித்துறை கண்ணி வெடி தாக்குதலில் உயிர்தப்பிய படையினரை முன்நிறுத்தி அரசு வெற்றியீட்டியிருந்ததும் நாம் அறிந்தவையே.

எனவே படை அதிகாரிகளுக்கு தென்னிலங்கையின் அதிக ஆதரவுகள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாதது. சரத் பொன்சேகா பதவி விலகிய பின்னர் உருவாக்கிய இணையத்தளத்தில் 15,000 இற்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் 24 மணிநேரத்தில் தமது ஆதரவுகளை தெரிவித்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. திடீரென அரசியலில் ஏற்பட்ட இந்த திருப்பம் ஆளும் தரப்பை அதிகம் பாதித்துள்ளதாகவே அனைத்துலக ஊடகங்களும் கூறுகின்றன. அதனைப் போலவே தேர்தல்கள் தொடர்பான அறிவித்தல் குறித்து கடந்த செப்டெம்பர் மாதமே கருத்துகளை வெளியிட்டு வந்த அரசாங்கம் தற்போது அதனை தவிர்த்து வருகின்றது.

கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் 19 ஆவது மாநாட்டில் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது வெளியிடப்படவில்லை, பின்னர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரலாம் என நம்பப்பட்டது ஆனால் அதுவும் நடைபெறவில்லை. எனினும் சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச தலைவர்களை அழைத்த ஜனாதிபதி, பெரும் தேர்தல் ஒன்றுக்கு தேவையான அரசியல் பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன், அரசாங்கத்துக்கு உள்ள ஆதரவுகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ ஒரு இலட்சம் வாக்குகளால் வெல்லப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாகவே பலராலும் நோக்கப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். ஏறத்தாழ ஏழு இலட்சம் வாக்குகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. ஆனால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் அரசியல் சாதுரியம் மிக்க முடிவுகளை நிச்சயமாக எடுப்பார்கள் என்ற கணிப்புகள் உண்டு. இந்த நிலையில் போரின் வெற்றி என்ற மந்திரம் மட்டுமே தென்னிலங்கையில் உள்ள வாக்குகளை அதிகம் கவரும் தன்மை கொண்டதாக உள்ளது.

ஆனால் அதுவும் தற்போது பொன்சேகாவினால் பிரிக்கப்பட்டால் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதே அரசின் கணிப்பு. இந்த நிலையில் அரசாங்கத் தரப்புக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் மேலும் விரிசல் நிலையை அடைந்துள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் பூகோள பிரந்திய ஆதிக்கப்போட்டிகளும் அதிகம் உள்ளன இந்துசமுத்திர பிராந்தியத்தின் தென்முனையில் காலூன்ற முனைந்து வரும் சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது.

அவ்வாறு மேற்கொள்ளாது விட்டால் சீனாவின் பொருளாதார மேம்பாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை விழுங்கிவிடும். மறுபுறமாக அமெரிக்காவின் ஆளுமையின் வீச்சும் வலுக்குன்றிவிடும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணத்தின் பின்னர் இலங்கையில் உள்ள சீன அதிகாரிகளின் பிரசன்னம் குறைந்து விடலாம் என சிலர் ஆறுதல் கூற முற்பட்டுள்ள போதும், நிலக்கரி மின்உற்பத்தி, எண்ணெய் அகழ்வுப்பணி என சீனாவின் முதலீடுகளும், தலையீடுகளும் இலங்கையில் அதிகரித்தே வருகின்றன.

இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலைகள் மற்றும் எண்ணெய் அகழ்வுப் பணிக்கு 350 மில்லியன் டொலர்களையும் சீனா கடனாக வழங்க முன்வந்துள்ளது. அம்பாந்தோட்டையில் ஏறத்தாழ ஒரு பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ள சீனா தற்போது மேலும் 1.25 பில்லியன் டொலர்களை கட னாக வழங்க முன்வந்துள்ளது. எனவே சீனாவின் அண்மைக்கால உதவிகள் ஏறத்தாழ 2.25 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது அண்ணளவாக அனைத்துலக நாணயநிதியம் வழங்கிய கடன் தொகைக்கு ஒப்பானது.

சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும் தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ள போதும், அதன் வீச்சு மேற்குலகத்திற்கும், சீனாவுக்கும் சவாலானதாக மாறுமா என்பது சந்தேகமே. மேலும் எல்லா நாடுகளுடனும் வழுக்கும் உறவை மேற்கொண்டு அதன் அனுகூலங்களை இலங்கை அரசாங்கங்கள் முன்னர் பெற்று வந்திருந்தன. ஆனால், தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை அது சந்தித்துள்ளது. அதாவது, ஏதாவது ஒரு பக்கம் சார்புநிலை எடுக்கவேண்டிய கட்டாயம் அதற்குண்டு.

அதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதே காரணம். இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த முனைவாக்கம் இலங்கையின் அரசியலில் ஆதிக்கத்தை செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மனித உரிமை மீறல்கள், போரியல் குற்றங்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் என்ற வலுவான காரணகளை மேற்குலகம் இறுகப்பற்றியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்திற்கு வலுவான காரணிகள் இல்லை ஆனால் பொருளாதார, படைத்துறை மற்றும் இராஜதந்திர உதவிகள் மூலம் இலங்கையை கவர்ந்துள்ளது.

இந்தியா தமிழ் மக்களை முற்றாக எதிரிகளாக மாற்றிக் கொண்டதனால் தற்போது சீனாவின் அணுகுமுறைகளுடன் போட்டிபோட்டு வருகின்றது. ஆனால், மேற்குலகத்தின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக இந்தியாவும் தனது மௌனத்தை கலைத்தே ஆகவேண்டும். விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்தை இந்தியா அடைந்துள்ளது. ஆனால் அதன் வீச்சு என்ன என்பது தமிழ் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளின் வலிமையில் தான் தங்கியுள்ளது. அதனைத் தான் தற்போது மேற்குலகம் மேற்கொள்ள முற்பட்டு வருகின்றது.

– வேல்ஸிலிருந்து அருஷ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*