TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜெனரல் சரத் பொன்சேகா என்ற அரசியல்வாதி…!

Sarath Fonsegaபடை அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்த கடிதம் ஊடகங்கள் மூலமாகப் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த மே மாத நடுப்பகுதியில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தன்னை ஓரங்கட்டுவதற்கு அரசாங்க உயர்மட்டத்தினால் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்திருப்பதாக கவலை வெளியிட்டிருக்கும் ஜெனரல் ஓய்வுபெறுவதற்குத் தன்னை நிர்ப்பந்தித்த காரணிகளைக் கடிதத்தில் விளக்கமாகக் கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

படைகளின் விவகாரங்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்குப் புறம்பாக அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரியவையாகியிருக்கும் சில பிரச்சினைகள் குறித்தும் அவர் தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார். குறிப்பாக, போரின் இறுதிக் கட்டத்தில் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவலம், போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு உருப்படியான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தவறியமை, ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுகின்றமை போன்ற விடயங்கள் அவற்றில் முக்கியமானவையாகும்.

தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்கத்தின் மீது ஜெனரல் பொன்சேகா சுமத்தும் குற்றச்சாட்டை நோக்கும் போது ஒருவருடத்துக்கும் கூடுதலான காலத்துக்கு முன்னர் அதாவது 2008 செப்டெம்பர் பிற்பகுதியில் அவர் இராணுவத் தளபதியாக இருந்த வேளையில் கனடாவின் “நாஷனல் போஸ்ட் பத்திரிகைக்குஅளித்த பேட்டியில் இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு இருக்கக்கூடிய அந்தஸ்து தொடர்பில் தெரிவித்த கருத்துகளே நினைவுக்கு வருகின்றன. வன்னியில் போர் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் ஜெனரல் பொன்சேகா அளித்த பேட்டியென்பதால் இலங்கைப் பத்திரிகைகள் அதற்குப் பெரு முக்கியத்துவம் கொடுத்து மறுபிரசுரம் செய்திருந்தன.

“தமிழர்கள் தங்களுக்கென ஒரு தாயகத்தை அமைக்கவிரும்பி அதற்காக இலங்கையைத் தெரிவு செய்தமையினாலேயே போர் மூண்டது. தமிழ்ச் சிறுபான்மை இனத்தவர்கள் இலங்கையைத் துண்டாடுவதற்கு பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதுமே அனுமதிக்கப் போவதில்லை. இந்த நாடு சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால், சிறுபான்மை இனத்தவர்களும் இலங்கையில் வாழ்கிறார்கள். எமது மக்களைப் போன்று அவர்களையும் நாம் நடத்துகிறோம். நாட்டு சனத்தொகையில் 75 சதவீதத்தினராக இருக்கும் சிங்களவர்களாகிய நாம் ஒரு போதுமே விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டைப் பாதுகாப்பதற்கான உரிமை எமக்கிருக்கிறது. நாமும் ஒரு பலம் வாய்ந்த தேசத்தவர்கள். சிறுபான்மை இனத்தவர்கள் எம்முடன் சேர்ந்து வாழலாம். ஆனால், சிறுபான்மையினர் என்ற போர்வையில் அவர்கள் தகாத கோரிக்கைகளை முன்வைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது%27 என்று அந்தப் பேட்டியில் ஜெனரல் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

ஜெனரலின் இந்தக் கருத்துகள் இலங்கையின் சிறுபான்மை இன மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் தொடர்பில் எத்தகைய சிந்தனையை அவர் கொண்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தியிருந்தன. இலங்கை சிங்களவர்களுக்கே சொந்தமானது என்ற சிங்கள பௌத்த பேரினவாத அபிப்பிராயத்தையே ஜெனரல் பொன்சேகாவும் கொண்டிருக்கிறார். எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும் நாட்டின் எந்தவொரு பகுதியையும் தங்களின் பாரம்பரிய வாழ்விடம் என்று உரிமை கோரமுடியாது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு தனித்துவம், சுய உரிமை என்று எதுவுமே இருக்க முடியாது என்பதே அந்தப் பேரினவாத நிலைப்பாட்டின் அடிப்படை அர்த்தமாகும். அந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்தி கனடா பத்திரிகைக்கு தன்னால் அளிக்கப்பட்ட பேட்டி இலங்கை சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த மக்களின் மனங்களை எந்தளவுக்கு புண்படுத்தியிருக்கும் என்பதே ஜெனரல் பொன்சேகா அறியமாட்டார். இன்று அவர் அரசாங்க உயர்மட்டத்தினால் தனக்கு அவமதிப்பு நேரும் போது தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்வது குறித்து பேசப் ஆரம்பிக்கும் விசித்திரத்தைக் காண்கிறோம்.

தனது தலைமையின் கீழ் போரில் இராணுவம் வெற்றி பெற்றபோதிலும், அரசாங்கம் சமாதானத்தை இன்னும் வென்றெடுக்கவில்லை என்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை என்றும் இதனால் போரில் கண்ட வெற்றி பாழாகி எதிர்காலத்தில் இன்னொரு கிளர்ச்சி மூளக்கூடிய ஆபத்து தோன்றும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர் நோக்குகின்ற அவலங்கள் குறித்து தனக்குப் பெரும் வேதனையாக இருப்பதகக் கூறும் ஜெனரல் அந்த மக்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் உகந்த திட்டங்கள் இல்லை என்று குற்றஞ்சாட்டுகிறார். நாட்டின் ஏனையபகுதிகளில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்வதற்கு இடம் பெயர்ந்த மக்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக போரின் முடிவுக்குப் பிறகு முழுநாடுமே எதிர்பார்த்த சமாதானத்தின் பலாபலன்களை அனுபவிக்க முடியவில்லையே என்ற பெருங் கவலை அவருக்கு!

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் அதேவேளை ஊழல்,மோசடி, விரயம் ஆகியவை தலைவிரித்தாடுகின்றன என்றும் ஜனாதிபதிக்கு கூறியிருக்கும் ஜெனரல் பொன்சேகா ஊடக சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படுவதையும் வெறுக்கிறார். இராணுவச் சீருடையைக் கழற்றிய பின்னரே அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாக ஜெனரல் கூறியிருக்கின்ற போதிலும், கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் மேற்படி விடயங்களை நோக்கும் போது சரத் பொன்சேகாவிற்குள் இருக்கும் அரசியல்வாதி சீருடை களற்றப்படும் வரை காத்திருக்காமல் பேச ஆரம்பித்து விட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.

ஆதவன்

தொடர்புபட்ட செய்தி

சிறிலங்கா இராணுவத்திலிருந்து தான் பதவிவிலகுவதற்கான 16 காரணங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தனது பதவிவிலகல் கடிதத்துடன் இணைத்து வழங்கியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள 16 காரணங்களும் வருமாறு:

* 1) விடுதலைப்புலிகளுடனாக போர் முடிவுற்ற பின்னர் அரசுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பில் சிறிலங்கா இராணுவம் ஈடுபடவுள்ளதாக உங்களிடம் தெரிவிக்கப்பட்ட ஆதாரமற்ற கதைகளை நம்பி, என்னை இராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கினீர்கள். சிறிலங்கா இராணுவத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு தினத்துக்கு முன்னர் நான் இராணுவ தளபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டமை எனக்கு மிகுந்த மனஉளைச்சலை தந்துள்ளது.

2) யாழ் மாவட்ட தளபதியாக மூன்று வருடங்கள் பணியாற்றிய – திறமைவாய்ந்த – மேஜர் ஜெனரல் சந்திரசிறியை அடுத்த இராணுவ தளபதியாக நியமிக்குமாறு நான் பிரேரித்தும்கூட, அந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டு, படைக்கட்டமைப்பில் எனது உத்தரவுக்கு மரியாதை அற்ற சூழ்நிலையை தாங்கள் ஏற்படுத்தினீர்கள்.

3) படைகளின் பிரதானி என்ற பாரிய பொறுப்புவாய்ந்த பதவியை எனக்கு வழங்கியது போன்று மக்கள் ஏமாற்றப்பட்டார்களே தவிர, அந்த பதவியில் எந்த அதிகாரமும் எனக்கு தரப்படவில்லை. போர் முடிவுற்ற இரண்டு வாரங்களிலேயே இந்த பதவியை என்னிடம் திணிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலர் என்னை இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தம் தந்தார்.

4) மேற்படி பதவி எனக்கு முன்னர் இருந்த அதிகாரங்களை விட அதிகமான அதிகாரங்களை வழங்கும் என்று கூறி புதிய பதவிக்கான நியமனக்கடிதம் தரப்பட்டு அதில் எனது அதிகாரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பதவி எனக்கு தரப்பட்ட பின்னர், அது தனியோ படைகளின் பொறுப்புக்களை ஒழுங்கு செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அதிகாரங்களை உடைய பதவியை தருவதற்கு உங்களுக்கு என் மீது நம்பிக்கை இருக்கவில்லை. அது எனக்கு பாரிய மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது.

5) தேசிய பாதுகாப்பு சபை கூட்டமொன்றில் எல்லா படைத்தளபதிகளுக்கும் முன்னால், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் பேசுகையில் – ” எல்லா அதிகாரங்களையும் படைகளின் பிரதானி என்ற பதவிக்கு வழங்குவது ஆபத்தானது” – என்று கூறியமை, என்னை எல்லா படைத்தளபதிகளுக்கு முன்னால் வைத்து அவமதித்தது போல அமைந்தது.

6) விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற முதலாவது தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் நீங்கள் பேசுகையில் – இராணுவத்திற்கு இனி ஆட்சேர்ப்பு அவசியமில்லை என்று கூறி – ” நாடு சக்திவாய்ந்த இராணுவத்தின் பிடியில் உள்ளது என்று மக்கள் எண்ணுகிறார்கள்” என்று ஒரு வார்த்தை கூறினீர்கள். இந்த விடயத்தை நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. பல்லாயிரக்கணக்கான படையினரின் உயிரை காணிக்கையாக்கி மிகப்பெரிய இராணுவ வெற்றி ஒன்றை ஈட்டிதந்த படையினரின் மீது நம்பிக்கையில்லாமல், நீங்கள் பேசிய இந்த விடயத்தை மிகவும் அருவருக்கத்தக்கதாகவே நான் உணர்ந்தேன்.

7) தற்போது இராணுவ தளபதியாக பதவியேற்றுள்ளவர், எனது மனைவி பணிபுரியும் இராணுவ அமைப்பில் வேலை செய்யும் கனிஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் முதல் போரின்போது முக்கிய பங்காற்றிய முக்கிய தளபதிகள் வரை அனைவரையும் தனது இஷ்டத்துக்கேற்ப இடமாற்றம் செய்துவருகிறார். அதனை தடுத்து நிறுத்தமுடியாத அதிகாரமற்றவராக என்னை காண்பிப்பதாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

8) இந்த மனவேதனைகள் ஒருபுறமிருக்க, நாட்டை பயங்கரவாதத்திலிருந்த மீட்டெடுத்த இராணுவத்தினரே ஆட்சியை கவிழ்ப்பதற்கு திட்டமிடுகிறார்கள் என்ற ஒரு வதந்தியை நம்பி கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி இந்திய அரசிடம் உதவிகோரிச்சென்று, அந்நாட்டு அரச படைகளும் இங்கு வந்து ஆட்சிக்கவிழ்ப்பை பாதுகாக்க தயாராகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது எமது இராணுவத்தினரின் நன்மதிப்பையும் அவர்களது தொழில்பக்தியையும் அவமதிக்கும் செயலாகும்.

9) என்னால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட படையணி என்ற காரணத்திற்காக இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் அணி பாதுகாப்பு அமைச்சுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த பணியிலிருந்த சிங்க ரெஜிமென்ட் அணியினரின் பணிகள் – நான் அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தவேளை – எனக்கு தெரியாமல் மாற்றப்பட்டிருக்கின்றன. இது என் மீதும் படையினர் மீதும் உள்ள நம்பிக்கையீனத்தையே காண்பிக்கிறது.

10) சிங்க ரெஜிமென்ட் படையணி நீக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்புக்கு கஜபாகு படையணி வரவழைக்கப்பட்டுள்ளமை, இராணுவத்தின் படையணிகளுக்கு மத்தியில் விசுவாச ஏற்றத்தாழ்வு உண்டு என்று காண்பிப்பது போன்ற நடவடிக்கையாகும்.

11) நாட்டின் பெருவெற்றிக்கு நான் இவ்வளவு பெரிய பங்களிப்பை நல்கியிருந்தும்கூட, நான் ஒரு துரோகி என்று செய்தியாகவும் வதந்தியாகவும் அரசின் பக்கமுள்ள அரசியல்வாதிகளும் மற்றும் பலரும் கதைகளை பரப்பிவருகின்றனர்.

12) நான் அண்மையில் வெளிநாடு சென்றிருந்த காலப்பகுதியில் – ஏகபோக அதிகாரங்கள் உள்ள பதவியாக அரசினால் வர்ணிக்கப்பட்ட – எனது படைகளின் பிரதானி என்ற இடத்துக்கு எவருமே பதில் அதிகாரியாக நியமிக்கப்படவில்லை. இதிலிருந்து இந்த பதவிக்கு அரசாங்கம் இந்தப்பதவிக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருக்கிறது என்பது புலனாகிறது.

13) மிகவும் கட்டுக்கோப்புடனும் ஒழுக்கத்துடனும் நான் கட்டிவளர்த்த சிறிலங்கா இராணுவம் இன்று சின்னாபின்னப்பட்டுப்போயிருக்கிறது. படைகளிலிருந்து இராணுவத்தினர் தப்பியோட்டம், படைக்கட்டமைப்புகளிடையே சீரற்றநிலை, தளபதிகளிடையே முரண்பாடு என எத்தனையோ பிரச்சினைகளால் சிறிலங்கா இராணுவம் இன்று ஈடாடுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இராணுவத்துக்கு புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

14) நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்று படையினரின் மிக்பெரிய தியாகத்தால் பெறப்பட்ட வெற்றி இன்று, அரசாங்கத்தின் ஆற்றலற்ற போக்கினால் நாட்டுமக்களுக்கு எதையும் வழங்காத நிலையை ஏற்படுத்தியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் துனப்பப்படும் மக்களது விடயத்தில் அரசிடம் முறையான திட்டமில்லை. அவர்களை அவர்களது உறவினர்களது வீடுகளிலாவது தங்க அனுமதிக்கும் நடவடிக்கை எதையும் அரசு மேற்கொள்ளவில்லை.

15) எனது தலைமையின் கீழ் எமது படைகள் இராணுவ வெற்றியை பெற்றுத்தந்துள்ளன. இதன் மூலம் தமிழ்மக்களது மனங்களை வெல்லும்வகையில் நாட்டில் அமைதியை ஏற்படுத்தாவிட்டால், இந்த வெற்றி உதாசீனப்படுத்தப்பட்டு, எதிர்காலத்தில் மீண்டும் கிளர்ச்சிக்கு முகம் கொடுக்க நாடு தள்ளப்படும்.

16) போரின் முடிவில் இந்த நாட்டில் அமைதி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டுமக்கள் உள்ளனர். ஆனால், லஞ்சமும் ஊழலும் அதிகரித்து ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறை அதிகரித்து ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இதனால், தாய்நாட்டுக்காக எமது படையினர் மேற்கொண்ட அர்ப்பணிப்புகள் நிச்சயம் துஷ்பிரயோகமாகப்போகின்றன.

இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*