TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியல் தீர்வு நிராகரிக்கப்பட்டால் மீண்டும் போர் வெடிக்கும்?

warசமாதானத்துக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் காண திறக்கப்பட்டுள்ள கதவு அதற்கு வழி விடுமா?

இன்று, அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், தொடர்பாக நாட்டில் அரசியல் அலசலொன்று களமிறங்கியுள்ளதைக் காணமுடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு யுத்தமென்ற சவால் வெற்றி கொள்ளப்பட்டதையடுத்து நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திவிடும் தீர்வுமார்க்கமொன்றாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் விதத்திலான அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமென சர்வதேச சமூகத்துக்கு அரசினால் வழங்கப்பட்ட உறுதி மொழியையும், அனைத்துக் கட்சிக் குழுவின் சிபாரிசுகளையும் அடித்தளமாகக் கொண்டே இப் புதிய அரசியல் சர்ச்சை தலை தூக்கியுள்ளது.

அரசின் இந்த அரசியற் செயற்பாட்டிற்கு எதிராக எழுந்து நிற்கும் தரப்புகளுள் ஆரம்பம் முதலே இந்த அதிகாரப் பகிர்வு யோசனையை எதிர்த்து வந்துள்ள ஜே.வி.பி., மக்கள் ஐக்கிய முன்னணி போன்ற அரசியல் கட்சிகளும், ஜாதிக ஹெல உறுமய, நாட்டுப்பற்றாளர் மக்கள் அமைப்பு உட்பட பல்வேறு மக்கள் அமைப்புக்களும் முன்னணியில் நிற்கின்றன. அதிகாரப் பகிர்வுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நிற்கும் அதிகாரத்தரப்புக்களால் முன் வைக்கப்பட்டு வரும் முக்கிய வாதமாகியிருப்பது, நந்திக் கடல் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொலையுண்டதன் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கிவிடப்பட்டிருக்கும் நிலையில் மீளவும் எவ்விதத்திலுமான அதிகாரப் பகிர்வொன்றுக்கு அவசியமேயில்லை என்பதாகும்.

ஆனாலும், போர்ப்பலம் கொண்ட தீவிர சக்தியொன்றை போர் ரீதியில் தோற்கடித்து விட்டாலும் கூட அரசியல் பிரச்சினைகளை யுத்த மொன்றில் மூலம் முடிவுக்கு கொண்டுவர முடியாது. விடுதலைப் புலிகள் அமைப்பை ஆயுதமேந்திய யுத்தமொன்றுக்கு தள்ளிச் சென்றது பல தசாப்த காலமாகத் தீர்த்து வைக்கப்படாதிருந்த அரசியல் பிரச்சினையொன்றுக்குள் சிக்குண்டிருந்த தமிழ் மக்களேயென்பதை நாம் மறந்துவிட இயலாது. யுத்தத்தின் மூலம் புலிகளின் போர்ப்பலம் சிதைத்து விடப்பட்டாலும் கூட இற்றைவரையிலும் தீர்த்து வைக்கப்படாத தீர்வொன்றை எட்டாத தமிழ் மக்கள் முன்னுள்ள சிக்கலுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படாதிருக்கும் நிலையில் மேற்படி அரசியல் பிரச்சி னையானது, எதிர்காலத்தில் மேலுமொரு போரியல் குழுவொன்றின் வளர்ச்சிக்கான ஜன்ம பூமியாக ஆகிவிடக்கூடும்.

அதற்கும் மேலதிகமாக இலங்கையரசுக்குப் பயங்கரவாத யுத்தத்தைத் தோற்கடித்த தனது யுத்த வெற்றிக்கு அப்பால் சர்வதேச சமூகத்துடன் மனித உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பான மேலுமொரு யுத்தத்துக்கும் முகம் கொடுக்க வேண்டி நேர்ந்திருந்த தென்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அப்போராட்டத்தில் வெற்றியீட்டிக் கொள்வதற்கு இலங்கைக்கு பக்க பலமாக நின்ற இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி நின்றமைக்கு, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை வெற்றிகரமான தொரு செயற்பாட்டின் மூலம் தீர்த்து வைக்கப்ப டுமென அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த உறுதி மொழியே காரணமாகியிருந்தது. அந்த வகையில், அந்த வாக்குறுதியைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பையும் கூட இலங்கையரசு நிறைவேற்ற வேண்டியுள்ளது.

தமிழ் மக்கள் முன்னுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தேடிப் பெறும் விடயத்தில், உண்மையிலேயே அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படும் அநீதியை அல்லது அவர்கள் சமநிலையில் வைத்துக் கருதப்படாத தன்மையை தெளிந்துணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. இந் நாட்டில் ஆங்கிலேயரது ஆட்சி நிலவிய காலகட்டத்தில் இந்நாட்டின் தமிழ் மக்கள் தமக்கென்றொரு புறம்பான நிர்வாகத்தையோ, ஒரே நாடென்ற ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி நிர்வாகமொன்றையோ கோரி நின்றதில்லையென்பது வரலாற்றை உற்று நோக்குகையில் தெளிவாகிறது. 1930 ஆம் மற்றும் 1940 ஆம் ஆண்டு காலங்களில் அன்றைய அரசியல் பிரமுகரொருவரான ஜீ.ஜீ. பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை கூட தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதோடு ஏறத்தாழ 1950களில் புறம்பானதொரு இராச்சியத்தைக் கோரி தனித்தொரு போராட்டத்தை மேற்கொண்ட எஸ். சுந்தரலிங்கத்தின் வாதமும் கூட தமிழர் அரசியலினால் அப்போது நிராகரிக்கப்பட்டது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

1926 இல் இளைய தலைமுறை அரசியல் வாதியொருவரான எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்டார நாயக்கா, இலங்கைக்குப் பொருந்தும் நிர்வாக முறைமை சமஷ்டி நிர்வாகமேயாகுமென கருத்து வெளிப்படுத்தி நின்ற வேளையில், தமிழ் அரசியல்வாதிகளால் அது நிராகரிக்கப்பட்டு ஒற்றையாட்சி நிர்வாக முறைமையின் அவசியம் விதைத்துரைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைக்கு (1926.07.17. Morning Leader) அன்று கருத்து வழங்கியிருந்த பிரமுகர் ஜேம்ஸ். ரீ. ரத்தினத்தின் கருத்து வெளிப்பாடு இது:

“இலங்கைக்கு இனவாத ஆட்சி முறைமையொன்றை முன்வைப்போரின் குறிக்கோளாயிருப்பது மக்களிடையே ஒருமைப்பாட்டை உருவாக்குவதே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான போதிலும், இந்த நாட்டு மக்களை பேதப் படுத்திவிடுவதற்கு அதைவிடப் பொருத்தமான வேறு அரசியல் முறைமையொன்று இல்லையென்பதே எனது நிலைப்பாடாகும்”. என்றவாறு அமைந்திருந்து.

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் சமஷ்டி நிர்வாக முறைமை குறித்த அரசியல் கருத்தை முன்வைத்த எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் தமிழரசுக்கட்சி (சமஷ்டிக் கட்சி) கூட இலங்கை இராச்சியத்திலிருந்து வேறுபட்டு நிற்கும் இராச்சியமொன்று தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததில்லை. 1957 ஆம் ஆண்டில், அன்று வரையிலும் அரச கரும மொழியாகவிருந்த ஆங்கில மொழி நீக்கப்பட்டு சிங்கள மொழி அரசகரும மொழி யாக்கப்பட்ட மொழிச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டமை, முதற்தடவையாக இலங்கையினுள் தாம் இரண்டாம் பட்சமான உரிமைகளுக்குரித்தாகும் குறைத்து மதிப்பிடப்படும் இனமொன்றே என்ற உணர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்தக் காரணமாகியிருந்தது. மேற்படிக் கருத்தியலின் காரணமாக தமிழ் சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாகவே 1957இல் பண்டாரநாயக்கா செல்வநாயகம் இடையிலான ஒப்பந்தமொன்று முகிழ்ந்தது. அப்போது கூட, பெரும்பான்மையாகத் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் செயல்படும் அரச அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களில் தமிழ் மொழியைப் பயன் படுத்துவதற்கான உரிமை மற்றும் அப்பிரதே சங்களில் அரசினால் மேற்கொள்ளப்படும் விவசாயக் குடியேற்றங்களில் காணிகளற்ற மேற்படி பிரதேச வாசிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என்பவையே தமிழ் மக்களின் கோரிக்கைகளாக இருந்துள்ளன.

இந்த மிக இலகுரக கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதற்குத் தடைகளை ஏற்படுத்தி நின்ற குறுகிய மனப்பாங்கு கொண்ட சிங்கள இனவாதிகள் அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படுவதையும் புறமொதுக்கச் செய்தனர். அதன் பின்னர் 1965ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்கா செல்வநாயகம் இடையிலான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திலும் கூட 1957இன் ஒப்பந்தத்தில் முன்வைக்கப் பட்டிருந்த கோரிக்கைகளுக்குச் சமமான சில கோரிக்கைகள் கூடத் தமிழ்மக்களுக்கு வழங்கப்படாத விதமாக அந்த அரசைத் தடுத்து விடும் அளவுக்கு இந்நாட்டுச் சிங்கள இனவாதிகள் செயற்பட்டிருந்தனர்.

இலங்கையில் அடிமைத்தளை ஆட்சி நிலவிய யுகத்திலும், நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர், 1972இல் இலங்கைக் குடியரசு என்ற அரசமைப்பு முறை கொண்டுவரப்படுவதற்கு முன்னரான நிர்வாகக் காலத்திலும் ஜனநாயகவாத வழிமுறையிலான நியாயமான கோரிக்கைகளுடன் மட்டும் தம்மை வரையறுத்துக் கொண்டிருந்த தமிழர்களது அரசியல் வியூகமானது, புறம்பானதொரு இராச் சியமென்ற கொள்கை வகுத்துக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல் வியூகத்தில் தடம்பதிப்பதற்கு, இலங்கைக் குடியரசு என்ற அரசமைப்பின் மூலம் சிறுபான்மைச் சமூகங்களின் அனைத்துச் சட்டரீதியிலான மற்றும் நியாயமான உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டமையே காரணமாக அமைந்தது. மேற்படி திருப்புமுனையாக அமைந்த சந்தர்ப்பம் வரையிலும் நிலவிய அரசமைப்பின் 27ஆவது விதியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்த சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளும், சிறுபான்மைச் சமூகங்களைப் பிரதிநிதித் துவப்படுத்திநின்ற ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீக்கப்பட்டமை மற்றும் மூதவை இல்லாதொழிக்கப்பட்டமை ஆகியவை மூலம் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் வெட்டிக்குறைக்கப்பட்ட மையும், சிங்களமொழி அரச கரும மொழியாகவும் பௌத்தம் தேசிய மதமாகவும் அரசமைப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டமையும் தமிழ் மக்கள் என்போர் போர் இலங்கை நாட்டினுள் அவர்களது உரிமைகளைப் பொறுத் தவரையிலும் கீழ் மட்டத்தரப்பொன்றே என்பது உணர்த்தி விடப்பட்டது.

இவை ஒருபுறமிருக்க, அரசமைப்பின் 13ஆவது திருத்தமென்பது இந்திய அழுத்தத்தின் மூலமாக அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்குச் சற்றும் பொருந்தாத முறைமையொன்றே என்ற மேலுமொரு எதிர்வாதக் கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் யுத்த முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வந்த சந்தர்ப்பத்தில், இலங்கையரசு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களுக்கிடையில் இந்தியாவின் மத்தி யஸ்தத்துடன் இடம் பெற்ற திம்புப் பேச்சுகள் மற்றும் புதுடில்லி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1985இல் அரசு மற்றும் விடுதலைப் புலித்தலைவர்களென்ற இவ்விரு தரப்புக்களுமே, அரசமைப்பின் 13ஆவது திருத் தத்தின் மூலம் முகிழ்ந்திருந்த இந்தியத் தரப்பின் அரசமைப்பு வரைபினூடான அதிகாரப் பகிர்வு நிர்வாக மொன்றுக்கு இணக்கம் கண்டிருந்தன.

பிற்காலத்தில், மங்கள முனசிங்க குழுவின் அறிக்கைக்கு அமையவும், தற்போது தயாரித்து முடிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக்குழுவின் அறிக்கைக்கு அமையவும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு மிகப்பொருத்தமானதாக அரசமைப்பின் 13ஆவது திருத்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, மஹிந்த ராஜ பக்ஷவால் இந்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாடுகளுக்கு அமைய மாகாண சபையின் மூலம் பகிர்ந்தளிக்கபடவுள்ள அதிகாரத்துக்கு அப்பாலும் பயணிக்கும் முறைமையூடாக அதிகரித்த அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கும் அவர் தயாராகவிருந்தார்.

அவ்வாறான போதிலும், இலங்கையினுள் மாகாணசபைகள் என்பவை வெற்றிகரமான அதிகாரப்பகிர்வு நிர்வாக முறைமையொன்றாக அமையவில்லையென்பதைக் கடந்த இருதசாப்தகாலப் பட்டறிவுகளுக்கு அமைய தீர்மானிக்க முடிகிறது. 1990 முதல் 2008 வரையிலும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுள்ள மாகாண சபைகள் பொதுநிதியை வீண்விரயமாக்கும் தோல்வி நிலை நிர்வாக முறைமையே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தத்தமது அரசியல் கட்சிகளின் வெற்றிக்காக பொதுமக்களது வளங்களையும் தமது அதிகாரப்பலத்தைப் பிரயோகித்துக் கொள்ளும் அடாவடித் தரப்புக்களை இயக்கிச் செல்லும் மையமொன்றாகவும், மத் திய நிர்வாகம் சார்ந்த அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களை தேசிய அரசியலுக்குள் புகுத்திவிடுவதற்கான பயிற்சி மையமாகவும், இந்த இரண்டாம் மட்ட அரசியல் உறவினர்கள் தேசிய நிதியைத் தமது விருப்புகளுக்கமைய சூறையாடிக்கொள்வதற்கு வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனமொன்றாகவும் மட்டுமே மாகாணசபைகள் செயற்பட்டு வருகின்றன.இந்தத் தோல்வி நிலைக்குக் காரணமாக அமையும் அடிப்படை ஏதுக்கள் நிறையவே உள்ளன.

முதலாவதாக அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அமைய, மாகாண சபைகளுக்குக் கிட்டவேண்டிய அதிகாரங்களை அவை நடைமுறைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்க அரசு தயாரில்லை என்பதைச் சுட்டிக்காட்ட முடியும். இதற்கமைய, விசாலமான நிதிவளம் விரயமாக்கப்பட்டு இயக்கிச்செல்லப்படும் மாகாண சபைகளின் மூலம் இடம்பெறுவது உள்ளூராட்சி நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்றப்படும் கருமங்களாகவே அமைவதோடு, மக்களுக்கான ஒரே செயற்பாட்டுக்கு இரண்டு நிறுவனங்களை இயக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, அரச உத்தியோகத்தர்களுக்கு தமது பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மத்திய அரசின் அரசியல்வாதிகளினதும் மற்றும் மாகாணசபைகளின் அரசியல் வாதிகளினதும் சட்டத்துக்கு முரணான அழுத்தங்களுக்கு இரு கோணங்களில் அடி பணிய வேண்டி நேர்கிறது. இவ்வித மானபாதிப்பான நிலைப்பாடுகளேயன்றி அரசவையில் செயற்றிறன் மிக்க தன்மைக்கு அங்கு இடமிருப்பதில்லை. அதன்மூலம் அரசசேவைகள் என்பவை வரையறையற்ற அரசியல் அழுத்தங்களினுள் ஊழல் மயமாவதன் ஊடாக மக்களுக்குக் கிட்டக்கூடிய சேவை அற்றுப்போய்விடும் பாதகமான நிலைப்பாடொன்றே மாகாணசபைகள் மூலம் உருவாகியுள்ளது.

புத்தி ஜீவிகளைக் கொண்ட ஆணைக்குழு நிறுவி பொருத்தமான தீர்வைப் பெருவதே உகந்தது

மேலும், அரசமைப்பிலேயே சட்ட பூர்வமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பெருமளவிலான அதிகாரங்கள், மாகாண சபைகளால் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுத்து விடுவதன் மூலமாகவும் கூட, மாகாண சபைகளை எந்தவொரு அதிகார பலமுமற்ற நிறுவனங்களாக்கி விடும் உத்தி கடந்த இரு தசாப்த காலமாகவே நடந்தேறிவந்துள்ளது. முக்கியமாக, காணி அதிகாரங்கள் மற்றும் பொலீஸ் அதிகாரங்கள் என்பவை சட்ட ரீதியாகவே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை செயலுருவில் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுத்துவிடும் அதிகாரபலம் மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் வசத்தில் அமைந்துள்ளது. அத்தோடு மாகாண ஆளுநர் பதவியில் தமக்கு நெருக்கமான ஒருவரை அமர்த்தி மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரங்களைக் கடும்பிடியில் கட்டுப்படுத்தி விடும் அதிகார பலமும் கூட ஜனாதிபதியின் வசமுள்ளது. இதற்கமைய நிறைவேற்று ஜனாதிபதிப் பதவிக்கு உள்ள வரையறையற்ற அதிகாரங்களின் கீழ் அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதென்பது செயலுருவில் மேற்கொள்ளப்பட இயலாத தொரு நிலைப்பாடென்பது புலப்படுகிறது.

எனவே, இனப்பிரச்சனைக்குக் தீர்வொன்றாக அதிகாரங்களைப் பரவலாக்கிவிடும் கட்டமைப்பு மற்றும் பரவலாக்கப்பட வேண்டியிருக்கும் அதிகாரங்கள் தொடர்பான முறையானதொரு பரிசீலனையை மெற்கொள்ளாது அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் மீது தங்கியிருப்பதானது மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிலைப்பாட்டினுள் சாத்தியப்படாததொரு கருமமே என்பதைக் குறிப்பிட்டுக் கூறமுடியும்.

1957 ஆம் ஆண்டிலிருந்தே இச்சிக்கலுக்கான தீர்வுகளைத் தேடிப்பெறும் பொறுப்பை அரசியல்வாதிகளே தமது கரங்களில் எடுத்துக் கொண்டு வழங்கியுள்ள அனைத்துத் தீர்வுகளும் தோல்வி யிலேயே முடிந்துள்ளன. அந்தவகையில், 1957ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க செல்வநாயகம் இடையிலான ஒப்பந்தம் முதற்கொண்டு இற்றைவரையிலும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தீர்வு மார்க்கங்களும் சிதைவடைந்து, நாட்டை அழிவை நோக்கி இட்டுச் சென்ற யுத்தமொன்றும் கூட உருவாகிவிடுவதற்கு அரசியல்வாதிகளின் அவ்விதத்திலான நடவடிக்கைகளே காரணமாகியிருந்துள்ளன.

இவ்வளவுக்குப் பின்னரும், இன்றைய அரசு, தீர்வு மார்க்கங்களைத் தேடிப்பெறுவது தொடர்பான அக்கருமத்தை அனைத்துக்கட்சிக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது. இங்கு இனப்பிரச்சினை சம்பந்தமான சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள எந்தவொரு அரசியல் கட்சிகளையோ அல்லது குறைந்த பட்சமாக இரு அரசியல் கட்சிகளையோ, தேடிக் கண்டறிந்து கொள்ள இயலாதுள்ள நிலைப்பாடொன்றினுள், பல்வேறு ஒன்றுக்கொன்று முரணானகொள்கை நிலைப்பாடுகளை அடித்தளமாக அமைத்துக் கொண்டுள்ள கட்சிகள் அனைத்தினதும் இணக்கப்பாட்டுடன் தீர்வொன்றைத் தேடிகொள்வதென்பது செயல்பூர்வமாகச் சாத் தியப்படமாட்டாதென்பது அரசுக்குப் புலப்படாதிருப்பது துரதிஷ்டவசமானதாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றை மட்டுமே ஆராய்ந்து பார்த்தாலும் கூட, ஆக்கபூர்வமான நடைமுறைகளைக் கண்டறிந்து கொள்ள முடியும். அந்த வகையில், ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்துள் அரசுக்கு எதிராக முன்னெழுந்த மக்கள் எழுச்சிகளுக்குப் பரிகாரங்களைத் தேடிப் பெறுவதற்காக புத்திஜீவிகள் உள்ளடங்கிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் கோல் புரூக் ஆணைக்குழு, டொனமூர் ஆணைக்குழு, சோல்பரி ஆணைக்குழு, 1927 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி ஆணைக்குழு என்ற ஆணைக்குழுக்க ளினால், அரசுக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் அடித்தளமாகக் கொள்ளப்பட்டு, அவற்றின் மூலம் அடிமைத்தளை மட்டத்திலிருந்து டொமினியன் நிலைப்பாடு வரையில் இலங்கை நாட்டை இட்டுச் சென்ற நிர்வாக முறைமைகள் முகிழ்ந்திருந்ததை எம்மால் அறியமுடிகிறது.

மேலும், 1818 மற்றும் 1848ஆம் ஆண்டுகளில் தலையெடுத்த கிளர்ச்சி களின் போது ஆயுத பலத்தால் அவற்றைத் தோல்வியுறச் செய்வதற்கு முடிந்திருந்த போதிலும் கூட, அவற்றின் பின்புலங் களாகியிருந்துள்ள மக்களின் அதிருப்தி நிலை தொடர்பாக ஆணைக்குழுக்களிடமிருந்து பரிந்துரைகளைப் பெற்று, நிர்வாகக் கட்டமைப்புக்கள் நேர்சீர் செய்யப்பட்டன என வரலாற்றிலிருந்து எம்மால் பாடங் களைக் கற்றுத் தேற முடியும்.

எவ்வாறான போதிலும், இன்றைய அளவில், வெற்றிகரமானதொரு அரசியல் தீர்வொன்றின் மூலம் நிரந்தர சமாதானத்தை நோக்கிப்பயணிப்பதற்கான கதவு இந்த யுத்த வெற்றியை அடுத்து இன்றைய அரசுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. அரசியல் வாதிகளின்தோல்வியில் முடியும் தீர்வுயோசனைகளைப் புறமொதுக்கி வைத்து, புத்திஜீவிகள் உள்ளடங்கும் ஆணைக்குழு வொன்றை நிறுவி, பொருத்தமான நிர்வாகக்கட்ட மைப்பைச் சம்பந்தப்படுத்தும் பரிந்துரைகளைப் பெறுவதற்கு இன்றைய அரசு செயற்படு மானால், அது, புத்திசாலித்தனமான கருமமாக அமையக் கூடும்.

சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத்
மனித உரிமைகள் காப்பகம் கொழும்பு

தமிழில் தருபவர் உதயன் சரா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*