TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஐக்கிய நாடுகள் சபை தமிழருக்கு சொல்லும் செய்தி என்ன?

moonஇரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து 1945ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, இதனது கட்டமைப்புக்களைப் பாதுகாப்பு சபை, பொதுச்சபை, மனித உரிமை ஆணைக்குழு, (தற்பொழுது மனித உரிமை சபை), அத்துடன் முன்னைய உப-மனித உரிமை ஆணைக்குழு ஆகியவை,

உலகில் வேறுபட்ட சுயநிர்ணய, உரிமை போராட்டங்களுக்கு, கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கும் விடை கண்டுள்ளன என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சரித்திரம். இந்த அடிப்படையில், பல சகாப்தங்களாக இலங்கைத் தீவில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிவரும் தமிழீழ மக்கள், தம்மீது சிறீலங்கா அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு, நிச்சயம் ஐக்கிய நாடுகள் சபை ஏதும் செய்யும் என எதிர்பார்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை நத்தை வேகத்தில் செல்வதைக் கண்டு ஆச்சரியமடையும், கோபம் கொள்ளும் ஈழத்தமிழர் ஆயிரம்.

இவர்களுடன் வேறு பல்இன மக்களும் இவ்வுணர்வை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆகையால் இவ்விடயத்தை சற்று ஆழமாக ஆராய்வது மிக அவசியம். முதலில் ஐக்கிய நாடுகள் சபை என்றால் என்ன? மிக சுருக்கமாக, ஐக்கிய + நாடுகள் சபை. இவ்வுலக மன்றம், தனது அங்கத்துவ நாடுகளின் ஐக்கியத்தையே முதற்கண்ணாக கொண்டுள்ளதுடன், இவ் மன்றம் அங்கத்துவ நாடுகளின் பெரும்பான்மையான ஆதரவின்றி எதையும் முன்னெடுக்க மாட்டார்கள். விசேடமாக பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர அங்கத்தவர்களின் ஒருவராவது எதிர்த்தால் அவ்விடயம், நிட்சயம் ஐ.நா.வினால் மேற்கொள்ளப்படமாட்டாது. இதற்கு பல உதாரணங்கள் உலகில் உண்டு.

மனித உரிமை சபை

இம் மனித உரிமைச் சபையை சில வருடங்களுக்கு முன்பு, மனித உரிமை ஆணைக்குழுவென அழைப்பார்கள். கடந்த ஜெனீவாவில் நடந்து முடிந்துள்ள, இம் மனித உரிமைச் சபையின் 12வது கூட்டத்தொடரில் முன்பு என்றுமில்லாதவாறு, கூடுதலான நாடுகள் தமிழீழ மக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் – இடப்பெயர்வு, கைது, கொலை, காணமல் போதல், பாலியல் வன்முறை, சிறுவர்களின் உரிமை போன்று பல விடயங்களில் குரல் கொடுத்துள்ளனர். விசேடமாக அமெரிக்கா இச் சபைக்கு முதல் முதலாக அங்கத்துவம் பெற்றதை தொடர்ந்து – அமெரிக்க, ஐப்பான், சுலோவெனியா போன்று பல நாடுகள் சிறீலங்கா விடயத்தில் கடுமையாக குரல் கொடுத்தன.ஆனால் ஆசியாவின் பிராந்திய வல்லரசாக விளங்க விரும்பும் இந்தியா, ஈழத்தமிழர் பற்றி இச்சபையில் மௌனமாக இருப்பது பெரும் வியப்பாகவுள்ளது.இதேவேளை, சிறீலங்காவின் மனித உரிமை மீறல்கள் பற்றி உரையாற்றிய அத்தனை நாடுகளும், மனித உரிமை சட்டங்களின் அங்கமான சுயநிர்ணய உரிமை,

அதாவது தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி யாரும் அக்கறை கொள்வாதாகவோ, குரல் கொடுப்பதாகவோ, காணவில்லை, இது பல சகாப்தங்களாக நடைபெறும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்திற்கு கிடைத்த பெரும் பின்னடைவே! இவ்விடயத்தில் சிறீலங்காவினால் ஊதியத்திற்காக அமர்த்தப்பட்டுள்ள சிங்கள கல்விமான்கள் புத்திஜீவிகளின் பங்கு முக்கியமானது. ஜனதிபதி ராஜபக்சா ஆட்சி பீடம் ஏறிய பின்னர், உலகில் பல பாகங்களில் வாழும் சிங்களப் புத்திஜீவிகள், கல்விமான்கள் சிறீலங்காவின் பரப்புரை வேலைகளை மேற்கொள்வதற்கென சர்வதேச ரீதியாக அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக, யுத்தமெனக் கூறியவர்கள், தற்பொழுது சிறீலங்காவின் தமிழ் மக்கள் சகல அடிப்படை அரசியல் உரிமைகளை கொண்டுள்ளார்கள். இதனால் இவர்களது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் அர்த்தமற்றது எனக் கூறிவருகிறார்கள்.

சுயநிர்ணய உரிமையும் ஐ.நாவும்.

தற்போதைய ஐ.நா கட்டமைப்பில், சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவதற்கென தனியான நிகழ்ச்சி நிரல், முன்பு மனித உரிமை ஆணைக்குழு அத்துடன் உப ஆணைக்குழுவிலிருந்தது போல் இல்லை. இது ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் கெட்டித்தனங்களில் ஒன்று விசேடமாக ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களான-அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ், சீனா, ரஷ்யா, இவர்களுடன் இணைந்து ஐரோப்பாவில் ஸ்பெயின், இத்தாலி, ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்று வேறுபட்ட நாடுகளின் நீண்ட சரித்திரத்தை கொண்ட நசுக்கப்படும் இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருவதும், இவற்றை சர்வதேச ரீதியாக அரசுகள் நசுக்குவதுமே காரணிகளாக அமைகிறது. இந்த அடிப்படையில் தமிழீழ மக்களின் சயநிர்ணய போராட்டம் எப்படியாக எதிர்காலத்தில் நகரவுள்ளது என்பது கேள்விக்குறி.

தமிழீழப் போரட்டம்

இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்கள், தமக்கென ஒர் மொழி, கலை கலாச்சாரம், அத்துடன் வடக்கு, கிழக்கில் தமக்கென ஒரு தாயகம் போன்றவற்றுடன் காலனித்துவ ஆட்சியாளர் இத்தீவுக்கு வரும் பொழுதும் வந்த பின்னரும் தமக்கான தனி ஆட்சியை, அரசை கொண்டவர்கள். இத் தமிழ் ஆட்சி, 1833ம் பிரித்தானியா காலானித்துவ ஆட்சிக் காலத்திலேயே பறிக்கப்பட்டது என்பது சரித்திரம். இந்த அடிப்படையில் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக சர்வதேச சட்டம் ஏற்கிறது. ஆகையால் தமிழீழ மக்கள், ஒரு சிறுபான்மை இனம் அல்ல.உண்மையில்,ஜனதிபதி ராஜபக்சாவின் அண்மைக்கால உரைகளில்,

சிறுபான்மை இனமொன்றே சிறீலங்காவில் இல்லையென்று கூறுவது சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை இனமான மலே, பறங்கியர், முஸ்லீம்களுக்கு கிடைத்த அதிர்ச்சியே தவிர, இது தேசிய இனமான ஈழத் தமிழருக்கு அல்ல. உண்மை என்னவெனில் சிறீலங்காவின் ஆட்சியாளர்களும் தமிழீழ மக்களும் எந்தவித அரசியல் உரிமைகளையும் கொடுக்கமாட்டார்களென்பது திடமானது. இந்த அடிப்படையில் வேறுபட்ட சிங்கள இனவாத கட்சிகள், ஈழத்தமிழர், தமிழ் நாட்டுக்கு சென்று குடியேறவேண்டும் என்கிறர்கள். இந்தியாவில் ஏற்கனவே பெரும் தொகையான ஈழத்தமிழர்கள் அகதிகளாகவுள்ளனர். இந்த ரீதியில், இந்தியா அரசுடன் சிறீலங்கா அரசு எதற்காக கைகோர்த்து நின்று ஈழத்தமிழருக்கு எதிராகச் செயற்படவேண்டும்? கச்சதீவுப் பிரச்சினை ஒரு புறம், கைதாகும் மீனவர் பிரச்சினை மறுபுறமிருக்கிறது.

சிறீலங்கா இந்தியாவை நம்புகிறதா?

சிறீலங்காவிற்குத் தேவையான இராணுவத் தளபடங்கள், ஆலோசனைகள், அத்துடன் மனித வலுவும் அண்மைக் காலங்களில் இந்தியாவினால் கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள இவ்வேளையில், எதற்காக சிறீலங்கா சீனாவிடம் செல்கிறது? இது ஒரு நீண்ட சரித்திரம்.இந்தியாவில், ஓர் இந்துவாகப் பிறந்த கௌதம புத்தார், புத்த சமையத்தை இந்தியாவிலையே தோற்றுவித்தார். இன்று குறிப்பாக ஆசியாவில் சீனா, ஐப்பான், சீறிலங்காவில் விருச்சம் பெற்றிருக்கும் இதே புத்த சமயத்திற்கு, இந்தியாவில் இடமேயில்லை என்பது சிங்கள பௌத்தவாதிகளின் மனதில் மிக ஆழமாக பதிந்துள்ள ஆத்திரமும் கவலையும். அடுத்து, திருமதி இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைக்கான ஆயுதபோராட்டம் அவ்வேளையில் இந்தியாவின் தயவுடனே உருப்பெற்றது என்பது சிங்கள பௌத்த ஆட்சியாளரின் மனதில் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டள்ளது.

இந்த அடிப்படையில், சோனையன் குடும்பி சும்மா ஆடாது என்பதுபோல், இந்தியா உண்மையான நோக்கத்தை யாரும் அறியமுடியாமல் உள்ளது. ஒன்றுமட்டும் உண்மை. இந்தியா தமிழீழ விடுதலைப் போராட்டத்தை மீண்டும் வலுவடைய செய்ய முடியும். அனால் இந்தியா விரும்பும் தீர்வை தமிழீழ மக்கள் ஏற்பார்களா? அல்லது ஏற்கனவே தமிழீழ மக்களினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களும் இந்தியா மறைமுமாகவோ அல்லது நேரடியாகவோ துணைபுரியுமா? இவ்வேளையில், கடந்த ஆண்டு நவம்பர் மாத மாவீரர் உரையில் தேசியத் தலைவர் பிரபாகரன் இந்தியா பற்றி கூறிய வார்த்தை நாம் நினைவு கூறவேண்டும் – ‘நாம் அறுந்து போன இந்தியாவுடனான உறவை புதிப்பிக்க விரும்புகிறோம்’ எனக் கூறியுள்ளார். சிறிலங்காவின் நிலைப்பாட்டைத் தெளிவாக தெரிந்த தமிழீழ மக்களும், இந்தியா கொள்கை வகுப்பாளர்களும், தாம் தொடர்ந்து நிரந்தரப் பகைவர்களாகத் திகழ்வதா, அல்லது இராஐதந்திர ரீதியாக விடயங்களை அணுகுவதா என முடிவு செய்யும் காலம் இதுதான்.

ச.வி.கிருபாகரன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*