TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நவீன துட்டகைமுனு பட்டம் யார் என்பதற்கான போட்டி

sarath_mahindaபௌத்தசிங்கள மேலாதிக்கத் திமிரில் மேலாண்மை மமதையில் மூழ்கிக் கிடக்கின்றது தென்னிலங்கைப் பேரினம். அதை வசமாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை எப்போதும் பேணிக்கொள்ளலாம் என்ற சிந்தனை உத்தி தென்னிலங்கை அரசியல் தலைமைகளிடம் மேலோங்கி நிற்கின்றமை கண்கூடு. இயல்பாகப் பேரினவாத மேலாதிக்கச் சிந்தனையில் சிக்காத தென்னிலங்கைத் தலைவர்கள்கூட, ஆட்சி அதிகாரத்துக்கான போட்டி என்று வந்தவுடன் அந்தப் பேரினவாதச் சிந்தனையை அரவணைத்து, அந்த மேலாண்மைச் சகதிக்குள் முற்றாக மூழ்கிவிடுவதைக் காண்கிறோம்.

mahinda_ponsehara_2009
தெற்கின் நவீன துட்டகைமுனு யார் என்ற போட்டியில் பல நாடகங்கள் அரங்கேறுவதை இனிமேல் நாடு தரிசிக்கும்.

தென்னிலங்கை வாக்கு வங்கியைச் சுருட்டிக் கொள்வதற்காகச் சிறுபான்மையினரான தமிழர் மற்றும் முஸ்லிம்களை ஏறி மிதித்து, அடக்கி சந்தர்ப்பம் வாய்க்கும் போது அடியோடு அழிக்கவும் இடமளித்து நடந்துகொள்ளும் பல தலைவர்களைக் கடந்த அறுபது ஆண்டு காலத்தில் இலங்கை கண்டுவிட்டது. எல்லாளனை அழித்த துட்டகைமுனுக்களாகத் தங்களைக் காட்டுவதன் மூலம், பெரும் பான்மையினரான சிங்களவர்களை வளைத்துப்போட்டு, ஆட்சியைப் பிடிக்கும் அல்லது ஆட்சியைத் தக்கவைக்கும் இனவாத அரசியலாக சுதந்திர இலங்கையின் அதிகாரப் போட்டி வரலாறு கட்டவிழ்வது யாவரும் அறிந்த விடயமே.

அந்தத் துட்டகைமுனுக்களுக்கு இடையில் நேரடிப் போட்டிக்கான அரங்கு தயாராகி வருவதைக் கடந்த சிலவாரங்களாகக் கொழும்பில் இடம்பெறும் அரசியல் நகர்வுகள், சம்பவங்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எல்லாளனை அழித்த துட்டகை முனு தாமே என்ற உரிமையோடு அந்த நவீன துட்டகை முனு யார் என்ற போட்டியில் தம்மைக் களமிறக்கிப் பரீட்சித்துப் பார்க்க இரண்டு தலைவர்கள் தயாராகி விட்டனர். ஆனால் அவர்களுக்கு அதில் ஒரு சிக்கல். நவீன துட்ட கைமுனு போட்டியில் தீர்ப்பை வழங்கப் போகின்றவர்கள் தனியே தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மாத்திரம் அல்லர். இலங்கைத் தீவின் சிறுபான்மையினராக, இதுவரை அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வருகின்ற தமிழர்களும், முஸ்லிம்களும் கூட இதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை வைத்திருக்கின்றார்கள்.

எனவே, நவீன துட்டகைமுனு யார் என்பதைத் தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் தாம் போட்டியிட்டுப் பரீட்சித்துப் பார்க்கும்போது, தென்னிலங்கை மக்களின் வாக்குகள் இரண்டாகப் பிரிந்துபோக, அதன் காரணமாக இறுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் பொறுப்பும் செல்வாக்கும் சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்றுவிடுமோ என்ற அச்சமும் இந்தப்பிரதான போட்டியாளர்களுக்கு உண்டு. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இரட்டைவேடம் போட வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது தவிர்க்க முடியாத இக்கட்டாகும்.

* ஒருபுறம் தென்னிலங்கைச் சிங்கள மக்களிடம் யுத்த வெற்றிக்கான உரிமையைக் கோரியபடி துட்டகைமுனு வேடம்போட வேண்டும்.

* மறுபுறம் சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களிடம் அவர்களை அரவணைக்கும் தாளாண்மையைக் காட்டவேண்டும்.

கடந்த மே மாதம் நடுப்பகுதியில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் யுத்தத்தில் வென்றுவிட்டதாக மார்தட்டிய அரசுத் தலைமை அதை வைத்துக்கொண்டு தென்னிலங்கை வாக்குகளைச் சுருட்டி, ஆட்சி அதிகாரத்தை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தங்குதடையின்றித் தொடரலாம் என்ற முழுநம்பிக்கையில் கனவு கண்டு கொண்டிருந்தது. அதனால், கொடூர யுத்தத்தால் பேரழிவுகளைச் சந்தித்து, சொல்லொணாத் துயரத்தில் துடித்துக்கொண்டிருந்த தமிழினம் தொடர்பில் அது இறுமாப்புடன் நடந்துகொண்டது. அவர் களைக் கஸ்ரங்களுக்கு ஆளாக்கி, அதில் மகிழ்ந்து கொண்டது. பேரழிவுகளையும் , போரழிவுகளையும் சந்தித்துத் துவண்டு கிடந்த ஓரினம் தொடர்பில் தாராண்மை காட்ட மறந்து அவர்களை அரவணைக்க மறுத்துச் செயற்பட்டது. ஆனால், கடந்த ஆறுமாத காலத்துக்குள் நிலைமை தலைகீழாகிவிட்டது. யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் கொள்கைப் போக்கோடு ஜனாதிபதிக்கு எதிராகத் தேர்தல் களத்தில் முன்னாள் இராணுவத் தளபதியே நேரடியாகக் குதிக்கும் சூழ்நிலை.

சபாஷ்! சரியான போட்டி!!

* தெற்கின் நவீன துட்டகைமுனு யார் என்ற போட்டியில் பல நாடகங்கள் அரங்கேறுவதை இனிமேல் நாடு தரிசிக்கும். பதவியை விட்டு இறங்கும் முன்னாள் இராணுவத் தளபதி வன்னி யுத்தத்தில் அகதியாகி அவலப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்கள் குறித்தும் ஊடக சுதந்திரம் நசுக்கப்பட்டு வருகின்றமை குறித்தும், தமது இராஜினாமாக் கடிதத்துடன் சேர்த்து ஜனாதிபதிக்கு வழங்கிய குறிப்பில் தெரிவித்திருக்கின்றமை நீலிக்கண்ணீர் வடிக்கின்றமை இந்த வகையான நாடகங்களின் ஓர் அங்கம்தான்.

கடந்த காலங்களில் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர் களுக்கும் எதிராக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கைகள், தாக்குதல்கள் போன்றவை குறித்து ஆட்சித் தலைமை நீதி, நியாயமான பக்கச்சார்பற்ற உண்மை, நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்குமானால், இப்படி இன்று, ஆட்சித் தலைமையை நோக்கி இந்த விடயத்தில் சுட்டு விரல் நீட்டும் அடிப்படைத் தகைமை தகுதி ஓய்வுபெறும் இந்த அதிகாரிக்கு எப்போதோ இல்லாமல் போயிருக்கும். அதேசமயம், அத்தகைய விசாரணைகள் உண்மையாக இடம்பெற அனுமதிக்கப்பட்டிருக்குமானால் இன்று அரசுத் தலைமை பக்கத்தில் இருந்துகொண்டு, யுத்த வெற்றிக்கு உரிமை கோரும் வேறு பல முக்கியஸ்தர்களினதும் முக மூடியும் பிய்ந்திருக்கும் என்பதும் மறக்கக்கூடியதல்ல.

அரசியல் தலைமைத்துவத்துக்கான இந்தப் போட்டி யின் போது போராட்டத்தின் போது இது போன்று, அவ்வப் போது அரங்கேறும் நாடகங்களை இப்பத்தியில் ஆராய்வது சுவாரஸ்யமாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*