TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகாவா- மகிந்தவா?

RSஜெனரல் சரத் பொன்சேகாவை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்று ஒரு தரப்பும் அவரது அரசியல் பிரவேசத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விடும் முயற்சியில் இன்னொரு தரப்புமாக தென்னிலங்கையின் அரசியல் சக்திகள் இரண்டு பட்டு நிற்கின்றன.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் பற்றிய இறுதியான முடிவு, அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான முடிவு என்பன இன்னமும் எடுக்கப்படாதுள்ள நிலையிலேயே- அவரை முன்னிலைப்படுத்திய விவாதங்கள் உச்சக் கட்டத்தை அடைந்திருக்கின்றன. தென்னிலங்கை தான் மகிந்தவா- பொன்சேகாவா என்று பிரிந்து நின்று மோதுகிறது என்று பார்த்தால், இதில் எந்த வகையிலும் சம்பந்தப்பட முடியாத தமிழ் மக்களையும் இப்படியொரு சிக்கலுக்குள் கொண்டு போய் தள்ளி விடும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கின்றனர்.

mahinda_ponsehara_2009

ஊடகங்கள் தான் இப்போது வலிமையான ஆயுதங்கள். அவற்றை வைத்துக் கொண்டு எத்தகைய கருத்துருவாக்கத்தையும் மேற்கொள்ளலாம்.

ஆட்சியில் அமர்த்துவது தொடக்கம் அதிலிருந்து வீழ்த்துவது வரைக்கும் எதையும் செய்யலாம். அப்படிப்பட்ட ஊடக பலம் தமக்கு இருக்கிறது என்ற துணிவில் – தமிழ் மக்களை ஜெனரல் சரத் பொன்சேகாவின் பக்கம் திரும்பலாம் என்று சொல்ல வைக்கின்ற முயற்சியில் சில தரப்பினர் இறங்கியுள்ளனர்.ஜெனரல் சரத் பொன்சேகாவா – மகிந்த ராஜபக்ஸவா என்ற கேள்வி ஜனாதிபதித் தேர்தலில் வருமானால், தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தொனியில் கேள்வி எழுப்பி, சமரசம் தேடும் பதில்களையும் மெல்ல மெல்லக் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

தமிழ் மக்களின் மீது தமது கருத்துக்களைத் திணிக்கின்ற வகையில் ஆசிரிய தலையங்கங்கள் வெளியாகின்றன. பேட்டிகள் வெளியாகின்றன. செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தவா – பொன்சேகாவா என்ற கேள்வி வரும்போது – தமிழ் மக்கள் அதில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டுமா அல்லது ஏதாவதொரு அணியை சார்ந்திருக்க வேண்டுமா என்று பார்க்க வேண்டிய நேரம் வந்து விட்டது.அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தவை ஆதரிப்பதற்கு அடிப்படைக் காரணங்கள் ஏதும் இருகிறதா என்று முதலில் பார்க்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில்- புலிகளுடன் பேசி சமாதானத்தை ஏற்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தவர் மகிந்த. ஜனாதிபதியான பின்னர் பேச்சுக்களை முறித்துக் கொண்டு விடுதலைப் புலிகளை வம்புச் சண்டைக்கு இழுத்தார். தமிழ் மக்களின் மீது கொடிய போரை ஏவி விட்டு அவர்களை எதுவுமற்ற நடைப்பிணங்களாக்கி வேடிக்கை பார்த்தார். இலட்சக்கணக்கான தமிழ் மக்களை முகாம்களுக்குள் அடைத்து வைத்து அவலத்துக்குள் தள்ளினார். போர் வெறியாட்டத்தை நடத்தி குண்டுகளைப் போட்டுக் கொன்று குவித்தார். அரசியல் தீர்வு என்ற பூச்சாண்டி காட்டி ஒரு பகுதி தமிழ் அரசியல் சக்திகளை நம்ப வைத்துக் கழுத்துறுத்து விட்டு நிற்கிறார். இப்படிப்பட்ட ஒருவரிடம் இருந்து தமிழ் மக்கள் எதைத் தான் எதிர்பார்க்க முடியும்?

இவர் அரசியல் தீர்வை வழங்குவார் என்றோ, உரிமைகளைக் கொடுப்பார் என்றோ அல்லது தமிழர்களை நிம்மதியாக வாழ விடுவார் என்றோ நம்புவதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. ஏனென்றால் புலிகளை அழிப்பேன் என்பதைத் தவிர, அவர் சொன்னது எதையும் செய்யவில்லை. அதேவேளை, தனது குடும்ப ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ள அவர், இலங்கைத் தீவின் நிர்வாகத்தை நீண்டகாலத்துக்கு தமது கைக்குள் வைத்திருக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். சிறுபான்மைக் கட்சிகளைச் சிதைத்து சிங்களத் தேசியவாதக் கட்சிக்குள் உள்வாங்கும் முயற்சியில் இறங்கியிருப்பவர். இப்படிப்பட்ட ஒருவரை மீளவும் ஜனாதிபதியாக்குவது நீண்டகால நோக்கில் தமிழ் மக்களுக்கு சாதகமற்ற நிலையை உருவாக்கும்; என்ற கருத்து நியாயமானதே. அதாவது அரசியலில் தன்னை நன்கு வலுப்படுத்திக் கொண்ட ஒருவரிடம் இருந்து எதையாவது பெற்றுக் கொள்வதை விட வலுப்படுத்திக் கொள்ள முடியாத ஒருவர் மூலம் அதனைப் பெறுவது சுலபம். இந்த அடிப்படையில் தான் ஜெனரல் சரத் பொன்சேகா பக்கம் சிலரின் பார்வை திரும்பியிருக்கிறது.

மகிந்தவின் சிங்களத் தேசியவாத சிந்தனையும், பௌத்த ஆதிக்கப் போக்கும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் நீதியான- நியாயமான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு இடமளிக்காது. எனவே இவரைத் தெரிவு செய்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்குவது தமிழ் மக்கள் தமக்குத் தாமே புதைகுழி தோண்டிக் கொள்வதற்குச் சமமானது. மகிந்த ராஜபக்ஸ மீண்டும் ஜனாதிபதியானால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சி எடுக்க மாட்டார். இந்தப் பதவியும் இப்போதைய அரசியலமைப்பும் இருக்கும் வரைக்கும் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளும் கிடைக்காது. அந்தவகையில் இவரது மீள்தெரிவு தமிழ் மக்களுக்கு இன்னமும் பாதகமாகவே அமையும்.

அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் இறங்கி ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஜெனரல் சரத் பொன்சேகாவின் வரலாற்றை சரியாகப் புரிந்து கொண்டவர்கள் அவருக்கு ஆதரவளிக்க முற்படமாட்டார்கள். சிங்களப் பெருந் தேசியவாதத்தின் மறுவடிவம் தான் அவர். போர்க்களத்தில் மட்டும் இவர் தமிழ்மக்களுக்கு எதிரியாக இருந்தவர் அல்ல. அதற்கு அப்பாலும் தமிழ்மக்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டதற்கு நேரடிக் காரணமே இவர் தான். இராணுவத் தளபதி என்ற பதவியில் இருந்த தால் மட்டும் அவர் இதைச் செய்யவில்லை.அப்படிச் செய்திருந்தால் அது சந்தர்ப்பவசமான காரியமாக கருதலாம். ஆனால் அவர் தமிழர்களின் விடுதலைப் போரை வேரோடு சாய்த்து சிங்களதேசத்தின் நவீன துட்டகெமுனுவாக உருவெடுக்க வேண்டும் என்ற வெறியோடு தான் இதைச் செய்தார். புலிகளை அழிப்பதன் மூலம் தமிழரை ஒன்றுமில்லாதவர்களாக்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.

அதனால் தான் இவர்- இராணுவத் தளபதியாக இருக்கும் போதே “புலிகள் அழிகப்பட்ட பின்னர் தமிழருக்கு எதற்கு அரசியல் தீர்வு? சிங்களவருக்குச் சொந்தமான தேசத்தில் எங்காவது அவர்கள் வாழ்ந்து விட்டுப் போகட்டும். வாழ்வதற்கான உரிமையைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கக் கூடாது” என்று கண்டிப்போடு கூறியவர். அதாவது தமிழ் மக்களுக்கு தனியான அதிகாரங்களோ உரிமைகளோ கொடுக்கக் கூடாது என்ற பிடிவாத்தில் இருப்பவர். அப்படிப்பட்ட ஒருவருக்கு தமிழ்மக்கள் ஆதரவு கொடுப்பதோ அல்லது அவர் பதவியில் அமர்வதற்கு மறைமுக ஆதரவு கொடுப்பதோ அபத்தமான முடிவாகவே இருக்கும்.

* ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்து ஜனாதிபதித் தேர்தலில் நின்றால்- அவருடன் பேரம் பேசி தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேரம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்ற கருத்தும் சிலரிடம் இருக்கிறது. எடுத்தேன்- கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கக் கூடாது என்றும், ஆராய வேண்டும் என்று கூறுபவர்கள்- ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு அவரை அரியணையில் ஏற்றலாம் என்பது போன்ற கருத்து இருப்பதாகத் தெரிகிறது. அந்தப் பக்கத்தில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு பழுத்த அரசியல்வாதி கிடையாது. இதனால் தெளிவான முடிவை எடுக்கக் கூடிய ஒருவராக இருப்பார் என்று நம்புவதற்கில்லை. அப்படி எடுப்பதற்கும் அவருக்கு நாடாளுமன்ற பலம் இருக்காது. ஏனென்றால் அவர் எந்தவொரு கட்சி சார்ந்தவராகவும் இருக்கப் போவதில்லை. அப்படியிருந்தால் தான் பொதுவேட்பாளராக நிற்க முடியும்.

அடுத்து அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் இராணுவ ஆதிக்கம் அதிகமாவதை தடுக்க முடியாது. அது அரசியல் ரீதியான குழப்ப நிலையை ஏற்படுத்தும் போது தமிழர்களின் பிரச்சினை பற்றி யாரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள். இராணுவ ஆதிக்கம்- இராணுவ ஆட்சியாக உருப்பெறுமானால் தமிழர் நலன்களும், உரிமைகளும் இரும்புக் கரம் கொண்டு நசுக்கப்படும்.

* பாகிஸ்தானில் இருந்தது போன்ற, மியான்மரில் இருப்பது போன்ற இராணுவ ஆட்சி ஒன்றை ஜெனரல் சரத் பொன்சேகா உருவாக்கினால்- தமிழ் மக்கள் யாரிடமும் உரிமை கேட்க முடியாத நிலை ஒன்று உருவாகும். அதேவேளை எதிரணியின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டு வெற்றி பெறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம்.

அவர் ஜனாதிபதியானதும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயாராக இருப்பாரா என்ற கேள்வி இருக்கிறது. அந்தப் பதவிக்கு வெளியே இருப்பவர்கள் தான் அதை ஒழிக்க வேண்டும் என்கிறார்களே தவிர, அதில் அமர்ந்திருந்த யாரும் அந்தப் பதவியை ஒழிக்க வேண்டும் என்று கூறியதில்லை.
ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியில் அமர்ந்த பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு துணை நிற்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இன்னொரு புறத்தில் எதிர்க்கட்சிகள் தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து விடுவதாக வாக்குறுதி கொடுக்கின்றன. இந்தநிலையில், அந்த ஆறு மாதங்களுக்குள் ஜெனரல் சரத் பொன்சேகா மூலம் தமிழருக்கு நியாயங்களைப் பெறலாம் என்று யாராவது சொன்னால் அதைவிட முட்டாள்த்தனம் வேறேதும் இருக்க முடியுமா?

* ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கினால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்று- எதிர்க்கட்சிகளோ அல்லது அவருக்கு ஆதரவு கொடுத்தால் என்ன என்று சிந்திக்க முற்படும் தமிழர் தரப்புகளோ- எந்த அடிப்படையில் நம்புகின்றனவோ தெரியவில்லை. இவர் ஜனாதிபதியாகி விட்டால் எதிர்க்கட்சிகளால் எல்லாவற்றையும் செய்து விட முடியும் என்பது பொய்க்கணக்கு.

பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறத்தவறினால் ஜெனரல் பொன்சேகாவை வைத்து- ஆட்சியைக் கலைப்பதைத் தவிர அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதேவேளை, எதிர்க்கட்சிகளால் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வைத்தால் கூட- பொதுத்தேர்தலில் வெற்றி பெற முடியாது. தற்போதைய ஆளும்கட்சி அந்தளவுக்கு வலுப்பெற்றிருக்கிறது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் பெறும் அளவுக்கு அது வலுவானதாக இருப்பதை யாரும் மறந்து விடக் கூடாது..
இப்படிப்பட்ட நிலையில் ஆளும்கட்சியை இலகுவாகத் தோற்கடிப்பது பற்றி யாரும் கனவு காண முடியாது. அடுத்த பொதுத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெற்று விட்டால் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களிடம் சாரணாகதி அடைய வேண்டியது தான். அல்லது ஒரு கட்டம் வரைக்கும் சந்திரிகா போன்று வளைந்து கொடுத்து விட்டு நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டியிருக்கும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறவிடாமல் ஆளும்கட்சியைத் தோற்கடிக்கின்ற திறன் இருந்தால் மட்டும் எதிர்க்கட்சிகளுக்குப் போதாது.
ஆட்சியமைக்கின்ற பலமும்- அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் கிடைத்தால் மட்டுமே ஜெனரல் சரத் பொன்சேகாவை அவர்களால் ஆட்டி வைக்க முடியும். இப்படிப்பட்ட சிக்கல்கள் தென்னிலங்கையில் உருவாகும் போது தமிழர் பிரச்சினைகளும் உரிமைகளும் அவர்களுக்கு மட்டுமன்றி உலகத்துக்கே இரண்டாவது விடயமாகப் பின் தள்ளப்பட்டு விடும்.

* மகிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு பிணந்தின்னிப் பேய். அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத இரத்தக் காட்டேரி தான் ஜெனரல் சரத் பொன்சேகா.

மகிந்த ராஜபக்ஸ சர்வதேசத்துக்குப் பதில் சொல்வதற்காகச் செய்கின்ற கொஞ்சக் காரியங்களைக் கூட ஜெனரல் சரத் பொன்சேகா செய்யமாட்டார். அவர் ஒரு இராணுவ ஆட்சியாளராகவே இருப்பார். அவரது கண்ணோட்டம் இராணுவ நலன் சார்ந்ததாகவும் சிங்கள- பௌத்த பேரினவாத நலன் சார்ந்தாகவும் மட்டுமே இருக்கும். இதனால் அவர் சர்வதேசம் பற்றி கவலைப்படுபவராக இருக்க மாட்டார்.

* தமிழர் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி அதன் துணையுடன் உரிமைகளை மீட்கும் முயற்சிகளை முன்னெடுக்கின்ற தமிழர் தரப்பு மூலோபாயத்துக்கு இது தடையாக அமையும்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் பேசி இனப்பிரச்சினை தொடர்பான அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வலியுறுத்தி வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவாளித்தால் என்ன என்று கேள்வி கேட்கின்ற சிலரும் இருக்கின்றனர். வாக்குறுதிகள் தான் தமிழ் மக்களை நாசமாக்கிய ஆயுதங்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போன சந்தர்ப்பங்கள் தான் அதிகம். வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் தான் அவர்களின் வாழ்வையும், வளங்களை அழித்துப் போட்டிருக்கின்றன.

சந்திரிகா, ரணில், மகிந்த எல்லோரும் கொடுத்த வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது?

பதவியில் இல்லாத போது இவர்கள் கொடுத்த வாக்குறுதிகள்- பதவிக்கு வந்ததும் காலாவதியாகின. இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு மட்டும் விதிவிலக்கானது அல்ல. அதைவிட, ஒரு இராணுவ அதிகாரியான அவர், தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டில் இருந்து பேரினவாதச் சிந்தனையில் இருந்து விடுபட்டு கீழ் இறங்கி வந்து வாக்குறதிகளைக் கொடுப்பார் என்று நம்ப முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் சமரசம் செய்து கொள்வதற்கு இணங்குவது அல்லது முயற்சிப்பது அபத்தமானது. அதாவது முரண் அரசியல் நடத்தாமல் இணங்கிப் போய் காரியம் சாதிக்கலாம் என்ற வாதங்கள் வருகின்றன.

தமிழ்க் கட்சிகளையும், தமிழ் மக்களையும் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் சமரசம் செய்து கொள்ள வலியுறுத்துபவர்கள், ஏற்கனவே அப்படி அரசியல் நடத்தியவர்களை நிராகரித்தது ஏன்?

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் சமரசம் செய்து கொண்டு அவருக்குச் சார்பான நிலையெடுப்பதானது டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றோரின் அன்றைய நிலைபாடுகளை வலுப்படுத்துவதாகி விடும். அத்துடன் அப்படியொரு முடிவுக்கு வரும்போது யாரும் பிரிந்து நின்று அரசியல் நடத்த வேண்டிய தேவையோ- அவசியமோ இல்லாது போய் விடும். ஏனென்றால் எல்லாக் கட்சிகளும் இணக்க அரசியல் என்று வந்துவிட்டால் சிங்களஅரசுக்குக் கால்பிடிப்பதற்கான போட்டி தான் நடக்குமே தவிர, தமிழரின் உரிமைகள் நடத்தெருவில் தான் நசுங்கிக் கிடக்கும். தமிழ்மக்களைப் பொறுத்தவரையில் இரண்டுமே அவர்களுக்கு நன்கு தெரிந்த பேய்கள் தான். இதில் எந்தப் பேயைத் தெரிந்தெடுப்பதென்று குழப்பிக் கொள்ளக்கூடாது. அப்படியானதொரு தெரிவு முயற்சியில் இறங்கினால் அது விசப்பரீட்சையாகி விடும்.

சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விடும். போரை நியாயப்படுத்தி இத்தனை பேரின் இழப்புக்களையும், அவலங்களையும் நியாயப்படுத்த இந்த ஒரு தேர்தலே உதவி விடும். அவர்கள் தமது பாவங்களை மறைத்துக் கொள்வதற்கான களமாக இதனைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்மக்கள் இடமளிக்கக் கூடாது.

* இந்தநிலையில் தமிழ்மக்கள்- தமிழ்க்கட்சிகள் என்ன செய்யலாம்?
* ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பது ஒன்று தான் இருக்கின்ற ஒரே வழியா?

இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ்மக்கள் பெரியளவில் ஈடுபாடு காட்டியது கிடையாது. ஜனாதிபதியாக யார் வந்தாலும் அவர்களால் தமக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்ற தெளிவும், தகுதியான ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு தமக்கு இல்லை என்ற நிலைப்பாட்டின் காரணமாகவும் தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து ஒதுங்கிப் பழகி விட்டனர். யாழ்.மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் 1982 தேர்தலின் போது குமார் பொன்னம்பலம் போட்டியிட்டதால் தான் 46.31வீத வாக்குகள் பதிவாகின.

* 1988 இல் 21.72 வீதனோரும், 1994 இல் 2.97 வீதமானோரும், 1999 இல் 19.98 வீதமானோரும், 2005 இல் 1.2 வீதமானோரும் தான் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருந்தனர். வன்னி;யிலும் இதே நிலை தான். 1982 இல் தான் அதிகபட்சமாக 61.45 வீத வாக்குகள் அங்கு பதிவாகின. அதற்குப் பிறகு எந்த ஜனாதிபதித் தேர்தலிலும் 34 வீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகவில்லை.

இந்தளவுக்கும் அங்கு சிங்கள, முஸ்லிம் வாக்காளர்களும் இருக்கின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழர் தரப்பில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்ட போது தவிர்ந்த மற்றெல்லா சந்தர்ப்பங்களிலும் வாக்களிப்பில் ஆர்வம் காட்டு;வதில்லை.

ஜனாதிபதித் தேர்தல் புறக்கணிப்பு என்பது அவர்களால் இயல்பாகவே மேற்கொள்ளப்படும் ஒன்றாகி விட்டது. இந்தநிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவா மகிந்தவா என்று வரும் போது தமிழ்மக்கள் யாருக்காகவும் வாக்களிக்க முனைய மாட்டார்கள் என்றே கருத இடமுண்டு. இரண்டு பேரில் யாரினது கைகளில் சிக்கினாலும் அது தமிழ் மக்களுக்கு ஆபத்தாகவே முடியும்.

* இந்தநிலையில் தமிழ்க்கட்சிகள் அனைத்துக்கும் ஒரு முக்கியமான பொறுப்பு உள்ளது. தமிழ்கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தும் முயற்சியில் இறங்கலாம். இது வெற்றி பெறுவதற்காக அல்ல- பிரதான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலை ஏற்படுத்துவதற்காகவே. ஏனென்றால் நடக்கப் போகின்ற தேர்தல் சிங்களப் பேரினவாதத்துக்கு யார் தலைமையேற்பது என்பதற்கே. இது அவர்களுக்கு இடையில் நடக்கப் போகும் அரசியல் யுத்தம்.
இதில் அவர்களில் யாரோ ஒருவர் தான் வெற்றி பெற முடியும். ஆனால் வெற்றி பெறுவதற்கு இரண்டு பேருக்குமே தமிழர் தரப்பு ஆதரவு தேவை.

* எனவே பொதுவேட்பாளர் ஒருவரை தமிழர் தரப்பு களமிறக்கினால் அது அவர்களுக்குள் குழப்பத்தை உண்டு பண்ணும். இன்னொரு விதத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியுடன் கலந்து பேசி பொது வேட்பாளர் தமிழ் மக்களால் ஏற்கத்தக்க ஒருவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தலாம். ஒரு தமிழரை அல்லது முஸ்லிமை போட்டியில் நிறுத்தினால் அது இனரீதியாக வேறுபாட்டில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்று நிரூபிப்பதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும். சிறுபான்மை வேட்பாளரை நிறுத்தி முன்னுதாரணத்தை ஏற்படுத்தினால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடித்தளம் உருவாகி விட்டதாக அர்த்தம்- அதை முதலில் செய்யுங்கள் என்று வலியுறுத்தலாம். ஆனால் அவர்கள் அதற்கெல்லாம் இணங்க மாட்டார்கள் என்பது தெளிவு.

* தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் சம்மதித்தால் அதற்கு ஆதரவு கொடுப்பது பற்றி தமிழ் மக்கள் சிந்திக்கக் கூடும். ஆனால் அப்படியொரு வேட்பாளரை நிறுத்துவதற்கு பிரதான கட்சிகள் இரண்டுமே தயாராக இருக்காது. இந்த இடத்தில் தான் சிங்களப் பேரினவாதம் விழித்த நிலையிலேயே படுத்திருப்பதை தோலுரிக்க முடியம். இப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள் எதிரணியின் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு ஓடினால் அது பெருந்தவறாகவே முடியும்.

* இன்னொரு விடயத்தையும் நாம் மறந்து போகக் கூடாது போர்க்காலத்தில் நடந்த குற்றங்களுக்காக சிங்கள தேசம் சர்வதேசத்தின் முன்னிலையில் பதில் சொல்ல வேண்டிய நிலை தோன்றி வருகிறது. உலகம் இப்போது போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் தேடத் தொடங்கியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் தமிழ் மக்கள் எல்லாவற்றையும் மறப்போம் மன்னிப்போம் என்று யாராவது ஒருவருக்கு ஆதரவு கொடுக்க முன்வந்தால், அது போர்குற்ற விசாரணைகளை மலினப்படுத்தி விடும். அத்தகைய முயற்சிகளை பலவீனப்படுத்தி விடும். அதுமட்டுமன்றி வன்னி மண்ணில் புதைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான உறவுகளின் மரணங்களுக்கு பதில் சொல்ல வேண்டியவர்களே தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற தலைவர்களாகி விடுவார்கள். இப்படியொரு நிலை உருவாக- ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கொடுத்தோ- மகிந்தவை அரியணையில் ஏற்றியோ இன்னொரு வரலாற்றுத் தவறைச் செய்வதற்கு தமிழ்மக்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.

தொல்காப்பியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*