TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜனாதிபதி மஹிந்தவும் 3 சகோதரர்களும்!

rajaஇலங்கை அரசை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜபக்ஷ சகோதர நிறுவனத்தின் அரசியல் கட்டமைப்பின் கண்ணோட்டமாக அமைக்கிறது. இக்கட்டுரை “லக்ருவணி மெதகம” என் பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை கடந்த 8ஆம் திகதிய “இருதின” பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.அதன் தமிழ் வடிவமே இது.

இன்று, ‘மஹிந்த சகோதர’ நிறுவனத்தின் 363 பேர் பலதரப்பட்ட அரச பதவிகளை வகித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விதிமுறைக்கு அமைய இப்பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்கு இருக்கும் ஒரே தகுதி அவர்கள் “சகோதர நிறுவனத்தின்” உறுப்பினர்கள் என்பது மட்டுமேயாகும்.

அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் வைத்து மேற்குறிப்பிட்டவாறு கருத்து வழங்கியவர் சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவரான மங்கள சமரவீர. அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமைக்குக் காரணம் உள்ளது. இன்று அரசினுள் போன்றே அரசுக்கு வெளியிலும் சகோதர நிறுவனமானது எந்தளவு தூரத்துக்கு வலுவாகக் காலூன்றிக் கொண்டுள்ளது என்பதை நாட்டுக்குப் புலப்படுத்திவிடுவதே அவரது அக்கருத்து வெளிப்பாட்டுக்கான காரணமாகும்.

மங்கள சமரவீரவின் கூற்று முற்றிலும் உண்மையானதேயாகும். அதாவது அரசும், அரசோடு சம்பந்தப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் என்ற அனைத்தையும் நிர்வகித்து வருவோர் “பரசூட்களின்” மூலம் உயர் பதவிக் கதிரைகளில் வந்தமர்ந்து கொண்டுள்ள சகோதர நிறுவனத்தின் உறுப்பினர்களேயாவர்.

ஜனாதிபதியின் செலவு
இந்த அரசைப் பொறுத்தவரையில் அதன் நான்கில் மூன்று பங்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழேயே கொண்டு செல்லப்படுகிறது. உதாரணமா எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்காத அரசு, தேர்தலை எதிர்கொள்ளும் வரையில் அரசை நடத்திச் செல்வதற்காக இடைக்கால உத்தேச கணக்கு அறிக்கையை முன்வைத்து அவசர அவசரமாக அதை நிறை வேற்றிக் கொண்டது. இவ் அறிக்கையின் மூலம் ஜனாதிபதி மஹிந்தரின் நான்குமாத காலத்துக்கான செலவினங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த தொகை 280 கோடி ரூபாவாக காட்டப்பட்டிருந்தது. வேறு விதத்தில் கூறுவதானால் மஹிந்த ராஜபக்ஷவின் தினமொன்றுக் கான செலவினம் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாவாகும்.

இலங்கையின் வரலாற்றில் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட எந்தவொரு ஜனாதிபதியும் இத்தகைய தொரு பெரும் தொகையை தமது ஒரு நாளைய செலவீனமாகச் செலவழித்ததில்லை. முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவோ, ஆர்.பிரேமதாஸாவோ, டீ.பி.விஜேதுங்கவோ இத்தகையதொரு பெரிய நிதித்தொகையைத் தமக்காக ஒதுக்கிக்கொண்டதில்லை. குறைந்தபட்சம் செலவினம் மிக அதிகமானது என எதிர்க்கட்சியின் கடுந்தொனி விமர்சனத்துக்கு உள்ளான ஜனாதிபதி சந்திரிகா கூட இத்தகைய மிகப் பாரியதொரு தொகையைத் தமது செலவினமாகப் பயன்படுத்திக் கொண்டதில்லை.

அண்ணன், தம்பிக்களின் அதிகார “ஆதிக்கம்”
அது இவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்ஷ இவ்விதமான அரசின் நான்கில் மூன்று மடங்கு நிர்வாகத்தைத் தாமே நிர்வகித்து வருகிறாரெனில் எஞ்சியுள்ள நான்கில் ஒரு பங்கை நிர்வகித்து வரு வோர் எவர்? என்ற வினா இங்கு தொக்கி நிற்கிறது.
அதற்குப் பதிலாக அமைவது, அவர்கள் வேறு எவருமல்லர், மஹிந்தவைத் தவிர எஞ்சியிருக்கும் அவரது மூத்த சகோதரர்களும் இளைய சகோதரர்களுமான மூவரே என்பதாகும். அதற்கமைய, இன்று அரசின் முதல்வரிசை நிறுவனங்கள் அனைத்தும் நிர்வகிக்கப்படுவது இந்த அண்ணன் தம்பிமார்களினாலேயே ஆகும். அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷவின் கரத்துக்குள் இந்நாட்டுப் பொருளாதாரத்தின் கேந்திர மையங்களான விமானசேவை மற்றும் துறைமுகங்கள் அடங்கியுள்ளன. நாட்டின் வருவாயின் அதிகரித்த அளவுப் பிரமாணம் இந்த இரு துறைகளிலிருந்தே கிட்டுகிறது. அவற்றைவிட நீர்ப்பாசனம் போன்ற துறைகளும் சமல் ராஜபக்ஷவின் கரங்களுக்குள்ளேயே உள்ளன.

இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஏனைய அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள் முழுமையாகவே சார்ந்திருப்பது சகோதர நிறுவனத்தின் அடுத்த முக்கியஸ்தரான பஸில் ராஜபக்ஷவின் கீழேயேயாகும். “கிழக்கின் உதயம்” அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் அதன் அனைத்துச் செயற்பாடுகளும் பஸில் ராஜபக்ஷவின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே நிகழ்கின்றன. அது போதாதென்று “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்குமான கட்டளைகளைப் பிறப்பிப்பவரும் பஸில் ராஜபக்ஷவேயாவார். வீதி அபிவிருத்தியின் அனைத்துச் செயற்படுகளையும் மேற்கொள்பவரும் பஸில் ராஜபக்ஷவே. இவ் வாய்ப்புக்கள் அனைத்துமே தினமும் கோடிக் கணக்கில் பணம் அங்குமிங்குமாக புரளும் சாதகங்களைக் கொண்டனவாகும். ஆனால், இங்கு புதுமைக்குரியது யாதெனில், இப்பணத் தொகைகள் என்னவாகின்றன என்பதற்கான சுவடுகள் எங்கு தானும் பதியப்படாததேயாகும்.

இதற்கு நல்லதொரு உதாரணத்தை முன்வைக்க முடியும். அதாவது, தெனியாயவில் நிறுவப்பட்டுவரும் அரச மாளிகைக்குச் செல்லும் பாதை “மகநெகும”வின் மூலம் “கொங்கிறீற்” கலவையிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த வினாவுக்கு அரச தரப்பினரால் பதில் வழங்கப்பட்டபோது “மகநெகும” திட்டம் (பாதை மேம் படுத்தல் திட்டம்) என்பது அரசின் நிறவனமொன்றல்ல என்றே மழுப் பலாகப் பதலளிக்கப்பட்டது. ஆனால், “மகநெகும” பஸில் ராஜபக்ஷவின் நேரடி நிர்வாகத்தின் கீழேயே செயற்படுகிறது.

“பொம்மை” அமைச்சர்கள்!
இது, சகோதர நிறுவனத்தின் செயற்பாடுகளின் ஒரு பக்கம் மட்டுமேயாகும். மறுபக்கத்தை நோக்குவோமானால், அரசின் இன்றைய அமைச்சர்கள் அனைவரும் பெயரளவில் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதாவது அவர்கள் தமது அமைச்சின் துறைகளிலுள்ள அவர்களது பதவிக் கதிரைகளுக்கு மட்டுமாக வரையறுக்கப்பட்டுள்ள பொம்மைகளாக அமர்ந்துள்ளனர். அவர்களுக்குரிய வேலைத் திட்டங்களின் அனைத்துச் செயற்பாடுகளும் சகோதர நிறுவனத்தின் பணிப்புரைகளின் மீதே முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களின் உத்தரவுகளே அங்கு நிறைவேறுகின்றன. அமைச்சர்களின் உத்தரவுகளைவிட அமைச்சுக்களுக்கு அப்பாலிருந்து வரும் இந்த சகோதர நிறுவனத்தின் “பரசூட்” உத்தரவுகளுக்கே அங்கு பெறுமதிகிட்டுகிறது.

அமைச்சு ஒன்றின் மூலமாக கேள்வி கோர லொன்று (டென்டர்) கோரப்படுமானால், அக் கேள்விக் கோரல் சகோதர நிறுவனத்தால் பரிந்துரை செய்யப்படும் நபருக்கே கிட்டுகிறது. அதற்கான தரகுப்பணம் சகோதர நிறுவனத்தைச் சென்றடைகிறது. இங்கு அரசின் அமைச்சர்களுக் கென்ற எந்தவொரு அதிகாரமும் இல்லை. இதன் காரணமாக, இன்றைய அளவில் சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்களும் கூட, சகோதர நிறுவனம் தொடர்பாக கடும் விரக்தி நிலைக்கே உள்ளாகியுள்ளனர்.

அண்மையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப் பட்ட சட்டப்படி வேலை யென்ற தொழிற்சங்க நடவடிக்கையின்போது, சகோதர நிறுவனத்தின் மகிமைகளை நாட்டு மக்களால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடிந் தது. இத் தொழிற்சங்கச் செயற்பாடுகளின் இடை நடுவில், ஜனாதிபதி நேபாளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். மேற்படி தொழிற்சங்கங்கள், கனியவள அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸியுடன் பேச்சுகளை மேற் கொண்ட போதிலும், அமைச்சர் பௌஸியால் அவர்களது விவகாரம் சம்பந்தமாக எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் எடுக்க இயலாது போனது. அதாவது, ஜனாதிபதி நாடு திரும்பும் வரையில் தம்மால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க இயலா தெனத் தொழிற்சங்கங்களுக்கு அவர் தெரிவித்திருந்தார்.

பஸிலிடம் கேளுங்கள்!
சகோதர நிறுவனத்தின் மகிமைகளை உணரத்தக்க மேலு மொரு சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றது. அதாவது, இலங்கையில் வெளிவரும் பத்திரிகை யொன்று, மீள் குடியேற்றங்கள் தொடர்பான அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் வினாவொன்றை எழுப்பியிருந்தது. அது, இன்றைய அளவில் இடம்யெர்ந்துள்ள மக்களுள் எவ்வளவு தொகையினர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற வினாவேயாகும். அவ்வினாவுக்கு அபூர்வமானதொரு பதிலை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வழங்கியிருந்தார். அது குறித்துத் தமக்கு எதுவும் தெரியாதெனவும், மீளக்குடிய மர்ந்துள்ள மக்கள் உள்ளடங்கும் வடபுலத்தின் அனைத்துவிதச் செயற்பாடுகளுடன் சம்பந்தமான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்குப் பிரமுகர் பஸில் ராஜபக்ஷவையே அணுகுமாறும் அவர் பதில் வழங்கியிருந்தார். இவற்றிலிருந்து இந்த சகோதர நிறுவனமானது அரசையும், அரசின் கேந்திர மையங்களையும் சிலந்தியைப் போன்று கௌவிப்பிடித்து ஆக்கிரமித்துக் கொண்டுள்ள விதம் தெளிவாகப் புலப்படுகிறது.
மன்னராட்சிக்கு செல்கிறோமா?

இவை மட்டுமல்ல, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில், இச் சகோதர நிறுவனமானது நாடளாவிய ரீதியில் போட்டியிடத் தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கும் செய்திகள் பல்வேறு தினத்தாள்களிலும், இணையத்தளங்களிலும் காணமுடியும். அப்பத்திரிகைகள் வழங்கும் தகவல்களுக்கு அமைய, மேல்மாகாணத்துக்கு பஸில் ராஜபக்ஷ, வடமேல் மாகாணத்துக்குப் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாணத்துக்கு சமல் ராஜபக்ஷ, தென் மாகாணத்துக்கு நாமல் ராஜபக்ஷ, ஊவா மாகாணத் துக்கு சசீந்திர ராஜபக்ஷ என்ற விதமாக வரவிருக்கும் தேர்தலில் நாட்டின் அதிகாரத்தைப் போன்றே மாகாணங்களின் அதிகாரத்தையும் கூடத் தமதாக்கிக் கொள்வதே சகோதர நிறுவனத்தின் குறிக்கோளாகும். இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, இவர்கள் பயணித்துச் செல்வது வேறு எங்கும் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சுமத்தி நிற்பது போன்றே மன்னராட்சி அரசொன்றுக்கே யாகும் முடியாட்சிக்கேயாகும். பண்டைய முடியாட்சி அரசுகளிலும் கூட மன்னரென்பவர் ஒட்டுமொத்த தேசத்தையும் நிர்வகித்தார். நாட்டின் பட்டி தொட்டிகள் ஈறாக அரசின் கட்டளைகளே நடைமுறைப்படுத்தப்பட்டன. அமைச்சர்களும், பிரதானிகளும் மன்னரின் காலடியில் சூழ்ந்திருந்தனர். மன்னர் நாட்டை நிர்வகிக்கையில் மன்னரின் சகோதரர்கள் இளவரசர்களாகப் பட்டம் சூட்டப் பெற்று நாட்டின் பிரதேசங்களை நிர்வகிக்க அமர்த்தப்பட்டனர். இன்று விரிவடைந்து வருவதும் கூட, அப்பண்டைய முடியாட்சியையே யொத்த நிர்வாகக் கட்டமைப்பேயாகும். சற்று வித்தியாசமானதாக அமைவது, இன்று அந்த அரசானது கூட்டாட்சியென்ற அம்சங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளதேயாகும்.

என்றாலும் கூட, இதற்கு முன்னரும் இந்நாட்டில் இதுபோன்ற குடும்ப நிர்வாகம் நிலவியுள்ளதல்லவா? அவ்வாறிருக்கையில் இப்போது மட்டும் எதிர்க்கட்சிக்கு ஏன் இந்த விமர்சன நோய் ஏற்பட்டுள்ளது?

பண்டா குடும்பம் பரவாயில்லை!
ஏதோ ஒரு தரப்பினர் இவ்வாறு வினாவெழுப்பி நிற்கக்கூடும். அந்த வாதத்தில் உண்மையில்லை யெனக் கூறிவிடவும் இயலாது. அதாவது, பண்டாரநாயக்கா குடும்பம் 1956 ஆம் ஆண்டிலிருந்து இடையிடையே இந்தநாட்டை ஆண்டு வந்துள்ளது. அந்த வகையில் 1956 இல் எஸ். டயிள்யூ.ஆர்.டீ. பண்டார நாயக்கவும் அதன் பின்னர் திருமதி ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவும் பின்னர் சந்திரிகாவும் கூட இந்நாட்டில் பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் ஆட்சி புரிந்துள்ளனர். ஆனால்,இவர்களிடம் தென்பட்ட வித்தியாசமென்பது நாட்டை நிர்வகிக்கையில் இவர்கள் தமது குடும்ப நிறுவனத்தை நாடளாவிய ரீதியில் கட்டமைத்து விட எத்தனிக்காமையேயாகும்.

குறைந்த பட்சமாக, பண்டார நாயக்கா நாட்டை நிர்வகித்துச் செல்கையில் தமது துணைவியை அதனுடன் இணைத்துக் கொண்டதில்லை. பின்னர் நிர்வாகத்துக்கு வந்த அவரது துணைவியாரான சிறிமாவோ பண்டார நாயக்காவும்கூட, அது போன்றே ஒழுகினார். சந்திரிகாவும் கூட இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி யிலிருந்தாலும்,தனது சகோதரரான அனுராபண்டார நாயக்காவைப் பிரதமராக்கிவிடவோ அல்லது அனுரவுக்கு அமைச்சுக்களின் நான்கில் மூன்று பங்கு அதிகாரத்தை கையளிக்கவோ எத்தனித்த தில்லை. அதேபோன்று, பண்டர நாயக்க சந்ததியினரைத் தேடிக் கண்டறிந்து அரசின் உயர் பதவிகளில் அமர்த்திவிட எத்தனித்ததுமில்லை. வெளியுறவுத்துறை சேவைகளுக்கு “பரசூட்” களின் மூலம் இறக்கிவிட்ட நபர்களைப் பதவிகளில் அமர்த்தியதும் இல்லை.

ஆனால், இன்றோ, அதற்கு நேர்மாறான விதத்திலான செயற்பாடுகளே இங்கு நடந்தேறி வருகின்றன.
இது போன்று,சகோதர நிறுவனங்களை நாட்டில் கட்டமைத்து அரசைத் தமக்குரிய சொத்தாக உரிமைப் பத்திரம் எழுதிக்கொண்ட அரச நிர்வாகிகளோ உலகில் தாராளமாகவே காணப்பட்டுள்ளனர். அந்தவகையில் ரஷ்யாவின் சார் மன்னர் குடும்பமும், பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ் குடும்பமும் அவ்விதமாக சகோதர நிறுவனங்களை நாடளாவிய ரீதியில் கட்டமைத்து நிர்வாகத்தைக் கொண்டு செல்லும் விதத்தில் செயற்பட்டுள்ளன. ஆனாலும் இறுதிக்கட்டத்தில் அவர்களும்கூட நாட்டு மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. அவர்களது இறுதி முடிவாக நாட்டு மக்களாலேயே அவர்கள் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். அவைபோன்ற நிகழ்வுகள் எமது நாட்டில் முன்னொருபோதும் இடம்பெற்றதில்லை யென்றாலும்கூட, இந்த வரலாற்றுப் பாடங்கள் எமது நிர்வாகிகளுக்கும் கூட பெறுமதிமிக்க பாடங்களாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*