TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்னி முகாமில் இருந்து யாழ் முகாமிற்கு….

tamil-refugees-cpதனது தலைமையிலான தமிழக நாடாளுமன்றக் குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று வன்னி முகாம்களில் இருந்து 2,400 ஈழத் தமிழர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 அளித்து சிறிலங்க அரசு விடுவித்துள்ளது என்றும் டி.ஆர்.பாலு கூறிய செய்தி இன்று காலை நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.

இதே காலை வேளையில் ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்துள்ள ஒரு செய்தியும் கவனத்தில் கொள்ள வேண்டியதாய் உள்ளது. அது செய்தி: “இலங்கைக்கு வந்த தமிழக நாடாளுமன்றக் குழுவினர் இந்தியா திரும்பிய ஒரு நாளிற்குள்ளாகவே வன்னி முகாம்களில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2,200 அகதிகளை சிறிலங்க அரசு விடுவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அவர்கள் வாழ்ந்து வந்த இடங்களை அப்பகுதிக்கான அரசு முகவர் கண்டுபிடிக்கும் வரையில் அவர்கள் அங்குள்ள இடைத்தங்கல் முகாமில் (Internment Camp) வைக்கப்படுவார்கள் என்று மறுவாழ்வு அமைச்சகத்தின் செயலர் யு.எல்.எம். ஹைதீன் கூறியுள்ளார்” என்று அச்செய்தி தெரிவிக்கிறது.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் இலங்கைக்குச் சென்று வந்தது ஒரு நாடகம் என்று எதிர்க்கட்சிகள் வர்ணித்துள்ளன என்று தலைப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பக்கத்தில், வண்ணத்தில் ஒரு பெட்டிச் செய்தியாக இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வன்னி முகாம்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் அதிகமானோரை விடுவித்துள்ளோம் என்று ஏற்கனவே ராஜபக்ச அரசு கூறியபோது, அது குறித்து ஆராய்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள், முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் (தாங்களாக வெளியேறவில்லை!) பல பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டு வேறொரு இடத்தில் தங்க வைக்கப்பட்டதை கண்டுபிடித்து உலகிற்குத் தெரியப்படுத்தினர்.

இவ்வாறு 3,300 பேர் செப்டம்பர் மாத இறுதியில் வன்னி முகாம்களில் இருந்து கொண்டு செல்லப்பட்டு பல இடங்களில், எவ்வித வசதியுமற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை பன்னாட்டு சிக்கல் ஆய்வுக் குழுவின் (International Crisis Group) இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான துணைக் குழுவிற்கு அளித்த அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட செய்தியைப் பார்க்கும்போது இதுவும் அப்படிப்பட்ட முகாம் இடமாற்றமாகத்தான் உள்ளதே தவிர அவர்கள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டதாகக் கருதுவதற்கு இடமளிக்கவில்லை.தமிழர்கள் பிரச்சனையில் எல்லா விதமான கபட நாடகங்களையும் சிறிலங்க அரசு அரங்கேற்றி பன்னாட்டு சமூகத்தை ஏமாற்றி வருகிறது. இந்த நாடகத்தில் தமிழகத்தில் இருந்துச் சென்ற நாடாளுமன்றக் குழுவும் ஏமாற்றிபட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி: வெப்டுனியா

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*