TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழன் என்ற இன உணர்வைக் குலைக்கும் கருணாநிதி!

karunanithi karunaஇப்போதெல்லாம் ‘கருணா’ என்று ஆரம்பமாகும் பெயர்களெல்லாம் தமிழர்களுக்கு அச்சத்தையும், அருவருப்பையும் கொடுப்பவையாக மாற்றம் பெற்றுவிட்டன. இதன்மூலம் இந்தப் பெயர்களிலுள்ளவர்களை இழிவு படுத்துவதாக அர்த்தம் கொள்ளலாகாது.

தமிழீழத்தில் ஒரு ‘கருணா’, தமிழகத்தில் ஒரு ‘கருணா(நிதி)’ என தமிழின வரலாற்றுத் துரோகிகள் இருவரால் அழவற்ற கொடுமைகளையும், அழிவுகளையும் தமிழீழ மக்கள் அனுபவித்துவிட்டார்கள். அனுபவித்து வருகின்றார்கள். எட்டப்பன், காக்கை வன்னியன் ஆகிய பெயர்களுக்கு இணையாக ‘கருணா’ என்ற பெயரும் வரலாற்றால் நிராகரிக்கப்பட்ட பெயர்களாக மாற்றம் பெற்றுவிட்டது. ‘எதிரிகளிலும் பார்க்க, துரோகிகள் ஆபத்தானவர்கள்’ என்ற தேசிகத் தலைவர் அவர்களின் வார்த்தைகளின் உண்மை கண்களைக் குளமாக்கின்றன. இந்த இரு துரோகிகளாலும் தமிழீழம் தோற்கடிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான தமிழீழ மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தேசியத் தலைவர் அவர்களால் வளர்க்கப்பட்டு, கருணா என்று நாமம் சூட்டப்பட்ட விநாயகமூர்த்தி முரளீதரன் செய்த வரலாற்றுத் துரோகங்கள் அவருக்கு சிங்கள தேசத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் படை நடவடிக்கைகளை விமர்சித்து எமுதியதற்காகவே திசவீரசிங்கம் என்ற ஊடகவியலாளனுக்கு சிங்கள நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான சிங்களப் படையினரின் அழிவுக்கும், விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 600 சிங்கள காவல் துறையினர் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமான கருணா சிங்களக் கொடும்பாவி மகிந்த ராஜபக்ஷவினால் அவரது அமைச்சரவையில் பதவி கொடுத்து அலங்கரிக்கப்பட்டுள்ளார் என்பது எத்தகைய கொடுமைகள் நிறைந்தது என்பதை வரலாறு பதிவு செய்யும். தமிழகத்தில் ஆட்சிபீடத்தில் அமர்ந்துள்ள கலைஞர் கருணாநிதி அவர்களது தமிழின வரலாற்றுத் துரோகமும் இதற்கு சற்றும் குறைந்து போய்விடவில்லை. இந்திய அனுசரணையோடு சிங்கள தேசம் தமிழீழ மக்கள்மீது தொடுத்த போர் கலைஞர் கருணாநிதி அவர்களால் நிறுத்தியிருக்கக் கூடியது.

தானாக அதனைச் செய்யாவிட்டாலும், ஈழத் தமிழர்களுக்காக தன் உயிரைக் கருக்கிய ஈகைச் சுடர் முத்துக்குமாரு மூட்டிய தீயையாவது அணைக்காமல் விட்டிருந்தால் தமிழகம் பொங்கி எழுந்து, தமிழீழ மக்களைக் காப்பாற்றியிருக்கும். ‘வீழ்வது நானாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்’ என்று தமிழக மக்களை சின்னத் திரைகளால் கட்டி வைத்திருக்கும் கலைஞர் நடாத்தியிருக்க வேண்டிய பேரெழுச்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கையிலெடுத்த போதாவது, மாற்றுப் பேரணி நடாத்தி மக்களை திசை திருப்பாமல் விட்டிருந்தாலாவது தமிழகம் ஓரணியில் நின்று தமிழீழத்தை மீட்க ஓங்கிக் குரல் கொடுத்திருக்கும். தமிழீழ மக்களுக்கான அத்தனை பேரெழுச்சிகளையும் திசை திருப்பியதால் தமிழீழ மக்கள் கேட்பார் எவருமின்றியே கொலைக்களத்தில் மாண்டு போனார்கள்.

அதை விடவும் கொடுமை ஒரு கவளம் உணவோ, ஒரு வாய் தண்ணியோ கிடைக்காமல், இறுதிக் கணத்திலாவது மனமிரங்கி எங்களைக் காப்பாற்ற வரமாட்டார்களா? என்று தமிழகத்தின் திசை நோக்கி ஈழத் தமிழர்கள் இறுதிக் குரல் எழுப்பிய அந்த அவலமான பொழுதில் கூட கருணாநிதி அவர்கள் தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக மூன்று மணி நேர உண்ணாவிரதத்தை நடாத்தித் தமிழக மக்களின் தொப்பிள்கொடி உறவு உணர்வுகளையும் கொலை செய்தாரே… ஈழத் தமிழர்கள் இந்தக் கொடுமையை எண்ணி இப்போதும் கண்ணீர் வடிக்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் சிங்கள ராஜபக்ஷவுக்கு உள்ள பங்கு கலைஞர் கருணாநிதிக்கும் உண்டு என்றே ஈழத் தமிழர்கள் இப்போதும் நம்புகின்றார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவு நடக்கும்போதும், முட்கம்பி வேலிகளுக்குள் மூன்று இலட்சம் தமிழர்களை அடைத்த போதும் முழுதாக எதையுமே செய்யாத கலைஞர் அவர்கள் ‘சகோதர யுத்தத்தால் தோற்றது’ என்றார்.

‘ராஜபக்ஷவுடன் அனுசரித்தே போகவேண்டும்’ என்றார். 150 நாட்கள் கடந்த நிலையில் எந்தக் காங்கிரஸ் கட்சி தமிழீழ மக்கள்மீது குரோதம் கொண்டு சிங்கள தேசத்திற்கு கொலைக்கருவிகளை அனுப்பி, இனப் படுகொலைகளை நெறிப்படுத்தியதோ, அதே காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற அங்கத்தவர்களையும் இணைத்து 10 தமிழகத் தூதர்களை அனுப்பி ராஜபக்ஷவுக்குப் பரிசும் வழங்கிப் பொன்னாடையும் போர்த்த வைத்த கொடுமையை ஈழத் தமிழர்கள் எப்போதும் மறந்துவிட முடியாது. அதனிலும் உச்சக் கொடுமை, மேற்குலகின் அழுத்தங்களால் ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட மக்களைத் தானே விடுவித்ததாகத் தமிழகமெங்கும் தனக்குத்தானே சுவரொட்டிகள் ஒட்டியது. ஈழத்து மக்களின் அவலங்களையும் தமிழக மக்களிடம் அரசியலாக்கிய அயோக்கியத் தனத்தை எப்படித்தான் ஜீரணித்துக் கொள்வது. இத்தனை நடந்த பின்னரும், ஈழத் தமிழர்கள் அழிந்த பின்னரும், முட்கம்பி வேலி முகாம்களுக்குள் எம் தமிழ் மக்கள் சிறுகச் சிறுக மரணித்துக் கொண்டிருக்கும் நிலையிலும் விழா ஒன்றைக் கொண்டாட வலிந்து நிற்கிறார் கலைஞர் கருணாநிதி.

‘இறைவனே! இவர் காலத்தில் வாழும் கொடுமையை ஏன் எமக்குத் தந்தாய்?’ என்று உலகத் தமிழர்கள் கொதித்துப் பொயுள்ளார்கள். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தற்போது ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ என்று பெயர் மாற்றத்துடன் விழாவுக்குத் தயாராகி வருகின்றது. உலகத் தமிழ்ப் பேரறிஞர்களே! ஈழத் தமிழர்களின் அழிவுக்கும், வீழ்ச்சிக்கும் துணைபோன கலைஞர் கருணாநிதி அவர்களின் கோவை செம்மொழி மாநாட்டை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் அவலங்கள் பொறுக்காமல் மேற்குலக நாடுகள் கோபம் கொண்டிருக்கும் நிலையில், கோவையில் விழா நடாத்தி ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி அழிவுக்குள்ளாக்காதீர்கள். வரலாற்றின் சாபங்களுக்கு நீங்களும் ஆளாகாதீர்கள். நாளை பிறக்கும் தமிழீழத்தில் செந்தமிழுக்கு முடிசூட்டும் விழாவை சிறப்பாக நடாத்தி முடிப்போம். அதுவரை எம்மோடு களத்தில் நின்று போராட துணை நில்லுங்கள். அதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் மகத்தான் பணியாக இருக்கும்.

சி. பாலச்சந்திரன்

நன்றி:ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*