TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சமகாலப் பார்வை: மகிந்தவைச் சூழும் முன்னை இட்ட தீ

Mahindaமகிந்த இட்ட தீ தமிழரைச் சுட்டழித்தது.. அவர் வன்னியில் இட்ட தீ இப்போது அவரையே சூழ்ந்து வருகிறது.

சரியாக நான்கு மாதங்களுக்கு முன்னதாக- அரசியல் வேறுபாடுகள் இல்லாமல், சிங்களவர்கள் அனைவராலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட மகிந்த ராஜபக்ஸ இன்று நிலத்தில் வீசப்படும் நிலைக்குக் கீழிறங்கியிருக்கிறார்.

தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து முடிவெடுக்காதீர்கள் தென்னிலங்கை, சர்வதேசம் போன்றவற்றின் போக்குக்களையும் கவனத்தில் கொள்ளல் இங்கு மிக முக்கியமானது.
விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தைச் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்திய மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் இப்போது சர்வதேசத்தின் முன்னிலையில் கூனிக்குறுகி நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸவை நவீன துட்டகெமுனுவாகப் பார்த்த சிங்களவர்கள்- இப்போது அவர் நாட்டைக் கொண்டு செல்லும்; பாதை குறித்துக் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கெல்லாம் காரணம் போரும்- அதற்குப் பின்னரான நிகழ்வுகளும் தான். போர்க்காலத்தில் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் மனிதஉரிமைகள் குறித்து சற்றும் கவனம் எடுக்கவேயில்லை.

பொதுமக்களின் பாதுகாப்பு, மனித உரமைகள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தியிருந்தால்-இந்தப் போரில் வெற்றி பெற அரசாங்கத்துக்கு இன்னமும் காலஅவகாசம் தேவைப்பட்டிருக்கும். தமிழ்மக்களின் மனிதஉரிமைகள் மீறப்பட்ட போது அதைப்பற்றிக் கவலையே படாமல் இருந்த அரசாங்கம்- போர் வெற்றி மூலம் எல்லாவற்றையும் மூடி மறைத்து விடலாம் என்று கனவு கண்டது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்து அண்மையில் ஐ.நாவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட பாலித கொஹன்ன- “போர்குற்றச்சாட்டுகள் எப்போதும் தோல்வியடைந்தவர்கள் மீதே சுமத்தப்படும்- வெற்றி பெற்றவர்கள் மீது அல்ல.” என்று ஒரு பேட்டியின் போது கூறியிருந்தார்.

ஆனால் இப்போது இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்கும் நிலையில் இருக்கிறது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றிய ஒரு விரிவான அறிக்கையைத் தயாரித்து வருகிறது.

இது அமெரிக்க நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த அறிக்கை வெளியான பின்னர் இலங்கைக்கு எதிரான நகர்வுகள் சர்வதேச மட்டத்தில் தீவிரமடையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இலங்கை அரசாங்கம் போரில் வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக அதன் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை உலகம் ஏற்கவோ- அங்கீகரிக்கவோ தயாராக இல்லை. இதை அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளின் அணுகுமுறைகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதேவேளை பாலித கொஹன்ன கூறுவது போன்று- வெற்றி பெற்றவர்கள் மீது போர்க்குற்றச் சாட்டு சுமத்தப்படுவதில்லை என்பது உண்மையானால்- நிச்சயமாக இலங்கை அரசு போரில் வெற்றி பெறவில்லை என்றே அர்த்தமாகும்.

ஏனென்றால் போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கமே இப்போது போர்க்குற்றச்சாட்டுகளை சுமக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.அத்துடன் இதுபற்றிய அச்சமும் அரசாங்கத்துக்குத் தொற்றிக் கொண்டு விட்டது.

“எம் மீது போர்குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்கு அமெரிக்காவுக்கு அருகதை கிடையாது” என்று கூறியிருக்கிறார் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ. அதேவேளை “எந்தவொரு இராணுவ வீரரையும் போர்க்குற்ற விசாரணைக்காக அனுப்ப முடியாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை அரசாங்கம் எந்தளவுக்குப் பாரதூரமாகக் கருதுகிறது என்பதை அவரது இந்தக் கருத்தில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.அதேவேளை இலங்கை அரசு மீது இப்போது சர்வதேச சமூகம் அதிக வெறுப்புடன் இருக்கிறது.இலங்கை அரசு புலிகளுடன் போரை நடத்தியபோது அதை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் பின்நின்றது உண்மையே.

ஆனால் அதை வைத்துக் கொண்டு சர்வதேசம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் தற்போதும் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து மௌனமாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. ஆனால் அரசாங்கம் அப்படியொரு எதிர்பார்ப்பில் தான் இருந்து வந்திருக்கிறது.எனினும், உலகத்தின் போக்கும் நோக்கும் வேறு விதமாகவே இருக்கிறது. அண்மையில், இலங்கையின் அரசியல்வாதிகள், முக்கிய அரச அதிகாரிகள் போன்றோர் வெளிநாடுகள் பலவற்றால் அவமதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

ஜப்பானில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, கனடா வீசா விவகாரத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, பிரித்தானிய வீசா விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த பாலித கொஹன்ன போன்றோர் மூக்குடைபட்டிருக்கின்றனர். அண்மைய காலங்களில் இடம்பெற்று வரும் இத்தகைய சம்பவங்களைத் தனித்தனியானவை என்று எடுக்கவோ, தற்செயலானவை என்று ஒதுக்கவோ முடியாது.

ஒரு கோர்வை போன்று அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் இந்தச் சம்பவங்களின் பின்னணிகளை ஆராயும்போது, இவற்றின் உண்மை நிலைமைகள் புரியவரும்.கடைசியாக சர்வதேச இராணுவ விளையாட்டு விழாவில் பங்கேற்கவிருந்த இலங்கையின் சைக்கிளோட்ட வீரர் குழுவுக்கு அயர்லாந்து அரசு வீசா வழங்க மறுத்திருக்கிறது.இது இலங்கை அரசுக்கு வெளிப்படையாக விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கை என்றே கூறலாம். மனிதஉரிமை மீறல்கள் விவகாரத்தில் இலங்கை அரசு- நாகரீக சமூகத்தில் இருந்து வெகுதொலைவில் நிற்பதாகவே சர்வதேசம் கருதுகிறது.இதனால் தான் இலங்கையை அரவணைத்துச் செல்வதற்கு வெளிநாடுகள் தயங்குகின்றன.

மகிந்த ராஜபக்ஸ அரசு சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தியே போரில் வெற்றி பெற்றது.மகிந்தவின் இராஜதந்திரம் தான் போரில் இலகுவான வெற்றிக்கு வழிவகுத்தது.ஆனால் இன்று அவரது இராஜதந்திரம்; மூக்குடைபட்டு இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது.

புலிகளை அழித்து விட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை, அரசியல் தீர்வை, சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கப் போவதாகக் கூறிய மகிந்தவின் வேடம் இப்போது கலைந்து விட்டது. இதனால் அவருக்கு சர்வதேச ரீதியில் இருந்து வந்த ஆதரவு நிலைப்பாடு அகன்று விட்டது.இப்போது அவர், உலகில் தனித்து விடப்பட்ட நாடுகள் சிலவற்றுடன் கூட்டணி அமைப்பதையே இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

சீனா, லிபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற சிநேகிதர்களின் ஆதரவைக் காண்பித்து அவர் சிங்களவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்.ஆனால் மகிந்தவால் அண்மையில் ஆரம்பமான ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்துக்கே செல்ல முடியாது போனது.

போரில் புலிகளை வெற்றி கொண்டது பற்றி ஐ.நா கூட்டத்தொடரில் வெற்றிப் பிரகடனம் செய்வதற்கு மகிந்த தயாராக இருந்தபோதும்- அவருடன் கூடச் செல்லவிருந்த பலருக்கு வீசா அனுமதி கொடுக்க அமெரிக்கா மறுத்து விட்டது.

போர்க்குற்றச்சாட்டுகள், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் காரணமாகவே அவர்கள் அமெரிக்காவுக்குள் கால்வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் தான் மகிந்த ராஜபக்ஸ தனது அமெரிக்கப் பயணதை கைவிட்டு ஒதுங்கும் நிலை ஏற்பட்டது.

அதேவேளை அண்மையில் மகிந்தவின் லிபியப் பயணத்துக்கு அரசாங்கம் அதிக விளம்பரம் கொடுத்தது.இது, தாம் தனித்து நிற்கும் அரசு அல்ல என்பதைக் காட்டுவதற்கு மகிந்த எடுத்த முயற்சி. ஐநாவில் தவறவிட்டதை மகிந்தவால் லிபியாவில் பெற முடியுமா? ஆனால் அப்படியொரு மாயையை அவர் சிங்களவர்கள் மத்தியில் உருவாக்கப் பார்த்தார்.

சர்வதேச சமூகம் இப்போது மகிந்தவின் அரசாங்கத்தை சாத்தியமான எல்லா வழிகளிலும் மிரட்டத் தொடங்கி விட்டது.வர்த்தகம் என்றாலும் சரி, கடன் என்றாலும் சரி, இராஜதந்திரம் என்றாலும் சரி- எந்தப் பக்கம் திரும்பினாலும் சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது.போர்க்குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் அரசாங்கம் தண்டிக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த இலங்கை மக்களையுமே பாதிக்கப் போகிறது.

இதைப் புரிந்து கொண்டிருக்கும் கட்சிகள் இப்போது மகிந்தவைப் பகிரங்கமாக எதிர்க்கவும், விமர்சிக்கவும் தொடங்கி விட்டன. சர்வதேச சமூகத்துடன் முரண்படுவது பற்றியும், அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிவது பற்றியும்- பல்வேறு விதமான கற்கள் இப்போது மகிந்த மீது வீசப்படுகின்றன.

போர் முடிவடைந்த பின்னர் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அவர் கடைப்பிடிக்கும் போக்கு சிங்களவர்களை மட்டுமே திருப்திப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.இது மற்றொரு புறத்தில் மகிந்தவுக்கு எதிரான உணர்வலைகளைக் கிளப்பி வருகிறது.

குறுகிய காலத்துக்குள் மகாராஜா நிலையில் போற்றப்பட்ட மகிந்த ராஜபக்ஸ, சாமானியர் போன்று கீழ் நிலைக்குத் தள்ளப்படும் நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்.

தேர்தல்களில் அவரது கட்சிக்கு வாக்குகள் கிடைத்தாலும் அந்த ஆதரவு எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது கேள்வியே.

சர்வதேச அழுத்தங்கள் எத்தகைய வடிவத்தில் இலங்கை மீது சுமத்தப்படப் போகின்றன என்பதைப் பொறுத்தே மகிந்தவின் அரசியல் எதிர்காலம் தீர்;மானிக்கப்படும்.ஆனால் போரின் போது மகிந்தவுக்குக் கிடைத்த உயர்ந்த கௌரவம் இன்னொரு தடவை சிங்களவர்களிடத்தில் இருந்து அவருக்குக் கிடைப்பது சாத்தியமாக இருக்காது.அவர் யாரையும் தனக்குத் தானே வரைந்து கொண்ட வட்டத்துக்குள்; நிற்கவே விரும்புகிறார்.இது சிங்களவர்களை ஒரு போதும் திருப்திப்படுத்தாது.அவர் எதைச் செய்தாலும் சிங்களவர்களின் கோபத்துக்கு ஆளாகவே நேரிடும்.

மகிந்த இட்ட தீ தமிழரைச் சுட்டழித்தது.

அவர் வன்னியில் இட்ட தீ இப்போது அவரையே சூழ்ந்து வருகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*