TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐ.தே. முன்னணி எத்தகைய கொள்கையை முன்வைக்கும்?

unpஅரசாங்கத்துக்கு எதிராக பரந்தளவிலான கூட்டணியொன்றை அமைப்பது குறித்து பல மாதங்களாகப் பேசிவந்த எதிரணிக் கட்சிகள் இறுதியில் நேற்று முன்தினம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியை அமைத்திருக்கின்றன. இந்த முன்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு மற்றும் புதிய சிஹல உறுமய உட்பட 12 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிய முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னணியின் அதிமுன்னுரிமைக்குரிய விடயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதேயாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்துக்கு எதிரான முன்னணி அமைக்கும் தனியான முயற்சிகள் குறித்து பேசிவரும் ஜனதா விமுக்கி பெரமுனை (ஜே.வி.பி.) ஐ.தே.க.தலைமையிலான முன்னணியில் இணைவதா அல்லது இரண்டாவது முன்னணியொன்றை அமைப்பதா என்பது குறித்து ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதன் பின்னரே தீர்மானமொன்றுக்கு வரவிருப்பதாகத் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அடுத்த வருட முற்பகுதியில் நடத்தப்படவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அரசாங்கத்திற்கு பாரிய சவாலைத் தோற்றுவிப்பதே ஐக்கிய தேசிய முன்னணியின் நோக்கமாகும். முன்னணியில் இணைந்திருக்கும் பல கட்சிகள் மக்களினால் பெரிதும் அறியப்படாதவையாக இருக்கின்றமையால் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தக் கூடிய சவாலின் கனதி குறித்து இயல்பாகவே சந்தேகம் எழுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அமைத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு ஐ.தே.க.வுடன் சேர்ந்து தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பைத் தோற்றுவித்தது. நாளடைவில் காணாமல் போய்விட்ட அந்த தேசிய காங்கிரஸ் பற்றிய நினைவு புதிய முன்னணி அமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய தருணத்தில் தவிர்க்க முடியாமல் வருகிறது.

unp

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதுமே தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்ததேயில்லை. அந்தக் கட்சி அதிகாரத்துக்கு வந்த சகல சந்தர்ப்பங்களிலுமே இடதுசாரிகள் உட்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தல்களில் வெற்றி பெற்று வந்திருக்கின்றது. ஆனால், ஐ.தே.க.வின் நிலை அவ்வாறானதாக இருந்ததில்லை. தனித்துப் போட்டியிட்டே கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றி அக்கட்சி அதிகாரத்துக்கு வந்தது. காலப்போக்கில் அரசியல் நிலைவரங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு விட்டன. 2001 டிசம்பரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றே ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். அந்தக் கூட்டணியும் புதிதாக அமைக்கப்பட்ட முன்னணியைப் போன்று ஐக்கிய தேசிய முன்னணி என்ற பெயரையே கொண்டிருந்தது. அரசாங்கத்தைத் தோற்கடித்து மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான விக்கிரம சிங்கவின் முயற்சியில் ஐக்கிய தேசிய முன்னணி மறுபிறப்பெடுத்திருக்கிறது.

அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் வியூகங்களை வகுப்பதிலும் மக்களை அணி திரட்டுவதிலும் கடந்த சிலவருடங்களாக எதிரணிக்கட்சிகள் பெரும் சிக்கலை எதிர் நோக்கிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடிபற்றியோ அல்லது மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்கள் பற்றியோ அல்லது அரசாங்க நிருவாகத்தில் தலைவிரித்தாடுகின்ற ஊழல் சோசடிகள், முறைகேடுகள் பற்றியோ எதிரணிக்கட்சிகள் கிளப்பிவருகின்ற பிரச்சினைகள் மீது மக்களின் கவனம் திரும்ப முடியாத அளவுக்கு தென்னிலங்கையை போர் வெற்றிக் குதூகலத்தில் மிதக்கவிடும் செயற்பாடுகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. போர் வெற்றியைப் பிரசாரப்படுத்தி சகல மாகாண சபைத் தேர்தல்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற பெரு வெற்றிகள் எதிரணியைத் தடுமாறவைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. போர் வெற்றியை சிங்கள மக்கள் மறந்து விடாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்பதில் அரசாங்கத்தரப்பினர் அக்கறையாக இருக்கிறார்கள். நடந்து முடிந்த இராணுவ நடவடிக்கைகள் பற்றி அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களும் அரசாங்கத்துக்கு ஆதரவான தனியார் ஊடகங்களும் மேற்கொள்கின்ற பிரசாரங்கள் இதற்குத் தெளிவான சான்றுகளாக இருக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இராணுவ வெற்றிகளை மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரசாரப்படுத்தி வெற்றியைப் பெறுவதே ஜனாதிபதி ராஜபக்ஷவினதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் நோக்கமாக இருக்கிறது. காலப்போக்கில் போர் வெற்றியை மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதை நன்குணர்ந்திருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ தென்னிலங்கையில் தனது செல்வாக்கு உச்சபட்ச நிலையில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இரு தேசியத் தேர்தல்களையும் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறார். பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஏப்ரிலுடன் முடிவடைகிறது. மே மாத இறுதிக்குள் பொதுத் தேர்தலை எப்படியாகிலும் நடத்தியேயாகவேண்டும். ஆனால், தனது முதலாவது பதவிக்காலத்தில் இன்னும் 2 வருடங்கள் இருக்கின்ற நிலையில் அடுத்தவருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ராஜபக்ஷ அவசரப்படுகிறார். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கும் தருணத்தில் இரண்டாவது பதவிக்காலத்துக்கான ஆணையை (முதல் பதவிக்காலத்தின் 2 வருடங்களைத் தியாகம் செய்து) பெற்று விட வேண்டுமென்பதில் அவர் குறியாக இருக்கிறார்.

அரசாங்கப் படைகளினால் போரில் மூன்றுவருடங்களுக்கும் குறைவான காலத்தில் வெற்றிபெறக்கூடியதாக இருந்ததற்குக் காரணம் தன்னால் வழங்கப்பட்ட அரசியல் தலைமைத்துவமே என்று கூறும் ஜனாதிபதி ராஜபக்ஷ அதைப் பயன்படுத்தி அரசியல் அனுகூலத்தை அடைய முயற்சிக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக அணிதிரண்டிருக்கும் எதிரணிக்கட்சிகள் போரைப் பயன்படுத்தி நாட்டு மக்களை ஜனாதிபதி ஏமாற்றுகிறார் என்று குற்றஞ்சாட்டுகின்றன. அதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு உருப்படியான அரசியல் தந்திரோபாயத்தைக் கொண்டிராத இந்தக் கட்சிகளும் போர் வெற்றிப் பிரசாரங்களினால் மக்கள் மத்தியில் வலுவடைந்திருக்கும் இராணுவவாத உணர்வுகளைத் தங்களுக்கும் சாதகமாகப்பயன்படுத்துவதிலேயே கரிசனை காட்டுகின்றன. இதன் காரணத்தினால் தான் முன்னாள் இராணுவத்தளபதியை தேர்தலில் போட்டியிடவைக்கும் முயற்சிகள் பற்றிய பேச்சுகள் எழுகின்றன. அடுத்த இருதேசியத் தேர்தல்களையும் இராணுவ வெற்றிகளுக்கு உரிமைகோரும் போட்டிக்கான களங்களாக மாற்றுவதற்கான வியூகங்களே அரசியல் கட்சிகளினால் வகுக்கப்படுகின்றன. இத்தகையதொரு பின்புலத்திலேதான் புதிதாகத் தோன்றியிருக்கும் ஐக்கிய தேசிய முன்னணி மக்கள் முன்னிலையில் எத்தகைய கொள்கைத் திட்டத்தை முன்வைக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது. தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத் தீர்வு மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி எத்தகைய கொள்கையை முன்வைக்கும் என்பதை அறிய தமிழ் பேசும் மக்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*