TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சரத்பொன்சேகாவின் பதவி விலகல் கடிதமும், அவர் குறிப்பிட்ட 16 காரணங்களும்!

Sarath Fonsegaபாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகம்,கொழும்பு 2009 நவம்பர் 12 மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோள்

1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டப்ளியூ.பி., ஆர்.எஸ்.பி., வி.எஸ்.வி., யூ.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன், 1971ம் ஆண்டு ஜூன் மாதம் 1ம் திகதி அதிகாரி தரத்திற்கு நியமிக்கப்பட்டேன். தனிப்பட்ட ரீதியாகவும் வேறு வழிகளிலும் தீர்விற்கான கடந்த 25 வருட காலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. இரத்தம் சிந்தும் பயங்கரவாதத்தில் நாடு சிக்கியிருந்த சந்தர்ப்பத்தில் என் மீது அதிக நம்பிக்கையும், தெளிவும் இருந்ததனால் 2005ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீங்கள் என்னை லெப்டினன் ஜெனரலாக தரம் உயர்த்தி இராணுவத் தளபதியாக நியமித்தீர்கள்.

2. உங்களுக்குத் தெரியும், மூன்று வருடம், ஏழு மாதங்களுக்குள் இராணுவத்தில் நடவடிக்கையின் மூலம் பயங்கரவாத அமைப்பை முழுமையாக கிள்ளியெறிந்து விடுதலைப் புலிகளையும், அதன் தலைமைத்துவத்தையும் தீர்க்கமான வகையில் தோற்கடித்து எண்ணிப் பார்க்க முடியாதளவில் ஆயுதங்களையும் மீட்க முடிந்தது. நீங்கள் வழங்கிய அரசியல் உதவியின் காரணமாக பெற்றுக்கொள்ள முடிந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக இராணுவத்தை வழிநடத்தியது நான் எனக் கூறுவதில் தவறில்லை. சிரேஸ்ட கட்டளை அதிகாரிகள், ஏனைய இராணுவ உறுப்பினர்கள் அந்தப் பொது இலக்கை நோக்கிச் செல்ல முனைப்புக்களை மேற்கொண்டாலும் எனது பார்வையும் தலைமையும் காரணமாகவே அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது.

3. நான் மேற்கொண்ட சேவையை நாடும் நீங்களும் வரவேற்றதுடன் இதன் காரணமாக நான் இராணுவ சேவையிலிருந்த போது முதல் முறையாக நான்கு நட்சத்திரங்களைப் பெற்ற ஜெனரலாக பதவிக்கு உயர்த்தப்பட்டேன் என்பதை நன்றியுடன் நினைவுகூருவதுடன், எனினும், இதன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்கள் காரணமாக நான் மிகவும் தைரியமிழக்க காரணமாக அமைந்தது.

4. இணைப்பில் கூறப்பட்டுள்ள விடயங்களை வெளியிட விருப்பமின்மை காரணமாக எனது விருப்பமின்றியேனும் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் மாத்திரமே அறிந்த காரணங்கள் என்பதால் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்னில் கொண்ட நம்பிக்கையும், புரிந்துணர்வும் தொடர்ந்தும் காணப்படவில்லை. இதனால், 40 வருட சேவை அனுபவம் கொண்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரி என்ற வகையில் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட காணப்படும் நிலைமைகள் இடமளிக்காது. இதனால், கௌரவமாக நான் கூறுவது என்னவெனில் 2009 டிசம்பர் 01ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற அனுமதி வழங்குமாறு கோருகிறேன்.

5. அதேபோல் நான் கௌரவமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் நான் ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் நான் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்கு என்பதால் அவர்கள் என்னை இலக்கு வைக்கக் கூடிய இயலுமை இன்னும் இருப்பதால் ஆயுதப் பயிற்சிப் பெற்ற படையினர், பொருத்தமான குண்டு துளைக்காத வாகனம், பாதுகாப்பு வாகனம் உள்ளிட்டவை அடங்கிய போதுமான பாதுகாப்பை வழங்குமாறு நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் டபிள்யூ.கே.ஜே.கரண்ணாகொடவிற்கு 100 படையினர் அடங்கிய பாதுகாப்பு வாகனம், குண்டு துளைக்காத வாகனம் என்பன வழங்கப்பட்டுள்ளதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். நீங்கள் அறிந்ததுபோல் எனக்கிருக்கும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எனக்கும் இவ்வாறான பாதுகாப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

6. இதற்கு உங்களுக்கு நான் உதாரணமொன்றை சுட்டிக்காட்டுவதானால், 1984ம் ஆண்டு அமிர்தசரஷ்லுள்ள பொற்கோயிலில் சீக்கியப் பிரிவினைவாதிகளுக்கெதிராக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட ஷப்ளு ஸ்டார் இராணுவ நடவடிக்கைகக்கு தலைமை தாங்கிய முன்னாள் இந்திய இராணுவ கூட்டுப் படை அதிகாரி ஜெனரல் ஏ.எஸ்.வார்டியா ஓய்வுபெற்ற பின்னர் அவர் பெற்ற வெற்றி காரணமாக 1986ம் ஆண்டு அவர் பழிதீர்க்கப்பட்டார். விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நான், அவ்வாறான நிலைமையை எதிர்நோக்க விருப்பமில்லை. இதனால் வாழ்நாள் முழுவதும் எனக்கு பாதுகாப்பு வழங்குவது உங்களுடைய பொறுப்பாகும்.

7. அதேபோல், இராணுவத் தளபதியாக பணியாற்றிய காலத்தில் என்னால் தெரிவிக்கப்பட்ட கருத்தை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். அப்போது நான் கூறியதும் பின்னர் நிறைவேற்றிய உறுதிமொழியானது நான் தொடர்ந்தும் இராணுவத் தலைமைப் பதவியில் இருப்பதற்கு விருப்பமில்லை என்பதாகும். அத்துடன், எனது ஓய்வுபெறும் காலம் நான்கு வருடங்களாக தாமதித்துவருவது என்பதால் தொடர்ந்தும் தாமதிக்காது நான் ஓய்வுபெற விரும்புகிறேன்.

8. உங்களது தாழ்மையான பரிசீலினைக்காக

கௌரவமான முறையில் உங்களின் கீழ் பணியாற்றிய ஜி.எஸ்.சி. பொன்சேக்கா ஆர்.டப்ளியூ.பி., ஆர்.எஸ்.பி., வி.எஸ்.வி., யூ.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி.ஜெனரல்கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி இரகசியமானது இணைப்பு

2009 நவம்பர் 12

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற காரணமாக அமைந்த விடயங்கள்

1. இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வரை இராணுவத் தளபதியாக கடமையாற்ற வேண்டும் என நான் விடுத்த வேண்டுகோளை கவனத்தில் கொள்ளாது சூழ்ச்சியொன்று ஏற்படலாம் என பல சக்திகள் உங்களை தவறாக வழிநடத்தியதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை வெற்றிகொண்டவுடனேயே இராணுவத் தளபதி பதவியில் மாற்றத்தை மேற்கொண்டது. சூழ்ச்சி தொடர்பான அச்சம் பற்றி இராணுவத்தினர் நன்று அறிந்தவிடயமாகும்.

2. யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியாக மூன்று வருடங்கள் முன்னுதாரணமாக சேவையாற்றிய அப்போது கூட்டுப் படை தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியை எனக்குப் பின்னர் இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு நான் செய்த பரிந்துரையைக் கவனத்தில் கொள்ளாது ஹோல்டிங் ப்ரோமஷன் கட்டளை அதிகாரியாக மாத்திரம் இறுதிப் போரில் கடமையாற்றிய, ஒழுக்காற்று விசாரணையை எதிர்நோக்கவிருந்த அதிகாரியொருவரை எனக்கு அடுத்ததாக நியமித்தமை,

3. இராணுவத் தளபதி என்ற பதிவி மிகவும் சிரேஸ்ட பதவியென்ற போதிலும் சாதாரண மக்களையும், இராணுவ உறுப்பினர்களில் அதிகளவானவர்களையும் தவறாக வழிநடத்தக் கூடிய சிறிய இணைப்புப் பொறுப்புக்களைத் தவிர வேறு அதிகாரங்கள் அற்ற பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியாக நியமித்தமை, போரை முன்னெடுத்த இராணுவ உறுப்பினர்களுக்கு சிறந்த நிர்வாகக் கட்டமைப்பையும், அவர்களின் நலன்புரி நடவடிக்கைகளை உரிய நிலைக்குக் கொண்டு வருவதற்காகவும் எனது கடமைகளை நிறைவேற்ற சந்தர்ப்பமளிக்காது, இராணுவப் பதவியிலிருந்து விலகுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் யுத்த வெற்றியின் பின்னர் இரண்டு வாரங்களில் அழுத்தம் கொடுத்தமை, மற்றும் இரண்டு மாதங்களுக்குள் எனது பதவியின் அதிகாரங்களை கையளிக்குமாறு நீங்கள் மேற்கொண்ட அழுத்தங்கள்,

4. அதேமாத்திரமல்லாது, எனது நியமனம் வழங்கப்பட முன்னர் பாதுகாப்புக் கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்குள்ள அதிகாரங்கள் தொடர்பில் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன். முன்னர் இருந்த அதிகாரங்களைவிட அந்தப் பதவிக்கு, அதிகளவான அதிகாரங்கள் வழங்கப்படும் என என்னிடம் கூறப்பட்ட போதிலும், எனது நியமனத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் சூட்சும விவகார ஆலோசகரினால் எழுத்தப்பட்ட கடிதத்தில், எனது நியமனமானது படையினருக்கிடையில் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவே அன்றி அனைத்துப் படைகளுக்கும் தலைமைத்துவம் வழங்க அல்ல எனத் தெரிவித்திருந்தார். நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தக் கடிதத்தை இதனோடு இணைந்து அனுப்பியிருக்கிறேன். இந்த நடவடிக்கைகளின் மூலம் இராணுவத் தலைமைத்துவத்தின் அதிகாரங்களை எனக்கு வழங்க நீங்களும், அரசாங்கமும் விருப்பமில்லை என்பதுடன், என்னைக் குறித்த அவநம்பிக்கைக் கொண்டுள்ளமையும் தெளிவாகியுள்ளது. யுத்த வெற்றியைப் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட சேவையைக் கருத்திற்கொள்ளும் போது இவ்வாறான நிலைமை மிகவும் அதைரியத்தை ஏற்படுத்த ஏதுவாக அமைந்தது.

5. அதேவேளை, பின்னர் நடைபெற்ற பாதுகாப்புத் தலைமை அதிகாரிகளின் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒழுக்கமற்ற வகையில் அநாவசியமான கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். முப்படைகளையும் செயற்படுத்தும் அதிகாரம், கூட்டுப் படைத் தலைமை அதிகாரிக்கு வழங்கினால் அது மிகவும் ஆபத்தானதாக இருக்குமென எனக்குக் கீழ் பணியாற்றும் இராணுவ அதிகாரிகளின் முன் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்தினால் நான் மிகவும் அசௌகரியத்திற்குள்ளானேன்.

6. யுத்தம் முடிவடைந்து விட்டதாக 2009 மே மாதம் 18ம் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், தொடர்ந்தும் இராணுவத்தினரைப் படையில் இணைப்பது அநாவசியமானது எனவும், தேவைக்கதிகமான பலத்தைக் கொண்ட இராணுவமொன்று இருப்பதாக மக்கள் மத்தியில் கருத்தொன்று நிலவுவதாகவும் கூறுனீர்கள். யுத்த வெற்றி சம்பந்தமாக தனது பாராட்டுக்களை தொடர்ந்தும் கூறிவந்த உங்களின் வாயால் இவ்வாறான கருத்து வெளியிடப்பட்டமை ஆச்சரியத்திற்குரிய விடயமாகும். பெற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய வெற்றியை இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட இராணுவத்தை பக்கசார்பான இராணுவம் என நீங்கள் ஏற்றுக்கொண்டிருப்பதை நான் தனிப்பட்ட ரீதியில் உணர்ந்துகொண்டேன். நான் இராணுவத்தின் அதிகாரங்களிலிருந்து விலகிய பின்னரும் நீங்கள் மீண்டும் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தீர்கள். இந்த அறிக்கையானது என்னை மிகவும் அருவருப்பிற்குள்ளாக்கிய விடயமாகியது. இது யுத்தத்தில் உயிர்த் தியாகம் செய்த இராணுவத்தினருக்குச் செய்யும் அவமதிப்பு எனக் கூறவேண்டும்.

7. தற்போதைய இராணுவத் தளபதி தான் பதவியேற்றுக்கொண்ட பின்னர் எனது பணிக் காலத்தில் யுத்தத்திற்காக பாரிய பங்களிப்புக்களை வழங்கிய சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை இடமாற்றும் நடவடிக்கைகளையே உடனடியாக ஆரம்பித்தார். இராணுவத்தின் சேவா வணிதா பிரிவின் எனது மனைவியுடன் பணியாற்றிய கனிஸ்ட ஊழியர்கள்கூட இடமாற்றப்பட்டனர். இதன்மூலம் அதிகாரிகளின் பக்கசார்பாக சவாலுக்கு உட்படுத்துவதும், எனது பலம் சம்பந்தமாக தவறான தகவலை இராணுவத்தினருக்கு வழங்கி அவர்களை அதைரியத்திற்கு உட்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதே இதன்மூலம் தெளிவாகியது.

8. தேசத்திற்காக வெற்றியைப் பெற்றுக்கொடுத்த இராணுவம், சூழ்ச்சியில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக நீங்கள் சந்தேகித்து 2009 ஒக்டோபர் 15ம் திகதி இந்திய அரசாங்கத்தை உஸாராக இருக்குமாறு எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து இராணுவத்தினரை உஸார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுத்தமையானது மிகவும் மனவருத்தத்தை அளித்தது. பயங்கரவாதக் குழுவொன்றைத் தோற்கடிக்க முடிந்த திறமையானதும், தொழில்ரீதியான இலங்கை இராணுவத்தின் தோற்றமும், நற்பெயரும் இதன்மூலம் உலக இராணுவத்தினரால் குறைத்து மதிப்பிடப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை நோக்கி கொண்டுசெல்ல தலைமை வழங்கிய எனக்கு, இராணுவத்திற்குள் இருக்கும் சார்பு நிலை இந்த சந்தேகத்திற்கு காரணமாக இருக்கலாம்.

9. வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொள்வதற்காக விடுமுறைப் பெற்று கடந்த ஒக்டோபர் 23ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை நான் நாட்டிலிருந்து வெளியேறியிருந்த காலப்பகுதியில் இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதான நுழைவாயல்களுக்கருகில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த எனக்குரிய சிங்கப் படைப் பிரிவின் படையினர் நீக்கப்பட்டு, மற்றுமொரு படைப் பிரிவின் படையினர் பணியில் அமர்த்தப்படுமளவிற்கு அச்சமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பிற்காக நான்கு வருட காலமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் படையினரின் திறமையானது பாதுகாப்புச் செயலாளரின் கருத்திற்கமைய ஒரு இரவிற்குள் குறைந்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சம்பவமாகும். இராணுவத் தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் வாகனங்களை சோதனையிடும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த சிங்கப் படைப் பிரிவின் போர்ப் பயிற்சி பெறாத நான்கு பேருக்குப் பதிலாக இராணுவப் பயிற்சிகளைப் பெற்ற 14 படையினர் ஈடுபடுத்தப்பட்டமை சிங்கப் படைப் பிரிவின் பயிற்சிப் பெறாத இராணுவ சிப்பாய்கள் நால்வரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, இரண்டு இராணுவ அணிகளை பணியில் அமர்த்தியதன் மூலம் சில வெளிநாட்டுத் தூதரகத் தரப்பினரையும், மக்களையும் குழப்பத்திற்குள்ளாகியமை.

10. பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையின்படி கஜபா படைப் பிரிவின் படையினர் பாதுகாப்பு அமைச்சின் கட்டிடத்தில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டதன் மூலம் இராணுவத்தினருக்கிடையில் பக்கசார்பு நிலை ஏற்பட்டு அவர்கள் பிரிந்துசெல்லும் நிலைமையை ஏற்படுத்தி, இராணுவம் அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதாக நம்பிக்கையை உருவாக்கி, ஆயுதம் தாங்கிய ஆயுதப் படைப்பிரிவினர், சிங்கப் படைப் பிரிவினரை மீறிச் செல்ல வேண்டும் என நம்பிக்கைக் கொண்டுள்ள தற்போதைய இராணுவத் தளபதி இதற்கு உறுதுணை வழங்கி வருகிறார்.

11. எமது தேசத்தின் வரலாற்றை மாற்றுவதற்காக அரசாங்கத்திற்கு நான் வழங்கிய தனிப்பட்ட பங்களிப்புக்களைக் கருத்திற்கொள்ளாது நான் தேசத் துரோகி என அடையாளப்படுத்த அரசாங்கத்திலுள்ள சிரேஸ்ட அரசியல்வாதிகள், ஏனைய தரப்பின் ஊடாக இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு, வதந்திகளுக்கு இடமளித்தமை,

12. நான் வெளிநாட்டில் இருந்த காலத்தில், எனது பணிக்காக பதில் அதிகாரி மற்றும் பதில் கூட்டுப் படைத் தலைமை அதிகாரியொருவரை நியமிக்கப்படவில்லை. இதன்மூலம் மிகவும் பேசப்பட்டதும், பலர் கூறுவது போல் அது மிகவும் முக்கியமான பதவியெனில் அந்தப் பதவிக்காக பதில் அதிகாரியொருவரை நியமிக்காததன் மூலம் என்னால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற சகல சேவைகளையும் கருத்திற்கொள்ளாது முக்கியமற்ற பதவியை எனக்கு வழங்கியிருப்பதையே உணர்த்தியது.

13. சாதாரண நிலையிலிருந்து தொழில்ரீதியாக உயர் நிலைக்குக் கொண்டுவர நான் மிகவும் சிரமப்பட்டு பணியாற்றிய இராணுவம் தற்போது கைவிடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்பதை உணரமுடிகிறது.

14. யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் தற்போதைய நிலைமையும் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்திய விடயமாகியது. அவர்கள் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வாழக்கூடிய வகையில் விடுதலைப் புலிகளின் கொடுரத்திலிருந்து அவர்களை மீட்பதற்காக ஆயிரக் கணக்கான படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்தனர். எனினும், தற்போது அவர்களில் பலர் மிகவும் பாரதூரமான நிலைமையின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கத்திடம் உரிய திட்டமிடல் இல்லாததன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமது பிரதேசங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் உரிய முறையில் அகற்றப்படும் வரை இடம்பெயர்ந்தவர்களை நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள நண்பர்கள், உறவினர்களுடன் வாழ அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.

15. எனது தலைமையின் கீழ் யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டாலும் உங்களது அரசாங்கத்தினால் இதுவரை சமாதானத்தை வெற்றிகொள்ள முடியவில்லை. தமிழ் மக்களின் மனதை வெல்ல தெளிவான கொள்கை இல்லாததன் காரணமாக பெறப்பட்ட வெற்றி அழிந்துபோவதுடன் எதிர்காலத்தில் மற்றுமொரு எழுச்சி ஏற்படக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

16. யுத்தத்தின் இறுதியில் முழு நாடும் எதிர்பார்த்த சமாதானத்தின் பிரதிபலன்கள் இன்னும் கிடைக்கவில்லை. மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரக் கஷ்டங்கள் அதிகரித்துள்ளதுடன், வீண் விரையமும், ஊழல் மோசடிகளும் அதிகரித்துள்ளன. ஊடகச் சுதந்திரமும் ஏனைய ஜனநாயக உரிமைகளும் அடக்கப்பட்டு வருகின்றன. எமது தாய் மண்ணில் சமாதானமும் அபிவிருத்தியும் கொண்ட புதிய யுகத்தை உருவாக்க எம்மால் முடியுமானால் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பல அர்ப்பணிப்புக்கள் வீண் போகாது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: குளோபல் தமிழ் நியூஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*