TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழ அகதிகள் ஆஸ்ட்ரேலியாவை நாடுவது ஏன்?

ஈழ அகதிகள்ஈழத்தில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னி வதை முகாம்களில் இருந்து தப்பிக்கும் ஈழத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு செல்ல விடாமல் சிறிலங்கக் கடற்படை சுட்டு வீழ்த்துவதால் அவர்கள் மறுதிசையில் பயணித்து ஆஸ்ட்ரேலியா போன்ற தெற்காசிய நாடுகளில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்று தி ஆஸ்ட்ரேலியன் இதழ் எழுதியுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஆஸ்ட்ரேலிய வாழ்க்கை ‘காந்தமாக’ இழுப்பதால்தான் தமிழர்கள் ஆஸ்ட்ரேலியாவில் அகதிகளாக தஞ்சமடைய நினைக்கின்றனர் என்று ஐ.நா.விற்கான சிறிலங்க தூதர் பலித கோஹனா கூறியிருந்தார்.

வன்னி முகாம்களில் தமிழர் குழந்தைகள் போதுமான உணவு அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுகின்றன என்று ஊடகங்களுக்குக் கூறிய ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பின் பேச்சாளரை சிறிலங்காவை விட்டு வெளியேற்றியவர் பலித கோஹனா.

ஆஸ்ட்ரேலியாவில் தஞ்சமடையும் தமிழர்களை பலித கோஹனா இவ்வாறுத் தரம் தாழ்த்திப் பேசியதை வன்மையாகக் கண்டித்துள்ள டெல்லியைச் சேர்ந்த கொள்கை ஆய்வு மையத்தின் பேராசிரியர் பிரம்ம செல்லானி, சிறிலங்க அரசால் ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறுகிய பயண நேரத்தில் இந்தியாவை (தமிழ்நாட்டை) அடையும் பாதையில் உள்ள ஆபத்தின் காரணமாகத்தான் அவர்கள் தெற்காசிய நாடுகளை நாடிச் செல்கின்றனர் என்று கூறியுள்ளார்.

“முதலில், தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் அகதிகளாகச் சென்றுள்ளனர், இரண்டாவதாக, பால்க் நீரிணையை கடக்கும் படகுகளை சிறிலங்கக் கடற்படை தாக்குகிறது” என்று கூறியுள்ள பிரம்ம செல்லானி, “மீதமுள்ள விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில், அகதிகள் செல்லும் படகுகளை சிறிலங்க கடற்படையினர் தாக்குகின்றனர், அம்மக்களைக் கைது செய்கின்றனர், அவர்களின் படகுகளை அழிக்கின்றனர். இந்தக் காரணங்களால்தான் இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குத் தமிழர்கள் அகதிகளாகச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

அகதிகள் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமெனில், ஜனநாயக நாடுகளான இந்தியாவும் ஆஸ்ட்ரேலியாவும் தமிழர்கள் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணுமாறு சிறிலங்க அரசிற்கு அழுத்தம் தர வேண்டும் பிரம்ம செல்லானி கூறியுள்ளார்.

ஈழ அகதிகள் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் அகதிகள் காப்பு அமைப்பின் தெற்காசியப் பேச்சாளர் ஏரியான் ரும்மேரி, “தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று அவர்கள் கூறுவது உண்மையா இல்லையா என்பது அல்ல, அவர்கள் தங்கள் வாழ்விடத்திற்கு அப்பால் சென்று பாதுகாப்புடன் வாழ ஒரு இடம் தேட வேண்டிய அவசியத்திற்கு உட்பட்டுள்ளார்கள் என்பதே முக்கியம்” என்று கூறியுள்ளார்.

நன்றி: வெப்துனியா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*