TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பதவியிலிருந்து விலகத் தயாராகும் பொன்சேகா

sarathகூட்டுப்படைத் தலைவர் பொறுப்பிலிருந்து வரும் 10ம் தேதிக்குள் சரத் பொன்சேகா விலகுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.

ஈழப் போரின் கொடூர அத்தியாயத்தை எழுதிய இலங்கைத் தலைவர்களில் முக்கியமானர் சரத் பொன்சேகா. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த ராணுவப் படைக்குத் தளபதியாக இருந்தவர் பொன்சேகா. இன்று அவர் கூட்டுப்படைத் தலைவர் என்ற புதிய பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் ராஜபக்சே சகோதரர்களின் நெருங்கிய வட்டத்திலிருந்து தடாலடியாக தூக்கி எறியப்பட்டதால் ஆத்திரமடைந்தார் பொன்சேகா. இந்த ஆத்திரத்தை தற்போது அங்குள்ள எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக் கொள்ள முயலுகின்றன.

சிங்களர்களின் ஹீரோவாக சிங்கள மக்களால் பார்க்கப்படும் பொன்சேகாவை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்கு எதிராக நிறுத்தி ராஜபக்சேவை தோற்கடிக்க அவர்கள் துடிக்கின்றனர்.

இதுதொடர்பாக பல கட்ட ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சமீபத்தில் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவும், சிங்கப்பூரில் வைத்து பொன்சேகாவுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் 10ம் தேதிக்குள் கூட்டுப் படைத் தலைவர் பொறுப்பிலிருந்து பொன்சேகா விலகவுள்ளதாக தெரிகிறது.

விலகிய பின்னர் அவர் அரசியலில் ஈடுபடலாம் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது பெயரை முறைப்படியான அதிபர் தேர்தல் பொது வேட்பாளராக இலங்கை எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பொன்சேகாவிடம் பேசி வருகின்றனர். தமிழர் கட்சித் தலைவரான மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பொன்சேகாவை சந்தித்துப் பேசியுள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தருமா…?

அதிபர் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் திட்டத்துக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளார்.

அதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இதற்கு சம்மதிக்க வேண்டும் என அவர் நிபந்தனை வைத்துள்ளாராம். அதாவது ராஜபக்சேவுக்கு எதிராக அத்தனை பேரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர் இவ்வாறு நிபந்தனை போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படுமானால் பொதுவேலைத் திட்டம் ஒன்றின் கீழ் பொது வேட்பாளர் ஒருவரை எதிரணி சார்பில் ஏகமனதான நிறுத்தும் திட்டத்துக்கு ஒத்துழைக்க நான் தயார்.

அதற்கு முன்னர் அடிப்படையான சில விஷயங்களில் இணக்கம் காணப்பட வேண்டும். பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்பட்டாலும் அத்திட்டத்தை ஏற்கவும் நாம் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் அப்படி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்துவதாயின் அத்திட்டத்துக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவு மட்டுமன்றி ஜே.வி.பி மற்றும் தமிழ்க் கூட்டமைப்பின் ஏகமனதான ஆதரவும் அவசியம்.

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவை அதற்குப் பெறுவதாயின் சரத் பொன்சேகா தொடர்பில் தமிழ் மக்களுக்கு உள்ள சில கேள்விகளுக்கு தகுந்த பதிலை அவர் அளிக்க வேண்டும்.

அவை ஏற்புடையவை எனத் தமிழ் மக்கள் கருதுவார்கள் எனத் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவிக்குமானால், பொன்சேகாவை பொது வேட்பாளராக ஏற்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.

இவ்விஷயத்தில் ஜே.வி.பியும் தமிழ்க் கூட்டமைப்பும் கூட ஓர் உடன்பாட்டுக்கு வரவேண்டியிருக்கும்.

அவ்வாறு பொன் சேகாவை பொது வேட்பாளராக ஏற்பதாயின் அவர் வேறு சில விஷயங்களை நிறைவு செய்ய வேண்டியிருக்கும்; சில வாக்குறுதிகளை பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

– தான் ஜனாதிபதியாகி ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஜனாதிபதி ஆட்சிமுறையை அறவே ஒழிப்பேன் என அறிவிக்க வேண்டும்.

– இடம்பெயர்ந்துள்ள அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றிய தமது நிலைப்பாட்டை வெளிப்படையாக பிரகடனப்படுத்த வேண்டும்.

– தாம் ஜனாதிபதியானதும் உடனடியாக காபந்து அரசு ஒன்றை ஸ்தாபிப்பார் என்றும், அதன் பிரதமராக என்னை நியமிப்பார் என்றும், அந்தக் காபந்து அரசின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்கள் ஜே.வி.பியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவிக்க வேண்டும்.

– அந்தக் காபந்து அரசு உடனடியாக அவசர காலச் சட்டத்தை நீக்கி அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்குத் தான் முழு ஒத்துழைப்புத் தருவேன் என அவர் நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கவேண்டும்.

– குறுகிய காலத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு முழு அதிகாரத்துடன் தோற்றுவிக்கப்படும் நாடாளுமன்றம் அமைதி, சமாதானம், தீர்வு ஆகியவை எட்டப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டும்.

இத்தகைய உடன்பாடு எதிரணி இடையே எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன என்றார் ரணில்.

ஆனால் தமிழர்களின் சந்தேகங்களை பொன்சேகா தீர்த்து வைப்பாரா, அவர்களின் கேள்விகளுக்கு பொன்சேகா பதிலளிப்பாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*