TamilSpy

பொழுது போக்கு இணையம்…

செல்வம் அடைக்கலநாதனா சரத் பொன்சேகாவா

sarath-selசரத். பொன்சேகாவை மீட்டுவர ஒரு சிறீலங்கா அரசு இருந்தது.
அதுபோல அடைக்கலநாதனை மீட்டுவர யார் இருக்கிறார்கள்.

சிறீலங்கா இராணுவம் வன்னிப் போரில் நடாத்தியதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அமெரிக்க அரசு சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடாத்த முயன்றது. ஆனால் சிறீலங்கா அரசு தெரிவித்த அதிருப்தி காரணமாக அமெரிக்கா பின் வாங்கியது. சரத்.பொன்சேகா நாடு திரும்பினார் என்பது சென்ற வாரத்தின் முக்கிய செய்தியாகும். சிறீலங்கா பிரஜையான சரத்.பொன்சேகாவை அமெரிக்கா எப்படி விசாரிக்க முடியும் என்ற கேள்வி இயல்பானது. ஆனால் சரத். பொன்சேகாவும், கோத்தபாய ராஜபக்ஷவும் சிறீலங்கா பிரஜைகள் மட்டுமல்ல அமெரிக்கா – சிறீலங்கா இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர்கள் என்பதால் அமெரிக்காவிற்கு அவர்களை விசாரிக்க உரிமை இருக்கிறது. இந்த விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை நீண்டு செல்லும்.

இதேநேரம் தேர்தல் நெருங்கும் சூழலை குறியாகக் கொண்டு செல்வம் அடைக்கலநாதனும், க. சிவாஜிலிங்கமும் சிறீலங்கா சென்றுள்ளார்கள். தற்போது விசாரணைகள் என்ற போர்வையில் செல்வம் அடைக்கலநாதன் மீது சிறீலங்காவின் கரங்கள் நெருக்குதலை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்படியான நிலை வருவதை உணர்ந்து டெலோ சிறீகாந்தா சென்ற வாரம் பசில்ராஜபக்ஷவையும் சிறீலங்கா வடக்கு அபிவிருத்தி அமைச்சரையும் பாராட்டி பேசியிருந்தார். ஆனால் அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

செல்வம் அடைக்கலநாதனுக்கும், சிவாஜிலிங்கத்திற்கும் சிறீலங்கா போக வேண்டாம். அங்குள்ள அரசியல் இனி உங்களுக்கு பாதுகாப்பானதல்ல என்று பலர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பினருக்கு ஆதரவு சக்தியாக புலிகள் இருந்த காலத்து அரசியலுக்கும், இன்றுள்ள அரசியலுக்கும் அடிதலையான வேறுபாடு நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அனைத்தையும் நிராகரித்துவிட்டு எமது மக்களுடன் இருந்து அரசியல் செய்யப்போகிறோமெனக் கூறி புறப்பட்டுள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதன் வன்னித் தேர்தலில் முக்கிய பாத்திரத்தை வகிக்க இடமிருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற வவுனியா உள்ளுராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வெற்றி அரசுக்கு மகிழ்ச்சி கொடுத்திருக்க நியாயமில்லை. யாழ். மாநகரசபையை வென்ற அரசு வன்னியில் கோட்டைவிட்டது. எனவே செல்வம். அடைக்கலநாதன் மறுபடியும் தேர்தலில் குதித்தால் அரசு ஆதரவு பெற்ற பலருக்கு ஆபத்தாக அமையும்.

மேலும் தமிழர் கூட்டமைப்பு என்பது ஒரு கட்சியல்ல. தேர்தலில் பங்கேற்கும் பல கொள்கையாளரைக் கொண்ட அமைப்பு. இதில் டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள் செல்வமும், சிவாஜிலிங்கமும். சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப்பை சேர்ந்தவர். இதேநேரம் புலிகளால் தியாகியாகக் கருதப்பட்ட சிவநாதன் கிஷோர் அரசுடன் இணைந்திருக்கிறார். இதைத்தவிர வவுனியாவில் வேறும் பல இயக்கங்கங்கள் அரசுடன் இணைந்து முதன்மை பெற முயற்சித்து வருகின்றன. இதனால் மக்களுக்கு தெரியாமலே மறைவாக ஒரு போட்டி நிலவுவது தெரிகிறது.

இந்தயை பதவி இழுபறிகளும் சிறீலங்காவில் நடைபெறவுள்ள தேர்தல்களும் இவர்களை இலங்கைக்குள் நுழைய வைத்திருக்கிறது. அதேவேளை மக்களுடன் இருந்து அரசியல் செய்யப் போகிறோம் என்ற இவர்களுடைய கருத்து ஆராயப்பட வேண்டியது. சிறீலங்கா சென்றால் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று க.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தது இங்கு நோக்குதற்குரியது.

புலிகளுக்கு யார் கடும் விசுவாசம் காட்டுகிறாரோ அவருக்கே அடுத்த தேர்தலில் வாய்ப்புக் கிடைக்கும் என்பதுபோல கூட்டமைப்பினரிடையே ஒரு பனிப்போர் கடந்த காலங்களில் நடைபெற்று வந்தது. இரா.சம்பந்தனும், மற்றவர்களும் அவ்வப்போது தெரிவித்த முரண்பாடான கருத்துக்கள் இதற்கு போதிய உதாரணங்களாகும்.

மேலும் பேச்சுவார்த்தைகளுக்குக் கூட புலிகளால் அனுமதிக்கப்படாத கூட்டமைப்பினர், புலிகளின் எழுதப்படாத மன விருப்பம் எப்படியிருக்கும் என்பதை அறிந்து ஒழுகியவர்கள். இப்போது தமது மன விருப்பத்தையும் அறிந்து நடக்க வேண்டுமென மகிந்த குடும்பத்தினர் விரும்புவார்கள். அதற்கு பசில் ராஜபக்ஷவை பாராட்டினால் போதாது கோதபாய ராஜபக்ஷவை பாராட்ட வேண்டுமென அவர்கள் எதிர் பார்ப்பார்கள். அவரைப் பாராட்டிவிட்டு தமிழர் வாக்குகளை எடுக்க இயலாது. இப்படியான நெருக்குவாரத்தில் சிக்குப்பட்டு இரு தலைக் கொள்ளியெறும்பாக நிற்கின்றனர் கூட்டமைப்பினர்.

கூட்டமைப்பினர் புலிகளுக்காக இதுவரை பேசியது நெஞ்சால் பேசப்பட்டதா இல்லை வெறும் வாயால் பேசப்பட்டதா என்பதை எடைபோடும் நாட்கள் இப்போது ஆரம்பித்துள்ளன. இருந்தாலும் ஒரு கேள்வி மனதைத் துளைக்கிறது. சரத் பொன்சேகாவை திருப்பி எடுக்க ஒரு சிங்கள அரசு இருந்தது. அதுபோல அடைக்கல நாதனை மீட்டு அடைக்கலம் கொடுக்க யார் இருக்கிறார்கள் என்பதே ஆதரவற்ற தமிழ் கேள்வியாகும்.

நன்றி: அலைகள்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • Thas says:

    இது கனடியன் தமிழ் காங்கிரசுகும் பொருந்தும்
    “கூட்டமைப்பினர் புலிகளுக்காக இதுவரை பேசியது நெஞ்சால் பேசப்பட்டதா இல்லை வெறும் வாயால் பேசப்பட்டதா என்பதை எடைபோடும் நாட்கள் இப்போது ஆரம்பித்துள்ளன. “

    November 10, 2009 at 22:54

Your email address will not be published. Required fields are marked *

*