TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தேசியத் தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்ற “புதினம்” இணையத்தளம்


செம்மலை, வழுதி, தயாமோகன், பத்மனாதன் அண்ணார்… என இன்னும்சில பெயர்கள் ஈழவிடுதலை வட்டாரங்களில் சில நாட்களாக வெகு வேகமாக உச்சரிக்கப்படுகின்றன. செம்மலை புலிகளின் அனைத்துலக தொடபகத்திலிருந்து அறிக்கை விடுகிறார்.தயாமோகன் மட்டு – அம்பாறை அரசியற்பிரிவிலிருந்து அறிக்கை விடுகிறார். பன்னாட்டு பேச்சாளர் பத்மனாதன் ஒரு பொதுவான கொள்கைத்திட்டத்தை உலகத்தமிழர்கள் உருவாக்க வேண்டுமென்கிறார். இவர்கள் யாவரும் விடுதலைப்புலிகள் இயக்க முத்திரையை போல போலியாக உருவாக்கப்பட்ட ஒரு முத்திரையுடன் தமது அறிக்கைகளை முதன்மையாக தமிழ்வின், புதினம் ஆகியஇணையதளங்களில் வெளியிடுகின்றனர். இவை யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வழமைக்கு மாறானது. இவ்வாறு அறிக்கை வெளியிடுவோர் இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரது பொறுப்புக்களிலிருந்து பார்க்கும் போது மூன்றாம் நிலை, நான்காம் நிலை பொறுப்பாளர்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகிறது.இவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் உரிமையை இயக்கம் ஒருபோதும் வழங்கியிருக்காது. இவர்களது அறிக்கைகள் வேக வேகமாக வெளியாகும் இக்காலக்கட்டத்தில் ‘புலிகளின் பன்னாட்டு வலைப்பின்னல் இன்னும் உறுதியாக இருக்கிறது’ என்று சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமா தெரிவித்திருப்பதை இணைத்துப்பார்த்தால் அந்த வலைப்பின்னலை நோக்கி அரசின் சதிவலை விரிவதையும் புலிகளின் முதல் நிலை, இரண்டாம் நிலை தலைமையை தமக்குசாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியாமல் மூன்றாம் நிலை, நான்காம் நிலை தலைமையை சிறீலங்கா அரசு வலைவீசி வருகிறது என்ற ஐயப்பாடு எழுகிறது.

இந்த ஐயப்பாட்டிற்கு காரணமாக அமைவது மேற்சொன்ன அறிக்கைகளை தமிழ்வின், புதினம் ஆகிய இணையதளங்களில் வெளியிடுவோர் தமது அறிக்கைகளில் இரண்டு மூன்று விடையங்களை அழுத்தி சொல்வதுதான். முதலாவதாக தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று அடித்துக்கூறுகின்றனர் இந்த அறிக்கையாளர்கள். கருணாநிதியே பிராபகரன் இறந்து விட்டார் என்ற செய்தி உறுதிபடுத்தப்படவில்லை என்று செய்தியாளர் கூட்டத்தில் கூறி விட்டார். அது தவிர இந்திய அரசின் பல்வேறு கண்டுபிடிப்பாளர்களும் உறுதியாக இது குறித்து எதனையும் கூறவில்லை. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் இறப்புச்செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சிறீலங்கா அரசு தலைவர் இறப்பு பற்றிய தனது பொய்பரப்புரையை நிறுத்திவிட்டு விடுதலைப்புலிகளின் பெயரிலேயே அப்பொய்பரப்புரையை அவிழ்த்து விடும் என்று சாதாரண அறிவுபடைத்த எவரும் சிந்திக்கத்தக்கதே. போருக்கு பல்லாயிரம்கோடி ரூபாய் செலவு செய்யும் சிறீலங்கா அரசு, புலிப்பதாகையை உயர்த்திப்பிடிக்கும் ஒரு புறம்போக்குக் கூட்டத்தை உருவாக்கசில நூறு கோடிகளை செலவு செய்யாதா என்ன?

பிராபகரன் இறப்பு விடையத்தில் அறிக்கையாளர்கள் புளுகுகின்றனர் என்பது ஒருகுறிப்பிட்ட செய்தியால் உறுதியாகிறது. ‘முன்னாலே போனவர்களின் பின்னாலேபோனவரின் வழியில்’ என்ற கட்டுரையை தமிழ்வின்னிலும், புதினத்திலும் வெளியிட்ட தி.வழுதி தலைவர் இறக்கும் போது சையனைட் குப்பியை அணிந்திருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறீலங்கா அரசுகாட்டிய உடலில் சையனைட் குப்பி எதுவும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஜூன் 12, 2009 அன்று வெளியான ‘தினத்தந்தி’ செய்தித்தாளில் பிராபகரன் இறக்கையில் சையனைட் குப்பி அணிந்திருக்கவில்லை என்று ராணுவம் தெரிவித்த செய்தி வெளியாகியுள்ளது. இறப்புச்செய்தி உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் அரசின் கூற்றுக்கும் அறிக்கையாளர்களுக்கும் உள்ள முரண்பாடு தெரியவில்லையா? இந்த முரண்பாடே தலைவர் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்வது விளங்கவில்லையா? ஆகவே அறிக்கையாளர்களின் முதல்வேலை என்னவென்பது இங்கே தெளிவாகிறது. அதாவது தலைவர் இறந்தது போல் ஒரு பிரமையை உருவாக்கிடவேண்டுமென்பதே அது. ஏன் அத்தகைய பிரமையை உருவாக்க வேண்டும்? பிரபாகரன் இறந்ததாக நாம் நம்பினால்தானே இனி புலித்தலைமை என்பது இதுதான் என்று ஒரு புறம்போக்குத் தலைமை வெளிப்பட முடியும்! அதனால் தம் அறிக்கைகளில் இவர்கள் மிகக்கவனமாக பிரபாகரனின் புகழ்பாடி பாடியே அவரைபுதைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

தங்கள் அறிக்கைகள் தோறும் பிரபாகரனின் சாதனைகளை, ஈகையை, வீரத்தை அறிக்கையாளர்கள் மெச்சிப்புகழ்ந்தாலும் தமிழ்வின்னிலும், புதினத்திலும் தி.வழுதி எழுதியிருக்கும் கட்டுரையின் தலைப்பை பாருங்கள்: “முன்னாலே போனவர்களின்பின்னாலே போனவரின் வழியில்”! என்ன ஒரு கேவலமான சொற்றொடர்! முன்னாலேபோனவர்களின் பின்னாலே போனவராம் தலைவர். அவரது வீரத்தை புகழ்வது போல புகழ்பவர்கள் தங்களையறியாமல் அவர் கோழை என்று சொல்லவரும் தங்கள் விருப்பத்தை தலைப்பிலேயே தெரிவித்து விடுகின்றனர்.

பிராபகரன் இறந்து விட்டதாக அறிக்கையாளர்கள் நிரூபிக்க முயலவில்லை.

அவரோடு சேர்ந்து பொட்டு அம்மானும் பலியாகிவிட்டதாகவும், தலைவரின் குடும்ப்பத்தினரும் களபலியாகிவிட்டதாகவும் கூறுகின்றனர். கோதபய ராஜபக்சேவைத்தவிர வேறெந்த சக்த்தியும் இவ்வாறு கூற வில்லை. இந்த அறிக்கையாளர்களும் ஏன் அதுபோல கூறுகின்றனர்? அவர்களது ஆழ்மன விருப்பம்அடுத்து வரும் அவர்களது வர்ணனையில் வெளிப்படுகிறது.

இதோ அறிக்கையாளர்களின் வர்ணனை:

விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச்சாரும்.
விடுதலைப் போராட்டம் பெற்ற இராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ்,சூசை, பொட்டு, கே.பி…. என இன்னும் சிலரைச் சாரும்.
விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த்தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும்சாரும்.ஆனால் – சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும்,நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக – மனம்தளராமல் – விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும்.
மேற்கண்ட வர்ணனையில் கே.பி என்றழைக்கப்படுபவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டார்கள், அல்லது இறந்து விட்டதாக அறிக்கையாளர்களால் சொல்லப்படுகிறது. ஆக அந்த கே.பி.தானே தேருக்கு இப்போது சொந்தக்காரர்! தலைவரின் சாவுச்செய்தி உலகிற்கே புதிராக இருக்கிறது. ஆனால் இயக்கத்தை கைப்பற்றுவதற்காக தலைவரையும் அவரது குடும்பத்தினரையும் குழிதோண்டி புதைத்து விட்டு, வாரிசுரிமைப்பட்டா வேண்டுகின்றனர் அறிக்கையாளர்கள். தங்களுடைய வாரிசுரிமைக்கு விடுதலைப்புலிகள் சின்னத்தை பயன்படுத்திக்கொள்ளமுடியுமா என்று சிந்தித்தவர்கள் உண்மையான புலிச்சின்னத்தை பயன்படுத்தினால் பின்னாளில் சிக்கல் வரலாம் என்று யூகித்து இரண்டு வித போலியான சின்னங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். ஜூன் 9-ம் தேதி பொ.செம்மலை என்பவர் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற சின்னத்தில் புலிமுகம் இடப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டக்கள் ஏதுமில்லை. சின்னத்தின் கீழ் ஏதோ மொழியில் சில சொற்கள் தெளிவின்றி இடம்பெற்றுள்ளன. ஜூன் 110ம் தேதி தயா மோகன் என்பவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் இடம்பெற்றுள்ள சின்னத்தில் புலிமுகம் வலப்பக்கம் நோக்கியுள்ளது. புலித்தலையை சுற்றிலும் தோட்டாக்கள் இடம்பெற்றுள்ளன. சின்னத்தின் கீழ் ‘தமிழ் ஈழம்; என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஏதோ சில சொற்கள் தெரிகின்றன. வாசுரிமை கோருபவர்கள் சின்னத்தில்மாறாட்டம் செய்வதன் நோக்கம் எதிர்காலத்தில் உண்மையான தலைமை வெளிப்பட்டாலும் தாங்கள் ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’என்ற ஓர் அமைப்பிற்கு தலைமை தாங்குவதாக காட்டிகொள்வதற்காகவே.

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைமைக்கு வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் அழுத்திச் சொல்லவரும் இரண்டாவது விடையம் காயம்பட்டுள்ள கணக்கற்ற பேரையும் வதைமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லட்ச்சக்கணக்கான மக்களையும் விடுவித்திட பன்னாட்டரங்கு மூலம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே. சரியான கோரிக்கை. ‘போரை நிறுத்து; புலிகளை அங்கீகரி; ஈழத்தை ஏற்படுத்து”என்று முழங்கி களம் கண்ட புலம்பெயர் உறவுகள், இனி “போரில்சிக்குண்டவர்களை விடுவி; ஈழத்தை விடுவி” என முழங்கி களம் காண வேண்டும். இடையில் ஓர் வெற்றிடம் உள்ளது. “விடுதலைப்புலிகளை அங்கீகரி” என்ற இடம் வெற்றிடமாக உள்ளது. அந்த வெற்றிடத்தில் தங்களை இருத்திக்கொள்ள முயலும் வாரிசுரிமை கோரும் அறிக்கையாளர்கள் புலம்பெயர் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் என்பது இனி ஈழத்திலும் தொடர வேண்டும் என்றும் தொடக்க முதலே உரைத்து வருகின்றனர். அமைதி வழி என்பது தந்தை செல்வா காலத்தில் பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. ஆயுத வழி தலைவர் பிராபகரனால் 37ஆண்டுகளாக பரீட்ச்சித்துப் பார்க்கப்பட்டது. இரண்டுமே தோல்வியடைந்தது என்று எடுத்துக்கொண்டாலும் கூட ஒன்றிலிருந்து புதிய ஒன்று விளையுமே தவிர பழைய ஒன்றிற்கு எதுவும் திரும்பி போவதில்லை. வரலாறு திரும்புவதில்லை. தமிழ்நாட்டின் அரசியல் வாதிகளைப்போல ஈழத்திலும் தாங்கள் தலையெடுக்கலாம் என்ற நப்பாசை உடையோர் வரலாறு திரும்பும் எனக்கூறலாம். ஆனால் வரலாற்றிலிருந்து பாடம் பெற முயல்பவர்கள் – எதிரியின் வலையில் வீழ்ந்து விலைபோகாதிருக்க விரும்புபவர்கள் புதிய வழிமுறைகளைத்தான் நாடுவார்கள். புலித்தலைமை தங்கள் துப்பாக்கிகளை மௌனித்து வைக்கப்போவதாக அறிவித்தபின் வேறெந்த முடிவுகளையும் எடுக்க வில்லை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். பன்னாட்டு போக்கிற்கேற்ப பரீட்ச்சித்துப்பார்க்க வேண்டிய புதியவழிமுறைகளை அவர்கள் இப்போது பரிசீலித்துக்கொண்டிருப்பார்கள்.

இதனையடியாகக்கொண்டு தமிழ்நெட் இணையதளத்தில் வெளியான ஆலோசனைத் திட்டத்தினைக் கூறலாம். புலம்பெயர் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்கிறது அவ்வாலோசனைத்திட்டம். இன்று திபேத்தியர்களுக்கா கதலாய்லாமா தலைமையில் புலம்பெயர் அரசு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.முன்னாளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் புலம்பெயர் இந்திய அரசு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதுபோல் புலம்பெயர் ஈழ அரசு ஒன்று அமைக்கப்பட்டால் அது பொம்மை அரசாக இருக்காமல் தற்போது ஒரு திருப்புமுனையை அடைந்திருக்கும் ஈழப்போரின் வடிவங்களையும், போக்குகளையும் அதுதீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விடுதலைப்புலிகளின் தலமைப்பாத்திரத்தையும், ஈழத்தை எதார்த்தத்தில் அடைவதற்கான சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வேண்டும். அந்நிலையில் போராட்ட வழி என்பது பழையன கழிதல், புதியன புகுதல் என்பதாக இருக்க வேண்டுமேயன்றி பழையன புகுதலாக இருக்கக்கூடாது. அமைதி வழியா ஆயுதப்போராட்ட வழியா என்பதை தீர்மானிக்கப்போவது ஏற்கனவே வழிநடத்திய தலைமையின் கீழ் புறப்படப்போகும் புதிய தலைமுறைதான். தலைமையை பிளக்க முயலும் எதிரிகளின் ஊதுகுழல்கள் அல்ல. விடுதலைப்புலிகளின் தலைமையின் கீழ் நான்காவது ஈழப்போர் ஏற்படுத்திய திருப்புமுனையாக புறப்பட்டிருக்கும் புதிய புலம்பெயர் தலைமுறை ஈழக்காடுகளிலும் மேடுகளிலும் மக்கள் முன்னெடுக்கப்போகும் புதிய போராட்டங்களை உள்வாங்கிக்கொண்டு, ஊமையாகக் கிடக்கும் தமிழகத்தின் போராட்டசக்திகளுக்கு புதுவடிவம் கொடுத்து, உலகமய போக்கினுக்கு ஏற்றபடி அல்லாமல் அதற்கு எதிர்முகமாக, ஏகாதிபத்திய எதிரி முகாமாக போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அமைதி வழியும் சேரும், எதிரி முகாம்களின் மீது தாக்குதல் தொடுக்கும் வழியும் சேரும். இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுப்பது வரலாறு திரும்பும் என்ற திரிபு வாதத்தையேமுன்னிறுத்தும். புதினம், தமிழ்வின் அறிக்கையாளர்கள் அமைதிவழி ஒன்றுதான் இலக்கை அடைய இனி ஒரே வழி என்பது அவர்கள் கருணாவின் வழியை, கருணாநிதியின் வழியை, டக்ளஸ் தேவானந்தாவின் வழியை, சித்தார்த்தன், ஆனந்த சங்கரியின்வழியை தேர்ந்தெடுப்பதையே காட்டுகிறது.

இங்கு சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் புதினம், தமிழ்வின் அறிக்கையாளர் குழுவினர் அடுத்து வரும் காலக்கட்டத்தினை 3-வது ஈழப்போர் என வர்ணிப்பது பற்றியது. போர் என்பது சிங்கள இனவாதிகள், மற்றும் தமிழ் இன விடுதலைப் பாதையாளர்கள் ஆகியோர் இடையே நடந்த ஆயுதப் போரைக்குறிக்கும். அரசியல் போராட்ட இயக்கம்என்பது தந்தை செல்வா காலம் தொடங்கி இன்று வரை முடிந்து இனியும்வரப்போகும் காலத்தை உள்ளடக்கியது. அவ்வகையில் தந்தை செல்வாவின் காலம்தமிழர் உரிமை விடுதலை போராட்டத்தின் முதற்பகுதி எனலாம். அந்த முதற்பகுதிவட்டுக்கோட்டை தீர்மானத்தோடு நிறைவு பெறுகிறது. வட்டுக்கோட்டை தீர்மானம்தனி ஈழ நாட்டை உலகிற்கு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வந்த காலம்ஆயுதப்போரின் காலம். அது நான்கு கட்டங்களாக நடந்து இன்று ஒருதிருப்புமுனையைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. தமிழர் உரிமை விடுதலைக்கான இந்த இரண்டாவது போராட்டக்காலம் விடுதலைப்புலிகளின் கை மேலோங்கியிருந்தகாலம். இக்காலத்தில்தான் நான்கு ஈழப்போர்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தமிழர் உரிமையை மீட்பதற்கான எதிர்வரும் மூன்றாவது விடுதலைப்போராட்டக்காலத்தில் ஆயுதபோர் இடம்பெற்றால் அது ஐந்தாவது ஈழபோராக அமையும். தந்தை செல்வா காலம் தொடங்கி எதிர்வரும் காலக்கட்டம் வரை அமைதி வழி அரசியலும், ஆயுதபோராட்டமும் மாறி மாறி வந்துள்ளதைக் காண்கிறோம். ‘அரசும்புரட்சியும்’ நூலில் அரசியல் மேதை லெனின் கூறுகிறார்: “அரசியல் என்பது ஆயுதங்களின் உதவியின்றி அமைதி வழியில் நடைபெறும் போர். போர் என்வது ஆயுதங்களின் உதவியுடன் நடைபெறும் அரசியல்”. முதலில் அமைதி வழியில் அரசியில் நடத்தும் இரு தரப்பாரும் ஒரு புள்ளியை நெருங்குகையில் இனிமேற்கொண்டும் அமைதி வழியில் தங்கள் அரசியலை தொடர முடியாது என்ற நெருக்கடியை உணரும்போது ஆயுதங்களின் உதவியோடு தங்கள் அரசியலை தொடருகின்றனர். போர் நடத்த முற்படுகின்றனர். அதுதான் ஈழவிடுதலைப்போராட்டத்தில் நடைபெற்றது. வட்டுக்கொட்டை தீர்மானத்திற்கு பின்பு சிறீலங்கா இனவாதிகளும் சரி தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களும் சரி இனி மேற்கொண்டும் தங்கள் அரசியலை அமைதி வழியில் தொடர முடியாது என்பதைஉணர்ந்தனர். ஆயுதந்தரித்தனர். இன்றைய நிலைமையில் சிங்கள இனவாதிகளுக்கும்தமிழர் விடுதலைப் போராட்டக்காரர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு யாது? இந்தக் கேள்விக்கு இரு தரப்பினரும் தங்கள் செயல்பாடுகள் மூலம் அண்மை எதிர்காலத்தில் பதிலளிப்பார்கள். தி.வழுதியோ, பத்மனாதன் அண்ணாரோ, செம்மலையோ, தயா மோகனோ அல்லது இந்த பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் இந்திய அரசோ பதிலளிக்க முடியாது. அமைதி வழி என்பது ஒருதரப்புக்கு எடுத்துச் சொல்வது மட்டுமல்ல. இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று. சிங்கள இனவாதத் தரப்பு வன்முறையைக் கடைப்பிடிக்கவும், ஈழத்தமிழர்கள் அமைதி வழியில்தான் அரசியல் நடத்த வேண்டும் என்ற தந்தைசெல்வா, அமிர்தலிங்கம் போன்றோரின் குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிக்கும்குரலாக வரலாற்றில் மாறிவிட்டது. ஒரு வழி மட்டுமே சரியானது என்று கூற தயாமோகனும், பத்மனாதனும் அவர்களுக்கு பின்னலிருப்போரும் யார்? எதிரிஆயுதங்களோடு நிற்கவும், அமைதி வழியில் உங்கள் போராட்டத்தை தொடருங்கள் என்று கூறுவது எதிரியிடம் சரணடையுங்கள் என்று கூறுவதன்றி வேறென்ன?

ஆகவே, தமிழ்வின், புதினம் குழுவினர் விடுதலைப்புலிகளின் தலைமையைக் கைப்பற்றும் நோக்குடனும், சரணாகதி மூலம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போன்றதொரு வகையாக மாறமுடியும் என்ற தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிகொள்ளவும் முதலாவதாக தேசியத்தலைவரின் ஆளுமையிலிருந்து தமிழர்களை அந்நியப்படுத்த முயல்கின்றனர். இதற்காக தேசியத்தலைவருக்கும்அவரது குடும்பத்தினருக்கும் இறுதி வணக்கம் செலுத்தத் தூண்டுகின்றனர். இரண்டாவதாக இனிவரும் காலம் ஈழப்போரின் 3-ம் காலம் என்று கூறுவதன் மூலம் தந்தை செல்வா காலத்திற்கும் விடுதலைப்புலிகளின் காலத்திற்கும் இடையேயான அரசியல் தேவைகளின் வேறுபாட்டை மறைத்து வரலாற்று திரிபுவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஈழப்போர் என்று வகைப்படுத்தப் படுவதும் தந்தைசெல்வாவின் கால நிகழ்வுகளும் ஒன்றுதான் என்று நிறுவி வரலாறு திரும்பும்என நம்பச்செய்து பழைய அமைதி வழிப்பாதைதான் இனி ஒற்றை வழிப்பாதை எனக்காட்டுகின்றனர். அமைதி வழி அரசியலையும், ஆயுதப்போரையும் தீர்மானிக்கப்போவது புதிய தலைமுறையும், களமாடும் புலிகளும் அவர்களுக்கு எதிரான சிங்கள இனவாதிகளும்தான் என்பதை மறைக்கின்றனர். மூன்றாவதாக ஆயுதங்களுடன் நிற்கும் எதிரியிடம் அமைதிவழியில் சரணடையச்சொல்வதன் மூலம்எதிர்வரும் காலக்கட்டத்தில் போராட்டத்தைத் தொடர்வதற்கான புதியவாய்ப்புக்களை மறுதலிக்கின்றனர். சரணாகதி வழியில் போன டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும், ஆனந்த சங்கரியும் எந்த போராட்டத்தை தொடர்ந்தனர் என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

இந்த புதினம், தமிழ்வின் குழுவினருக்கு உடைந்து நொறுங்கிய ஈழத்தமிழர்களும், ஊமைகளாக கிடக்கும் தமிழ்நாட்டின் போராட்ட சக்த்திகளும் சேர்ந்து கடந்த 37 ஆண்டுகளாக சளைக்காமல் போராடிய மாவீரன் பிரபாகரனின் வழியில் சொல்ல வேண்டிய பதில் இதுதான்: “வரலாறு திரும்புவதில்லை; நாம் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாம என்பதை தீர்மானிக்கபோவது எதிரிதான்!”.

அது வரையிலும் செங்கொடிக்கு எதிரானவர்கள் செங்கொடியையே தூக்கிகொண்டு வருவது போல புலிக்கொடிக்கு எதிரானவர்கள் புலிக்கொடியையே தூக்கிகொண்டு வருவார்கள் என்பதை தமிழர்கள் மறக்காமல் தங்கள் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும்.

நிலவரசு கண்ணன்
வீரத்தமிழன் முத்துக்குமார் பேரவைதமிழகம்

Related Posts Plugin for WordPress, Blogger...
 • pirakash ([email protected])canada says:

  இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். தமிழ் மக்களுக்கு விடிவு நிச்சயம் பிறக்கும்.
  உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.pirakash

  June 20, 2009 at 04:11
 • nithya says:

  உங்கள் கட்டுரை அருமை… தமிழீழ வரலாற்றில் எத்தனையோ தடைகளை எம் தலைவர் படிகளாக மாற்றியிருக்கிறார்..இதுவும் எமக்கொரு படி தான்..தலைவரின் வழிகாட்டலில் தீவிரவாதம் என்றால் எப்படி? என்பதை உலகிற்கும் சிங்கள இனவெறி அரசுக்கும் காட்ட வேண்டும் என்பதே தற்போதைய எமது ஆசையாக உள்ளது.. முற்கம்பி சிறைச்சாலையிலிருக்கும் மக்கள் வீடுகளிற்கு சென்ற பின் தான் இதை பற்றி யோசிக்க வேண்டும் என நினைக்கிறேன்.எனெனில், எம்மக்கள் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிட்டார்கள். இன்னும் அவர்களுக்கு துன்பத்தை கொடுக்க கூடாது என்பதற்காக…

  July 16, 2009 at 08:46

Your email address will not be published. Required fields are marked *

*