TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இந்தியாவின் இலங்கைக்கு பொன்சேகா பொருத்தமானவரா?

பொன்சேகா pulikal.netசிறிலங்காவில் சரத் பொன்சேகா விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ள பெரும் விடயமாக இருந்துவருகின்றவேளையில் சிறிலங்காவை விட இந்தியாதான் இது விடயத்தில் பெரும் பீதிக்கு உள்ளாகி தலையிலடித்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சரத் பொன்சேகா விவகாரம் என்பது எதிர்பாராமல் இடம்பெற்ற பெரும் விபத்தாகும்.

சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இன்றையநிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாதநிலை. ஆனால், அறவே பிடிக்காத அந்த இராணுவ அதிகாரியை தமக்கு பிடிக்காது என்று கூறப்போய் அதுவே தமக்கு எதிராக வீம்பு அளந்துகொண்டிருக்கும் மகிந்தவுக்கு ஆதரவாக அமைந்துவிடுமோ என்ற சிக்கலில் இந்தியத்தரப்பு புழுங்கிக்கொண்டிருக்கிறது.

இந்துசமூத்திரத்தில் தனது ஆதிக்க கால்களை ஆழப்பரப்பும் சீனாவின் வன்பிடியை அகற்றுவதற்கு அமெரிக்காவுடன் சேர்ந்து காய்களை நகர்த்தியது இந்தியா. சீனாவை தனித்து நின்று எதிர்க்கமுடியாது என்ற உண்மையை உணர்ந்துகொண்டபின்னர்தான் இந்தியா இந்த முடிவுக்கு வந்தது.

ஆனால், இந்தியாவை மீறி இந்துசமூத்திர வலயத்திற்குள் தனது ஆதிக்கத்தை ஆழப்பதிக்கமுடியாதே என்ற ஆதங்கத்திலிருந்த அமெரிக்காவுக்கு இந்தியா வலிய வந்து தனது தோள்களில் கைபோட்டுக்கொண்டது பெரும் பாக்கியமாக அமைந்தது. அதனை இன்று அமெரிக்கா, சிறிலங்கா விடயத்தில் மிகவும் நேர்த்தியாக பயன்படுத்த ஆரம்பத்திருக்கிறது.

சிறிலங்காவில் தமிறிக்கொண்டிருக்கும் மகிந்த அரசை தட்டிஅடக்கி அவரின் அரசியல் திசைக்கு அஸ்தமனத்தை காட்ட திட்டமிட்ட அமெரிக்காவுக்கு அல்வா போல வந்து வாசலில் வீழ்ந்தவர்தான் சரத் பொன்சேகா. அதிலும் அவர் அமெரிக்க பிரஜையாக இருந்தமைதான் அமெரிக்காவுக்கு தனது திட்டங்களை நேர்த்தியாக வடிவமைக்க பெரிதும் உதவியது.

fonseka_kelaniya

வரப்போகும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை நிறுத்தி மகிந்த அரசை கவிழ்த்து தனது ஆதிக்கத்தை படிப்படியாக சிறிலங்காவின் ஊடாக இந்துசமூத்திரத்துக்குள் பரப்புவதற்கு அமெரிக்கா எடுத்த முடிவை இப்போது இந்தியா பார்த்து மலைத்து மார்பில் அடித்துக்கொள்வதில் எந்தப்பயனும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவை பொறுத்தவரை எல்லாமே கையை மீறிப்போய்விட்ட நிலைதான். ஆனாலும் ஏறிய அணிலை விட்டுவிடாமல் மரமேறியாவது அதனைப்பிடிப்பதற்பு இந்தியா பகீரதப்பிரயத்தனம் மேற்கொண்டுவருகிறது.

சீனாவுடன் தேனிலவு கொண்டாடும் மகிந்த மீது இந்தியாவுக்கும் வெறுப்புள்ளபோதும் பொன்சேகாவை கொண்டுவருவதில் இந்தியாவுக்கு என்ன பிரச்சினை?

இந்தியாவை பொறுத்தவரை மகிந்த என்பவர் புதிய உலக ஒழுங்கில் தன்னை நிறுத்திக்கொண்டு திமிராக அரசியல் நடத்துகின்றபோதும் அவர் ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி. பன்னெடுங்காலமாக சிறிலங்கா அரசியல் அரங்கில் உள்ள பழுத்த – அனுபவமுள்ளவர். சுருக்கமாக கூறினால், இந்தியா ஒரு விடயத்தை நினைக்கும் முன்னரே புரிந்துகொள்ளக்கூடியவர். எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்மக்களின் பிரச்சினை என்ற விடயத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் மகிந்தவின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை. ஆகவே, மகிந்தவை பய்னபடுத்துவதில் இந்தியாவுக்கு பாரிய சிக்கல்கள் அண்மைக்காலம்வரை இருந்ததில்லை.

ஆனால், பொன்சேகாவை பொறுத்தவரை அவர் இந்தியாவுடன் வைத்திருந்த உறவுகள் அனைத்தும் இராணுவ மட்டத்திலானவை ஆகும். அத்துடன், அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை. அரசியல் பண்புகள், ஜனநாயக வழிமுறைகள் என்பவை எல்லாம் பொன்சேகா தனது பேச்சுக்களில்மட்டுமே பயன்படுத்திய சொற்கள் ஆகும். நடைமுறையில் அவற்றின் பெறுமதி என்ன? அது அரசியலில் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது போன்றவிடயங்களை வேண்டுமானால் அவருக்கு இந்தியாதான் இனிக்கற்பிக்கவேண்டும்.

பொன்சேகா சிறிலங்கவின் தேசியம் என்ற கோட்பாட்டைவிட சிங்கள தேசியத்தை வளர்த்தெடுப்பதில் வீரியமுடன் செயற்படும் ஒரு இனவாதி என்று கூறினால்கூட தப்பில்லை. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் பொன்சேகா தனது இராணுவ வரையறைகளுக்கு அப்பால் சென்று விடுத்த சில அரசியல்தனமாக அறிக்கைகள் அவரது அரசியல் நிலைப்பாடுகள், ஜனநாயக தன்மைகள் ஆகியவற்றை தெளிவாகவே வெளிக்காட்டியிருந்தன.

1) சிறிலங்காவில் சிங்களமக்களே பெரும்பான்மை மக்கள். இது ஒரு பெளத்த நாடு. சிறுபான்மை மக்கள் எம்மீது ஒட்டி வாழவேண்டிய ஒட்டுண்ணிகளே என்றும் –

2) சிறிலங்காவில் உள்ள சிறுபான்மை மக்கள் காலங்கடந்த கோரிக்கைகளை முன்வைத்து உரிமைகளை கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது என்றும் –

3) தடுப்புமுகாம்களில் உள்ளவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள். அவர்கள் அனைவரும் அழித்து ஒழிக்கப்படவேண்டும் என்றும் –

4) வன்னிப்பெருநிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு முன்னர் அங்கு 10 ஆயிரம் படையினரின் குடும்பங்களை குடியமர்த்தவேண்டும் என்றும் –

தனது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படையாக கூறிய பொன்சேகாவை ஒரு நாட்டின் பொறுப்புவாய்ந்த அரசியல் தலைமையாக எவ்வாறு அனுமதிப்பது என்பது இந்தியாவின் முதல் கவலை. இவ்வாறான ஒருவரை சிறிலங்காவின் ஆட்சி பீடத்தில் வைத்துக்கொண்டு வழமைபோல் தமது – தன்நேசப்பின்னணி கொண்ட – அரசியல் நிகழ்ச்சிநிரல்களை சிறிலங்காவில் அரங்கேற்றமுடியுமா என்பது இந்தியாவின் அடுத்த கவலை. போரின் நாயகனாகவும் தமது இனத்தை கொன்றழித்த படைகளின் தளபதியாகவுமிருந்த பொன்சேகா மீது இந்தியாவின் தமிழக மக்களோ தமிழக அரசியல் தலைமைகளோ ஆதரவான பார்வை வரப்போவதில்லை. ஆகவே, தமிழகத்தின் நிலைப்பாட்டை முற்றாகவே நிராகரித்துவிட்டும் இந்தியாவால் நடந்துகொள்ளமுடியாது என்பது அடுத்த கவலை.

இவை எல்லாவற்றையும்விட, மிகமுக்கியமாக, சரத் பொன்சேகாவின் பாகிஸ்தான் சார்புநிலை என்பது இந்தியாவின் வயிற்றில் புழிகரைக்கும் அடுத்தவிடயம். போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் சரத் பொன்சேகா பாகிஸ்தான் இராணுவ தரப்போடு நெருங்கிய உறவுகளை பேணி அதன் மூலம் பாகிஸ்தானுக்கும் தனக்குமாக உறவுகளை பலப்படுத்திக்கொண்டவர். பொன்சேகாவின் இந்த பாகிஸ்தான் உறவு இந்தியாவை பொறுத்தவரை கனவிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இவரது சிறிலங்கா தலைமை தமது தென்கோடியில் தமக்கெதிரான இன்னொரு பாகிஸ்தானையே உருவாக்கிவிடும் என்பதுதான் இந்தியாவின் கவலை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவைதான் இன்று இந்தியாவுக்கு தலையிடியாகியுள்ள பெரும் சிக்கல்கள். தமிழர் விவகாரத்தை கைவிட்டுவிட்டு சிங்களத்துக்கு முண்டுகொடுக்க சென்ற இந்தியாவின் வெளிவிவகார கொள்கை தற்போதுதான் அதற்கு திருப்பித்தாக்க தொடங்கியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இன்றைய நிலையில் அமெரிக்காவின் தாளத்துக்கு ஆடுவதை தவிர எந்த வழியும் இல்லாதநிலையை, அதன் தமிழின எதிர்ப்புகொள்கை விட்டுச்சென்றுள்ளது. இப்போதாவது திருந்துமா பார்ப்போம்.

நன்றி: ஈழநேஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*