TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியலுக்குள் வருவாரா ஜெனரல் சரத் பொன்சேகா?

sara“போர் முடிந்து விட்டது- புலிகள் அழிந்து விட்டார்கள்- இனியென்ன அரசியல் தீர்வு?”

இராணுவத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவது காலப்போக்கில் இராணுவ ஆட்சி ஒன்றுக்கு வித்திடலாம் என்ற கருத்து 1990களின் ஆரம்பத்திலேயே ஏற்பட்டிருந்தது. இப்போது நடைபெறும் சம்பவங்கள், இலங்கையில் இராணுவ ஆட்சி ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகி வருவதைப் புலப்படுத்துகின்றன.

இராணுவ ஆட்சி என்னும் போது அது இராணுவப் புரட்சி ஒன்றின் அடிப்படையிலானது என்று மட்டும் கருத முடியாது.அரசியல் ரீதியாகத் தலையெடுக்கும் இராணுவ அதிகாரிகளின் ஊடாகவும் கூட அது ஏற்படலாம். ஏற்கனவே மேஜர் ஜெனரல் லக்கி அல்கம, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க போன்ற பிரபலம் மிக்க இராணுவ அதிகாரிகள் அரசியலுக்கு வந்தபோதும் அவர்கள் அதிகாரத்துக்கு வரமுன்னரே மரணத்தைத் தழுவ நேரிட்டது. அதேவேளை இப்போது அரசியலுக்கு வரலாம் என்று பெரிதாக எதிர்பார்க்கப்படுபவர் ஜெனரல் சரத் பொன்சேகா.

ஜெனரல் சரத் பொன்சேகா அத்தகையதொரு இராணுவ ஆட்சியாளராக உருப்பெறுவாரா என்ற கேள்வி இப்போது வலுப்பெற்று வருகிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தை வழிநடத்திய ஜெனரல் சரத் பொன்சேகா, இப்போது சர்ச்சைக்குரிய மனிதராக மாறிவிட்டார். போர் முடிவுக்கு வந்த பின்னர் அவரது நிர்க்கதி நிலையும், அவருக்கும் அரசாங்க உயர்மட்டத்துக்கும் இருந்து வரும் சீரற்ற உறவும் இந்த சர்ச்சகைளை வலுப்பெற வைத்திருக்கின்றன.புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் குடும்பத்தில் இருந்து பல்வேறு நெருக்குதல்களை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.இதற்குக் காரணம் அவர் அரசியலில் இறங்கி விடலாம் என்ற அச்சம் தான்.
ராஜபக்ஸ குடும்பம் அரசியலில் உறுதியாகக் கால் பதித்திருக்கும் நிலையில், ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் இறங்கினால் அது அவர்களுக்கு ஆபத்தாகவே அமைய வாய்ப்புகள் உள்ளன. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கமே புலிகளுக்கு எதிரான போரை நடத்தியது என்றாலும்- அதை திட்டமிட்டு வழிநடத்தியவர் ஜெனரல் சரத் பொன்சேகா தான். எனவே சிங்கள மக்களின் ஆதரவும்- பேரினவாத சக்திகளின் ஆதரவும் எப்போதும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கே இருக்கும்.

மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தவரையில் தேர்தல் அரசியலுக்காக தமிழ்மக்களின் பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது வழவழப்பான கருத்துக்களைத் தெரிவித்து வருகறார்.ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகாவோ, தமிழருக்கு என்ன பிரச்சினை- எதற்காக அரசியல் தீர்வு- தனியான அதிகாரப்பகிர்வு எதற்கு என்று கேட்பவர். எனவே பேரினவாத சக்திகளுக்கு தலைமையேற்கக் கூடிய தகுதி படைத்தவராக இவரே கருதப்பட வாய்ப்புகள் உள்ளன.இது தான் மகிந்தவுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இருக்கின்ற அச்சுறுத்தல்.

இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது.உண்மையில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியானது அதிகாரங்களைக் கொண்டதொன்று.ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதிலேயே குறியாக இருந்து வருகிறார் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ. பாதுகாப்பு அமைச்சிலும் சரி, அரசாங்க மட்டத்திலும் சரி- ஜெனரல் சரத் பொன்சேகா தனிபட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியாதளவுக்கு கோத்தாபய தடைகளை ஏற்படுத்தி வருகிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் நீண்டகாலமாகவே கசப்புணர்வுகள் இருந்து வருகின்றன.

போர் நடந்த வந்த காலகட்டத்திலும் அவ்வப்போது இவர்களுக்கு இடையில் இத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தன. ஆனாலும் போரை வெற்றி கொள்வது என்ற பொதுவான கொள்கை ஒன்றில் இயங்கியதால் இருவரும் நெகிழவுப் போக்கைக் கடைப்பிடித்தனர்.இதனால் பிரச்சினைகள் பெரியளவில் வெடிக்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட பின்னரே, தான் ஒதுக்கப்பட்டு விட்டதாக உணர ஆரம்பித்தார் ஜெனரல் சரத் பொன்சேகா.

இராணுவத்தின் 60வது ஆண்டு நிறைவு வரை இராணுவத் தளபதி பதவியில் இருப்பதற்கே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விரும்பியிருந்தார். எனினும் இராணுவத் தளபதியை விட அதிகாரம் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவி கொடுப்பதாகக் கூறி அவரைச் சமாதானப்படுத்தியிருந்தது அரசாங்கம். முப்படைகளுக்கும் தலைமை தாங்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவி கொடுக்கப்பட்டாலும்- அந்த அதிகாரங்களைப் பிரயோகிக்க முடியாதவாறு கோத்தாபய ராஜபக்ஸ தடையாக இருந்து வருகிறார்.

இந்தத் தருணத்தில் தான் ஜெனரல் சரத் பொன்சேகாவை தனது கைக்குள் போட எத்தனித்தது ஜேவிபி.அவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்ற யோசனையை முன்வைத்தது. உண்மையில் மகிந்த ராஜபக்ஸவை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சிகளில் வலுவான வேட்பாளர் யாரும் இல்லை. எனவே ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தினால் அவருக்குக் கடும் போட்டியாக அமைவார் என்று ஜேவிபி கருதியது.

ஒரு கட்டத்தில் ஐதேகவும் கூட அவருக்கு ஆதரவு வழங்க இணங்கியது. இதுபற்றி ரணில் விக்கிரமசிங்கவின் தூதுவர் ஒருவர் ஜெனரல் சரத் பொன்சேகாவைச் சந்தித்து பேச்சு நடத்தியதாகவும் தெரிகிறது.அதேவேளை, பல்வேறு அரசியல் தலைவர்களும் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குச் சம்மதிக்குமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குத் தூது அனுப்பியிருந்தனர்.ஆனால், ஜெனரல் சரத் பொன்சேகா மறுப்புத் தெரிவித்திருகந்தார்.தான் ஒருபோதும் அரசியலுக்குள் வர விரும்பவில்லை என்று அவர் கூறியிருந்தாலும்- அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அவரது நிலைப்பாட்டின் மீதான உறுதித்தன்மையைப் பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவைப் பொறுத்தவரையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவர் நேரடியாக மோதவில்லை.ஆனால் ராஜபக்ஸ சகோதரர்;களில் இளையவரான கோத்தாபயவுக்கு அவர் பிரதான எதிரியாகியிருக்கிறார்.ஜெனரல் சரத் பொன்சேகாவை எப்படியெல்லாம் இரண்டாம் நிலைக்குத் தள்ள முடியுமோ அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் கோத்தாபய. இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குப் பெரும் கடுப்பை ஏற்படுதியிருப்பினும், அவர் நிதானத்தைக் கடைப்பிடித்து வருகிறார்.

கடந்த மாதம் 25ம் திகதி ஜெனரல் சரத் பொன்சேகா ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியை விட்டு விலக முடிவு செய்திருந்தார். இதுபற்றி மகாநாயக்க தேரர்களிடம் கூறி ஆசி வேண்டிய போது அவர்கள் தான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆறுதல் கூறி சமாதானபடுத்தி அனுப்பி வைத்திருந்தனர்.இதுபற்றி ஜனாதிபதி மகிந்தவுடன் பேசிய மகாநாயக்கர்கள், ஜெனரல் சரத் பொன்சேகாவைத் திருப்திப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுமாறும் ஆலோசனை கூறியுள்ளனர்.அதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வளவு காலத்துக்கு இப்படி அடங்கியிருப்பார் என்பது கேள்வியே.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் மகிந்தவின் சகோதரர்களுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் இந்த நிழல் யுத்தத்தின் போக்கு சிங்களக் கடும்கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த இரண்டு தரப்புகளும் இணைந்திருந்தால் தான் சிங்களப் பேரினவாதம் வலுவாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.இதனால் மகி;ந்தவுக்கு அவர்கள் பல்வேறு ஆலோசனைகளைக் கூறி, ஜெனரல் சரத் பொன்சேகாவை சமாதானப்படுத்துமாறு கோரி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் வாயை அடைப்பதற்காக, அவருக்கு புதிய புதிய கௌரவப் பதவிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

களனி ரஜமகா விஹாரையின் தொண்டர் சபையின் உபதலைவராக நியமிக்கப்பட்டார் அவர்.அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ரணவிறு சேவா அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சின் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.இந்தப் பதவியை ஏற்காததால்- இப்போது அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.இப்படி சலுகைகள் மற்றும் பதவிகள் மூலம் ஜெனரல் சரத் பொன்சேகாவை அடக்கி வைக்க அரசாங்கம் இன்னொரு புறத்தில் முயற்சித்து வருகிறது.

இவையெல்லாம் எவ்வளவு காலத்துக்கு ஜெனரல் சரத் பொன்சேகாவின் நிலைப்பாட்டை மாற்றமடையாமல் வைத்திருக்கும் என்பது தெரியவில்லை. அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை அரசியலுக்குள் தள்ளிவிடும் வகையில் தான் மகிந்த சகோதர்களின் போக்கு அமைந்திருக்கிறது.இதனால் ஒரு கட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலுக்குள் பிரவேசிக்கலாம் என்றே கருதப்படுகிறது. அப்படி அவர் அரசியலுக்குள் இறங்குவதற்கு ஒரு தளம் தேவை. அது ஜேவிபியாக இருக்க முடியாது.

ஏனென்றால் ஒரு காலத்தில் ஜேவிபியின் கிளர்ச்சியை அடக்குவதில் முன்னின்று விட்டு. அதனுடன் இணைந்து கொள்வதுவது ஜெனரல் சரத் பொன்சேகாவின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கி விடும்.எனவே அதை அவர் முடிந்த வரைக்கும் தவிர்ப்பார்.அதேவேளை ஐதேகவில் அவர் இணைவாரா என்பதும் சந்தேகம் தான். காரணம் ஜெனரல் சரத் பொன்சேகா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். இவரது தந்தை அம்பலாங்கொடவில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகர்.எனவே அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐதேகவுடன் இணைவாரா என்பது சந்தேகமே.

வேறு கட்சிகளில் இணைந்து அவரால் முன்னுக்கு வரவும் முடியாது- அந்தக் கட்சிகளை வளர்க்கவும் முடியாது.இதனால் ஜனாதிபதி தேர்தலில் அவர் சுயேட்சையாகவோ எதிர்கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவுடன் போட்டியிடும் பொதுவேட்பாளராகவோ களமிறங்க முனையலாம்.இந்தக் கட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவைப் பொதுவேட்பாளராகக் களமிறக்க ஐதேகவும், ஜேவிபியும் தயாராகவே இருப்பது அவரது பெரும் பலம்.அதேவேளை பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தினால் இப்போது ஐதேக உருவாக்கி வரும் புதிய கூட்டணிக்கு ஆபத்து ஏற்படவும் கூடும்.குறிப்பாக மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்குமா என்பது சந்தேகமே.

ஐதேகவைப் பொறுத்தவரையில் மகிந்தவுக்கு எதிராக உள்ள சிறுபான்மை மக்களின் வாக்குகளையே பெரிதும் நம்பியிருந்தாலும், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்காக சிறுபான்மையினரின் வாக்குகளையெல்லாம் தியாகம் செய்யவும் அது தயாராகி விட்டது. ஒரு பேயை விரட்ட, இன்னொரு பேயைக் கொண்டு வருவதற்கு தமிழ்மக்கள் ஆதரவு கொடுக்க மாட்டார்கள். எனவே ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் போன்சேகா களமிறங்கினால் மகிந்தவுடன் நிச்சயமாக சிங்களப் பேரினவாத வாக்குகளுக்காகவே அவர் மோத வேண்டியிருக்கும்.இரண்டு பேராலும் தமிழ்மக்களின் வாக்குகளைப் பெற முடியாது.அதேவேளை ஜெனரல் சரத் போன்சேகா அரசியலுக்குள் பிரவேசித்தாலும் சரி- ஆட்சிக்கு வந்தாலும் சரி- அது தமிழ் மக்களுக்குப் பெரும் ஆபத்தாகவே அமையும்.

“போர் முடிந்து விட்டது- புலிகள் அழிந்து விட்டார்கள்- இனியென்ன அரசியல் தீர்வு?” என்று கேள்வி எழுப்பும் அவர் போன்றவர்கள் ஆட்சிக்கு வந்தால்- வரலாற்றில் இல்லாதளவுக்கு தமிழ்மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.அவரது இந்தக் கொள்கையே சிங்களப் பேரினவாத வாக்குகளைக் குவித்து விடும். இப்போதைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும்- இதுவே தமிழருக்கு எதிரான பேரினவாத எழுச்சியொன்றின் தோற்றுவாயாக அமைந்துவிடும் ஆபத்தும் இருப்பதை மறந்து விடமுடியாது.

நன்றி: தமிழ்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*