TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பொன்சேகா ஜனாதிபதியாவது இலங்கையை பாகிஸ்தான், மியான்மார் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லலாம்?

fonsegaஜெனரல் சரத் பொன்சேகாவினால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியுமானால் எதிர்காலத்தில் தேர்தலில் அவர் அரசிற்கு கடும் சவாலாக விளங்குவார் என ஏ.எவ்.பி. செய்திச் சேவை கருத்துத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிடாமைக்கு இதுவே காரணம் என அரசியல் ஆய்வாளர்கள்,தெரிவித்துள்ளனர். இதே போல் “சண்டே ரைம்ஸ்'”எழுதியிருந்த அரசியல் ஆய்விலும் ஜெனரல் பொன்சேகாவின் விலகல் கடிதம் ஏற்படுத்தியுள்ள கவலையும் சிக்கலும் என கட்டுரை வெளியிட்டிருந்தது. அவற்றை தொகுத்து

அவ் ஆய்வுகளின் தொகுப்புக்கள் வருமாறு

முதலில்

ஏ.எவ்.பி. செய்திச் சேவை மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

சரத் பொன்சேகாவால் மஹிந்த ராஜபக்ஷக்கு கடும் சவால்!
ஏ.எவ்.பி. செய்தி ஆய்வில் தெரிவிப்பு

* ஜெனரல் சரத்பொன்சேகா அரசியலில் நுழைவது நிச்சயம். அவர் தற்போது அதிலிருந்து பின்வாங்க முடியாது எனப் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் பேராசிரியர் சுமணசிறி லியனகே தெரிவிக்கிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிடாமல் தவிர்த்தமைக்கு சரத் பொன்சேகாவின் சவாலே காரணம் என சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் கிடைத்துள்ள ஆதரவைப் பயன்படுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை நடத்துவார், இது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. சரத் பொன்சேகாவினால் எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்த முடியுமானால் தேர்தலில் அவர் ஜனாதிபதிக்கு கடும் சவாலாக விளங்குவார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாட்டின் விடயங்களில் இராணுவத்தின் செல்வாக்கை அதிகரித்தமை அரசுக்கு இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அரசியல் விரிவுரையாளர் டெரன்ஸ்புரசிங்க தெரிவிக்கிறார். இராணுவத் தலைவர் ஒருவர் ஊழலற்ற சுத்தமான அரசொன்றைத் தருவார் என மக்கள் கருதுகின்றனர். அதேவேளை, சரத் பொன்சேகா தேர்தலில் குதிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறலாம் என்றும் பலர் எச்சரிக்கின்றனர்.

சரத் பொன்சேகா ஜனாதிபதியாவது இலங்கையை பாகிஸ்தான், மியான்மார் போன்ற நிலைக்குக் கொண்டு செல்லலாம் என மற்றுமொரு விரிவுரையாளர் தெரிவிக்கின்றார்.ஜெனரல் சரத் பொன்சேகாவின் 40 வருட கால இராணுவ சேவையே அவரது அரசியல் பங்களிப்பிற்கான அடிநாதமாக அமையும்.

குறுகிய கால அளவில் அவர் அரசியலில் நுழைவது ஜனநாயகத்திற்கு நல்லது. ஏனென்றால், அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார் என்று தெரிவித்துள்ள சுமணசிறி லியனகே, ஜனநாயகம் செழிப்பதற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம் என்றார். இதேவேளை, நீண்டகால அடிப்படையில் இது ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கிடையில், சரத் பொன்சேகாவிற்கும் அரசிற்கும் இடையிலான பிளவு மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களின் கரங்களைக் குறுகிய காலத்திற்கேனும் பலப்படுத்தியுள்ளது என மனித உரிமை ஆர்வலரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறுகிறார்.

அடுத்து

ஜெனரல் பொன்சேகாவின் விலகல் கடிதம் ஏற்படுத்தியுள்ள கவலையும் சிக்கலும்

கடந்த 15.11.2009 அன்று “சண்டே ரைம்ஸ்'”எழுதியிருந்த அரசியல் நோக்கிலிருந்து சில பகுதிகள் இவை.

* கடந்தவாரம் வியாழக்கிழமை பாதுகாப்புப் படை அதிகாரிகளின் பிரதம அதிகாரியான ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதியுடன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதன்மூலம் எதிர்க் கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவிருப்பதைத் தவிர்த்து விடுவார் என்று சில வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவ்வாறான பதவி விலகல் கடிதம் ஒன்று வருமானால் அரைமணி நேரத்துக்குள் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு விடும் என்று ஜனாதிபதி ஏற்கனவே தெரிவித்திருந்த வகையில் வெள்ளிக் கிழமையன்றே அவரது பதவி விலகலை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்துத் தமது வார்த்தையை உண்மை யாக்கிவிட்டார் ஜனாதிபதி.

ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் ஒரு இணைப்புக்குறிப்பில், இராணுவத்தில் மிக உயர்ந்த தராதரங்களைத் தம்மால் அறிமுகப்படுத்த முடிந்திருந்ததாக பொன்சேகா தெரிவித்திருந்தார். இவ்வாறு உயர் தராதரங்களைப் பேணியமை குறித்த குறிப்புகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்ததற்கு மாறாக அமெரிக்காவிலிருந்து திரும்பிய அடுத்த நாளே அவர் எதிர்க்கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்தியிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவர் இரகசியமான ஓர் இடத்தில் ஐக்கிய தேசியக் முன்னணியின் முக்கிய பிரமுகர்கள் மூவருடன் ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் (M பிரிவு) தலைவர் மங்கள சமரவீர தேசிய ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கணேசன் ஆகியவர்களே அம்மூவரும்.

தாம் பதவி விலகுவதற்கான காரணங்கள் அவரது இணைப்புக் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கவேண்டியவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த விடயங்கள் பின்னர் மாற்றப்பட்டு விட்டமை தெரியவந்திருப்பதாக இப்பொழுது கவலைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. பொன்சேகா தமது விருப்பத்துக்குச் சிலவற்றை நீக்கியும் சிலவற்றைச் சேர்த்துமிருக்கிறார் என்று கருதப்பட்டது.

தாம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு விட்டால் இது நன்றாய் இருக்காது என்பதாக பொன்சேகா கருதியிருக்கலாம் என்று பெயர் குறிக்க விரும்பாத அவர்களில் ஒருவர் தெரிவித்தார். ஆனால் இது மிகப் பிந்திப்போய் விட்டது. எதிர்க்கட்சிகள் அதனை ஏற்கனவே பகிரங்கப்படுத்திவிட்டார்கள். எதிர்க்கட்சியினரின் தரப்பிலான விவரம் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அவை ஜனாதிபதிக்கு ஜெனரல் பொன்சேகா அனுப்பி யிருந்த கடிதமன்று ஜனாதிபதியின் செயலாளர் வீரதுங்காவிடம் ஜெனரல் பொன்சேகா கையளித்த கடிதத்திற்கும், எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசித்துத் தயாரித்த கடிதத்திற்கும் மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அவைகளில் பல கேள்விகளை எழுப்புபவையாகவும் உள்ளன. பதவி விலகல் கடிதத்திலும் அதனுடன் இணைக்கப்பட்ட பகுதியிலும் மாற்றங்களை ஜெனரல் பொன்சேகா செய்துள்ளார்.

இந்த ஆவணங்களில் மாற்றங்களைச் செய்வது அவருடைய சொந்தவிருப்பத்தைப் பொறுத்தவிடயம். எதுவானாலும் அது அவரது சொந்தப் பதவி விலகல் தொடர்பான ஆவணம். ஆனால் இது அவருடைய அரசியல் நட்புத் தரப்புகள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. தாம் தமக்கே உரிய மனிதர் என்ற நிலைப்பாட்டை இது வெளிப்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது.

நாட்டில் நிலவும் ஊழல்கள் பற்றி ஜெனரல் பொன்சேகா வெளிப்படையாகப் பேசியுள்ளார் என்றாலும் ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாகவே மௌனம் சாதித்து வந்துள்ளார். ஜெனரல் பொன்சேகா, ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகப் பிரமுகர்கள் துரோகிகள் என்று வர்ணிக்கப்பட்டமை, போன்ற நிலைமைகள் தொடர்பாக பாராமுகமாகவே இருந்து வந்துள்ளார் என்று உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளமை இரகசியமான விடயமன்று. சில ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற முயன்றால் அவர்களைத் தடுக்கும்படி கொழும்பில் விமான நிலைய அதிகாரிகள் கேட்கப்பட்டிருந்தார்கள் என்று ஜெனரல் பொன்சேகா ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தெரிவித்திருந்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இது வெள்ளை வான்களில் வந்து சில நபர்கள் பத்திரிகையாளர்களைக் கடத்துகிறார்கள், தாக்குகிறார்கள், பயமுறுத்துகிறார்கள் என்பன போன்ற சம்பவங்கள் தொடர்புபட்ட விடயமாகும்.

இந்த வெள்ளைவான் கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கொலைகள் தொடர்பில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசிடம் முறையிடப்பட்டது. இதனால் கவலையடைந்திருந்த ஜனாதிபதி ஒருசமயம் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமொன்றில் “இவை என்னை அடித்த மாதிரி” ஆகும் என்று கூறி இருந்தார். இவைகள் தொடர்பாகத் தம்மைக் குற்றஞ்சுமத்தக்கூடாது என்ற செய்தியையே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார். ஜனநாயகம் தொடர்பான போராட்டக்காரர்கள் தொடர்பாகவும் இவ்வாறே நடந்தது. அதனால்தான் அரசு நடத்தும் ஒளிபரப்பு அமைப்புகள் ஊடாக இவ்வாறான விடயங்கள் வெளிவராமல் இருக்க, இராணுவப்படைத் தளபதிகள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்குமுன் அனுமதி பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சினால் உத்தரவிடப்பட்டிருந்தது. ஒக்ரோபர் 21ஆம் திகதி மாத்தளை அலுவிகார விளையாட்டரங்கில் புலிகளை வெற்றிகொண்டமைக்காக இராணுவத்தினரைப் பாராட்டுவதற்காக நடை பெற்ற விழாவில் பேசிய ஜனாதிபதி ராஜபக்ஷ பின்வருமாறு கூறினார்:

“இராணுவத் தளபதிக்கு பதவி நீடிப்பு வழங்கப்படவிருந்தபோது எதிர்ப்புகள் கிளம்பியது எனக்கு நினைவுக்கு வருகின்றது. இதில் சில ஊடகங்களும் சம்பந்தப்பட்டிருந்தன. கொழும்பில் ஒரு எதிர்ப்பு போராட்டமும் நடைபெற்றது. இரட்சண்ய சேனையைக் கொண்டு நடத்தவும் கூட தளபதி பொருத்தமுடையவராய் இல்லை என்று சிலர் கூறினார்கள். ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டால் அல்லது கடத்தலுக்கு வெள்ளை வான் பாவிக்கப்பட்டால் இராணுவமே குற்றஞ்சாட்டப்பட்டது. அவர்கள் இராணுத்தைக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் என்னைத் தாக்கவில்லை. நான் கூறினேன் நாட்டை விடுவிப்பதற்கு வழி விடுங்கள் என்று” பொன்சேகாவின் கடிதத்தில் ஊடக சுதந்திரப் பாதுகாப்பு விடயம் தவிர்க்கப் பட்டிருப்பதானது புதிதாக நிறுவப்பட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணியில் குமுறல்களை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகின்றது.

ஏனென்றால் தொலைந்துபோன பல ஜனநாயக சுதந்திரங்களை மீளவும் நிலைநாட்டுவது தொடர்பாக இந்த முன்னணி அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. இவைகளில் ஊடக சுதந்திரமும் முக்கியம் பெறுகின்றது. கடந்த செவ்வாயன்று தளபதிகளின் கூட்டத்திற்கு தலைமை வகித்ததன் பின்னர் ஜெனரல் பொன்சேகா தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ சபைக்குத் தலைமை வகித்தார். வழமையாக இடம்பெறும் பகல் போசனத்தின் பின்னர் ஜெனரல் பொன்சேகா ஜனாதிபதி மற்றும் அவரது செயலாளர் வீரதுங்கவுடன் நடைபெற விருந்த கூட்டமொன்றுக்காக நிற்கும் படி கேட்கப்பட்டிருந்தார். அங்கு விவாதிக்கப்பட்டவைகளின் முழுவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் அரசியலில் இறங்கப்போவது உண்மையா என்பது பற்றி ஜனாதிபதி விவாதித்தது தெரியவந்துள்ளது. அப்படியான யோசனை ஏதுமிருக்குமானால் பதவியை விட்டு விலகிக்கொள்ளும்படியும் அவர் தெரிவித்துள்ளார். பொன்சேகாவை பொதுவேட்பாளராக நியமிப்பதென ஐக்கியதேசிய முன்னணிக் கட்சிகளுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டிருப்பது தெரிந்தவிடயமே.

பொன்சேகாவின் முறைப்பாடு

* ஜனாதிபதியின் செயலகத்தில் வைத்து, தமக்கு இராணுவத் தளபதி பதவியிலிருந்து கூட்டுப்படை அதிகாரிகளின் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு 48 மணித்தியாலமே அவகாசம் வழங்கப்பட்டிருந்தது என்று ஜனாதிபதியிடம் பொன்சேகா முறையிட்டிருக்கின்றார். அந்தப் பதவியிலிருந்த முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷாந்தா கொட்டகொடவுக்கு இரண்டு மணி நேரமே வழங்கப்பட்டது. அந்தப் பதவியை உங்களுக்குத் தருவதற்காக. அவர் தமது மகளின் திருமணத்திற்காக ஒரு வாரம் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தங்கியிருக்க தமக்குக் கால அவகாசம் தரும்படி கேட்டிருந்தார். மறந்துவிடாதீர்கள். அதை நீங்கள் எதிர்த்ததால் அவர் போகவேண்டியேற்பட்டது என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் உரையாடியபோது ஜனாதிபதி தமக்குப் பிரதமமந்திரிப் பதவியை அல்லது பாதுகாப்பு அமைச்சு செயலாளர் பதவியை வழங்க முன்வந்ததாகவும் தாம் அதை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார். எனது சகோதரன் போல உம்மை நேசிக்கிறேன் என்று கூறி தொடர்ந்தும் அரசுக்கும் நாட்டுக்கும் சேவை புரியும்படியும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார். அடுத்து வந்த வியாழக்கிழமை இலங்கைக்கு மியான்மார் சிரேஷ்ட ஜெனரல்தான் ஷ்வே வருகைதரும் போது அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு வருமாறு ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதி கோரியிருந்தார். அந்தவகையில் அவர் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்பாளர்கள் வரிசையில் நின்றபோது அவரது பரம எதிரியான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) வசந்தகரண கொட அவருக்கு முந்திய வரிசைக் கிரமத்தில் நிற்கக் காணப்பட்டார். உயர்மட்ட வரிசைக் கிரமத்தில் ஒரு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு கூட்டுப்படை அதிகாரிகளின் தலை வரை விட உயர்வானவர். நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் என்ற வகையில் இப்பொழுது கரணகொட, பொன்சேகாவுக்கு உயர்நிலையில் உள்ளார்.

வரவேற்பு நிகழ்வுகள் முடிவுற்ற நிலையில் ஜெனரல் பொன்சேகா அமைதியாக இருந்தார், அவ்வேளை அங்கு வந்த அமைச்சரவை அந்தஸ்து இல்லாத தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, “குப்பை வாளியில் இறங்க வேண்டாம் நாங்கள் தாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

அன்று மாலை களனி ரஜமகாவிகாரைக்குச் சீருடை இல்லாமல் வணக்கம் செலுத்தச் சென்றபோது அங்கு மேர்வின் சில்வாவின் ஆட்கள் என்று கருதப்படும் சுமார் 60 பேர் அங்கு கூடி நின்றார்கள். விகாரையில் வணக்கம் செலுத்தி விட்டு அவர் வந்தபோது அங்கு குழுமியிருந்த கூட்டத்தினர் ஊளைச் சத்தமிட்டு கிண்டல் செய்தார்கள். வெளிநாட்டு சதித்திட்டங்களுக்கு நாட்டைக் கூட்டிக் கொடுக்க நாங்கள் விடப் போவதில்லை என்று கூச்சல் போட்டார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*