TamilSpy

பொழுது போக்கு இணையம்…

‘கமலின் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதுதான்!’ நாசர் சிறப்பு பேட்டி

kamal1985-ம் ஆண்டு வெளியான ‘கல்யாண அகதிகள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நாசர். மிகச்சில படங்களில் மட்டுமே ஹீரோவாக நடித்தவர். பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவுமே நடித்து தனித்துவமான இடத்தை தமிழ் சினிமாவில் தக்க வைத்துள்ளவர். மே தினத்தில் ரிலீஸ் ஆகும் ‘உத்தம வில்லன்’ படத்திலும் அசத்தி இருக்கும் நாசரைச் சந்தித்தோம்.

‘உத்தம வில்லன்’ எப்படிப்பட்ட படம்?

உத்தம வில்லன் ஒரு இரண்டரை மணி நேரத்துக்கான பொழுதுபோக்கான குடும்பச் சித்திரம். அதுதானே முக்கியம்! 10 ரூபாய்க்கு கடையில இட்லி கேட்டா, என்ன சொல்லுவாங்க? எவ்வளவு கலோரி கிடைக்கும்னா சொல்லுவாங்க, சுவையான இட்லி கிடைக்கும்னுதானே சொல்லுவாங்க. அதேதான்! தியேட்டருக்கு வந்தா உங்களுக்கு அருமையான இரண்டரை மணி நேரம் கிடைக்கும். அதுவும் என்கிட்ட கேட்டதால, என்கிட்டருந்து வித்தியாசமான காமெடி கிடைக்கும்.

அடடே… காமெடியா? அப்போ உங்க கேரக்டர் என்ன?

நான் ஒரு சோம்பேறியான, காமெடியான ராஜா கெட்டப்ல வரேன். என் பேரு முத்தரசர். எப்பவும் ஏதாவது எக்குத்தப்பா செஞ்சுகிட்டே இருப்பேன். அதுலேயும் பேராசையான அரசனும்கூட. இதுக்குமேல படத்துல பாருங்க.

ஏன் அதிகமா குணச்சித்திர வேடத்திலேயே நடிக்கிறீங்க?

(சிரிக்கிறார்) ‘மகளிர் மட்டும்’, ‘முகம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ இதில் எல்லாம்கூட என் கேரக்டர் ஹீரோதான். ஆனாலும், அதுவும் ஒருவிதமான கேரக்டர் ரோல்தான். ஆனா, எல்லாமே வெயிட்டான பாத்திரம். எனக்கு என்ன தர்றாங்களோ அதை உள்ளே வாங்கி சிறப்பா செய்வேன். நான் எதையுமே தேடிப் போக மாட்டேன்.

90 சதவிகித கமல் படங்கள்ல நீங்க நடிச்சிருக்கீங்க. கமலுக்கும் உங்களுக்குமான பந்தம் எப்படி? ’உத்தம வில்லன்’ படத்துல என்ன ஸ்பெஷல்?

உண்மையைச் சொல்லணும்னா ’அவ்வை சண்முகி’ படத்துக்கு அப்பறம் திரும்ப கமலோடு காமெடி கேரக்டர்ல நடிச்சிருக்கேன் அது ரொம்ப சிறப்பான விஷயம். ஒவ்வொரு கமல் படமும் வித்தியாசமானதுதான். எல்லா படம் மாதிரியும் இந்த படத்துலேயும் எனக்கு ரொம்ப முக்கியமான ரோல் கமல் கொடுத்திருக்காரு.

’உத்தம வில்லன்’ படத்தோட கதை என்ன?

கதை சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும். ஆனா, ஒன்லைன் வேணா சொல்றேன். பழமையான கால அரசன், கூத்து கலைஞன், இப்போ சமகாலத்துல நடக்குற ஒரு நடிகரோட கதை. இது இரண்டும் சேர்ந்தா என்ன நடக்கும்? இதுதான் கதை!

பாலசந்தர் என்ன சொன்னார்?

பாலசந்தரும் நானும் நிறைய பேசியிருக்கோம். அவரு கொடுத்த எவ்வளவோ அட்வைஸ்தான் நான் இப்போ இந்த ப்ளேஸ்ல இருக்குறதுக்கு காரணம்னுகூட சொல்லலாம். ஆரம்ப காலங்கள்ல அவரோட கம்பெனி படங்கள்ல நடிச்சதாலதான் இந்த புரொஃபஷனலிஸம் எனக்கு வந்துச்சுன்னுகூட சொல்லலாம். அவரு எங்களுக்கு கத்துக் கொடுத்தது நிறைய, அதுல முக்கியமான ஒண்ணு… ‘உன்னை நம்பி ஒருத்தன் வந்தால், அவனுக்கு முழுமையான உழைப்பைக் கொடு’. அதை இப்போ வரைக்கும் ஃபாலோ பண்றேன்.

‘உத்தம வில்லன்’ படப்படிப்புல நடந்த மறக்க முடியாத விஷயம்?

ஒவ்வொரு மொமென்டும் மறக்க முடியாதுதான். அதெல்லாம் பெரிய பெரிய கதை. அதுல ஒரு இன்ஸிடென்ட்… எனக்காக கமல் பல லட்ச ரூபாய் செட்டையே திரும்பப் போட்டதுதான். என்னோட பையன் படப்பிடிப்பு டைம்லதான் ஆக்ஸிடென்ட் ஆனாரு. இப்போ நல்லா இருக்காரு. அந்த நேரத்துல நான் இல்லாமலேயே முடிக்க வேண்டிய சீன்களையெல்லாம் நேரம் கருதி முடிச்சுட்டாங்க. ஆனாலும் நான் வந்து ரொம்ப வருத்தப்பட்டு, ‘நான் நடிக்கணும்’னு சொன்னேன். எனக்காக பிரிச்ச செட்டையே ஒரே ராத்திரில கமல் திரும்ப போடச் சொல்லி, அந்த ஷாட்டை எடுத்தோம். அப்பறம்தான் எனக்கு அந்த மேக்கிங் புரிஞ்சுது. கமல் கலைஞர்களை மதிக்கத் தெரிஞ்சவருங்கறதுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

பாலசந்தர், கமல் ரெண்டு பேரும் உங்க பார்வையில் எப்படி?

அப்படி ஒரு உறவை இதுவரைக்கும் நான் சினிமாவுல பார்த்ததே இல்ல. ஒரு அப்பா, பையன் எப்படி பேசிக்குவாங்க, பழகுவாங்க, சண்டை போடுவாங்களோ, அப்படி இருப்பாங்க. இந்த படத்துலகூட அவங்க ரெண்டு பேரோட கேரக்டரும் அப்படியேதான் வருது. கண்டிப்பா நீங்க பாக்கும்போது புரியும். ரெண்டு பேரும் வித்தியாசமானவங்க. பல நேரங்கள்ல ரெண்டு பேரும் சண்டை போடுவாங்க. ஆனா, ரெண்டு பேரும் வேலை செஞ்சது சிறப்பான சினிமாவைக் கொடுக்கதான். இதைதான் நான் பார்த்தேன்.

மே தின வாழ்த்துகளை கூறி விடைபெற்றார் நாசர்.

ஷாலினி நியூட்டன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*