TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இனப்படுகொலையும் – சர்வதேச சமூகமும்

இனப்படுகொலை: Pulikal.netபொதுவாக இனப்படுகொலை என்பது முறைப்படுத்தப்பட்ட மற்றும் விரிவான முறையில் இனவரையறை, நிற பேதமை, மதம் மற்றும் தேசியம் என்ற ஏதாவதொரு வகையில் ஒரு இனத்தை பாகுபடுத்தி, அந்த இனத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பது ஆகும். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் இந்தக் கருத்தாக்கம் பரவலாக வேறுபடுகிறது.

ஆனால் இந்த இனப்படுகொலை என்ற வார்த்தைக்கான சட்டப்பூர்வ அர்த்தத்தை 1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பால் இயற்றப்பட்ட இனப்படுகொலை தடுப்புச் சட்டத்தின் மூலம் நாம் அறியப் பெறுகிறோம்.

அதாவது ஒரு இனப்பிரிவை நாம் மேற்கூறிய வகையில் பாகுபடுத்தி, முழு அளவிலோ அல்லது பகுதியாகவோ அந்த இனத்தின் நபர்களை கொல்லுதல், அந்த நபர்களுக்கு மனோ ரீதியாக அழுத்தம் கொடுத்தல், அவர்களின் வாழ்விற்கு பலவகையில் துன்பம் கொடுத்தல், அந்த இனத்தில் புதிய பிறப்புகளை தடுத்தல் மற்றும் அந்த இனத்தில் பிறக்கும் குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு இனத்திற்கு மாற்றுதல் போன்ற விஷயங்களை இனப்படுகொலை குற்றமாக அந்த சட்டம் வகைப்படுத்தியிருக்கிறது.

ஐக்கிய நாட்டு அமைப்பின் இந்தச் சட்டம் 1951 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தபின், அதன் அப்போதைய 80 உறுப்பு நாடுகளும் அந்த சட்டத்தின் சரத்துக்களை தங்கள் நாட்டு சொந்த சட்டத்தில் இணைத்தன. இந்த செயலானது, குற்றவாளிகளை பரந்த அளவில் அடையாளம் காண்பதற்கு உதவி புரிந்தது. போஸ்னியா படுகொலை குற்றவாளியான நிக்கோலா ஜோர்ஜிக்கை, ஜெர்மன் நீதிமன்றத்தின் மூலம் அடையாளம் கண்டது இந்த செயல்பாட்டின் மூலம்தான் சாத்தியமானது. ரஃபேல் லெம்கின்: Pulikal.net

தற்போது இனப்படுகொலையானது ஆங்கிலத்தில் ஜெனோசைட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஜெனோசைட் என்ற வார்த்தையை ரஃபேல் லெம்கின் என்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யூத வழக்கறிஞர், நாஸி தாக்குதலிலிருந்து தப்பி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தபோது லத்தீன் – கிரேக்க – பிரெஞ்ச் மூலங்களிலிருந்து உருவாக்கினார்.

1933 ஆம் ஆண்டு ஈராக்கில் நடந்த அசீரிய இனப்படுகொலையானது, ரஃபேல் லெம்கின் நினைவை முதலாம் உலகப் போரின்போது நடந்த ஆர்மீனியப் படுகொலையை நோக்கி இழுத்துச் சென்றது. எனவே இனப்படுகொலை என்ற காட்டுமிராண்டி செயலுக்கெதிரான சர்வதேச சட்ட வடிவுக்கான ஒரு முன்வரவை அவர் ஸ்பெய்ன் தலைநகர் மாட்ரிட்டில் இருந்த சர்வதேச நாடுகள் கூட்டமைப்பின் (லீன் ஆஃப் நேஷன்ஸ்) சட்ட கவுன்சிலுக்கு அப்போது வழங்கினார். ஆனால் ஜெர்மனியின் மிரட்டலில் அப்போதிருந்த போலந்து அரசாங்கம், லெம்கினின் முன்வரைவை ஏற்கவில்லை. ஆனால் இவரது சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் இனப்படுகொலை ஒரு சர்வதேச சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஒரு குற்றமானது. ஆனால், நாம் மேலே சொன்ன இனப்படுகொலை என்பதற்கான வரையறைகளை 1951 ஆம் ஆண்டு அமலானபோது அப்போதைய சோவியத் யூனியன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சிலவற்றால் அவை ஏற்கப்படவில்லை. இதற்கு பலவாறான அரசியல் காரணங்கள் உண்டு.

இன அழிப்பு என்பதை தீர்மானிக்கும் விஷயத்தில், இருவேறான கருத்துக்கள் உள்ளன. பெரும்பாலானோர், இன அழிப்பு என்பதற்கான அடையாளப்படுத்தலில் உடல் ரீதியான அழிப்பு முக்கிய அம்சம் என்கின்றனர். ஆனால் வேறு சிலரோ, உடல் ரீதியான அழிப்பு மட்டுமே முக்கிய அம்சமாக கருதப்பட முடியாது என்று வாதிடுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை வரையறுத்தலின் மீது பல காட்டமான விமர்சனங்களும் உண்டு. அந்த வரையறுப்பானது, பல்வேறான அரசியல், சந்தர்ப்பவாதங்களுக்கு உட்பட்டது என்றும், அது ஆய்வுப் பூர்வமானதொரு கருத்தாக்கத்தோடு ஒத்திருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

உலகில் இனப்படுகொலை என்பதற்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு விளக்கத்தை இன்று வரை பெறமுடியாததற்கு இந்த அரசியல் பிரச்சனைகளே காரணம் என்றும், விமர்சிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாடும் தனது அரசியல் நலனுக்கேற்ப இந்த விஷயத்தில் நடந்து கொள்கின்றன.

ஒரு இனப்படுகொலை நடந்த முடிந்தபிறகு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சர்வதேச அளவில் சில நாடுகள் நடவடிக்கை எடுக்கின்றன. ஆனால் அந்தப் படுகொலை நடவடிக்கையில் அந்த நாடுகள் ஏன் எதுவுமே செய்வதில்லை என்ற காட்டமான விமர்சனம் எப்போதும் உண்டு.இந்தியா: Pulikal.net

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சட்டப்படி, இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் உள்ளன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பஹ்ரைன், பங்களாதேஷ், இந்தியா, அமெரிக்கா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், ஏமன் மற்றும் யுகோஸ்லேவியா போன்ற நாடுகள் தங்களின் சம்மதம் இல்லாமல் தங்கள் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கொண்டுவரப்பட முடியாது என்பதாக ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 1999 ஆம் ஆண்டின் கொசோவா பிரச்சனையில் அமெரிக்காவிற்கு எதிராக யுகோஸ்லேவியா கொண்டுவந்த இனப்படுகொலை தீர்மானத்தை அமெரிக்கா தடுத்தது.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு, இனப்படுகொலை என்பது கட்டாயத் தேவையின்படி, ஒரு மாபெரும் சர்வதேச குற்றமாக கருதப்பட்டாலும், அதை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்கள் இருந்தாலும், சம்பந்தப்பட்ட நாடுகளோ அல்லது வலிமை வாய்ந்த நாடுகளோ ஒத்துழைக்காமல் சட்டத்தாலும், நீதிமன்றத்தாலும் எதுவும் செய்துவிட முடியாது என்பது மட்டும் உண்மை.

மனித இனம் தோன்றியதிலிருந்து ஒரு இனம் மற்றொரு இனத்தை அழித்து, தனது தேவைகளுக்காக அவர்களின் சொத்துக்களை கவர்ந்து, அவர்களின் இடத்தை ஆக்கிரமித்து வாழ்ந்து வருவதானது இன்று வரையில் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து வருகிறது. உலகில் தோன்றிய எத்தனையோ மறைநெறிகள் இந்தக் கொடுமையை தடுப்பதற்கான போதனைகளை கூறியபோதிலும், மனிதர்கள் தொடர்ந்து அதை மறந்துவிடுகிறார்கள். இந்தப் பிறப்பே துன்பம் நிறைந்தது என்று பெளத்தம் போதித்தது.

ஆனால் துன்பத்தின் அவதாரம் எடுத்த மனிதன், அதை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்கிறான். நிஹிலிசடம் என்ற கோட்பாட்டை இயற்றிய நீட்சே என்ற அறிஞர், மனிதன் ஏன் இவ்வளவு ஆற்றல் நிலைகளை உருவாக்கிக் கொள்கிறான்? அவனுக்கு ஏன் இத்தனை ஆற்றல்? இதன் நோக்கம் என்ன? என்ற பலவாறான கேள்விகளை எழுப்பினார்.

அவர் கூறியபடி மனிதன் தனது நடைமுறை காரியங்களை தேவையின்றி அதிகரித்துக் கொண்டே போகிறான். அதனால் அவனுக்கு புதிய புதிய பிரச்சனைகளும், தேவைகளும் எழுகின்றன. குழுக்களாக இணைந்து வாழும் அவன், தனது தேவைகளுக்காக இன்னொரு குழுவை அழிக்க முற்படுகிறான்.

நாகரீக முன்னேற்றம் என்பது வெறுமனே தேவைகளை அதிகரிப்பதற்கு அல்ல என்பதை மனிதன் புரிந்துகொள்ள வேண்டும். மேற்கத்தியர்கள் தங்களின் வணிக நோக்கத்திற்காகவும், அரசியல் நோக்கத்திற்காகவும் அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் பல பூர்வ குடிமக்களை அழித்தார்கள். ஏராளமான ஆப்ரிக்க மற்றும் ஆசிய நாட்டு மக்களுக்கு ஏராளமான தீங்கிழைத்தார்கள்.

இவைதவிர, பரவலாக பல நூற்றாண்டுகளில் நடந்த மத மோதல்கள் ஏராளமான மக்கள் தேவையின்றி அழிவதற்கு காரணமாயின. ஒரு மதம், தான் பரவ வேண்டும் என்பதற்காக இன்னொரு மதத்தை அழித்தது. அதில் நன்மையும் விளைந்தது, தீமையும் விளைந்தது. அரசியல் மற்றும் பொருளாதார தேவைகள் மட்டுமே மனிதர்கள் அழிய காரணமாவதில்லை. பல சமயங்களில் அதைவிட சித்தாந்தம், கொள்கை, இனப்பெருமை போன்ற விஷயங்கள் பெரும்பாலான மனித அழிவிற்கு காரணமாகின்றன. எவ்வளவோ போதனைகள் வந்தும் மனிதன் ஏன் நியதியை திரும்ப திரும்ப மீறுகிறான்?

ஆதி மனிதன் காலத்திலிருந்து மன்னர்கள் படையெடுக்கும் காலம் வரை, விரைவான சர்வதேச தொடர்புகள் இல்லை. எனவே ஒரு குழு, இன்னொரு குழுவையோ அல்லது ஒரு படை இன்னொரு நாட்டையோ துவம்சம் செய்து அழிக்கையில் சர்வதேச குரல்கள் எழுவதற்கு அப்போது வாய்ப்பில்லை.
முதலாம் உலகப்போர்: Pulikal.net
முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்துக்கள் கொல்லப்பட்டனர். காப்பாற்ற ஆள் இல்லை. இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தான். அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின. சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பஹாய் என்ற சமயத்தின் நம்பிக்கையாளர்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா இஸ்லாமிய அரசாங்கம் கொன்று குவித்தது. அவர்களின் சொத்துக்களையும், உரிமைகளையும் பறித்தது. பலரை நாட்டை விட்டு விரட்டியது. இன்று வரை அந்நாட்டில் பஹாய்களுக்கு கொடுமைகள் நடந்தவண்ணம் உள்ளன.

ஆனால் இதை தடுப்பது யார்? ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள். இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்களை உடனடியாக தடுக்க முடியவில்லை.
இலங்கை: Pulikal.net
இலங்கையில் தங்களுக்கு உரிமைகள் கிடைக்காமல் பல காலம் அமைதி வழியில் போராடி, அதனால் பல வன்முறைகளை சந்தித்து, இறுதியில் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழர்கள் உள்ளிட்ட அப்பாவிகள் ஆயிரக்கணக்கானோர் சிங்கள இனவெறியர்களால் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆனால் அந்தக் கொடுமைக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் முழு அளவில் துணை நின்றன. போராளிகள் அல்லாத அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் பல போராட்டங்கள் மேற்கு நாடுகளில் நடத்தப்பட்ட போதும், ஏறக்குறைய 54 ஆயிரம் அப்பாவித் தமிழர்கள் சிங்கள இனவெறி ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.

அகதிகளாய் தஞ்சமடைந்த 3 லட்சம் மக்கள் தற்போது வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச அளவில் தொடர்ந்து ஒலித்தபோதும், இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவால் சிங்கள அரசாங்கம் கண்டுகொள்ளாமல், எஞ்சியிருந்த மக்களையும் மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சிதைப்பதில மும்முரம் காட்டுகிறது. சர்வதேச சமூகமோ வேடிக்கைப் பார்க்கிறது. இன்றும் பல மத்திய ஆப்ரிக்க நாடுகளில் இன மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அனைத்தையும் நடக்க விட்டுவிட்டு, நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கிறோம் என்று இறங்குவது சர்வதேச சமூகத்திற்கு ஒரு வாடிக்கையாகிவிட்டது. எந்த இனப்படுகொலையுமே நடக்கும் போது தடுக்கப்பட்டதில்லை. நடந்து முடிந்தபிறகு கண்துடைப்பு நடவடிக்கைகள் தொடங்கும். ஏன் மனித இனம் இன்னும் நாகரீகம் அடையவில்லை? என்ற கேள்வி பலவாறு எழுகிறது.

ஆனாலும் அதற்கு விடை என்ன? நடைமுறை தேவைகளை மனிதன் குறைப்பானா? ஆற்றல்களை முறைப்படுத்துவானா? நீதி போதனைகளை மறவாமல் கடைபிடிப்பானா? இதையெல்லாம் சிந்திக்கும் வரை துன்பத்தின் அவதாரம் எடுத்த மனிதன் துன்பத்தை மட்டுமே அனுபவிப்பான்…!

ந‌ன்‌றி : த‌மி‌ழ் ‌‌நியூ‌ஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • csjeeva says:

    World is failed for Humanity in Sri Lanka against Tamils and Tamil Nation is only soluation.
    “உலகம் ஒரே நாடு, மனிதர்கள் யாவரும் அதன் பிரஜைகள்,” என பஹாவுல்லா கூறியுள்ளார். அதோடு, கடந்த காலத்தின் அனைத்து புனித நூல்களிலும் முன்கூறப்பட்டுள்ளது போல் மனிதகுலம் ஒற்றுமையோடு வாழ வேண்டிய காலம் இதுவே எனவும் பஹாவுல்லா கூறுகிறார்.

    November 12, 2009 at 17:03

Your email address will not be published. Required fields are marked *

*