TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐரோப்பாவிற்குச் சென்ற சமய தூதுக் குழுவிற்கான பகிரங்கக் கடிதம்

தமிழர்இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்ற சமயத் தலைவர்களான கலாநிதி பெல்லன்வில விமலரத்ன தேரர், பேராசிரியர் கம்புறு கமுவே வஜிர தேரர், வணக்கத்திற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித், செடெக் நிறுவனத்தின் தேசியப் பணிப்பாளர் டெமியன் பெர்னாண்டோ, மௌலவி நிசாஸ் மற்றும் குணானந்த சர்மா குருக்கள் ஆகியோருக்கு………..

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவரும் வரிச் சலுகைகளை இலங்கைக்கு மீண்டும் வழங்க வேண்டுமெனக் கோரி நீங்கள் மேற்கொண்ட தூதுப் பயணத்தை கௌரவிக்கிறோம். இதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. இந்த வரிச் சலுகை கிடைக்காமல் போனால், பாதிக்கப்படப் போகும் லட்சக் கணக்கான மக்களின் நலனானது எமது நலனாக கருதுவதன் காரணமாகவே இந்தப் பயணத்தை நாங்கள் மெச்சுகிறோம். சமய ரீதியில் நீங்கள் செய்த அர்ப்பணிப்புக்கள் காரணமாக இந்தத் தூதுப் பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்.

இலங்கையில் ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் அரசியல் உதவியாளர்களாக நீங்கள் அங்கு சென்றிருக்கமாட்டார்கள் என தற்போதைக்கு நம்புகிறோம். எனினும், நீங்கள் இதுவரை தலையிடாத இலங்கை மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவ்வாறான தலையீடுகளை மேற்கொள்கிறீர்கள் என்பதன் அடிப்படையிலேயே இது புலப்படும்.

எவ்வாறாயினும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக கீழே சில விடயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

* 1. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையானது நாட்டிற்குத் தொடர்ந்து கிடைக்கும் வரப்பிரசாதம் அல்ல. இலங்கையில்

மனித உரிமை விடயங்கள் செயற்படுத்தப்படும் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச் சலுகையை உறுதியாக வழங்க இணக்கம் தெரிவிக்கும். இந்த இணக்கப்பாடுகளை இலங்கை அரசாங்கம் கடைபிடித்துள்ளது என்பதை இந்தத் தூதுப் பயணத்தை மேற்கொள்ள முன்னர் பொறுப்புமிக்க சமயத் தலைவர்கள் என்ற வகையில் ஆராய்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். ஐரோப்பிய ஒன்றியத்திடம் நீங்கள் முன்வைத்த முடிவுகளை தயவு செய்து

நாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்க முடியுமா?

2. இந்த வரிச் சலுகையை இலங்கை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள தகுதி கொண்டுள்ளதா என விசாரணை நடத்துவதற்காக ஐரோப்பிய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை, இலங்கைக்குள் நுழைவதற்குக்கூட அரசாங்கம் இடமளிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா? நாட்டில் மனித உரிமை மீறப்படும் விடயங்கள் வெளியாவதைத் தடுப்பதற்காகவே இந்த ஆணைக்குழு அனுமதிக்கப்படவில்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? மறைப்பதற்கு எதுவும் இல்லையெனில் அவ்வாறான தடை ஏன் விதிக்கப்பட்டது?

3. இதன்பின்னர் அந்த விசாரணைக் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் பதிலளிக்குமாறு கோரப்பட்ட போதிலும், வழங்கப்பட்ட காலம் முடிவடையும் வரை எவ்விதமான பதில்களும் அளிக்கப்படவில்லை என்பதுடன், அவ்வாறான பதில் எதனையும் அளிக்கப் போவதில்லையென அரசாங்கம் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்ததை நீங்கள் அறிவீர்களா?

4. இலங்கைக்கு இந்த வரிச் சலுகை கிடைப்பதைத் தடுக்க இலங்கைக்கெதிரான சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூக்குரலிடும் அரசாங்கம் அதனைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்த போதிலும், வரியைப் பெற்றுக்கொள்வதைவிட மனித உரிமையை மீறும் அடக்குமுறை நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதே முக்கியமானது எனக் கருதியே, அந்த வாய்ப்பை அரசாங்கம் காலால் உதைத்தது எனக் கூறமுடியாதா?

5. இலங்கையின் மனித உரிமைகள் குறித்த விடயங்களை முன்வைக்கும் போது பக்கசார்பற்ற சமயத் தலைவர்கள் என்ற வகையில் உங்களால் கீழ்காணும் விடயங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்ததா?

‐ இலங்கை நாடாளுமன்றத்தில் 2002ம் ஆண்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட 17வது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்துவதை தொடர்ந்தும் தவிர்த்துவரும் தற்போதைய அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கு அத்தியாவசியமாகவுள்ள சுயாதீன காவல்துறை, சுயாதீன நீதித்துறை, அரச சேவை ஆணைக்குழு போன்றவற்றை ஸ்தாபிப்பதைத் தவிர்த்து வருகிறது.

‐ இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் நோக்கத்தைக் கொண்ட 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமுல்படுத்துவதைத் தவிர்த்து தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் செயலிழக்கச் செய்து வருகிறது.

‐ இலங்கையில் ஊடகங்கள் எதிர்நோக்கியிருக்கும் ஒடுக்குமுறை நிலைமை, ஊடகவியலாளர்களின் கொலை, முடிவற்ற அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. உதாரணமாக சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 10 மாதங்கள் சென்றுள்ளன. 22 முறை வழக்கு விசாரணைகள் நடைபெற்ற பின்னரும், காவல்துறையினர் இதுவரை விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இரண்டு கட்டுரைகளை எழுதியதால் நோத் ஈஸ்டன் ஹெரல்ட் ஆசிரியர் திஸ்ஸ நாயகம், 20 வருட கடுழிய சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண ஊடகசியலாளர்கள், ஊடக ஊழியர்கள் தொடர்பாகவோ, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் போத்தல ஜயந்த கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டது குறித்தோ, சுடர்ஒளி பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டமை பற்றியோ எதுவித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

‐ தமது விருப்பதற்கு மாறாக சுமார் 3 லட்சம் தமிழர்கள் பலவந்தமாக வவுனியாவில் முகாமுக்குள் இடப்பட்டிருந்ததுடன், தொடர்ந்தும் 2 லட்சம் பேர் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.

‐ குற்றவாளிகள் என தம்மால் தீர்மானிக்கப்படும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவதன் மூலம் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொய்யான வேலைத் திட்டமொன்றை இலங்கைக் காவல்துறையினர் செயற்படுத்தி வருகின்றனர். காவல்துறை உயர் அதிகாரிகள் இதனைப் பகிரங்கமாகக் கூறியுள்ளனர். இவ்வாறு கொல்லப்படும் நபர்கள் குறித்து எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை.

‐ அண்மையில் இடம்பெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் அரச வளங்களைப் பயன்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வன்முறைப் பலத்தை பயன்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு தேர்தல் மோசடிகளில் ஈடுபட்டது. நான்கு தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் இதனை அறிக்கையிட்டுள்ளன. மரியாதைக்குரிய சமயத் தலைவர்களே,

பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான விடயம் மனித உரிமை மற்றும் ஜனநாயக அரசியல் நீரோட்டம் என நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்திய சென் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். சமயங்களும் மனித உரிமைகளின் தேவைக் குறித்து சுட்டிக்காட்டியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவரும் வரிச் சலுகைகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல், இலங்கை மக்களின் மனித உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வது அத்தியாவசியமாகும். அந்த உரிமைகளை காலில் மிதித்துக் கொண்டு நாட்டை நிர்வகிப்பதற்காகக் கிடைக்கும் வரப்பிரசாதமாக இந்த வரிச் சலுகை மாறிவிடக் கூடாது. நீங்கள் வரிச் சலுகையைத் தொடர்ந்தும் வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திடம் கூறியதுபோன்று, தயவுசெய்து இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களினதும் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுங்கள். லசந்த விக்ரமதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி ராஜ், ஆகியோரின் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுங்கள். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை உடனடியாக அவர்களது கிராமங்களுக்கு அனுப்பிவைக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள்.

அவ்வாறு இன்றி, இலங்கையில் இடம்பெறும் அரசியல் முறைகேடுகளுக்கு மத்தியில் நீங்கள் அமைதி காத்தால், சமயங்களின் அடிப்படையில் உங்கள் மனசாட்சி உங்களிடம் கேள்வியெழுப்பும். நீங்கள் விருப்பமின்றியேனும் அரசியல் திட்டத்தின் பங்காளிகளாவீர்கள். அவ்வாறு நடக்கக் கூடாது என்பதே எமது பிரார்த்தனையாகும்.

சுனந்த தேசப்பிரிய GTN

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*