TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை அரசியலில் மிக முக்கியமான காலகட்டம்

இலங்கைஇலங்கை அரசியலில் மிக முக்கியமான காலகட்டம் ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு இன்று நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்து முடிவுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக உருவாகியிருக்கிறது.குறிப்பாக நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்த முடிவு இந்த மாநாட்டில் தான் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறவில்லை.தற்போதைய அரசியல் சூழலில், தேர்தல்கள் பற்றி அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் தான் இது முக்கியத்துவம் பெறுகிறது. கேத்தாராம விளையாட்டரங்கில்; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு பிரமாண்டமான அளவில் நடத்தப்படுகிறது.

mahinda_jvp

35 நாடுகளின் பிரதிநிதிகள், சுமார் ஒரு இலட்சம் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளனர்.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், சர்வதேச கிளைகளின் அமைப்பாளர்கள், உறுப்பினர் என ஒரு இலட்சம் பேரை எதிர்பார்க்கிறது கட்சித் தலைமை.இந்த மாநாட்டில் பங்கேற்க அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மட்டுமன்றி எதிர்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

1951ம் ஆண்டு செப்டெம்பர் 2ம் திகதி ஆரம் பிக்கப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு இப்போது 58 வயது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரதுங்க மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையின் கீழ் இந்தக் கட்சி இயங்கி வந்துள்ளது.இவர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே கட்சியின் மிகச் சிறந்த தலைவர் என்று அமைச்சர்கள் புகழாரம் சூட்டுகின்றனர். அதேவேளை புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றியும், அண்மைக் காலத்தில் நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தல்களில் கிடைத்த வெற்றியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும் பலமாக இருக்கிறது. இதனால் அடுத்து நடக்கப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் வெற்றி உறுதியானது என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்றும் நம்புகிறது அரசாங்கம்.

பெரும் பலத்துடன் இருக்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், அதன் தலைவரான மகிந்த ராஜபக்ஸவுக்கும் இப்போது பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. அவர் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக அரசியலுக்கு வருவார் என்பது பெரும்பாலும் உறுதியாகி விட்டது. இது சவால்கள் நிறைந்த கட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியைக் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.
தேர்தல் வெற்றி மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அண்மைக் காலத்தில் இரண்டு விடயங்கள் அதிர்சியடைச் செய்து விட்டன.முதலாவது எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணி. அடுத்து ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் என்ற நிலை. இவையிரண்டும் ஆளும்கட்சிக்கு சவால் மிக்க விடயங்கள். இந்தக் கட்டத்தில் தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு முக்கியத்துவம் பெறுகின்றது.ஏற்கனவே அமைசர்களும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அடுத்து நடக்கப் போகின்ற தேர்தல்கள் குறித்த முடிவுகளை கட்சியின்; தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் குறுகிய காலத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் காரணமாக, இந்த மாநாட்டில் தேர்தல்கள் குறித்த முடிவுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி உருவாகியிருக்கிறது. அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதிகள் முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதுபோலவே மகிந்த ராஜபக்ஸவின் விருப்பமும் அதுவாகத் தான் இருந்தது.

சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாட்டில் தேர்தல் குறித்த தீர்மானத்தை அறிவித்து- எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும், அடுத்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த மகிந்த ராஜபக்ஸ திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போதைய நிலையில், இந்த முடிவை அவர் செயற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிலைப்பாடுகளை அறிந்த பின்னரே இதுபற்றிய முடிவுகள் எதற்கும் அவர் வரக் கூடும்.
ஜெனரல் சரத் பொன்சேகா எதிரணியின் பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் மகிந்த ராஜபக்ஸவின் வெற்றி கேள்விக்குள்ளாகலாம் என்ற நிலை இருக்கிறது. இதனால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முடிவை அரசாங்கம் கைவிடக் கூடும். ஏனென்றால் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸவினால் பதவியில் இருக்க முடியும். அவசரப்பட்டுத் தேர்தலை நடத்தி பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் அரசாங்கம் எண்ணலாம்.
அப்படியானால் ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவு இந்த மாநாட்டில் அறிவிக்கப்படாது போகலாம். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டியே சந்திக்கப் போவதாகக் கூறித் திரிந்து விட்டு, அதைப் பிற்போடும் முடிவை மகிந்த ராஜபக்ஸ எடுப்பாரேயானால் அது அவரது இமேஜைப் பெரிதும் பாதிக்கும். எனவே ஜனாதிபதி தேர்தலை நடத்தி சவால் நிறைந்த அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிக்கும் முயற்சியில் அவர் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கிறது.

அதேவேளை எப்படியாவது பொதுத்தேர்தலை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தியே ஆக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவு அறிவிக்கப்பட்டாலும் சரி- அறிவிக்கப்படாது போனாலும் சரி- குறைந்த பட்சம் பொதுத்தேர்தல் பற்றிய முடிவாவது இந்த மாநாட்டில் எடுக்கப்படும். இதனால் தான் இந்த மாநாடு முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு இந்த மாநாடு அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இங்கு எடுக்கப்படவுள்ள- அல்லது அறிவிக்கப்படவுள்ள தீர்மானங்கள் இலங்கை அரசியலின் அடுத்த சில ஆண்டுகளுக்கான தலைவிதியைத் தீர்மானிப்பதாக அமையலாம்.

சத்திரியன் இன்போதமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*