TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை பகுதி 04

Mavilaru thodarஇயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளால். கிழக்கிலும், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளிலும் சிறப்புற மேள்கொள்ளப்படுகின்றன.

இதற்கான நிர்வாக அலகுகள் திறம்படச் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளின் அனைத்துக் கட்டமைப்புக்களும் மக்கள் மீள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலக நாடுகளிடமும், புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப் புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள். இதேவேளை, சமாதான செயலகத்தால் சுனாமி மீள்கட்டுமான செயற்குழு உருவாக்கப்படுகின்றது. இதனுடாக உலக நாடுகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. இந்த சுனாமியினால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையாக பொருட்கள் வன்னிக்கு எடுத்துவரப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளுக்குத் தேவையான பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

குறிப்பாக பெறுமதிமிக்க இலத்திரனியல் பொருட்கள், தொலைத் தொடர்பு பொருட்கள் ஏன் விமான உதிரிப் பாகங்கள்கூட கொள்வனவு செய்து இறக்கும்போது பிடிபட்டிருந்த செய்தியும் அன்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்திற்கும், விடுதலைப் புலிகள் தமக்குத் தேவையான பொருட்களை தருவித்துக் கொள்கின்றார்கள். இவற்றில் நீண்டகாலம் வைத்திருக்கக்கூடிய மருந்துப் பொருட்கள், சத்திரசிகிச்சை கூடங்களுக்குத் தேவையான பொருட்கள் முதன்மையாக அடங்குகின்றது. அதற்கான இடங்கள் இனம் காணப்பட்டு மருத்துவப்பிரிவு மருத்துவமனைகளை அங்கு அமைக்கின்றார்கள். இதனிடையே திருகோணமலையில் வெளிநாட்டு மருத்துவர்கள் அணிகள் வந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். இதுவொரு புலனாய்வு நடவடிக்கை என்று தெரிந்திருந்தபோதும், மக்களுக்கு மருத்து சேவை அவசியமாகத் தேவைப்பட்டதால் விடுதலைப் புலிகள் இதுதொடர்பான அவதானத்துடன் அவர்களின் சேவைக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள்.

எனினும், ஒரு சில தமிழ் மக்கள் மூலமே தங்களுக்கு தேவையான புலனாய்வுத் தகவல்களை அவர்கள் திரட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதைப் பின்னர் அறியமுடிந்தது. இவர்களது நடவடிக்கை இவ்வாறு இருக்கையில், விடுதலைப் புலிகளும் திருமலை மாவட்டத்தில் இருந்துகொண்டு இலங்கையின் தென்பகுதிக்கான நடவடிக்கைகள் விடுதலைப் புலிகள் புலனாய்வு பிரிவினரால் திட்டமிடப்படுகின்றது. இலங்கையின் தலைநகரான கொழும்பு மற்றும் சுற்றுப்புற இடங்களில் தாக்குதல் நடாத்துவது இராணுவ அரசியலில் முதன்மையானவர்களை இனம்கண்டு அவர்களின் இருப்பிடங்களைக் கண்டறியும் ஒரு பிரிவும், இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முதன்மையானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு பிரிவு, அதிலும் கரும்புலி அணிகள் இவற்றிற்கெல்லாம் திருகோணமலை ஊடாகவே வெடி பொருட்களைக் கடத்தும் அணிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதற்கிடையே வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், கிழக்கிலும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை அதாவது ஊடுருவல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் படையினருக்கு பல்வேறு தகவல்களை வழங்கி வந்தவரும் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் தடைக்கல்லாக இருந்தவருமான புளொட் மோகன் என அழைக்கப்படும் கந்தையா யோகராசா என்பவர் கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். சிறீலங்காவின் வன்னி மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட பல ஊடுருவித் தாக்குதல்களுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கும் பின்னால் மட்டுமல்ல கருணா விடுதலைப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து இயக்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டபோது கருணாவிற்கு பாதுக்காப்பு அளிப்பது உட்பட கருணாவின் பல நடவடிக்கைகளுக்கு பின்னே இந்தப் புளொட் மோகனே இருந்ததால்,

கொழும்பின் உச்ச பாதுகாப்பான பகுதியில் வைத்து 31.07.2004 அன்று பிஸ்ரல் குழுவினர் அவரைச் சுட்டுக் கொன்றிருந்தனர். எனினும், அதன் பின்னரும் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் சில மாதங்களில் ஏற்பட்ட சுனாமி காரணமாக சற்று ஓய்ந்திருந்தது. எனினும் அது அதிக காலம் நீடிக்கவில்லை. மீண்டும் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்களினதும், ஒட்டுக் குழுக்களினதும் நடவடிக்கைகள் தொடரத் தொடங்கியதும், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் மீண்டும் பிஸ்ரல் குழுவினர் இறங்கினார்கள். இதன் ஒரு கட்டத்தில் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமரும் 2005 ஓகஸ்ட் 12ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறான களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு தளமாக, கட்டளைப்பீடமாக திருகோணமலையே விளங்கியது.

இதேவேளை, கடலிலும் கடற் புலிகளிற்கும் சிறீலங்காக் கடற்படைக்கும் இடையில் சில மோதல்கள் நடைபெற்றன. இதன்போது எச்சரிக்கை அறிவிப்பாக போராளிகளால் றோடாப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து மீண்டும் சிறீலங்காக் கடற்படையினரால் கடலில் மீன்பிடிக்க கடுமையான தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. திருகோணமலையில் ஆழ்கடல் சென்று தொழில் செய்ய முடியாத நிலைக்கு கடல் தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இத்துடன் பொருளாதாரத்தடை மக்கள் மீது திணிக்கப்படுகின்றது. பொருட்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. இவ்வாறான பிரச்சனைகளை தளர்த்துமாறு சிறீலங்காப் படையினரிடம் விடுதலைப் புலிகள் தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

அதாவது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மீதான தடையை நீக்குமாறு கேட்கப்படுகின்றது. இதற்கு சம்மதிக்காத சிறீலங்கா அரசு மக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்கின்றார்கள். சிறீலங்கா மீண்டும் போர் ஒன்றை முன்னெடுப்பதற்கு முனைப்புடன் செயற்படுகின்றது என்பதை படையினரின் சமாதான உடன்படிக்கைக்கு எதிரான இந்தச் செயற்பாடுகள் புரிய வைத்தன. சிறீலங்காவின் இந்த போர் முனைப்பை தடுக்கும் பிரகாரம் தொடங்குகின்றது மாவிலாற்றுப் பிரச்சனை. சம்பூர், சேனையூர், ஈச்சிலம்பற்று, புன்னையடி போன்ற விவசாயிகளினதும் இணக்கத்துடன் விடுதலைப் புலிகளால் சிங்கள கிராமத்திற்குச் செல்லும் மாவிலாறு அணை மீது இடைகட்டு கட்டப்பட்டு, ஆற்றுநீர் சிங்களக் குடியேற்றத்திற்கு செல்லாமல் தடுக்கப்பட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் செயற்பாட்டிற்கு விடப்படுகின்றது.

இனித்தான் பிரச்சனை பூதாகரமாகின்றது.

(தொடரும்…)

நன்றி:ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*