TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கையை இனவெறி அரசாக அறிவிக்க வேண்டும்: தமிழனப் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம்

eelatamilarதமிழனத்தை அழித்து, அடிப்படை உரிமைகளையும் மறுத்துவரும் இலங்கையை இனவெறி அரசாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்து தமிழினப் பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேச பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் ஒன்று சேர்ந்து சென்னையில் நேற்று தமிழினப் பாதுகாப்பு மாநாடு நடத்தின. பிரமாண்டமான இந்த மாநாட்டில் கவிஞர் புலமைப்பித்தன், கொளத்தூர் மணி, பத்திரிக்கையாளர் அய்யநாதன், தியாகு, மணியரசன், கோவை ராமகிருஷ்ணன், கவிஞர் தாமரை, ஓவியர் புகழேந்தி உட்பட ஏராளமான தமிழனத் தலைவர்கள், உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு

eelatamilar1

இலங்கையில் வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கள் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாகக் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுளூள 3 லட்சம் ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ முனும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேச சமூகத்தின் சார்பில் ஐ.நா.வே மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

இனப்படுகொலைக் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்காக மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், இந்தக் குற்றங்களுக்குத் துணை புரிந்த தெற்காசிய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என இம்மநாடு வலியுறுத்துகிறது.

உலகின் பிற பகுதிகளில் மேற்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி பொது சன வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத் தேசிய இனத்தின் அரசியல் வருங்காலத்தைத் தீர்வு காண ஐ.நா. முன்வர வேண்டும்.

இலங்கையை இனவெறி அரசாக ஐ.நா.வும், உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும் என இம்மநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உலக நாடுகளிடையே முன்னெடுத்துச் செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

கச்சத்தீவை தமிழகத்திற்கு மீட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துப் போராட இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் எல்லையைத் திறந்துவிடுவதன் மூலம், அல்லது இறுக்கமற்ற எல்லை ஆக்குவதன் மூலம் தமிழக, தமிழீழ மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டும்.

இலங்கை மீது ஒரு பொளியில் தடையை நாம் விதிப்பதோடு, உலக அளவில் இலங்கைக்கு எதிராகப் பொளியல் தடை விதிக்கும் படியும் இயக்கம் நடத்த வேண்டும்.

இலங்கை அரசின் முக்கியமான வருமான வழிகளில் ஒன்றாக இருப்பது சுற்றுலாத் துறையாகும். மனித உரிமைகளை மதிக்கிற எவரும் இனக்கொலைகாரர்கள் ஆட்சிபுரியும் அந்த நாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்லக்கூடாது.

இவ்வழியில் சிங்கள அரசை நெருக்கவும் இயலும். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகத் திரைப்படத் துறையினர் எவ்வகையிலும் இலங்கையோடு கூட்டு முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக இலங்கையில் படப்பிடிப்பு நடத்துவதை உடனடியாக கைவிட வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் தமிழக அரசு ஈழத் தமிழர்கள் சிலரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் தமிழகத்தின் தமிழர்கள் சிலரையும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான சிறை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டிப்பதோடு, இந்தச் சிறப்பு முகாம்களை இழுத்து மூடி முகாம்வாசிகளை விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தமிழீழ அகதிகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களை சுதந்திரமாக வாழ அனுமதித்து, அவர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2006 பிப்ரவரி 27 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 142 அடி வரை தண்ணீர் தேக்க, முல்லைப் பெரியாறு அணையின் வடிகால் மதகுகளை கீழிறக்குமாறும், தீர்ப்பின்படி தண்ணீரைத் தேக்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இன உணர்வு அடிப்படையிலும், மனிதநேய நோக்கிலும் ஈழத் தமிழர்கள் உயிர் காக்க, உரிமை காக்கப் போராடியதற்காக, பேசியதற்காக, செயல்பட்டதற்காக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் இம்மநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*