TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராஜ் விவகாரத்தில் மீன்பிடிக்கத் துடிக்கும் ராஜபக்ச அரசு

Rajபங்குச்சந்தையில் சட்டவிரோத வியாபார நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் தமது நாட்டின் வர்த்தகச் சட்டமூலங்களை மீறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் என்ற தமிழர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நாய்க்கு எங்கே கல் எறி விழுந்தாலும் காலைத் தூக்கிக்கொண்டு ஓடுவது போல தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியை அறிந்தமாத்திரத்திலேயே அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிச்சிட்டு, கைதுசெய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் விடுதலைப்புலிகளுக்கு நிதிவழங்கினார் என்ற அறிக்கையை அவசர அவசரமாக விடுத்துள்ளது சிறிலங்கா அரசு.

கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் கடந்த 16 ஆம் திகதி அமெரிக்கக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதற்குரிய குற்றச்சாட்டு எனப்படுவது பங்குவர்த்தகத்தில் மோசடி நடவடிக்கையில் ஈடுபாட்டார் என்பதாகும். அது ‘இன்சைட் ட்ரேடிங்’ என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. அதாவது, பங்குகளை வாங்குதல் விற்றல் போன்ற நடவடிக்கையை மேற்கொள்பவர்கள், குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குவிலை உயர்வு மற்றும் சரிவு ஆகியவற்றை தமது ஊகங்களின் அடிப்படையிலோ அல்லது கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலோ அல்லது சிலவேளைகளில் வதந்திகளின் அடிப்படையிலோ அல்லது சில புள்ளிவிவர கணித்தல்களின் அடிப்படையிலோ தமது வர்த்தகத்தில் ஈடுபடுவது வழக்கம். இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை வணிகம் பகுதியில் சக ஈழநேசன் எழுத்தாளர் பாலகார்த்திகா இன்னொரு பத்தியில் எழுதியுள்ளார்.

Raj1

“ஆனால், கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் தனது செல்வாக்கினாலும் பணபலத்தினாலும் பிரபல பங்குவர்த்தக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு கையூட்டு வழங்கியும் வேறு வசதிகளை செய்துகொடுத்தும் அந்த நிறுவனங்களின் பங்குவிலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்குமா குறையுமா என்ற தகவல்களைப் பெற்று, அந்தத் தகவலைத் தந்தவருக்கு பெருந்தொகையான பணத்தையோ அல்லது தனது நிறுவனத்தில் உள்ள பங்குகளின் விலையின் நிலைவரத்தை தெரிவித்து, பரஸ்பரம் இருவரும் கோடிக்கணக்கான லாபத்தைத் தொடர்ச்சியாகப் பெற்றுவந்ததன் மூலம், குறிப்பிட்ட நிறுவனங்களில் பங்குதாரர்களாக இருந்துவந்த ஏனையவர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்துக்கொண்டார்.

“இவ்வாறு ஒரு நிறுவனத்தின் முன்கூட்டியே பங்குவிலை நிலைவரத்தை அறிந்துகொள்வதனால், பங்குவிலை அதிகரிக்கப்போகும் நிறுவனத்தில் கூடிய எண்ணிக்கையிலான பங்குகளை வாங்குவதன் மூலமும், பங்குவிலை குறையப்போகிறது என்பதை முன்னமே அறிந்துகொண்டால், குறிப்பிட்ட நிறுவனத்தில் தனது கைவசமிருக்கும் பங்குகளை அப்போதைய சந்தைவிலைக்கு விற்றுவிட்டு நட்டத்தைத் தவிர்த்துக்கொள்வதன் மூலமும் பெருந்தொகையான பணத்தை கொள்ளை லாபமீட்டிக்கொள்ளலாம். ஆனால், இவ்வாறு செய்வதன் மூலம் பங்குச் சந்தை நிலைவரத்தை – நீதி நியாயமாக – தமது ஊகங்களின் அடிப்படையில் கணித்து தமது விற்றல் வாங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் சக பங்குதாரர்களை ராஜ் ராஜரட்ணம் போன்றவர்கள் ஏமாற்றியுள்ளார்கள்.”

– இவ்வாறு குற்றம் சாட்டி ராஜ் ராஜரட்ணம் உட்பட அவருடன் கூட்டுசேர்ந்து இந்த ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.

பங்குச்சந்தை நிலைவரத்தை முற்கூட்டியே தெரிந்துகொள்வதற்கு கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்ணம் கூகிள், ஐ.பி.எம்., இன்டெல் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரியும் பங்குநிலைவரம் தெரிந்த முக்கிய புள்ளிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்றும் அவர்களுக்கு தனது கம்பனியான கலியூன் என்ற – 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களுக்குச் சொந்தமான – கம்பனிபங்கு நிலைவரத்தினை முற்கூட்டியே தெரிவித்தும் வேறுவகையிலான வசதிகளை செய்துகொடுத்தும் மேற்படி நிறுவனங்களின் பங்குநிலைவரத்தை முற்கூட்டியே தெரிந்துகொண்டு, பங்குச்சந்தையில் சட்டவிரோதமான முறையில் லாபமீட்டிக்கொண்டார் என்றும் இந்த வழக்கில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான நடவடிக்கை மூலம் ராஜ் ராஜரட்ணம் சுமார் 20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களை லாபமீட்டினார் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Raj2

ராஜ் ராஜரட்ணத்துடன் இந்த சட்டவிரோத நடவடிக்கையுடன் தொடர்புபட்ட மேலும் பலருக்கு அமெரிக்கக் காவல்துறை வலைவிரித்திருக்கிறது. இதுவரை ஆறுபேரே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ராஜ் ராஜரட்ணம் சிறிலங்காவிலுள்ள பல முன்னணி நிறுவனங்களிலும் பங்குகளை வாங்கியிருந்தார். சிறிலங்காவிலுள்ள முன்னணி பங்கு நிறுவனங்களில் இவருக்கு நிறையவே பங்குகள் இருப்பதாகத் தெரிவிக்கும் கொழும்புச் செய்திகள், ஜோன் கீல்ஸ், டயலொக், சிறிலங்கா தொலைதொடர்பு நிறுவனம் உட்பட பல நிறுவனங்களில் ராஜ் ராஜரட்ணம் முதலீடுகளை மேற்கொண்டிருந்தார் என்று தெரிவிக்கின்றன. ஆனால், இந்த நிறுவனங்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசானது இதனை எவ்வாறு தமிழின அழிப்புக்கு பயன்படுத்துகின்றது என்பதை இனி பார்ப்போம். இலங்கையில் ராஜ் ராஜரட்ணத்தின் பணிகள் எவையென பட்டியலிடும் சிறிலங்கா அரசு, அவர் பல திட்டங்களுக்கு இலங்கையில் பணத்தை அள்ளிவீசியுள்ளார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலைக்கு பின்னரான உதவிப்பணிகளுக்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளார். வன்னியில் தொழில்நுட்ப ஆரம்பபள்ளிகளுக்கும் களுத்துறையில் கல்வித்திட்டத்துக்கும் வேறுபல உதவித்திட்டங்களுக்கும் சிறிலங்காவில் நிதிவழங்கியுள்ளார். வெளிநாடுகளிலும் பல உதவிகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக கடந்த அமெரிக்க அரச அதிபர் தேர்தலின்போது ஒபாமா அவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு 30 800 அமெரிக்க டொலர்களும் கிலாரி கிளின்டனது தேர்தல் பிரசாரத்துக்கு 4600 அமெரிக்க டொலர்களும் வழங்கியிருந்தார்.

மேற்குறிப்பிட்ட உதவிநிதிகளில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு வழங்கிய நிதி விடுதலைப்புலிகளின் முன்னணி அமைப்புக்கு வழங்கப்பட்ட நிதி என்ற ரீதியில் – அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் – ராஜ் ராஜரட்ணத்துக்கு எதிராக “பயங்கரவாதிகளுக்கு” நிதியுதவியளித்தார் என்ற குற்றச்சாட்டு சோடிக்கப்படவிருந்தபோதும் –

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் – 2004 ஆம் ஆண்டு – ராஜ் ராஜரட்ணம் உதவிப்பணிகளுக்காக தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு நிதியுதவி வழங்கியிருந்தார். ஆனால், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் தடைசெய்யப்பட்டது 2007 ஆம் ஆண்டு ஆகும். ஆகவே, தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு அவர் உதவிவழங்கவில்லை என்று சிறிலங்கா மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ராஜ் ராஜரட்ணத்தின் மீதான சிறிலங்காவின் குற்றச்சாட்டு மேற்குறிப்பிட்ட விடயங்களின் ஊடாகவே நகர்கிறது. வழக்கை நடத்திவரும் அமெரிக்க அரசு இது விடயத்தில் தெளிவாக தனது குற்றச்சாட்டுகளை ஒழுங்கமைத்து விசாரணைகளை மேற்கொண்டுவருகிறது. ஆனால், இது விடயத்தில், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது போல தமிழர் ஒருவர் வெளிநாட்டில் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்ற உடனேயே, கனவிலிருந்து திடீரென விழித்து அலறியவர் போல சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, ராஜ் ராஜரட்ணத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்புண்டு என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

தெளிவாக தனது படையினரால் தமிழர்கள் கொலை செய்யப்படும் ஒளிநாடாவை சனல் -4 தொலைக்காட்சி காண்பித்ததை மறுத்து இங்கிலாந்துவரை வக்காலத்து வாங்குவதற்கு சென்று, அந்த விடயத்தில் தற்போது மூக்குடைபட்டுப்போயுள்ள சிறிலங்கா அரசு, ராஜ் ராஜரட்ணம் விடயத்திலும் ஏதாவது புனைகதை பேசலாம் என்று நம்பியிருக்கலாம். ஆனால், அமெரிக்க நீதித்துறை ராஜ் ராஜரட்ணம் விடயத்தை அரசியல் விவகாரமாக பார்க்கவில்லை. சட்ட விவகாரமாகவே பார்க்கிறது. அதன் அடிப்படையில்தான் விசாரணைகளையும் மேற்கொண்டுவருகிறது.

தற்போதைய தகவல்களின்படி உலகமெங்கும் பரந்திருக்கும் மிகப்பெரும் தமிழ் வணிகப் புள்ளிகளை ”புலிகள்” எனச் சாயம் பூசி – தமிழர்களை தாயகத்தில் வெற்றிகொண்டது போல – தமிழர் என்ற அடையாளத்தை புலம்பெயர் தேசங்களிலும் இல்லாதொழிப்பதற்கு எவ்வளவு கூத்தும் அவர்கள் ஆடத்தயாராக இருக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

நன்றி; ஈழநேஷன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*