TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்களக் குடியேற்றமே சிறிலங்க அரசின் திட்டம்!

sinஈழத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க அரசு தொடுத்த இனப் படுகொலைப் போரினால் தங்கள் வாழ்விடங்களில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்துவதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த இடங்களில் புதைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற வேண்டியுள்ளது என்று தொடர்ந்து சிறிலங்க அரசு கூறிவருகிறது.

கொழும்புவில் நேற்று நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, பொது மக்கள் வசித்த பகுதிகளிலும், அவர்கள் தொழில் செய்துவந்த இடங்களிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளை அகற்றியப் பிறகே மீள் குடியமர்த்தம் சாத்தியமாகும் என்றும், அதற்கு உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறியுள்ளார். சிறிலங்க அரச தலைவரின் இந்தப் பேச்சை படிக்கும் எவரும், அவர் கூறுவது அனைத்தும் உண்மைதானோ என்று நம்பிவிடக்கூடும். போரினால் இடம் பெயர்ந்த 3 இலட்சம் தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்து, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு தந்து, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5 லிட்டர் குடி நீர் மட்டுமே கொடுத்து,

போதுமான கழிப்பறை வசதி கூட செய்துத் தராமல், அதற்குக் கூட அவர்கள் வரிசையில் நிற்க வைத்து கடந்த 5 மாதங்களாக வதைத்துவரும் ஒரு அரச தலைவரின் பேச்சு இது என்பதைப் புரிந்துகொண்டால் இவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதில் எந்தச் சந்தேகமும் எழாது. இந்தக் கண்ணி வெடிக் கதையை போர் முடிந்துவிட்டதாக சிறிலங்க இராணுவம் அறிவித்த நாள் முதல் அதிபர் ராஜபக்ச பன்னாட்டுச் சமூகத்திற்குக் கூறி வருகிறார். “தமிழர்களும் எம்மக்கள் அல்லவா? அவர்களின் உயிருக்கு நான்தானே பொறுப்பேற்கவேண்டும்” என்று மிகுந்த கரிசனத்துடன் முழங்கி, அவர்கள் வாழ்ந்த வந்த பகுதிகளில் மீண்டும் அவர்களை குடியேற்றுவது இல்லை என்ற இரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய கண்ணி வெடிக் கதையை மறுப்பவர்கள் எழுப்பும் கேள்விகள் இதுதான்:

1. போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்த, தொழில் செய்த பூமியெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்ட்டுள்ளன என்று அதிபர் ராஜபக்ச கூறுவது உண்மையானால், அந்தப் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றுதானே அந்த மக்கள் புலிகளுடன் சென்று கடைசியாக தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் வரை சென்றீர்கள்? அப்பொழுதெல்லாம் அந்தக் கண்ணி வெடிகள் ஏன் வெடிக்கவில்லை?

2. இறுதிக் கட்டமாக போர் நடந்த போது பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை நடக்க வைத்துத்தானே இந்த முகாம்களுக்கு கூட்டி வந்தீர்கள் அப்போதும் கண்ணி வெடிகள் வெடிக்கவில்லையா? பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து முகாம்களுக்கு அழைத்துவரும் வரை கண்ணி வெடி வெடித்து உயிரிழந்தார்கள் என்று எந்தச் செய்தியையும் சிறிலங்கத் தரப்பு கூறவில்லையே? அப்பொழுதெல்லாம் வெடிக்காத கண்ணி வெடிகள் இதற்கு மேல் வெடிக்குமா?

பன்னாட்டுச் சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இதுவரை சிறிலங்க அரசு பதில் சொல்லவில்லை. கண்ணி வெடிகளை அகற்ற தாங்கள் உதவிடத் தயார் என்று மேற்கத்திய நாடுகள் முன்வந்ததையும் சிறிலங்க அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. சிறிலங்க அரசு சொல்லும் இந்தக் கண்ணி வெடிக் கதையை ஏற்றுக் கொண்டு ஆமாம் போடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே! உலகின் மற்ற நாடுகள் எதுவும் இந்தக் கதையை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த மாத துவக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான துணைக் குழுவிற்கு வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த பன்னாட்டுச் சிக்கல் ஆய்வுக் குழுவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக், முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு கண்ணி வெடிகள் இருப்பதே காரணம் என்று சிறிலங்க அரசு கூறியதை ‘நான் சென்ஸ்’ என்று வர்ணித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த, வாழும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் முகாமில் உள்ள மக்களுக்கு உறவினர்களாக உள்ளவர்கள் வசித்து வருகின்றனர். போர் நடந்த பகுதியில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், தமிழர்கள் வாழும் மற்ற நகரங்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் அவர்களை அனுப்பி வைக்கலாமே? என்று ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படிப்பட்ட கேள்விக்களுக்கு இதுவரை சிறிலங்க அரசு பதிலளிக்கவில்லை என்பதலிருந்தே அது பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என்ற உண்மை புலனாகிறது.

சிங்களக் குடியேற்றமே ராஜபக்ச அரசின் நோக்கம்!

எனவே தமிழர்களின் உயிரோ அல்லது அவர்களை மறுகுடியமர்த்தம் செய்வதோ அல்லது அவர்களை கெளரவமாக நடத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வோ ராஜபக்ச அரசின் நோக்கமல்ல. முகாமில் அடைப்பட்டுள்ள மக்கள் வாழ்ந்த அவர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களர்களைக் குடியேற்றி, அதன் மூலம் ஈழத் தமிழர்களின் தாயகம் என்ற ஒன்று இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே – ராஜபக்ச மட்டுமல்ல – சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசின், சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தினுடைய வேறுபாடற்ற நோக்கமாகும். இதனை ஆதரிக்கிறது இந்தியா.ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வரும் பாரம்பரிய பூமியில் அவர்களை ஒரு தனித்த மொழியினமாக வாழ அனுமதிப்பது தனி ஈழ நாட்டின் அமைவை நோக்கியே கொண்டு செல்லும், அப்பகுதியின் தமிழின தனித்துவத்தை மாற்றிவிட்டால் அவர்களின் ஈழ விடுதலைக் கனவை சிதைத்துவிடலாம் என்பது இவர்களின் திட்டம்.

இதனை நாம் கற்பனையிலிருந்து சொல்லவில்லை. தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களர்கள் குடியேறுவதில் (குடியேற்றுவதில்) எந்தத் தவறும் இல்லை என்று போர் முடிந்த உடனேயே அதிபர் ராஜபக்சவின் ஆலோசகரும் அவருடைய சகோதருமான பசில் ராஜபக்ச கூறினார். இப்பொழுதும் அதை வலியுறுத்தி வருகிறார். தமிழர்கள் வாழ்ந்து வந்த மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை செய்யும் முனைப்பில் சிறிலங்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியின் பேரை மாற்றவும் முடிவெடுத்துள்ளது. இந்த மணலாற்றுப் பகுதியில்தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்தப் போரை வலிந்து துவக்கியது சிறிலங்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் இயங்கிவந்த கிளிநொச்சியிலும், முல்லைத் தீவுப் பகுதியிலும் சிறிலங்க இராணுவத்தின் உயர் பாதுகாப்பு மண்டலங்களை (High Security Zone) ஏற்படுத்தி, சிறிலங்க இராணுவப் படைகளை நிரந்தரமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது.

இதற்கான முயற்சிகளில் சிறிலங்க அரசு ஈடுபட்டுள்ளது, இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புடன். எப்படி யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி பல்லாயிரக்கனக்கான இராணுவத்தினரை நிரந்தரமாக நிலை நிறுத்தியுள்ளதோ அதேபோன்று தமிழர்களின் பூர்வீக பூமி முழுமையிலும் இராணுவத்தை நிலைநிறுத்தி தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த ராஜபக்ச அரசு முயன்று வருகிறது. அதற்காகத்தான் இராணுவ பலத்தை பெருக்க வேண்டும் என்கிறார்! இதற்கான கட்டமைப்புப் பணிகளை பன்னாட்டுச் சமூகம் கண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அங்கெல்லாம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ச அரசு பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறது.

வன்னி முகாமில் உள்ள இரண்டரை லட்சம் மக்களை அது விடுவிக்கப் போகிறதா என்ற கேள்விக்கு பதில்:

வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு மற்ற இடங்களில் உள்ள முகாம்களில் கொண்டு சென்று அடைப்பார்கள் என்பதே. அதுதான் நேற்று விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2,200 (2,400 பேர் என்று நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்) பேரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள இடைத் தங்கல் முகாமில் வைத்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த இடத்தை அரசு முகவர் கண்டுபிடித்தப் பிறகு (!) அவர்கள் அங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்று சிறிலங்க அரசின் மறுவாழ்வு அமைச்சகத்தின் செயலர் யூ.எல்.எம். ஹால்தீன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த இடம் எதுவென்றோ அல்லது தங்கள் வீடு எங்குள்ளது என்றோ தெரியாதா? இதுதான் இனியும் நடக்கப்போகிறது. உலக நாடுகளும், ஐ.நா. விழத்தெழுந்து அம்மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் சென்று குடியேற சிறிலங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் தர வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால், ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் பரிந்துரைத்ததுபோல, சிறிலங்க அரசிற்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ள ஐ.எம்.எஃப் கடனின் அடுத்த தவணையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நன்றி: வெப்டுனியா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*