TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாலுக்குப் பூனை காவல்

tamilசிறீலங்கா இராணுவத்தின் பிடியிலிருக்கும் சில விடுதலைப் புலிகளின் முக்கியபுள்ளிகள் சிலரை வைத்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு வெறும் அடிப்படை வசதிகளைத் தரக்கூடிய ஆறுதல் நடவடிக்கை மூலம் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ஒரு தீர்வைக் கொண்டுவந்து,

தமிழர்களின் போராட்டத்தின் அடிப்படையையே சிதைக்கும் ஒரு திட்டத்தை அமெரிக்காவிடம் பரிந்துரைத்துள்ளதாக சில செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அமெரிக்கா சென்ற கோத்தபாய ராஜபக்சவும், ரோகித போகல்லாகமவும் அமெரிக்காவில் வைத்து இத்திட்டத்தை வழிமொழிந்துள்ளனர். அமெரிக்காவை நடுநிலைப்படுத்தி கைது செய்து வைத்துள்ள போராளிகளையும் (சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட) இன்னும் முகாம்களுக்குள் மறைந்திருப்பதாகக் கூறிக்கொள்ளப்படும் ஏனைய போராளிகள் சம்பந்தமாக ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இன்னசிற்றி பிரஸ் (Innercity Press) ன் அறிக்கையின்படி இப்படியான திசைதிருப்பல்கள் மூலமும் தனது செல்வாக்கின் மூலமும் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்கக் கொங்கிரஸ் வெளியிடவிருந்த சிறீலங்கா மீதான போர்க்குற்றவியல் அறிக்கையினை வெளியிட விடாது தடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.போர்க்காலத்தில் உயிராபத்திற்குள் நின்று பாரிய சேவை செய்த வைத்தியர்கள் ஐவரையும் அச்சுறுத்தி, தன் வன்முறையை அவர்கள் மீது கட்டவிழ்த்த சிறீலங்கா அரசு, உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை அவர்கள் வாக்குமூலமாக வெளியிட்டபோது இந்த அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

சிறீலங்கா நீதித்துறையின் (?) பேச்சாளரின் அறிக்கையின்படி கைதிகள் தொடர்பான நடைமுறைகள் பற்றி அமெரிக்க அதிகாரிகளோடு கலந்தாலோசிக்க சிறீலங்கா நீதியரசர் மோகன் பீரிஸ் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா செல்வதாகத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ‘நாங்கள் அமெரிக்காவிடமிருந்து சந்தேகக் கைதிகளையும் தீவிரவாதிகளையும் கையாளும் முறையைக் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். முக்கியமாக 9/11 தாக்குதலுக்குப்பிறகு அல்ஹைடா வலையமப்பை அவர்கள் கையாண்ட விதம்பற்றி முக்கியமாகக் கற்க விரும்புகிறோம்’ என்றார். AFP யின் கேள்விகளிற்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியிருந்தார்.

கொழும்பானது ஒரு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்குத் தண்டனை வழங்கத் திட்டமிட்டுள்ளது. இப்படியாகச் சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட ஆண், பெண் என 15,000 பேருக்கு மேல் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.மனித உரிமை மீறல்களையும், தன்மீதான போர்க்குற்றச்சாட்டுகளையும் மறைப்பதற்கு இப்படியான திட்டங்களை முன்வைத்து சர்வதேசத்தை ஏமாற்றும் வேலையில் கொழும்பு அரசாங்கம் பகிரங்கமாக ஈடுபடுகின்றது.இதற்கான அமெரிக்காவின் பதில் இன்னும் பெறப்படவில்லை. ஆனாலும் இப்படியான திட்டங்களுக்கு அமெரிக்கா நிச்சயம் ஆதரவளிக்கும்.

போர்க்குற்றவியல் பிரச்சினையில் இருவரும் ஆளையாள் சளைத்தவர்களல்ல. இவர்களின் இந்த புதிய கூட்டுத் தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது கொழுபம்பின் ஜ.நாவிற்கான பிரதியான பாலித கோகன்ன கூறிய ‘வெற்றியாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை’ என்ற கூற்று இங்கு பிரயோகிக்கப்படுகின்றது. சிறீலங்காவின் போர்க்குற்றங்களைத் தண்டிப்பதை விட்டுவிட்டு மேலும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்து அபிவிருத்தி, புனரமைப்பு என்ற பெயரில் பொருளாதார ஆதரவு வழங்குவதிலேயே சர்வதேசம் முனைப்பாகவுள்ளது. ஓடும் குதிரைமேல் பந்தயம் கட்டுவது போல் தம் இலாப நட்டங்களையே கருத்திற்கொண்டு மனிதாபிமானத்தை மறைத்துக் கொண்டே சர்வதேசம் சிறீலங்காவோடு வியாபாரம் செய்கின்றது.

இந்தக் கொழும்பு ‡ அமெரிக்கக் கூட்டு இந்தியாவின் வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. போர்க்காலத்தில் பிழையாக வழிநடாத்தப்பட்ட இந்திய அரசியல் கெள்கையானது, தனது காலத்தையும் சக்தியையும் சீனாவின் சிறீலங்கா மீதான ஆதிக்கத்தை உடைப்பதிலேயே செலவழித்தது. இப்பொழுது சிறீலங்காவின் புண்ணியத்தில் அமெரிக்காவோடு செலவிட வேண்டியுள்ளது. சிங்களவர்களால் ஆரம்பத்திலிருந்தே வெறுக்கப்பட்ட, இப்போது தமிழர்களாலும் வெறுக்கப்படும் இந்திய அரசு தனது சமூகநலனையும், நற்பெயரையும் மீளக்கட்டியேழுப்புவது மிக்கக் கடினமானது.

அத்தோடு சிறீலங்கா மீதான பொருளாதாரமும் ஒரு தளம்பல் தளத்திலேயே கட்டியெழுப்பப்பட்டுள்ளது. தன் போர்க்குற்றங்களை மறைக்கத் தன்னைவிட பெரிய குற்றவாளியான அமெரிக்காவை, பாலுக்குப் பூனையைக் காவல் வைத்தது போல் தமிழர்கள் நலன் காக்க சிறீலங்கா காவல் வைத்துள்ளது. அமெரிக்காவின் பிரசன்னத்தைச் சிறீலங்காவிங்குள் கொண்டுவந்து, உண்மையான நட்பு நாடு எதுவென்று கண்டறியமுடியாத வெளியுறவுக் கொள்கையை வைத்திருக்கும் இந்தியா, சிறீலங்கா விடயத்தில் மீண்டும் ஒரு பலிக்கடாவாகிறது.

சோழ கரிகாலன்

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*