TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வெற்றிப் பாய்ச்சலில் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை!

BalRajபூநகரி என்ற இடத்தின் பெயர் பிரபலமானது. அங்கு விளையும் மொட்டைக்கறுப்பன் அரிசியைப் போலவே. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதினாறாம் ஆண்டு நினைவுநாள் இன்று.

பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொண்ணூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு.ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூநகரிப்படைத்தளம்.

பால்ராஜ் அண்ணாவுடன் போராளிகள்.

அப்போது யாழ்.குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி – நல்லூர் பாதையே இருந்தது. யாழ்ப்பாணத்தின் கிளாலிக் கடற்கரையிலிருந்து மன்னார் மாவட்டத்தின் நல்லூர் அல்லது ஆலங்கேணிக் கடற்கரைக்கு இரவில் படகிற் பயணம் செய்ய வேண்டும். அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.

இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் வஞ்சகமில்லாமல் நிறையப்பேர் அக்கடலிற் கொன்றுகுவிக்கப்பட்டனர். வெட்டுக்காயங்களோடுகூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ்.குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான்.

பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன்துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடல்நீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.

போருக்கு புறப்பட தயாராகும் போராளிகள்.

இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. (“உறங்காத கண்மணிகள்” என்ற தமிழீழ முழுநீளத் திரைப்படம், இப்பூநகரிப் படைத்தளத்துள் வேவு பார்த்த வீரர்களையும், அங்கு நடந்த உண்மைச் சம்பவங்களையும் தழுவி எடுக்கப்பட்டது)
யாழ். தென்மராட்சியில் இப்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு புலியணிகள் பயிற்சியிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அந்நேரம்தான் யாழ்ப்பாணம் நோக்கி ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து ‘யாழ்தேவி’ என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. பூநகரிப்படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்த புலியணிகளைக் கொண்டு அவசரஅவசரமாக அந்நடவடிக்கையை முறியடித்தனர் புலிகள்.

நீண்ட தயார்ப்படுத்தலின்பின் அந்நாளும் வந்தது. நவம்பர் மாதம் பத்தாம் நாள் இரவு புலியணிகள் அத்தளம் மீது தாக்குதல் தொடுத்தன. கடல்வழியாலும் தரைவழியாலும் அக்கூட்டுப்படைத்தளம் மீது அகோரத் தாக்குதல் நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் வளர்ச்சியில் முக்கியமான சமர் அது. பெரும் சமரொன்றுக்கான விநியோகம், பாதுகாப்பு என்பவற்றை முதன்முதல் கடற்புலிகள் வழங்கினர்.
நீர் வழியாலும் நில வழியாலும் தொடுக்கப்பட்ட சமர் என்பதாலேயே இந்நடவடிக்கைக்கு ‘தவளைப் பாய்ச்சல்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

மூன்றுநாட் சமரின் பின் புலியணிகள் பின்வாங்கின. ஏராளமான ஆயுத தளபாடங்களைக் கைப்பற்றியிருந்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சம்பவம், முதன் முதலில் போர் டாங்கியொன்றை அரசபடையினரிடமிருந்து புலிகள் கைப்பற்றினர். இன்னொன்றை இயங்குநிலைத் தடையொன்றை அகற்றத் தெரியாததால் டோபிட்டோ வைத்துத் தகர்த்தழித்தனர். அன்று கைப்பற்றப்பட்ட அந்த ஒரேயொரு டாங்கி பல முக்கிய வெற்றிகளை ஈட்டித்தந்தது.

ராங்கியுடன் எமது போராளிகள். pulikal.net

நாகதேவன் துறையிலிருந்து ஐந்து ‘நீருந்து விசைப்படகு’களைக் கைப்பற்றினர் கடற்புலிகள். அவையும் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கை ஆற்றியிருந்தன.

அத்தாக்குதலில்தான் விடுதலைப்புலிகளின் பெண்புலிகளின் முதலாவது ‘லெப்.கேணல்’ தரத் தளபதி வீரச்சாவடைந்தார்.
லெப்.கேணல் பாமா/கோதை என்ற கடற்புலிகளின் பெண்களணியின் தளபதி இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்தார்.

இச்சமரில் புலிகள் தரப்பில் லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் குணா, லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் அருணன்/சூட்டி எனும் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

பூநகரி கூட்டுப்படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சமநேரத்தில் பலாலி விமானப்படைத்தளம் மீதும் கரும்புலித்தாக்குல் ஒன்று நடத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி வெற்றியாக அத்தாக்குதல் அமையவில்லை. இத்தாக்குதலில் 13 கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.

பூநகரியில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் விதமாக யாழ்ப்பாணம் யாகப்பர் தேவாலயத்தின் மீது சிங்கள வான்படை குண்டுகளை வீசி அத்தேவாலயத்தைத் தரைமட்டமாக்கியது. ஆலயம் முற்றாக நாசமானதோடு அத்தாக்குதலில் பத்துப் பொதுமக்கள் பலியாகினர்.

அதன்பின்னும் பூநரிப்படைத்தளம் சிங்களப்படையினரிடமே இருந்தது. ஆனால் கிளாலிக் கடலில் கடற்படையினரின் தாக்குதல் அச்சமின்றி பொதுமக்களின் பயணம் தொடர்ந்தது. கடற்புலிகளின் பாதுகாப்போடு பகலிற்கூட பயணங்கள் தொடர்ந்தன.

யாழ். குடாநாட்டை படையினர் முழுதாகக் கைப்பற்றியபோது ஆயிரக்கணக்கான மக்கள் அப்பாதையூடாகவே வன்னிக்கு வந்தார்கள். அதன்பின்னும் பூநகரி படையினரிடம்தான் இருந்தது. முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்துக்கொண்டது அரசபடை. அந்நேரத்தில் சத்தம்போடாமல் அரசபடை ஒரு காரியத்தைச் செய்தது.
1996 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் பூநகரிப் படைத்தளத்தில் இருந்து முற்றுமுழுதாகப் பின்வாங்கி யாழ்ப்பாணத்துக்குச் சென்றுவிட்டது இராணுவம்.சிறுசண்டைகூட இல்லாமல் பூநரிப்படைத்தளம் புலிகள் வசமானது.

பின்னர் இது ஒரு பெரிய வெற்றி விழாவாகக் கொண்டாடப்பட்டது. அதற்கென ஒரு முத்திரை பொறிக்கப்பட்ட சின்னமும் வழங்கப்பட்டது. ஒரு கண்காட்சி நாவற்குளிப்பகுதியில் நடைபெற்றது. அங்கே அத்தளம் போன்றே நீருக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதங்களும் டம்மி பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன.

வெற்றி என்றும் எம் பக்கம். Pulikal.net

வன்னியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • csjeeva says:

    “So powerful is the light of unity that it can illuminate the whole earth”…….வெற்றிப் பாய்ச்சலில்

    November 11, 2009 at 19:29

Your email address will not be published. Required fields are marked *

*