TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சு.கட்சியின் கூட்டத்துக்கு முன் சிறிலங்கா சென்ற பிரணாப் முகர்ஜியின் விஜயத்தின் பின்னணியில்.!

பிரணாப் முகர்ஜிஇலங்கைக்கான விஐயத்தை மேற்கொண்ட இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகையின் பின்னணியில் இலங்கையின் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, முன்னாள் இராணுவத் தளபதியின் பதவி விலகல் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரான அரசியல் நிலமை தொடர்பாக கடும் கரிசனை கொண்டுள்ள இந்தியா – பிரணாப் முகர்ஜியின் விஐயத்தின் பின்னணி தொடர்பாக என்னதான் காரணங்களைக் கூறினாலும் – அடிப்படையில் எப்படியாவது தனக்கு சார்பான ராஐபக்சவின் அரசை மீளக்கொண்டுவருவதில் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத்தனத்தின் ஒரு அங்கமாகவே முகர்ஜியின் வருகை நோக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள அரச தவைலர் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் பிரதானப்பட்டிருக்கும் தமிழ்மக்களின் வாக்குகளை எப்படி கவரலாம் என்பதைக்கருத்தில் கொண்ட நகர்வுகளை ராஐபக்சவும் துணைநிற்கும் இந்திய அரசும் போட்டி போட்டுச் செய்கின்றனர். குறிப்பாக அகதிகள் விவகாரம், யாழ் வன்னி மக்களை கவரும் விதத்திலான கொள்கைகள், கோட்பாட்டுத் தளர்வுகள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் வன்னிப் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களிற்கும், இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களிற்கும் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு, போக்குவரத்து வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இந்தியாவும் ஈழத்தமிழ் மக்களிடம் இழந்துவிட்ட ஆதரவைப் பெற பலவகைகளில் முயற்சிக்கின்றது. குறிப்பாக கடந்த பத்தொன்பது வருடங்களாக கருத்தில் எடுக்கப்படாமல் இருந்த தமிழகத்தின் ஈழ அகதிகள் தொடர்பாக, அண்மையில் தீடீர் ஆய்வுகள் மேற்கொண்ட தமிழக அரசு 100 கோடி ரூபா ஒதுக்கீட்டில் கொங்கிறீற் வீடுகள் உட்பட சில சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வந்த சில நாட்களிற்குள்ளேயே பிரணாப் முகர்ஜியின் இலங்கைக்கான விஐயமும் இடம்பெறுகின்றது. மாகாண சபைக்கான கூடுதல் அதிகாரங்களை வழங்குதல், அகதிகள் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தல், கண்ணிவெடியகற்றலுக்கு மேலதிக உதவிகளை வழங்குதல் போன்ற செய்திகளை தாங்கிச்சென்றாலும் அவருடைய உள்நோக்கம் வேறுபட்டதாகவே இருக்கின்றது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தூர வீச்சு எல்லையில் பல பிரதான தளங்களை தென்பகுதியில் நிறுவியிருக்கின்றது இந்தியா. ஆனால் தற்போது தனது பிடரிக்குள் ஆபத்து சூழ்வதை தடுப்பது அவர்களது முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கின்றது. அதற்காக என்ன விலையையும் கொடுக்க தயாராகி செயற்பட்டுவருகின்றது. ஏனெனில், இலங்கை ஐனாதிபதித் தேர்தலில் இருமுனைப்போட்டிக்கான வாய்ப்புகள் பிரகாசமடையத் தொடங்கியுள்ளன. இதில் எதிரணி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சரத்பொன்சேகா சீனா, பாகிஸ்தான் அபிமானி என அண்மையகால சம்பவங்களிலிருந்து இந்தியா ஊகிக்கின்றது. எனவே சரத்பொன்சேகா பதவிக்கு வருவதை இந்தியா முற்றுமுழுதாக விரும்பவில்லை. எப்படியாவது ராஐபக்சவை வெற்றி பெற வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே முயல்கின்றது.

ராஐபக்சவிற்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் சந்தர்ப்பத்தில் ஐனாதிபதித் தேர்தலை தற்போது நடத்தாமல் விட்டுவிட்டு பொதுத்தேர்தலை நடத்தி அதன் வெற்றி தோல்வியடிப்படையில் ஐனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முடிவுகளும் பரிசீலனையில் உள்ளன. என்றாலும் முதலில் ராஐபக்சவின் வெற்றிவாய்ப்பிற்குத் தடையாக வரக்கூடிய காரணிகளை அப்புறப்படுத்தப்படுத்துவதில் இந்தியா முனைப்புடன் செயற்படுகின்றது.

அதாவது –

• எதிரணியின் பொதுவேட்பாளராக சரத்பொன்சேகாவை நிறுத்தாமல் செய்வதற்கு ஐ.தே.கட்சியுடன் உடன்பாட்டிற்கு வருதல்.
• ராஐபக்ச மற்றும் சரத்பொன்சேகாவிற்கு இடையில் உடன்பாட்டைக்கொண்டு வருதல.
• சரத்பொன்சேகாவை தேர்தலில் போட்டியிடவேண்டாம் என நேரடியாக வலியுறுத்தல்.
• எந்த வகையிலாவது தமிழ்மக்களின் வாக்குவங்கியை ராஐபக்சவிற்குச் சார்பாக திருப்புதல் அல்லது தமிழ்மக்களை தேர்தலில் ஆர்வம்காட்டாமல் செய்தல்.
• தமிழ்கட்சிகளை சரத்பொன்சேகாவிற்கு எதிரான அரசியல் முடிவுகளை எடுக்குமாறு வற்புறுத்தல் மற்றும் இந்தியாவிற்கு சார்பான முடிவுகளிற்கு வரக்கூடியதான ஏற்பாடுகளை செய்தல்
• ஐனாதிபதித்தேர்தலில் ராஐபக்சவிற்கான வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் ஐனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தி, தமிழ் மக்களின் மனங்களை வெல்லுதல், சரத்பொன்சேகாவின் முனைப்பை மழுங்கடிக்கச்செய்தல், சிங்கள மக்கள் மத்தியில் அபிவிருத்தியை மேலோக்கி யுத்த வெற்றி மனநிலை உணர்வை குறைத்தல்.

– ஆகிய விடங்களில் இந்தியா முனைப்படைய ஆரம்பித்திருக்கிறது.

இவ்வாறு இந்தியாவும் இலங்கையும் அரசியல் ரீதியில் பரஸ்பரம் ஆசுவாசப்படுத்தும் முயற்சிகளின் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில் ஈழத்தமிழர்கள் இந்த சூழ்நிலையை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை அடுத்த பத்தியில் பார்ப்போம்.

நன்றி: ஈழநேஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*