TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியல் தீர்வு வழங்கப்படாதவரை புலம்பெயர்வதைத் தடுக்க முடியாது

அரசியல் தீர்வு ஈழத் தமிழ் மக்களின் புலம்பெயர்தல் என்பது நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் அறிவியல் சார்ந்த புலம்பெயர்தல்களே இடம்பெற்றபோதும், 1983ம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் அதிகரித்த சிறீலங்கா அரசின் இனரீதியான பாகுபாடும்,

இராணுவ ரீதியான அழுத்தங்களுமே அதிகளவான ஈழத் தமிழர்கள் சொந்த மண்ணையும், நாட்டையும் விட்டு புலம்பெயர்ந்து தூரதேசங்களை நாடிச் செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தியது.25 வருடங்களைக் கடந்தும் தாய்த் தமிழகத்திற்கு சென்ற மக்கள் இன்னும் அகதி வாழ்விற்குள்ளும், சிறை வாழ்விற்குள்ளும் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட போதும், ஏனைய நாடுகளில் அடைக்கலம் தேடிய தமிழ் மக்கள் அந்தந்த நாட்டு மக்களின் வாழ்வோடு இணைந்து வாழுகின்ற, தங்கள் பொருளாதாரத்தை கட்டியயழுப்புகின்ற, அந்தந்த நாடுகளின் குடியுரிமைகளைப் பெற்று வாழுகின்ற நிலை கிடைக்கப்பெற்றது.

இதுவே, இந்தியாவைத் தவிர்த்து ஏனைய நாடுகளை நோக்கி அதிகளவான ஈழத் தமிழ் மக்களை ஓடவைத்தது. புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழுகின்ற ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக்கை இன்று சில இலட்சங்களை எட்டியிருக்கின்ற அளவிற்கு சென்றிருக்கின்றது. குறிப்பாக பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெருமளவான மக்கள் புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்றனர். பெருமளவான மக்கள் புலம்பெயர்ந்தபோதும், ஒரே நேரத்தில் பெரும் தொகையான மக்கள் புலம்பெயர்ந்த அண்மைய நிகழ்வுதான் கடந்த இரு வாரங்களாக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றது. சிறீலங்காவின் இறுதிக்கட்டத் தாக்குதலின் போது உயிர் தப்பிய நூற்றுக் கணக்கானவர்கள் தற்போது படகுகளில் ஆபத்து மிக்க பயணத்தை மேற்கொண்டபடி புலம்பெயர்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு அவுஸ்திரேலியாவிற்கும், கனடாவிற்கும் சென்றவர்கள் குறித்து அந்தந்த நாடுகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றன. அவுஸ்திரேலியா நோக்கி சென்றபோது இந்தோனேசியா கடற்படையினரால் பிடிக்கப்பட்ட கப்பலில் உள்ள மக்களை அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தோனேசியா வலியுறுத்திவருகின்றது. ஆனால், அவர்களை ஏற்றுக்கொள்ள அவுஸ்திரேலியா மறுத்துள்ளதுடன், போர் முடிவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு நோக்கி வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது. அத்துடன், அந்த மக்களை திருப்பி அனுப்புவதற்கான திட்டங்களுடன் சிறீலங்கா அரசுடன் உடன்படிக்கை ஒன்றினையும் செய்துகொண்டுள்ளது.

இலங்கையிலிருந்து மக்கள் சட்டவிரோதமாக தமது நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்ற பிரச்சினையை சமாளிப்பதில் கூட்டாக செயல்படவேண்டியதன் அவசியத்தை அவுஸ்திரேலியா சிறீலங்காவிற்கு வலியுறுத்தியது. கொழும்பு சென்றிருந்த அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் இந்த விடயத்தை வலியுறுத்தியதுடன், சிறீலங்கா வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்களை அடுத்து ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டுள்ளார்.

ஏற்கனவே ஒரு இலட்சம் மக்களை படுகொலை செய்துவிட்டு, மூன்று இலட்சம் மக்களை இராணுவத் தடுப்பு முகாம்களிலும், இன்னொரு பக்கம் மீள் குடியேற்றம் என்ற பெயரில் இராணுவ வலயங்களுக்குள் அந்த மக்களை குடியமர்த்தி அவர்களின் வாழ்வை வெளியில் தெரிந்துவிடாதபடிக்கு அழித்துக்கொண்டிருக்கிறது சிறீலங்கா. இந்நிலையில், இனப்படுகொலையில் இருந்து தப்பிய இந்த மக்களை ‘தப்பி வந்த ஆட்டைப் பிடித்து மீண்டும் கசாப்புக் கடைக்காரனிடம் கையளிப்பதுபோல’ மீண்டும் கொலைக்கரங்களில் கையளிக்க முனைவதுதான் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகின்றது. எனினும், எத்தனை ஒப்பந்தங்களைப் போட்டாலும்,

எத்தனை உடன்படிக்கைகளைச் செய்துகொண்டாலும் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று எட்டப்படாத வரைக்கும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. எனவே, எல்லைகளைக் கடக்க முயலும் தமிழ் மக்களை தடுத்து நிறுத்த முயலும் சர்வதேசத்தின் கரங்கள், அந்த மக்களுக்கான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் தமிழ் மக்களின் புலம்பெயர்தல் என்பது தானாகவே நின்றுபோய்விடும். இதுவே, புலம்பெயரும் ஈழத் தமிழ் மக்களால் நெருக்கடிகளைச் சந்திக்கும் நாடுகள் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியாகும். இல்லையேல், தங்கள் உயிரைப் பாதுகாத் துக்கொள்ள தடைகளைத் தாண்டியும், எல்லைகளைக் கடந்தும் தமிழ் மக்களின் புலம்பெயரும் பயணம் தொடரவே செய்யும் என்பதே உண்மை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*