TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தென்னிலங்கையில் கூர்மை அடைந்து வரும் அரசியல்

mahindaதென்னிலங்கையில் கூர்மை அடைந்து வரும் அரசியல் முரண்பாடுகளும் தமிழ் மக்களின் பங்களிப்பும்:

சிறீலங்காவின் தற்போதைய அரச தலைவரின் பதவிக்காலம் நிறைவுக்கு வருவதைத் தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. இரண்டாவது தடவையாகவும் அரச தலைவரின் இருப்பிடத்தை நிரப்பி விட வேண்டும் என ராஜபக்ச சகோதரர்கள் தலையால் நடக்கின்றனர்.

எதிர்க்கட்சிகளும், உதிரிக்கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேசுகின்றன. அரசின் இந்த ஆரவாரத்திற்குள் ஈழத்தமிழ் மக்களின் அவலங்கள் மறைந்து போகும் சந்தர்ப்பங்களும் எழுந்துள்ளன. எதிர்வரும் தேர்தலில் தேவைப்படும் வாக்குகளுக்காகவும், அனைத்துலகத்தில் இருந்து பெறப்படும் நிதி உதவிகள் மூலம் தென்னிலங்கை மக்களுக்கு தேர்தல் நிவாரணங்களை வழங்குவதற்காகவும் சிறீலங்கா அரசு தனது கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தியுள்ளது.

mahinda

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தேர்தல் நெருங்கும் சமயத்தில் மேற்குலகம் மேற்கொண்ட பொருளாதார அழுத்த எச்சரிக்கைகளும் காரணம். தென்னிலங்கை மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் போது அவர்கள் போரின் வெற்றி செய்திகளை மறந்துவிடுவார்கள் என அரசு அஞ்சுகின்றது. மேலும் தமிழ் மக்களின் வாக்குவங்கியை அபகரிப்பது எப்படி என்ற கனவில் சிங்கள அரசின் ஆளும் தரப்பு காய்களை நகர்த்திய போது சரத் பொன்சேகாவின் வடிவத்தில் மேலும் ஒரு பாரிய நெருக்கடி அரசை சூழ்ந்துள்ளது. எதிர்வரும் தேர்தலில், அது பொதுத்தேர்தல் என்றாலும், அரச தலைவருக்கான தேர்தல் என்றாலும் தமிழ் மக்கள் மீதான சிங்கள தேசத்தின் வெற்றிச் செய்திகள் தான் முதன்மையான பங்கை வகிக்கப்போகின்றன.

அதற்கு அப்பால் தான் ஏனைய பிரச்சினைகளின் தாக்கங்கள் இருக்கும். எனவே தான் அரச தலைவருக்கான தேர்தலையும், பொதுத்தேர்தலையும் ஒரு சமயத்தில் நடத்தும் சிந்தனைகளும் அரசிற்கு உதித்திருந்தன. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியை தேசவிரோத கட்சியாக சித்தரிப்பதன் மூலம் தனது விம்பத்தை உயர்த்தி காண்பிக்க போரின் வெற்றி அரசிற்கு உறுதுணையாக அமைந்து விட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள முக்கிய பிரச்சினை ஜெனரல் சரத் பொன்சேகாதான். தற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து பொன்சேகா களத்தில் குதித்தால் போரின் வெற்றியை துருப்புச்சீட்டாக வைத்து அரசு ஆட எண்ணிய ஆட்டம் பாதாளத்திற்குள் தூக்கி வீசப்படலாம்.

ஏனெனில் தமிழ் மக்களுக்கு எதிரான போரை மேற்கொண்டவர்கள் என்ற கோணத்தில் சிங்கள தேசம் பார்க்கும் போது பொன்சேகாவுக்கும், மகிந்தவிற்கும் சம பலம் தான் எட்டும். மேலும் பொன்சேகா சீருடையுடன் களமிறங்கினால் மகிந்தாவின் சிவப்பு துண்டின் சாயம் மங்கிவிடலாம். தமிழ் மக்களின் வாக்குகள், பொன்சேகாவுக்கு ஆதரவான சிங்கள மக்களின் வாக்குகள் என வாக்குகள் பிரிக்கப்பட்டால் அரசின் நிலை பெரும் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம் அரச தரப்பை ஆட்டம்காண வைத்துள்ளது. மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்கள், கருத்து சுதந்திரம் மறுக்கப்படுதல், பொருளாதார சீரழிவு, அனைத்துலகத்தின் அன்னியப்படுத்தல்கள் அல்லது அழுத்தங்கள் என்பன அரசிற்கு சாதகமானதாக இல்லை.

எனினும் அரசின் ஒரு பலமாக இருந்தது போர் தொடர்பான வெற்றி செய்தியும், தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய பேரழிவும் தான். ஆனால் பொன்சேகாவின் வரவு அதனை சமப்படுத்திவிட்டால் அரசிற்கு வேறு மார்க்கங்கள் இருக்கப்போவதில்லை. இந்த நிலையில் தான் கடந்த மாதத்தின் இறுதிப்பகுதியில் பொன்சேகா அமெரிக்காவுக்கு மேற்கொண்ட விஜயமும், அதனால் ஏற்பட்ட இராஜதந்திர மோதல்களும் இடம்பெற்றிருந்தன. தன்னை அமெரிக்கா விசாரணைகள் செய்ய முற்பட்டதாக பொன்சேகா தரப்பும், பொன்சேகா சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் தொடர்பான தகவல்களை வழங்கும் துரோகியாக மாறிவிட்டார் என அரச தரப்பும் பல நாடகங்களை அரங்கேற்றியிருந்தன.

பொன்சேகாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படக்கூடாது, அவரிடம் பல தகவல்கள் உள்ளன என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகோல்லாகம சிறீலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியாவிடமும், ஊடகவியலாளர்களிடமும் தெரிவித்தது, தனக்கு தானே நெற்றிப் பொட்டில் சுட்டுக்கொண்டதற்கு ஒப்பானது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. ஏனெனில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்கள் பொன்சேகாவிடம் உண்டு என்பதை அரசு ஒப்புக்கொண்டதாகவே அந்த தகவல்கள் அமைந்துள்ளன. இருந்த போதும் அமெரிக்கா பொன்சேகாவை தப்பிக்க விட்டுள்ளது.

பொன்சேகா தப்பிய இந்த தருணத்தில் தான் மேலும் பல ஊகங்கள் எழுந்துள்ளன. அதாவது அமெரிக்காவின் இலக்கு என்ன? என்பது தான் அதன் முக்கிய கேள்வி. அமெரிக்காவின் முக்கிய இலக்கு கோத்தபாயவே என தென்னிலங்கை ஊடகங்களில் சில எழுதியுள்ளன. கோத்தபாயவை மடக்குவதற்காகவும், சிறீலங்கா அரசை அச்சுறுத்துவதற்காகவுமே அமெரிக்கா பொன்சேகாவை தப்ப விட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா அரசை பொறுத்தவரையில் பொன்சேகாவை அமெரிக்காவில் சிக்கவைப்பதற்கே முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே தான் கடந்த செப்ரம்பர் மாதம் கோத்தபாய ராஜபக்ச நியூயோர்க் சென்ற போது அமெரிக்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அது மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் கெனடி விமான நிலைய அதிகாரிகள் கோத்தபாயவின் பெயரை கணிணியில் பதிவு செய்ததும் அது எச்சரிக்கை வாசகத்தை கொடுத்ததாகவும், அதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் அறை ஒன்றுக்குள் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோத்தபாய மீதான இந்த விசாரணைகள் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்காவின் மூலமே வெளியில் கசிந்திருந்தன. ஏனெனில் அவரும் கோத்தபாய பயணித்த அதே விமானத்தில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.ஆனால் தற்போது பொன்சேக்கா சிறீதென்னிலங்கையில்….லங்கா திரும்பி வந்தது சிறீலங்காவின் ஆளும் தரப்பிற்கு கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

பொன்சேகாவை பொறுத்தவரையில் அவர் அரசியலில் இறங்குவது குறித்தோ அல்லது மகிந்தவை எதிர்த்து தேர்தலில் நிற்பது குறித்தோ உறுதியான தகவல்கள் எவையும் வெளிவரவில்லை. ஆனால் ஊகங்கள் அதனை உறுதிப்படுத்துவது போலவே வெளிவந்தவண்ணம் உள்ளன. எனினும் சிறீலங்கா அரசு தேர்தல் வெற்றிக்கான ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள ஆரம்பித்து விட்டது. மேற்குலகத்துடன் மேற்கொண்டு வந்த கடும்போக்கில் இருந்து நழுவி தற்போது அவர்களின் நிபந்தனைகளுக்கு பணிவது போன்று சில செயற்பாடுகளையாவது நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது. வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 300,000 தமிழ் மக்களில் ஒரு பகுதியினரை வடபகுதியில் மீளக்குடியமர்த்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளையும் குறைத்துள்ளது.

சிங்கள மக்களுக்கு பல சலுகைகளையும் வழங்க தயாராகி வருகின்றது. இந்த தேர்தல் காலத்து சலுகைகளுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக மேற்குலகத்தின் அழுத்தங்களுக்கும் பணிந்து போகத்திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒரு நாட்டுக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் என்பது அந்த நாட்டின் ஒரு கட்சியின் அரசியல் அபிலாசைகளுக்கு உதவியாக அமைந்துவிட கூடாது என்பது அனைத்துலகத்தின் கொடையாளி நாடுகளின் சட்ட விதிகளில் ஒன்று. எனவே தேர்தல் காலத்தில் அவர்கள் என்ன பங்கை வகிக்கப்போகின்றனர், சிறீலங்காவின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வார்களா என்பது எதிர்வரும் மாதங்களில் தெரிந்துவிடும். சிங்கள தேசத்தின் தேர்தல் முரண்பாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் கடமை என்ன? என்பது முக்கியமான கேள்வி.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதிகம் அனுகூலமானவை. தென்னிலங்கையின் இந்த முரண்பாடுகளை கூர்மையாக்கி தற்போதைய அரசை துரத்தும் நோக்கம் ஒன்றே முதற்பணியாக தமிழ் மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் அவாவாகும். அதன் மூலம் தான் மகிந்த அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட படுகொலைகளுக்கும் பேரழிவுக்கும் நாம் பதில் தர முடியும். தற்போதைய அரசை பொறுத்தவரையில் நிர்வாகத்தில் உள்ளவர்களின் பெயர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு குழுவாகவே மேற்குலகத்தின் ஆவணங்களில் பதியப்பட்டுள்ளன. எனவே எதிர்வரும் தேர்தலில் அரச தரப்பு தோல்வியை தழுவினால் அவர்கள் சிறீலங்காவிலும் இருக்க முடியாது, வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது என்ற ஒரு நிலைதான் ஏற்படும். இந்த நிலையை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் எமது பணிகளை தற்போதே ஆரம்பிப்போமாக.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*