TamilSpy

பொழுது போக்கு இணையம்…

“நடந்தது இனப்படுகொலைதான்” கலைஞன் கமலின் மனக்குமுறல்! – புகழேந்தி தங்கராஜ்

kamalஇயக்குநர் ஆர்.சி.சக்திக்கும் கமலுக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது, அழுத்தமானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றான ‘உணர்ச்சிகள்’, கமலுக்கும் கதாநாயகனாக முதல்படம், சக்திக்கும் இயக்குநராக முதல்படம்.

சென்ற ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடந்த சக்தி சாரின் பவளவிழாவில் பேசிய கமலின் உரை, அரிதாரத்தை அள்ளி அப்பிக்கொள்ளாத அரிய உரை. “ஒரு அண்ணன் எனக்கு நண்பனாக வாய்த்ததும், ஒரு நண்பன் எனக்கு அண்ணனாக வாய்த்ததும் எனக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு’ என்று கமல் குறிப்பிட்டபோது, விழா மேடையில் அண்ணன் சாருஹாசனும் இருந்தார், நண்பன் சக்தியும் இருந்தார். கமல் அப்படிப் பேசியபோது, சக்தி சார் முகத்தில் ஒரு மெலிதான புன்னகையை மட்டுமே பார்க்க முடிந்தது.

சக்தி சாரின் நண்பர்கள் பலரும் அந்த விழாவில் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். என்றாலும், அபூர்வ சகோதரர்கள் சாருஹாசன் பேச்சும் கமலஹாசன் பேச்சும் தான் என்னை வெகுவாகப் பாதித்தது. அடுத்த சில தினங்களில் சக்தி சாரைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தேன்.

‘கமல் எழுதிவைத்துக் கொண்டு பேசவில்லை…. அந்த வார்த்தைகள் அவரது பேச்சின் இடையே இயல்பான கவிதையாக வந்து விழுந்தன. இரவின் கடைசிப் பேருந்தையும் வேண்டுமென்றே விட்டுவிட்டு கோடம்பாக்கத்திலிருந்து ஆழ்வார்ப்பேட்டைக்கு நடந்தே சென்ற அந்த நாட்களிலும் கமலின் பேச்சு இப்படித்தான் இருந்ததா’ என்று சக்தி சாரிடம் கேட்டேன். ஒரு ரோஜா மொட்டு மலர்வது மாதிரி மேடையில் மெலிதாகச் சிரித்த அந்த மனிதர், தன்னுடைய வழக்கப்படி ஊரதிரச் சிரித்தார்.

நல்ல சினிமாவின் உந்து சக்தியாக இருந்த அந்த மனிதர் எப்படிச் சிரிப்பார் என்பதை, சாய் நகர் குல்மொஹர் மரங்களின் இலை கிளைகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் நீங்கள்! இப்போதும் அந்த கம்பீரமான சிரிப்பு என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

சக்தி சார் பற்றி கமல் சொன்ன வார்த்தைகளை சற்றே மாற்றினால், அவருக்கே தைத்த சட்டை மாதிரி கச்சிதமாகப் பொருந்துகிறது. கமல் என்கிற கலைஞன் ஒரு உண்மையான மனிதனாகவும், கமல் என்கிற மனிதன் ஒரு உண்மையான கலைஞனாகவும் இருக்கிறான். அதனால்தான், ‘தமிழ் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்’ என்று பேசுகிற துணிவு கமலுக்கு வாய்த்திருக்கிறது.

‘பக்கத்திலேயே ஒரு இனப்படுகொலை நடந்து முடிந்துவிட்டதே’ என்கிற கமலின் ஆதங்கம், ஒரு நிஜமான கலைஞனின் ஆதங்கம். அவர் இதைப் பதிவு செய்திருப்பது ஆகப்பெரிய ஒரு முன்னணி ஊடகத்தில்! அதனால், மற்ற ஊடகங்களிலும் இது நிச்சயம் பதிவாகும் என்று எதிர்பார்த்தேன். அப்படியெதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

கமல் ஒரு எவர் கிரீன் ஹீரோ. ஊடக வெளிச்சத்திலேயே இருப்பவர். அவர் பேசுவது அனைத்துமே பதிவாகி விடுகிறது. விவாதத்துக்குரிய விஷயங்களில் கமலின் கருத்தைப் பூதாகரமாக்கி, அவரது எல்டாம்ஸ்ரோடு வீட்டு வாசலில் தலைவலியைக் கொண்டுபோய் இறக்குவது ஊடகங்களின் வழக்கம். இந்த விஷயத்தை மட்டும் அவர்கள் இருட்டடிப்பு செய்வது ஏனென்று புரியவில்லை.

‘கமல் ஒரு நடிகர்… அவ்வளவுதான்…. அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் தந்துவிட வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்’ என்று என் இனிய ஊடகவியலாளர்களில் எவரேனும் பதிலளித்தால் நான் ஆச்சரியப்படமாட்டேன். ஏனென்றால், அவர்களது சமூகப் பார்வையின் லட்சணம் அப்படி!

ஒருவேளை கமல் இப்படி மாற்றிப் பேசியிருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள்…..

“நடந்தது போர்க்குற்றம்தான்…. அதை இனப்படுகொலை என்று சொல்வது அயோக்கியத்தனம்” – கமல் இப்படிப் பேசியிருந்தால், சில தமிழகப் பத்திரிகைகள் மட்டுமல்ல, வட இந்திய ஊடகங்களும், ஆங்கில ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு கமலைக் கொண்டாடியிருப்பார்கள். ‘இல்லை இல்லை, உண்மையைப் பேச கமல் ஒருபோதும் தயங்கியதில்லை’ – என்று அந்தாதி பாடியிருப்பார்கள்.

“நடந்தது இனப்படுகொலைதான்” என்கிற உண்மையை கமல் பேசுகிறார். எல்லா ஊடகங்களும் அதை இருட்டடிப்பு செய்கின்றன. திரும்பிப் பார்க்கக்கூட ஆளில்லை.

நண்பர் ஒருவர் குறிப்பிட்டதைப் போல், அந்தப் பேட்டியைப் பிரசுரித்த பத்திரிகையே கூட, அரை வெளிச்சம்தான் கொடுக்கிறது அதற்கு! ‘ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு யார் காரணம்? கமல் விளக்கம்’ என்றாவது தலைப்பு கொடுத்திருக்க வேண்டாமா? ‘நானும் ரஜினியும் மட்டும் தியாகம் செய்ய வேண்டுமா’ என்று கேட்டுவிட்டாராம் கமல். அதுதான் தலைப்பு அந்தப் பேட்டிக் கட்டுரைக்கு! அகடவிகடத்துல வெளுத்து வாங்குறதுல அவங்களை அடிக்க ஆளேயில்லை!

ஆர்மீனிய இனப்படுகொலை நடந்து மிகச்சரியாக நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில் இனப்படுகொலை குறித்த கமலின் கருத்து அந்தப் பேட்டிக் கட்டுரையில் இடம்பெற்றிருந்ததுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.

முதல் உலகப் போரின்போது, தனது எதிரி ரஷ்யாவுக்கு, ஆர்மீனிய கிறிஸ்தவர்கள் ஆதரவாக இருந்ததாய் நினைத்த துருக்கி, அவர்களை ரத்தத்தில் நனைத்தது. துருக்கியிலிருந்த ஆர்மீனியர்கள் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்டனர். துருக்கியின் அந்த இனவெறியாட்டத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களின் எண்ணிக்கை – சுமார் 15 லட்சம்.

தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எம் இனம் எப்படி முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதோ, அதே மாதிரி, ஆர்மீனியர்களாகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகக் கொன்று குவிக்கப்பட்டார்கள் அந்த 15 லட்சம் பேர். அந்த இனப்படுகொலை 1918 வரை தொடர்ந்தது.

1915 ஏப்ரல் 24ம் தேதி, 250 ஆர்மீனியத் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளை இஸ்தான்புல்லில் ஒரே இடத்தில் தூக்கிலிட்டது துருக்கி. அன்றிலிருந்து இனப்படுகொலை தொடர்ந்ததால், ஏப்ரல் 24ம் தேதியை இனப்படுகொலை தினமாகக் அனுஷ்டித்து வருகிறது ஆர்மீனியா. இந்த ஆண்டு நூறாவது ஆண்டு என்பதால், ஏப்ரல் 24ம் தேதி ஆர்மீனியத் தலைநகர் எரவானில் நடந்த நிகழ்ச்சிக்கு புதின், ஹாலண்டே போன்ற உலகத் தலைவர்கள் வந்திருந்தனர். 250 அறிவுஜீவிகள் கொல்லப்பட்ட இடத்தில், ஒரே ஒரு மஞ்சள் ரோஜாவை அவர்கள் ஒவ்வொருவராகப் போய் வைத்தது இதயத்தைப் பிழிவதாக இருந்தது.

இனப்படுகொலையில் 15 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்ட உண்மையை இன்றுவரை துருக்கி அரசு ஏற்கவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம்தான் இருக்கும் என்று கூசாமல் பேசுகிறது. “உள்நாட்டுப் போரில்தான் அவர்கள் கொல்லப்பட்டனர்” என்று, இலங்கை மாதிரியே பிளேட்டைத் திருப்புகிறது. உலகிலுள்ள அனைத்து இனவெறியர்களின் குரலும் ஒரேமாதிரிதான் ஒலிக்கும் என்பதற்கு இது மிகச் சரியான உதாரணம்.

‘எங்கள் முன்னோர்கள் ஒருபோதும் இனப்படுகொலையில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்’ என்று சென்றவாரம் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் துருக்கி அதிபர். வலம்புரி ஜான் சொன்னமாதிரி, அந்த முன்னோரின் பிணங்களைக் கூடத் தோண்டியெடுத்துத் தூக்கில் போடவேண்டும்!

ஏப்ரல் முதல் வாரத்தில், ஆஸ்திரியா மற்றும் வாடிகனில் இருந்த தனது தூதர்களை துருக்கி திரும்பப் பெற்றது. ஆர்மீனியர்கள் மீது துருக்கி நிகழ்த்தியது இனப்படுகொலைதான் – என்று ஆஸ்திரியாவும் போப்பும் வெளிப்படையாகப் பேசிவிட்டார்களாம்…. அதற்குப் பதிலடியாகத்தான் இந்த அதிரடி!

இதிலும் கேவலமான அரசியல் செய்துகொண்டிருப்பவர் திருவாளர்.அமெரிக்காதான்! 2008 அதிபர் தேர்தலின் போது, ஆர்மீனிய அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தார், ஒபாமா. தான் வெற்றி பெற்றால், 1915ல் துருக்கி செய்தது இனப்படுகொலைதான் – என்று வெளிப்படையாக அறிவிப்பதாக அப்போது அவர் வாக்குறுதி அளித்தார். “உண்மையைச் சொல்ல தயங்காத ஒரு தலைமையே நாட்டுக்குத் தேவை’ என்றெல்லாம் வாய்கிழிய பேசினார். (இப்போது என்ன கிழிக்கிறார் என்று தகவலில்லை!)

புஷ் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில், ‘துருக்கி செய்தது இனப்படுகொலை தான்’ என்று சொல்லத் தயங்கிய அவரை நார் நாராகக் கிழித்தவர், அப்போது செனட்டராக இருந்த இதே ஒபாமா. அப்போது ஒபாமா பேசிய உரையை, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

“1915ல் ஆர்மீனியாவில் நடந்தது நிச்சயமாக ஒரு இனப்படுகொலை. இது வெறும் குற்றச்சாட்டோ, எவருடைய தனிப்பட்ட அபிப்பிராயமோ, பக்கச்சார்பான பார்வையோ அல்ல! முழுமையான வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலான அழுத்தமான உண்மை” – இப்படியெல்லாம் செனட்டர் ஒபாமா கோபாவேசத்துடன் பேசியபோது, பலூனுக்குள் கேஸை அடைத்தது போலிருந்தது. வெள்ளை மாளிகையில் ஒபாமா குடியேறியதும், பலூனில் காற்று இறங்கிவிட்டது.

இப்போதைக்கு, ஆர்மீனியர்களுக்கு நியாயம் வழங்குவது முக்கியமில்லை அமெரிக்காவுக்கு! தன் தலைமையிலான நேட்டோ கூட்டணியில் துருக்கி நீடிப்பதுதான் முக்கியம். நேட்டோ நாடுகள் அணியில் இருக்கிற, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே நாடு துருக்கி தான்! நேட்டோவில் அமெரிக்க ராணுவத்தை அடுத்த பெரிய ராணுவம் துருக்கி ராணுவம்தான்! ஆர்மீனியர்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிட, துருக்கியின் நட்புதான் முக்கியம் அமெரிக்கக் கழுகுக்கு! அதனால், ஆர்மீனியாவாவது இனப்படுகொலையாவது – என்று விஷயத்தைத் தூக்கி பிரீசரில் போட்டுவிட்டார்கள்.

ஆர்மீனியா விஷயத்தில் அமெரிக்காவின் இந்த நபும்சகத் தன்மையைப் பார்த்தபிறகும், ‘அமெரிக்க அம்பிகளால்தான் நமக்கு நியாயம் கிடைக்கும்’ என்று போதிக்கிற போதிசத்துவர்களை நாலு சாத்து சாத்தலாமா என்று உங்களுக்குத் தோன்றுவதைப் போலவேதான் எனக்கும் தோன்றுகிறது. இவர்களெல்லாம் எப்படி நடமாட முடிகிறது நம்மிடையே?

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை – என்று விக்னேஸ்வரன் தீர்மானம் போட்டவுடன் யாழ்ப்பாணத்துக்குப் பறந்துவந்த முதல் கழுகு அமெரிக்கக் கழுகுதான்! ‘இப்படியெல்லாம் தீர்மானம் போட்டால் நல்லிணக்கம் எப்படி சாத்தியம்’ என்று சாதுர்யம் பேசினார்கள் விக்கியிடம்! அந்த மனிதர் அசரவேயில்லை. ‘சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்கு பதில் சொல்லடி’ என்பதுபோல எதிர்க் கேள்வி போட்டார். ‘குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியம்’ என்று விக்கி திருப்பிக் கேட்க, நிஷா பிஸ்வால்கள் சைலன்ட் மோடுக்குப் போய்விட்டார்கள்.

“100 ஆண்டு ஆகிவிட்டது, 15 லட்சம் ஆர்மீனியர் கொல்லப்பட்டு! 20ம் நூற்றாண்டில் நடந்த முதல் இனப்படுகொலை ஆர்மீனிய இனப்படுகொலை என்றால், 21வது நூற்றாண்டில் நடந்திருக்கும் முதல் இனப்படுகொலை ஈழத் தமிழினப் படுகொலை” என்று பெரியவர் விசுவநாதன் சென்றவாரம் அனுப்பியிருந்த செய்தி வழமை போலவே அவரது கண்ணீரால் எழுதப்பட்டிருந்தது. மலேசியாவின் ஜொகூரில் இருந்து, தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்கும் தனிமனித ராணுவம் அந்த மனிதர். என்ன விலை கொடுத்தாவது அந்த நீதியை வாங்கியே ஆகவேண்டும் – என்கிற ஓர்மத்தை எனக்குள் மீண்டும் விதைத்தது விசுவநாதன் அனுப்பியுள்ள மின்னஞ்சல்.

திட்டமிட்டு இனப்படுகொலையில் ஈடுபட்ட இனவெறி நாடுகள் செய்த தகிடுதத்தங்களைத்தான் இப்போது செய்கிறது இலங்கை. துருக்கியைப் போல, ‘நாங்களாவது இனப்படுகொலை செய்வதாவது’ என்கிறது. ‘அது இனப்படுகொலையில்லை, உள்நாட்டுப் போர் (சிவில் வார்) தான்’ என்கிறது. சர்வதேச விசாரணையைத் தடுக்க சகல கலைகளையும் பயன்படுத்திப் பார்க்கிறது. மைத்திரிபாலா என்கிற ராஜபக்சேவின் சப்ஸ்டியூட் மிருகம், ‘எங்களது 100 நாள் சாதனை, சர்வதேச விசாரணையிலிருந்து நாட்டைக் காப்பாற்றியதுதான்’ என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறது. ‘மைத்திரி வேறு, மகிந்த வேறு’ என்று அறிவித்தவர்களுக்கு அறிவிருக்கிறதா?

நண்பர்களே! ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக இதயத்தின் ஆழத்திலிருந்து கண்ணீர் வடிப்பவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதற்காகவே தொடர்ந்து எழுதிவருகிறேன். உங்கள் குமுறலைத்தான் எதிரொலிக்கிறேன்.

“ஈழம் எங்களுக்கு இரண்டாம்பட்சம். எங்களது முதல் தேவை – நடந்த இனப்படுகொலைக்கு நீதி! கொல்லப்பட்ட எங்கள் உறவுகள் ஒன்றரை லட்சம் பேருக்கான நீதி! சீரழிக்கப்பட்ட எங்கள் சகோதரிகள் ஒவ்வொருவருக்குமான நீதி! இனப்படுகொலையில் ஈடுபட்ட ஒவ்வொரு குற்றவாளியும் சர்வதேசக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வழிவகுக்கிற நீதி” என்கிற உங்கள் குரல்தான் எனது குரலாகவும் இருந்து வருகிறது. இன்று விக்னேஸ்வரன் குரலும் நம்முடன் சேர்ந்து ஒலிப்பது, நாம் வீழ்ந்துவிடமாட்டோம் என்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

இந்தநிலையில், 100 ஆண்டுகளுக்கு முன் 15 லட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டதற்கே இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்கிற கசப்பான உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமா – என்பது என் நண்பர்கள் சிலரது கேள்வி. நான் அப்படி நினைக்கவில்லை. நாம் இதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். நூறு ஆண்டுகளில் அவர்களால் சாதிக்க முடியாததை கூடிய விரைவில் நாம் சாதித்துவிட முடியும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் எழுதுகிறேன் இதை! அடுத்த இதழிலும் இதுகுறித்துப் பேசியாக வேண்டும்.

கூடவே, கமலஹாசனின் பேட்டியில் இருக்கும் ஒரு கருத்துப் பிழையை அடுத்த இதழில் சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

‘தமிழ் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு செயல்படாத அரசியல்வாதிகள்தான் காரணம்’ என்பது கமலின் கருத்து. நாம் மட்டும் என்ன கிழித்தோம் கமல்? மெல் கிப்ஸன் தெரியும்தானே உங்களுக்கு? லெதல் வெப்பான் – தெரிந்த உங்களுக்கு எப்படித் தெரியாமலிருக்கும் மெல் கிப்ஸனை! மெல் கிப்ஸனை ஏன் குறிப்பிடுகிறேன் – என்பது, இதைப்படித்தவுடனேயே உங்களுக்குப் புரிந்திருக்கும், கமல்! என் நண்பர்கள் புரிந்துகொள்வதற்காக அடுத்த இதழில் அதையும் எழுத வேண்டியிருக்கிறது…..

நன்றி – தமிழக அரசியல்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*