TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அடைக்கப்பட்ட சீதைகளைப் பார்க்கச் சென்ற அநுமானர்கள்

inda anumanஇந்தியத் தூதுவர்களின் இலங்கை விஜயம், எதிர்பார்த்த அளவிற்கு பரபரப்பினை உருவாக்கவில்லை. அதிரடி அரசியலிற்கு பேர்போன தமிழக அரசியல் ஜாம்பவான்கள், நாடெங்கும் ஐந்துநாள் கடுகதிப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

முகாம் மக்கள் விடுவிக்கப்படவேண்டுமென்கிற விவகாரத்தை, சென்னையில் இருந்தபடியே இவர்கள் சொல்லியிருக்கலாம். கைப்புண்ணுக்கு பூதக் கண்ணாடி தேவையில்லை. இவர்கள் வெளியிடப்போகும் அறிக்கையால், மூன்று இலட்சம் தமிழ் மக்களும் உடனடியாக விடுவிக்கப்படுவார்களென்று கனவுகாண முடியாது. சொந்த இனம், துன்பத்தில் வாடுவது கண்டு, சிந்தை இரங்கிப் பயணம் செய்தார்களென்று எவராவது கருதினால், அவர்கள் இந்திய அரசியலின் அரிச்சுவடியைப் புரியாதவராவர். இந்திய ஆளும் வர்க்கத்தின் நலனும், தமிழக ஆட்சியாளர்களின் நலனும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து செயற்பட்டது இப் பயணத்தில். 400 இற்கு மேற்பட்ட தமிழக தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டமைக்கு விசாரணை நடாத்த இவர்கள் செல்லவில்லை.

இறுதிவரை மக்களோடு இருந்த குற்றத்திற்காக சிறையிலடைக்கப்பட்ட, அம்மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினம் அவர்களைப் பார்த்து, நலம் விசாரிப்பதற்கும் இத் தூதுவர்கள் செல்லவில்லை. கிழக்கின் விடியலில் துயர் கொள்ளும், இடம் பெயர்ந்த மக்களைத் தரிசிக்கவும் இக்குழு செல்லவில்லை. தென்மராட்சிப் பக்கம் காலடி வைக்கவும் அனுமதியில்லை. ஆகவே, வேறு எதற்காக இந்த ஆளும்கட்சி அரசியல்வாதிகள் சிறீலங்காவிற்கு விஜயம் செய்தார்கள்? அதிகரிக்கும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறீலங்கா அரசைக் காப்பாற்ற, இந்திய மத்திய அரசின் இராஜதந்திர காய்நகர்த்தலில், பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டவர்களே இந்த 10 எம்.பிக்களும். தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த இந்தியா இருக்கிறது என்பதற்காக, இவர்கள் அனுப்பப்பட்டார்களென்று தவறான கற்பிதங்களை வளர்த்துக்கொள்ளக்கூடாது.

மே 15இல், போர் நிறுத்தப்பட்டுவிட்டதென்று பொய்யுரைத்த, சோனியா கலைஞர் கூட்டணியின் பிரதிநிதிகளே இங்கு வந்துள்ளார்கள். இதில் தி.மு.க எம்பிக்களும், திருமாவளவனும் வாய்திறக்கவில்லை. அவ்வாறு திறந்து, ‘முகாம்களெல்லாம் பூஞ்சோலையாகக் காட்சியளிக்கிறது’ என்று கருத்துக் கூறினால், தமிழினத் துரோகிப் பட்டம் சூட்டிட, தமிழக மக்கள் காத்திருக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ்காரர்களுக்கு இத்தகைய ‘இரண்டும் கெட்டான்’ நிலை கிடையாது. டெல்லி காங்கிரசின் தாளத்திற்கு ஆடும் பொம்மைகளுக்கு, ஏற்கனவே பல அறிவுரை வகுப்புக்கள் சோனியாவினால் எடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு, இந்திய அரசியலின் ஜனநாயகம் வளர்ச்சியுற்று, இமயத்தைத் தொட்டிருக்கிறது.

இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே தமது கொள்கையென்று வியாக்கியானமளித்த கலைஞர் கருணாநிதியின் எம்.பிக்கள், மத்திய கூட்டாட்சிக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார்கள். இதில் தமிழீழம், நாடுகடந்த அரசு பற்றி வலியுறுத்தும் திருமாவளவனின் நிலை தர்மசங்கடமாக அமையப்போகிறது. சர்வதேச மனிதாபிமான நியமங்களிற்கேற்ப முகாம்கள் பராமரிக்கப்படுவதாக, இலங்கையில் இருந்தவாறே, காங்கிரசார் மகிந்த புராணம் பாடத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள் மௌனவிரதம் பூண்டு, கருத்துக் கூறுவதை தவிர்த்துள்ளார்கள். இது கலைஞர் போட்ட கடிவாளமா? அல்லது மத்திய அரசிற்குச் சிக்கல் ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, தாமாகவே புரிந்துகொண்டு, வாய்ப் பூட்டினை போட்டுள்ளார்களா? இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்த, இத் தூதுவர்கள் வெளியிட்ட செய்தி ஒன்று, இந்தியாவின் உள் நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

மீள்குடியேற்றம் செயல்படுத்தப்படுவதை இராணுவத் தரப்பு எதிர்ப்பதாகவும், அதனையும் மீறி, இந்திய அழுத்தத்தால் அது நடைமுறைப்படுத்தப்படுமாயின், இராணுவப் புரட்சி ஏற்படும் நிலை ஏற்படுமென்றும், அத்தகைய நிலை இந்திய நலனுக்கு எதிரான தளத்தினை உருவாக்கி விடுமென்று கொங்கிரஸ் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்ததாக உள் தகவல்கள் கூறுகின்றன. இவைதவிர, இராணுவ ஆட்சியன்று சிறீலங்காவில் உருவாகுமாயின், அவ் ஆட்சியாளர்கள், மியன்மார் போன்று சீன சார்பு நிலைப்பாட்டினை வெளிப்படையாக எடுப்பார்களென்று அவர் எச்சரித்துள்ளார். ஆகவே கச்சைதீவை தாரை வார்த்ததும், தமிழக மீனவர்கள் கொல்லப்படும்போது தலையைக் குனிந்ததும், ஈழப் போராட்டத்தை அழிக்க சிங்களத்திற்கு உதவியதும், ஒப்பந்தம் ஏற்பட்டவுடன் விடுதலைப் புலிகளுடன் மோதியதும், முள்ளிவாய்க்காலில் மக்கள் அபயக்குரல் எழுப்பும்போது போர்முடிந்து விட்டதெனப் பொய் சொன்னது, ஏனென்று இப்போது புரிகிறது.

ஈழத் தமிழர்களின் நலனில் இந்தியாவிற்கு ஆத்மார்த்தமான அக்கறை உண்டென எவராவது வாதிட்டால், சுதர்சன நாச்சியப்பனின் சர்வதேசப் பார்வையைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இந்தியாவையும் நிராகரித்து எதைச் சாதிக்க முடியுமென கருத்துரைப்போர், இந்தியாவுடன் இணைந்து எதைப் பெறமுடியுமென்பதையாவது கூறவேண்டும். ஆனாலும் பாரத தேசத்தின் தேவையை, நாச்சியப்பன் தெளிவாக முன்வைத்துள்ளார்கள். சிறீலங்காவில் இராணுவப் புரட்சி சாத்தியமா என்பதற்குமப்பால், சீனப் பூச்சாண்டியைக் காட்டி, தமிழினத்தின் அரசியல் பிறப்புரிமையை மலினப்படுத்தி அழிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுவதை நிராகரிக்க முடியாது. இவை தவிர சிங்கக் குகைக்குள் புகுந்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன், லண்டன் விஜயத்தின்போது தெரிவித்த சர்வதேச முரண்பாடுகள் குறித்த விளக்கங்களுக்கு, புதிய பரிமாணங்களையும் அங்கு கண்டிருப்பார்.‘

தப்பிப் பிழைத்தாய் மகனே’ என்று சிறுத்தையைப் பார்த்து சிங்கம் கர்ஜித்திருக்கிறது.தமிழக அரசியல்வாதிகளைக் கோமாளிக்கூட்டமெனணி முன்பு சரத்பொன்சேக்கா குறிப்பிட்டபின்னரும், பிராந்திய இராஜதந்திர நகர்வுகளில் முதன்முறையாகக் காலடி பதித்திருக்கும் தமிழகத்தாருக்கு, சிங்களத்தின் பேரினவாத மனோநிலை இன்னமும் புரியாதிருப்பது வேதனைக்குரியது. சோனியாவின் தூதுவர்கள், சிங்கள ஆட்சியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி, அரசியல் நாகரீகத்தை காப்பாற்றிவிட்டதாக எண்ணினால், இதன் எதிர்விளைவுகள், அவர்களுக்கு சாதகமாக அமையாதென்பதையும் உணரும் தருணம் உருவாகும்.உல்லாசப் பயண இறுதியில் வெளிவரப்போகும் கூட்டறிக்கை, ஈழத்தமிழினத்தின் உணர்வுகளை பிரதிபலிக்காது என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

அறிக்கையின் சாராம்சம் எவ்வாறு அமையவேண்டுமென்பது குறித்து, பயணத்திற்கு முன்பாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆருண், நாச்சியப்பன் போன்றவர்கள், அதன் முன்னுரையை எழுதிவிட்டார்கள். முடிவுரை சென்னையில் வெளியிடப்படும்பொழுது, தனியான அறிக்கையன்றை சமர்ப்பித்து, தனது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றப் போவதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மகிந்தரைச் சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்பிக்களை, வதைமுகாமிற்கு செல்லவிடாது தடுத்த அரசின் ஜனநாயகத் தன்மைகளை, இந்த ஆளும் கட்சித் தூதுவர்கள் புரியவில்லை. பயணக்குழுவில், தமிழக எதிர்க்கட்சியினரை இணைக்க விரும்பாத கலைஞரின், ஜனநாயகப் பண்பினையும் இவர்கள் உணர மறுத்துள்ளார்கள். தமிழக ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது போன்று, வவுனியா வதைமுகாம் மக்களுக்கும் இந்தியப் பிரஜாவுரிமை வழங்கப்படுமென்கிற அதிரடி அதிர்வேட்டு அறிக்கைகளையும் இக் கூட்டம் வெளியிடலாம்.

பிரச்சனைகளை திசை திருப்புவதற்கும், அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும், இவ்வகையான குறுக்கு வழிப்பாதைகளை தமிழக ஆட்சியாளர் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமான விடயமல்ல. எல்லாமே ஜனநாயகத்தின் பேரால் நடாத்தப்படும் ‘மனிதவதை’ நியாயப்படுத்தல்களே. சிறையிலிருக்கும் சீதைகளைப் பார்வையிட, டெல்லி ராமர்கள் அனுப்பிய தமிழக அநுமார்கள் சிங்களத்தின் சிறைப் பராமரிப்பிற்கு நற்சான்றிதழ் வழங்கி, புதிய இராமாயணக் கதையைப் புனைந்துள்ளார்கள். இப்பயணச் செய்தி கூறும் விடயம் என்னவென்றால், இந்திய ஆதிக்கத்தில்தான் இன்னமும் ஈழத் தமிழினத்தின் அரசியல் விவகாரம் இருக்கிறது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட, புதுடெல்லி மேற்கொண்ட நகர்வாகும். இந்த அநுமார் பயணம், சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும், நிலக்கண்ணிவெடி அகற்றி, விடுதலைப்புலிகளை முழுமையாகப் பிரித்தெடுக்கும்வரை மீள்குடியேற்றம் நடைபெறாதென்கிற சிங்களத்தின் பிடிவாத அரசியலில் மாற்றத்தினை ஏற்படுத்தாது.

சனாதிபதி, நாடாளுமன்ற தேர்தல்வரையாவது, வதைமுகாம்களுக்குள் தமிழர்களை சிறைவைத்து, பேரினவாத அரசியலை நடாத்த சிங்களம் முனையும். அரசின் போக்கினை மாற்றியமைக்க, தமிழகத் தலைவர்களாலும் முடியாது, இந்தியாவும் அதனை விரும்பாது. வேலிக்கு, கலைஞரும் சாட்சியாக இருக்கவேண்டுமென்பதையே புதுடெல்லியும் எதிர்பார்க்கிறது. சர்வதேச கடல் எல்லைக்கோட்டிற்கு அப்பாலுள்ள மன்னார் கடற்பரப்பினை, தமது எரிவாயு, எண்ணெய் அகழ்விற்காக, சிறீலங்காவிடமிருந்து இலவசமாகப் பெறுவதற்கு, சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய இந்தியா விரும்புகிறது. இதன் முதற்கட்டமாக, தமிழகத் தூதுவர்களை அனுப்பி, வதைமுகாம் வாழ்வில் ‘வசந்தம்’ வீசுகின்ற தெனச் சொல்ல வைக்கும், காய்நகர்த்தல்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘போக்ரான்’ விவகாரத்தில், சர்வதேசத்தின் தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள, சிறீலங்காவிற்கு இந்தியா வழங்கிய லஞ்சமே இந்தக் கச்சதீவு. தற்போது இது போன்றதொரு நிலைமை சிறீலங்காவிற்கு ஏற்பட்டுள்ளது. வதைமுகாம் விவகாரத்தால், சிங்களத்தின் மீது சர்வதேசம் பிரயோகிக்கும் அழுத்தங்களை முறியடிப்பதற்கு, இந்தியா நீட்டும் உதவிக்கரம், பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுகிறது. மறைவிடங்களில் பேசப்படும் இப்பொருண்மிய விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரும்வரை, தமிழக பயணங்களும், மனித உரிமை பற்றியதான அரசியலும், பாதிக்கப்படும் மக்களை, உண்மையைத் தரிசிக்க விடாது தடுத்துக்கொண்டேயிருக்கும்.

இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*