TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழின அழிப்பின் இறுதிக் கட்டம் யாரைக் காப்பாற்றுவதற்க்கு சூரிச்சில் போலித் தமிழ்க் கூட்டம்

swiss_conferenceதமிழ் மக்களையும் தமிழீழ மண்ணையும் ஆரிய பௌத்த சிங்களம் தனது இறுக்கமான இராணுவப் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டது. மே 18ந் திகதி தமிழீழ மக்களின் ஒரே ஒரு விசுவாசமான விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப் பட்டு விட்டது. அது முதல் தமிழீழத்திலும் வெளியிலும் உள்ள தமிழரின் இயங்குதிறன் முற்றாக முடக்கப்பட்டும் விட்டது.

இந்த உண்மையை உணராதவர்கள் ஏற்காதவர்கள் ஏற்க விரும்பாதவர்கள், எவரும் ஏற்றுவிடக் கூடாது என நினைப்பவர்கள் எனப் பல வகையாகத் தமிழினம் சிதறுண்டு கிடக்கிறது. ஈழத் தமிழரின் உரிமைப் போரை முதலில் கணக்கில் எடுக்காத சிங்கள ஆட்சியாளர் தமிழர்களின் அரசியல் தலைவர்களுக்குப் பதவிகளும் தனிப்பட்ட சலுகைகளும் வழங்கித் தமிழிரின் உரிமைக் குரலை வெளியே தெரிய விடாமல் செய்தனர்.

zurich_kooddam
மகிந்தரை மீளவும் தூக்கி நிறுத்தவல்ல ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கை தேடி வந்திருக்கிறார்கள்.

kooddam

kooddam_swiss

சென்ற நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியும் தமிழர்களான சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், சேர் வைத்திலிங்கம் துரைசாமி, சேர்.கந்தையா வைத்தியநாதன், சேர்.சிற்றம்பலம் காடினர் என தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல அரசின் சிங்கள இனவெறி நடவடிக்கைகளுக்குத் துணைபோன அரச அதிகாரிகளுக்கும் இத்தகைய கௌரவப் பட்டங்கள் பிரித்தானிய அரசரின் அல்லது அரசியின் பிறந்த நாள் பரிசாக கொடுத்துத் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப் பட்டன (?).

1956 முதல் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்ச்சி காரணமாக அரசின் தரகர்களாகச் செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகள் மக்களால் தெரிவு செய்யப்படாத நிலை ஒன்று உருவானது. அது முதல் சிங்கள அரசுகள் அல்பிரட் துரையப்பா, குமாரசுவாமி வினோதன் போன்ற கட்டாக் காலிகளை வளர்த்து அவர்களை மக்களால் தெரிவு செய்யும் சமூக நலத் தொண்டர்களாக்கித் தேர்தல்களில் வெற்றிபெறச் செய்தன.

இப்படி உருவான கட்டாக் காலிகளால் சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் உள்ளான இளைஞரும், கட்சி அரசியல் மோதலுக்காகப் பயன் படுத்தப்பட்டும் அரசியல் விழிப்பும் பெற்ற இளைஞராலும் சிங்கள அரசுகளின் தரகர்களாகச் செயற்பட்டவர்கள் கொலை அல்லது கொலை அச்சுறுத்தலால் அகற்றப் பட்டனர்.

எனினும் சிங்கள அரசுகளின் அணுகு முறை மாறவில்லை. அடுத்த நிலையாக அவை நியமன உறுப்பினர்களாக்கி இத்தகையோரைக் கொண்டே சிங்கள ஆட்சியாளர் தமது அரசியல் தேவைகளை நிறைவேற்றினர். இப்படி நியமன உறுப்பினராக 1965ல் டட்லி அரசில் முருகேசு திருச்செல்வம் தமிழரசுக் கட்சியின் சார்பில் நியமனம் பெற்று உள்ளுராட்சி மந்திரிப் பதவி பெற்றிருந்தாலும் கடைசிவரை அவர் டட்லியின் விசுவாசியாகவே செயற்பட்டார்.

1970ல் எம்.சீ.சுப்பிரமணியமும், செல்லையா குமாரசூரியரும் ஸ்ரீமா அரசின் நியமன உறுப்பினராகி தமிழருக்கு அதிக பாதிப்புக்குக் காரணமான பௌத்த சிங்களக் குடியரசு அரசமைப்பை உருவாக்க உதவினர். இந்த அரசமைப்பை வரைந்தவர் அதுவரை தமிழ் மக்களின் நண்பராகவும் லங்கா சமசமாசக் கட்சியின் தலைவரும் புகழ் மிக்க வரலாற்று ஆசிரியருமான கொல்வின் ஆர். டி. சில்வா ஆவர். அவரே 1956ல் தனிச் சிங்களச் சட்ட விவாதத்தின்போது இரு மொழி ஒரு நாடு ஒரு மொழி இரு நாடு எனப் பேசி தனிச் சிங்களச் சடட்த்தைக் கண்டித்த பெருமகன்.

பின்னர் இதே வழிமுறையே இன்று மகிந்தவரை கடைப்பிடிக்கப் பட்டு வரும் அரச செயற்பாட்டு நடைமுறையாகும். இன்று சூரிச்சில் மகிந்தருக்காக அரசு தரப்பும் தமிழரின் ஏகப் பிரதிநிதிகள் எனச் சொல்லக் கூடிய அளவு 22 பிரதிநிதிகளைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பும் தமிழருக்கான ஒரு தீர்வுத் திட்டம் என்பதை விடவும், மகிந்தரை மீளவும் தூக்கி நிறுத்த வல்ல ஒரு அலாவுதீனின் அற்புத விளக்கை தேடி வந்திருக்கிறார்கள்.

நவக்கிரகக்கள் போல் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட இவர்கள் எப்படி யாரால் இப்படி ஒரு கூட்டுக்குள் அடைக்கப் பட்டுள்ளனர் என்பது வெளிவராத இரகசியம். மகிந்தர் ரணில் சரத் பொன்சேகா அனைவரையும் கவனத்தில் எடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் இந்தியாவுக்கு அல்லாது வேறு எவருக்கும் இருக்க முடியாது என்பது உலகறிந்த இரகசியம்.

இத்தனை பொருட் செலவில் இத்தனை பேரையும் ஆட்டி அலைத்துக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் வல்லமையும் கொண்ட ஒரு அரசு சார்பற்ற தொண்டர் நிறுவனம் இருக்க முடியுமென்றால்: நோர்வேயும் அனைத்துலக அரசுகளும் ஆறு சுற்று சிங்கள அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைதிப் பேச்சுகளும் எதற்காக நடத்தப் பட்டன?

zurich

அமைதிப் பேச்சுகளின் போதே புலிகள் பயங்கரவாதிள் ஆக்கப் பட்டதும் அவர்களை அழிக்க முழு இனத்தையுமே சகட்டு மேனிக்குக் கொன்றொழித்தும் அவர்களை வாழ்விடங்களை விட்டு ஓடச் செய்து தனது முகாமுக்குள் சிறைவைத்த படியே அவர்களை உள் நாட்டில் இடம் பெயர்ந்த மக்கள் எனக் கூறிச் சித்திரவதை செய்வது எதற்காக ? இந்தத் தொண்டர் நிறுவனத்துக்கு இவை எதுவும் தெரியாமல் போனது எப்படி?எவர் என்ன சொன்னாலும் அதனை நம்பி ஏமாறும் தமிழனின் காதில் பூ வைக்க நிறையவே இடம் உண்டு என்பதாலா?

புலிகள் கட்டமைப்பு உருக்குலைந்து உறுதி குலைந்து கிடக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்தான் இலங்கை இந்திய அரசுகளின் ஆசைகள் நிறைவேறும். இராணுவ வெற்றியால் இலங்கை இந்திய அரசுகளுக்கு வெண்ணெய் திரண்டு வரும் வேளையில் தாழி (பானை)யே உடைந்து விடும் என்ற பயம் தொட்டுக் கொண்டு விட்டது. அதற்குக் காரணம் புலம் பெயர் தமிழர் முன்னெடுத்து வரும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் முயற்சியே.

உள் வீட்டுப் பிரச்சனையாய் இருந்த இலங்கை அரசின் இன வெறியானது தமிழின அழிப்புப் போராக மாறி உலகம் கேள்வி கேட்கும் பிரச்சனை ஆகிவிட்டது. புலம் பெயர் தமிழரின் அயராத போராட்டத்தால் நேர்மையான நீதியான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என எம்மைப் பயங்கரவாதப் பட்டியலிட்ட நாடுகளே பேசத் தலைப்பட்டு விட்டன. ஐ.நா.வும் அதன் செயலரும் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பதே பெரய விடயம்;.

ஆகவே இலங்கை அரசை போர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல் வலுப் பெற்று வருகிறது. அரசியல் தீர்வுப் பொதி பைக்குள் இருக்கிறது அதற்கு முன்னர் கையில் இருக்கும் பயங்கரவாதப் பிரச்சனையைத் தீர்க்க உதவுங்கள் எனப் பெற்ற உலக நாடுகளின் சகல வளங்களும் பெற்றுப் புலிகளை அழித்தாயிற்று என்று சொன்ன பின்னரும் அரசின் பைக்குள் இருந்ததாகக் கூறப்பட்ட அரசியல் தீர்வை இன்று வரை எவர் கண்ணுகன்கும் தெரியாமல் கிடக்கிறது.

உண்மையில் சிங்கள அரசிடம் பல்லின மக்கட்சமுதாயம் சார்ந்த ஜனநாயக வழிமுறை கொண்ட அமைதி வழி அரசியல் திட்டம் என்பதே கிடையாது. அப்படியான ஒன்றை எந்த ஒரு சிங்களத் தலைவராலும் கொண்டுவர முடியாது. அப்படியான ஒரு தீர்வைத் தர வல்ல தலைவராக எல்லாத் தகுதிகளும் வசதி வாய்ப்புகளும் வரலாற்று சூழ்நிலையும் பெற்றிருந்த அதிபர் சந்திரிகா கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார். பின்னாளில் தாம் விட்ட மூன்று தவறுகள் பற்றியும் பேசிக் கொண்டார்.

* ஆனால் மகிந்த சந்திரிகா போன்ற வழியில் பதவிக்கு வந்தவரல்ல. வந்து விழுந்த பதவியும் போய் விடுமோ மீளவும் வருமோ வந்தாலும் அதற்குத் தமது மகனும் வரும் வாய்ப்பு ஏற்படுத்த முடியுமா? என்பதே அவர் சிந்தனையாக இருக்கிறது. ஆனால் இங்கு பார்க்க வேண்டியது சிங்களத்தின் பிரச்சனை அல்ல. மாறாக உலக தரத்துக்கு உயர்தப்பட்டு விட்ட ஈழத் தமிழரின் நாடுகடந்த அரசுக்கான பிரகடனம் இலங்கை இந்திய அரசுகளுக்கு வெண்iணெய் திரளும் வேளையில் தாழியை (பானையை) உடைக்கும் செயலாக மாறி இருக்கிறது.

அதைத் தடுக்க இலங்கை இந்திய அரசுகள் எடுத்து வரும் சாம பேத தான தண்ட முறைகளில் ஒன்றாக இந்த மாய மான் புல்லு மேயப் புலம் நோக்கி வந்திருக்கிறது. புலி எதிர்ப்பு ஆதரவாளர் பொதுவாகக் கிண்டலடிக்குகும் கேள்வியாக, “தமிழீழம் கேட்பவர்கள் அங்கே நின்று கூத்தாடாமல் இந்த நாடுகளில் ஏன் கூச்சலிடுகிறீர்கள்?“ எனக் கேட்டுத் தமது அரசியல் அறிவீனத்தை வெளிப்படுத்தி விடுவர்.

thaadi

ஆனால் இங்கு வந்து கூடியுள்ள புத்தி(?)மான்களை அரசியல் அறிவுள்ள எவரும் கேட்க வேண்டிய கேள்விகளாக?அமைச்சர்களும் பாராளுமன்ற அங்கத்தவர்களும் அவர்களது கட்சிகளும் பாராளுமன்றமும் மக்களும் அவர்கள் பற்றிய பிரச்சனைகளும் இலங்கையிலும் இலங்கை சார்ந்தும் இருக்கும் பொழுது இவை எவற்றிலுமே எந்த வகையிலும் சம்பந்தப்படாத சுவிஸ் நாட்டில் ஏன் எதற்காகக் கூட வேண்டும். இங்கு கூடித் தீர்மானம் போட்டுவிட்டால் அங்கே எல்லாம் நடந்துவிடுமா? என்பதாக உள்ளன

இங்கே வந்து கூடிப் பேசி அறிக்கை விடுத்தால் அது புலம் யெர் தமிழரின் நிலைப்பாடாக உள்ளது எனக் காண்பிக்க முடியும் என்ற எண்ணம் அல்லாது வேறு என்னவாக இருக்க முடியும்.?

இத்தகைய கபடத் தனத்தோடு இவர்கள் நடப்பார்களேயானால் அவர்கள் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கும் செய்யும் அறுதியும் இறுதியுமான இனத் துரோகமாகும். இலங்கை இராணுவ ஆட்சிக்குள் முழுத் தமிழினத்தையும் அடக்கி வைத்து அராஜக ஆட்சி நடத்தும் இந்த வேளையில் இங்கே எதற்கு ஏன் அரசியல் தீர்வு சர்வ கட்சி இணக்கம் என்ற போலி நாடகங்கள்?

இவர்களின் தங்க முலாம்களை நம்பிப் புலம் பெயர் மக்களும் மக்கள் அமைப்புகளும் தமிழருக்கான அடுத்த கட்ட அமைதிவழி அரசியல் தீர்வாக நாடு கடந்த தமிழீழ அரசமைக்க வேண்டும்.; இழந்து விட்ட தமிழர் தாயகத்தையும் தமிழிரின் அரசியல் உரிமைகளையும் தனித் தமிழீழ அரசு ஒன்றின் மூலமே பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்து உறுதியுடன் செயற்படவேண்டும்.

இன்று இங்கே நடக்கும் தமிழ்த் தலைவர்கள் எனப்படுபவரின் கூட்டமானது தமிழரின் இராணுவ பலத்தை அழித்த இலங்கை இந்திய அரசுகள் இப்போது எஞ்சி உள்ள புலம் பெயர் மக்களிடம் மட்டுமே இருக்கின்ற ஜனநாயக அமைதி வழிப் போராட்டத்தையும் நசுக்கி சிங்களத்தின் தமிழின அழிப்பின் இறுதி கட்டத்தை வெற்றி பெறச் செய்யும் முயற்சியாகும்.

* இவர்களின் முயற்சியை என்ன விலை கொடுத்தேனும் புலம் பெயர் மக்கள் முறியடித்து நாடு கடந்த தமிழீழ அரசின் மூலம் வட்டுக் கோட்டைத் தீர்மானம் திம்புக் கோரிக்கைகளை உள்ளடக்கிய சுயாதீன இறையாண்மை கொண்ட தனித் தமிழீழ அரசமைக்கும் அனைத்துச் செயற்பாடுகளிலும் முழுமையான பங்களிப்பு வழங்குவதே தமிழருக்கும் தமிழரது வருங்காலச் சந்ததிக்கும் நாம் செய்யும் வரலாற்றுக் கடமையாகும். இங்கே தமிழர் என்பது தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட இந்து இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ இன்னும் மத நம்பிக்கை அற்ற பேர்களையும் உள்ளடக்கும் என்பதைக் கவனத்தில் எடுக்கவும்.

த.எதிர்மனசிங்கம்.இன்போதமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*