TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கலைஞருக்காகப் புதிய கதை வசனம் எழுதுகிறாரா பேராசிரியர் சிவத்தம்பி?

கருணாநிதி pulikal.netஈழத் தமிழர்கள் மத்தியில் இயல்பாக உருவாகியிருந்த ‘பேராசிரியர் சிவத்தம்பி’ என்ற பெரு விம்பம் அவராலேயே சுக்கு நூறாக உடைக்கப்பட்டு விட்டது. “ஒரு வார்த்தைக்கு மறு வார்த்தை” என்பது அறிஞர் பெருமைக்கு அழகல்ல.

அதை விடவும், தான் சார்ந்த மக்களது துயரங்கள் சார்ந்த உணர்வுகளை மறுதலித்துப் புகழ் தேடி ஓடுவதும் அவர்தம் நடத்தைக்கும் அழகல்ல. அதற்காக, தம் சார்ந்து அறங்களைக் கற்பித்துக் கொள்ளும் முயற்சியில் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று நா பிறழ்வதும் அழகல்ல. பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் மக்களின் கவுரவத்திற்குரியவராக இருந்தார். ஈழம் போற்றும் அறிஞர்களில் ஒருவர் என்ற புகழுடனும் இருந்தார். அது அவர் பெற்ற கல்வி சார்ந்தும், அவர் கொண்ட அறிவு சார்ந்தும் அவருக்குத் தமிழர்கள் வழங்கிய அங்கீகாரம் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால், அவர்தம் கொள்கை என்று அவரால் வழங்கப்படும் செவ்விகளின் துர் நாற்றம் அவரைச் சிறுமைப்படுத்தவே செய்கின்றது.

கல்வி வழங்கும் அங்கீகாரத்திலும் விட, பதவி கொடுத்த அங்கீகாரத்தையும் விட, மக்களால் வழங்கப்படும் அங்கீகாரமே நிலைத்து நிற்கக் கூடியது. நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு வாழ்ந்த பலருக்கு அத்தகைய அங்கீகாரங்களை தமிழ் மக்கள் வழங்கிக் கவுரவித்ததையும், அவர் காலத்தின் பின்னரும் அவர்கள் காலாகாலமாகக் கவுரவிக்கப்பட்டு வருவதையும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நன்றாகவே அறிவார். “மொழி; வேறு, அரசியல் வேறு” என்ற பேராசிரியரின் புதிய தத்துவ உருவாக்கத்தை எப்மால் புரிந்து கொள்ள முடியாமலேயே உள்ளது. ‘அரசியலற்ற மொழி’ என்பது உயிரற்ற பிணம் போன்றது. மனிதன் உருவான பின்னர், அவன் தன்னைச் சுற்றிப் புரிந்து கொள்வதை அடுத்தவருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே மொழிகள் உருவாகின. அந்த மொழிகள் உருவாக முன்பாகவே அவனை அரசியல் ஆக்கிரமித்துக் கொண்டது.

தான், தனது குழு, அதன் தேவைகள், அவர்களது பாதுகாப்பு என அவனை அரசியல் கட்டிப்போட்டே இருந்தது. அந்த உணர்வுகள் அவனை ஆக்கிரமிக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு மொழி தேவைப்பட்டிருக்காது. ஆயிரம் ஆயிரம் வருட காலத்திற்கு முந்தைய மனிதனின் அறிவு கூட தற்போது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்குப் புரியாமல் போனது எப்படி என்பது புரியவில்லை. தாம் சார்ந்த மொழிக்காகவும், தான் வாழ்ந்த மண்ணுக்காகவும் மனிதன் திறந்த போர்க்களங்கள் எத்தனை? உயிர் ஈந்த மாமனிதர்கள் எத்தனை? மண்ணுக்காகவும் மொழிக்காகவும் நிகழ்ந்த போர்கள்தான் நிலங்களைப் பிரித்து எல்லைகளை உருவாக்கியது. நாடுகள் உருவாகியது.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப்போல் கற்றறிந்த மனிதர்கள் பலர் தத்துவம் கூறியதால்தான் தமிழர்கள் நாடற்றவர்களாகப் போயிருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியலற்ற செம்மொழி நடாத்தப்படுவதாக உணரும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அவசரமாகச் செம்மொழி மாநாடு அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எதற்காக என்று விளக்கிக் கூறினால் எம் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும். ஒன்பதாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்று கலைஞர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த அதி அவசரத்தைத் தமிழ்ச் சான்றோர் பலரும் ஏற்றுக்கொள்ளத் தவறிய காரணத்தால், அந்த மாநாடு ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என்ற புது நாமத்தோடு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது.

அந்த நாயனத்திற்குப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஒத்தூதக் கிளம்பிவிட்டார் என்பது வேடிக்கையான வேதனை. ஈழத் தமிழரான தவத்திரு தனிநாயகம் அடிகளாரது எண்ணத்தில் உருவான தமிழ் அவா 1966-ம் ஆண்டில் முதலாவது ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் அரங்கேற்றம் பெற்றது. 1995-ம் ஆண்டு இதன் எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் நடாத்தப்பட்டது. அந்த மாநாட்டில் பேராசிரியர் சிவத்தம்பி உட்பட்ட ஈழத்து அறிஞர்கள் சிலர் அப்போதைய தமிழக முதல்வரால் விமானநிலையத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்டதனால் நாம் எல்லோரும் மனம் கலங்கினோம். பேராசிரியர் சிவத்தம்பிக்கு நேர்ந்த அவமானம் எங்களுக்கு நேர்ந்ததாகவே என் போன்றோரால் உணரப்பட்டது. ஆட்சிக்கு வந்து 14 வருடங்களாகத் தமிழுக்கு விழா எடுக்காமல், தனக்கு மட்டுமே விழா எடுத்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு இப்போது என்ன அவசரம் வந்தது இப்படி ஒரு மாநாடு நடாத்துவதற்கு?

அதைத்தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘மொழி வேறு, அரசியல் வேறு’ என்று சான்றிதழ் வழங்கித் தன்னையும் இணைத்துக் கொள்ள முயல்கிறாரோ? அல்லது பேராசிரியர் சிவத்தம்பி கலைஞருக்காகப் புதிய கதை வசனம் எழுதுகிறாரா? “கட்டுமரமாகக் கடலில் மிதப்பேன், அதில் ஏறிக் கரை சேரலாம்” என்ற கலைஞர் கருணாநிதியின் சின்னத்திரை வசனத்தை பேராசிரியர் சிவத்தம்பியும் நம்பிவிட்டாரா? இந்தியாவின் மூன்றாவது பணக்கார முதல்வராக உயர்ந்துள்ள தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களது கட்டுமரக் கதையிலும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கரை சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் தமிழக மக்களே தவிர நம் அல்ல.

‘தமிழர்’ என்ற குறியீடு எம்மையும் அடக்குகின்ற காரணத்தால் தமிழ் சார்ந்து எவர் மேற்கொள்ளும் முயற்சியினையும் விமர்சிக்கும் உரிமை எமக்கு உண்டு. முள்ளி வாய்க்கால் இறுதிக் காலத்திலும் உயிருக்காகப் போராடிய தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிய, தமிழீழ மக்களின் அவலங்களை சகோதர யுத்தம் என்ற தத்துவத்தினுள் மறைத்த, மூன்று இலட்சம் வன்னி மக்களை முள்வேலி முகாமுக்குள் முடக்கி அவலத்தைக் கொடுத்த ராஜபக்ஷ சகோதரர்களுக்கு பரிசுப் பொருட்களும், பட்டுச் சால்வையும் கொடுத்து அனுப்பிய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களது வரலாற்றுத் துரோகங்களை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தேவையின் நிமித்தம் மன்னித்தாலும் ஈழத் தமிழர்கள் எப்போதுமே மன்னிக்க மாட்டார்கள்.

சி. பாலச்சந்திரன்

நன்றி்ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Mathivanan.K. says:

    Thans a lot Mr.Balachandran. I am very satisfied with your article. Mr.sivathambi`s fame will fall down if he goes to the confrance in Tamilnadu. i thing , Mr. Sivathambi has got something from cannibal Mr. Karunanithy.

    November 11, 2009 at 23:32
  • Karikalan says:

    அட வெக்கம் கெட்ட சிவத்தம்பி , நீர் ராஜபக்சே தமிழ் மாநாடு நடத்தினாலும் , கலந்து கொள்வீரூ.நீர் என் அப்பனாக இருந்தால் உம் காலை வெட்டுவன்.

    November 12, 2009 at 11:05

Your email address will not be published. Required fields are marked *

*