TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஜனாதிபதி மகிந்தவை சூழும் மரணப் பொறி

mahiஅரசு தமிழ் மக்களிற்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டி காட்டி இருந்தது அதனை இலங்கை அரசு வாசிக்காமலே உடன் மறுத்திருந்தது. பின்னர் அந்த அறிக்கைகளை கவனமாக வாசித்த பின்னர்தான் அவர்கள் பீதியடைந்தனர். அதன் பின்னர் தாமே அந்த உரிமை மீறல்கள் பற்றி உள் நாட்டில் விசாரிக்க போவதாக மகிந்த அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் அதனை சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களான அனைத்துலக அபைய ஸ்தாபனம், மனித உரிமை கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன மகிந்த அவர்களின் உள் நாட்டு விசாரணையினை ஏற்று கொள்ள முடியாது எனவும் காசா பாணியிலான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகுழுவினை அமைத்து அவர்கள் தான் விசாரிக்கவேண்டும் எனவும் வாதிட்டு வருகின்றனர். இந்த நிலையில் முக்கிய போர் குற்றவாளிகளான மகிந்த இராஜபக்ஸ, அவரது சகோதரர் கோத்தபாய , மற்றும் இராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோர்கள் கூறப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அழுத்தம்

இலங்கையில் சீன இந்திய அழுத்தங்கள் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான நாடுகளுடனான பொருளாதார இராணுவ உறவுகள் ஆகியவற்றால் அமெரிகா மகிந்த மீதும் தற்போதய அரசாங்கத்தின் மீதும் கொண்டுள்ள அவ நம்பிக்கை ஆகியவற்றால் பல சந்தர்ப்பங்களை எதிர்பார்த்து கொண்டுதான் இருந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தமது சர்வதேச கொள்கை என்பதனால் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஊக்கமளித்தும். அதே நேரம் மனித உரிமை, போர்க்குற்றம் என்ற பேரில் மகிந்தவுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான முயற்சி ஆகியவற்றை கொண்ட இரட்டை அணுகுமுறையில் செயற்பட்டது அமெரிக்கா. இந்த வகையில் இப்போது மகிந்தவை அகற்றுவதற்கான காலம் கனிந்து விட்டதாகவே அமெரிக்கா பார்க்கின்றது எனலாம்.

இந்தவகையில் தற்போது இலங்கையில் இராஜபக்ஸ குடும்பத்தினருக்கும், சரத் பொன்சேகா வின் குடும்பத்தினருக்கும் இடையே ஆன இடைவெளிகளை எதிரணிகள் பாவிப்பதற்கு அமெரிக்காவும் உற்சாகப்படுத்தியது. இப்போஅதிகரித்த இடைவெளிகளை பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு தமது திட்டங்களை துரிதகதியில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

அமெரிக்காவின் நகர்த்தல்கள்

கோத்தபாய அமெரிக்க குடியுரிமை பெற்றவர், சரத் பொன்சேகா கிறீன் காட் வதிவிட உரிமை பெற்றவர். ஆகவே அமெரிக்க உள் நாட்டு சட்டத்தின்படி (DHS Law) இந்த இரு நபர்களையும் விசாரிக்கும் உரிமை அமெரிக்காவுக்கு உண்டு இதன்படிதான் அமெரிக்காவில் உள்ள தமிழர் அமைப்புக்களும் தமது சட்ட ரீதியான பணிகளை முடுக்கி விட்டனர். இந்தவகையில் அமெரிக்கா தனது முதலாவது நெருக்குவாரத்தினை கடந்த மாதம் திரு கோத்தபாய அவர்களுக்கு கொடுத்தது. அதாவது கோத்தபாய கடந்த மாதம் அமெரிக்காவுக்கு ஐ. நா விக்கான கூட்டம் ஒன்றிற்கு சென்ற வேளை அவரை அமஎரிக்க குடியுரிமை பெற்றிருந்தும் ஒரு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.இதனை கோத்தபாய அப்போது யாருக்கும் சொல்ல கூடாது என கண்டிப்பாக உத்தரவிட்டார்.

ஆனால் நேற்று வெளி நாட்டு இலங்கை அமைச்சர் ரோகித போகொல்லாம அதனை உறுதிப்படுத்தி உள்ளார். உண்மையில் கோத்தபாய அவர்களும் பரீட்சார்த்த முயற்சியாக தான் இலங்கை தூதுகுழுவினருடன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த விடயங்கள் ஒருபுறமிருக்க அமெரிக்க அதிகாரிகள் இரகசியமாக இலங்கையில் பணிபுரியும் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், எதிர்கட்சியினர் ஆகியோரிடம் வலுவான போர்மீறல் தொடர்பான சாட்சியங்களை தொடர்ந்தும் சேகரித்து வருகின்றனர்.

தற்போது சரத் பொன்சேகா மீதான விசாரணை

சரத் பொன்சேகா மீது கோத்தபாயவுக்கு செய்த விசாரணைபோல் கடுமையாக வானூர்தி நிலையத்தில் எதுவும் செய்யப்படவில்லை. மிக மரியாதையாக முன்கூட்டியே திகதி அறிவித்தல் கொடுத்து நாளை விசாரிக்கப்படவுள்ளார். மட்டுமன்றி நேற்று முந்தினம் உள்னாட்டு அதிகாரிகளின் சட்ட பிரிவினரால் சரத் பொன்சேகா தொலைபேசியில் பவ்வியமாக விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணையின் தொனி கோத்தபாய அவர்கள் மீதான குற்ற சாட்டுக்களுக்காக உறுதிப்படுத்தல்களை வழங்க முடியுமா என்ற தொனியிலேயே இருந்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஆகவே மகிந்த – சரத் ஆகியோருக்கு இடையிலேயான பகைமையினை கூட்டுவதா? ஆலது உண்மையாகவே சரத் பொன்சேகா கோத்தபாயமீது கோபமாக இருப்பதால் கோத்தபாய அவர்களை போட்டுக்கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறாரா என்பதனை அமஎரிக்க அதிகாரிகள் பரிசோதனை செய்கின்றனரா? அல்லது இந்த விசாரணைமூலம் மகிந்த குடும்பத்தினை மீண்டும் விரட்டி ஏதேனும் பணியவைப்பதற்கான முயற்சியா? என்பது தெரியவில்லை.

இலங்கை அரசின் வெளியார்ந்த துள்ளலும் உள்ளார்ந்த பணிவும்

தாம் மனிதாபிமான அடிப்படையில் தான் போர் செய்தோம், எந்தவிதமான போர்மீறல்களிலும் ஈடுபடவில்லை என ஒவ்வொரு நாளும் கதைஅளந்து கொண்டிருக்கும் மகிந்த இராஜபக்க்ஷ குடும்பம், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆகியோர், அமெரிக்காவின் போர் மீறல் பற்றிய அறிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை, ஜி.எஸ்.பி வரிசலுகை நிறுத்தம், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகுழு எண்ணம் ஆகியவற்றால் ஆடிப்போய் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகவே தான் ஒருபக்கம் தாம் யாருக்கும் பயமில்லை என உள்ளூர் மக்களுக்கு சண்டித்தனம் காட்டிக்கொண்டு மறைமுகமாக சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்து போவதாகவே அண்மைய சம்பவங்கள் காட்டுகின்றன. குறிப்பாக இந்தவாரம் நாள்தோறும் 2000 மக்கள் வரையில் தடுப்பு முகாம்களில் இருந்து விடுவிக்கபட்டு கொண்டிருக்கின்றனர். அத்துடன் சில நிபந்தனைகளையும் மறைமுகமாக ஏற்று கொள்வதாகவே அறியமுடிகின்றது.

இது இவ்வாறு இருக்க மகிந்த அரசாங்கம் தான் நல்லவர்கள் தம்மில் எதுவித குற்றங்களும் இல்லை எனக்கூறுபவர்கள் ஏன் சர்வதேச விசாரணை குழுவினை அனுமதிக்கமுடியாது? இஸ்ரேல் ஐ. நா வின் குழுவினை அனுமதித்தது போல ஏன் இவர்கள் அனுமதிக்க முடியாது? அல்லது பத்திரிகையளர்களை ஏன் அனுமதிக்கவில்லை? அல்லது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை கூட ஏன் முகாம்களுக்கு அனுமதிக்கவில்லை? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றது.

சனல் 4 ஒளிப்ப்பட தொகுப்பு தொடர்பாகவும் பிரித்தானியாவில் வழக்கு தொடரப்போவதாகவும் இலங்கை அரசு எச்சரித்து அங்கு ஒரு குழுவினையும் அனுப்பி இருந்தனர். ஆனால் அது மெதுவாக கைவிடப்பட்டுள்ளது என தகவல். அடுத்து மகிந்த அவர்கள் கடந்த மாதம் கொழும்பில் நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிடும்போது தாம் சர்வதேச நீதிமன்ற விசாரணையினையும் நாட்டிற்காக எதிர்கொள்வேன் என முழக்கமிட்டார். அவ்வாறு எனின் தற்போது ஏன் அமெரிக்க விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார்? னேற்று கூட சர்வதேச நீதி மன்றங்கள் எம்மை விசாரிக்க தேவை இல்லை உள் நாட்டிலேயே எமது பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என கூறியுள்ளார். தன்னை சிங்களவர் மத்தியில் ஓர் வீரனாக காட்டிகொள்ளும் மகிந்த தற்போது விசாரணை என்றவுடன் துள்ளி குதிப்பது ஏன்? அடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர செயலராக இருக்கும் பாலித கேகன்ன அவர்களின் குரலை காணோம் மெளனமாகி விட்டார். வழமையாக இப்படியான செய்திகள் வந்ததும் அனைத்து சட்டங்களையும் ஆய்வு செய்து வெளி நாட்டு அணுகுமுறைகளை குறைகூறுபவர் இப்போ அமைதியாகியுள்ளார்.

ஆகவே உண்மையாகவே இலங்கைக்கு பீதி ஏற்பட்டுள்ளது என்பது திண்ணம். இங்கு கேள்வி என்னவெனில் அமெரிக்காவிடம் சரத் பொன்சேகா தம்மை காட்டி கொடுத்து விடுவாரா என்ற பயமா அல்லது ஒட்டுமொத்தமாகவே தமது அரசியல் எதிர்காலத்தினை எண்ணிய பயமா ? என்பதே ஆகும்.

மகிந்த அழுத்தங்களில் இருந்து தப்பிக்க என்ன செய்வார்?

வழமையாக பொருளாதார அரசியல் அழுத்தங்களை சமாளிக்க பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது போரை ஏவி விட்டு அனைத்து அழுத்தங்களையும் போர் மீதும் , புலிகள் மீதும் போடுவார். இப்போ புலிகளும் இல்லை போரும் இல்லை சமாதானம் நிலவுகின்றது என அறிக்கை விட்டுள்ள நிலையில் தற்போது சர்வதேசத்தின் அழுத்தங்கள் தொடர்கின்றன. அதாவது தமிழர் பிரச்சினையினை, தமிழர் மீதான மனித உரிமை மீறல்கள், குறிப்பாக தமிழ் மக்களை முகாம்களில் அடைத்து வைத்திருத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சர்வதேசங்கள் தமது அழுத்தத்தினை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது.

இதே நேரம் பொருளாதார நெருக்கடிகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நெருக்கடிகளை போக்க உள்ளூராட்சி தேர்தல், மாகாண சபை தேர்தல்கள் என உள் நாட்டில் மக்களையும் அரசியல் வாதிகளையும் பொழுதுபோக்கவைத்தது மட்டுமன்றி அனைத்துலகத்திற்கும் மக்கள் தம்முடன் இருக்கின்றார்கள் என்பதனை காட்டி நெருக்கடிகளை, மிரட்டி குறைக்க பார்த்தார். ஆனால் அதுவும் நீண்டக்கலத்திற்கு எடுபடவில்லை. ஆகவே முகாமில் இருக்கும் மக்களை சிறிது சிறிதாக விடுவித்து தனது நெருக்கடிகளை குறைக்க பார்க்கின்றார். ஆனால் இதுவும் எத்தனை நாளைக்கு? ஆகவே தான் மக்களை விடுவதற்கு முன்பாகவே தேர்தல் ஒன்றினை வைத்து தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பின்னர் எதனையும் எதிர்கொள்ள முடியும் என்பதே மகிந்த திட்டம்.

ஆனால் சர்வதேசமும் உள்ளூர் அரசியல்வாதிகளும் மக்களை தேர்தலுக்கு முன்பாக விடுவித்து, தமிழர்களுக்கு என்ன தீர்வு என்பதனை முன்வைக்க வேண்டும் என வாதிட்டு வருகின்றனர். இதற்கு தலமை தாங்குவது அமெரிக்காவின் தென் ஆசிய அதிகாரி ரொபேட் பிளேக். ஆகவே இது மகிந்தவுகு ஓர் மரணப்பொறி போலதான் அமைந்துள்ளது.

இந்த மரணப்பொறிகளில் இருந்து விடுதலை பெற யாருடைய காலில் விழமுடியும் என்பதே மகிந்தவின் அடுத்த நகர்வாக இருக்கும்.

சீனாவிடம் போய் ஐக்கிய நாடுகள் சபையினை சமாளிக்க சொல்லி கேட்கலாம், நிதி உதவி பெறலாம்(மட்டுப்படுத்தப்பட்ட) ஆனால் தற்போதய நெருக்கடிகளை தீர்க்குமாறு கேட்கமுடியாது. ஏனெனில் மக்களை முகாம்களில் இருந்து விடவேண்டியது மனிதாபிமான பிரச்சினை. அமெரிக்கா விசாரணை செய்வது அமெரிக்காவின் உள் நாட்டு பிரச்சினை.ஆகவே சீனா தலையிட முடியாது. வேண்டுமென்றால் நிதியினை மட்டும் வழங்கமுடியும்.

இந்தியாவிடம் போகமுடியுமா?

இந்தியாவுக்கும் இலங்கைமீது அமெரிக்காவின் கரிசனை போன்று பல கோணங்களில் உள்ளது. இந்தியா ஒரு காலத்தில் உலகமட்டத்தில் அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பலம் இல்லாத நிலையில் இலங்கையினை தமது தேவைக்கு ஏற்ப ஆட்டிப்படைக்க குறைந்த செலவில் தமது திட்டங்களை செயற்படுத்தியது. அதாவது தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி (விடுதலைப்புலிகளை அல்ல) தமது கட்டுப்பாட்டில் வைத்து இலங்கை மீது தமது செல்வாக்கினை செலுத்தி வந்தது.

ஆனால் என்று தமிழர் விடுதலைப்போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்ததோ, என்று விடுதலைப்போராட்டம் தமது சொந்த காலில் நிற்க ஆரம்பித்ததோ அன்றில் இருந்து இந்தியாவுக்கு அது ஒரு பிரச்சினையாகவே உருவெடுத்தது. ஆகவே இப்போது இந்தியா அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பெரும் பூதமாக சர்வதேசத்தில் உருவெடுத்து வருவதால் இலங்கை அரசாங்கத்தின் மீது செல்வாக்கை செலுத்த , கட்டுப்படுத்த பெரும் பொருட்செலவில் எந்த திட்டத்தினையும் செய்ய தயாராக இருக்கின்றது. அதாவது விடுதலைப்போராட்டத்தினை அல்லது விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டிய அவசியம் தேவை இல்லை.

ஆனால் இந்தியாவின் இந்த தப்பான கொள்கை அவர்கள் தலையில் மண்ணை தூவும் நிலைக்கு இட்டு செல்கின்றதுஎன்றே கூறவேண்டும். ஏனெனில் இலங்கையின் தேவைகளை நாளுக்கு நாள் பெரும் பொருட்செலவில் செய்து கொண்டு வந்தாலும் இலங்கையானது அவர்களுக்கு செய்யும் பிரதிபலன்கள் குறைவாகவே இருக்கின்றது. இதனால் இந்தியா அதிருப்திக்குள்ளாகும் நிலையில் உள்ளது.

ஆகவே தான் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து இலங்கைக்கு எவ்வாறு நெருக்கடிகளை கொடுக்க முடியும் என்ற ஓர் பொது வேலைத்திட்டமும் இந்திய, மற்றும் அமெரிக்க ( ரொபேட் பிளேக்) அதிகாரிகளினால் வகுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் பிள்ளையான் ஆகியோரிடம் மகிந்தவுக்கு எதிரான அரசியலையே செய்யுமாறு கூறியுள்ளது. அடுத்ததாக தனது தனியார் வாணிப அமைப்புக்களை தமிழர் தாயகங்களில் நிறுவுவதில் பெரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது. தவிர அவ்வப்போது பல அழுத்தங்களையும் இலங்கை அரசுக்கு வழங்கி வந்தாலும் அண்மைய சம்பவங்கள் இந்தியாவுக்கு இலங்கை மீது தொடர்ந்து அதிருப்தியினையே ஏற்படுத்தி வருகின்றது.

அதாவது குமரன் பத்ம நாதன் அவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரிக்க அனுமதித்தமை ஆனால் இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி கொடுக்க மறுத்தமை. தேசிய தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்களின் மரண சான்றிதளை கொடுக்க மறுத்து வருகின்றமை ஆகிவற்றால் இந்தியாவிற்கு சினம் எழுந்துள்ளது. இவ்வாறான தொருநிலையில் இந்தியாவிடம் அமெரிக்காவினை சமாளிக்க ஏதாவது உதவி கேட்க முடியுமா? அவ்வாறு கேட்க போனால் இந்தியா குமரன் பத்ம நாதன் அவர்களை தருமாறு கேட்கலாம்.ஆகவே இலங்கை அரசு அதற்கு உடன்படுமா? இவ்வாறு உடன்பட்டாலும் இந்தியாவால் அமெரிக்காவின் அழுத்தங்களை தணிக்க முடியுமா?

என்பதே கேள்வி.

எது எப்படி நடப்பினும் நடக்கின்ற காரியங்கள் அனைத்தும் சர்வதேசங்கள் தமது நோக்கங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்டாலும் அதில் தமிழ் மக்களுக்கு எந்தெந்த வழிகளில் நன்மை வரும் என சிந்தித்து தமிழர் செயற்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதே யதார்த்தம். அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக இறுதியில் தமிழர்களின் விடுதலைக்கு இந்த சர்வதேச காய் நகர்த்தல்கள் உதவுமா என்பதில் கேள்விக்குறியே!

நன்றி ஈழநாதம்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*