TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கலங்க வைக்கும் கடிதங்கள்! – ஜெகத்கஸ்பர்

sweetdreamsசஞ்சனாதேவிஎனக்கு முதற் கடிதம் எழுதியது 1996 ஜனவரி மாதத்தில் என்று நினைக் கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து சந்திரிகா குமாரதுங்கே ஏவிய சிங்களப் படைகளால் அடித்து விரட்டப்பட்டு வன்னி அக்கராயன் குளம் பகுதியில் அகதி யாகிய நாட்களில் அவர் எழுதிய கடிதம் அது. “”எல்லோரது வாழ்விலும் மரணம் வரும், ஆனால் ஈழத்தில் இன்று தமிழ் மக்க ளாகிய நாங்கள் மரணத்திற்குள் வாழ்க்கை யை தேடிக்கொண்டிருக்கிறோம்” -என்ற மறக்க முடியாத வரலாற்று வரிகளைப் பதித்தது இவரது அந்த முதற்கடிதம்தான். “”காடுகளைச் சீர் செய்து நாடுகளையும் நாகரிகங்களையும் ஆக்கினான் அக்கால மனிதன். இங்கே நாங் களோ வாழ்வின் கடைசி மிச்சங்களைப் பாது காக்கவேண்டி நாட்டைவிட்டு காட்டுக்குள் ஓடி வந்திருக்கிறோம். இங்கே ராணுவ குண்டுவீச்சு, ஆயு தங்களின் தாக்குதல் மட்டுமல்ல- பாம்பு, பூரான், நுளம்பு, அனோபிலிஸ்கர் என அத்தனையும் சேர்ந்து எம்மீது யுத்தம் நடத்துகின்றன” என்றும் எழுதியிருந்தார் அவர்.

அப்போதெல்லாம் ஈழத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சராசரி நூறு கடிதங்களேனும் வரும். மல்லாவியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த மனிதஉரிமைப் போராளி அருட்தந்தை கருண ரட்ணம் அவர்கள் வன்னிப்பகுதியின் கடிதங்களையெல்லாம் வாங்கிச் சேர்த்து தனது தொடர்புகளூடாக கொழும்பு நகருக்குக் கொண்டுவந்து அங்கிருந்து எமக்கு அஞ்சல் செய்வார். தமிழீழ மனித உரிமை ஆணையத்தை நிறுவி அரும்பணி செய்த என் மனதின் தேவதூதன் இந்த அருட்தந்தை கருணரட்ணம் அவர்களை ராஜபக்சே- கோத்தபய்யா கொலைகாரக் கூட்டம் மூன்றாண்டுகளுக்கு முன் படுகொலை செய்தது. தமிழர் இன அழித்தலை பதிவு செய்ய எவருமே இருந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதில் ராஜபக்சே கொலைக் கூட்டம் அறிவு நுட்பத்துடன் இயங்கியுள்ளது புலனாகிறது.

1995 முதல் 2001-ம் ஆண்டுவரை அதிபர் சந்திரிகா குமாரதுங்கே வன்னிப்பகுதியின் பத்து லட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களுக்கு உணவு, மருந்து, அடிப்படை வாழ்வாதாரப் பொருட்களை தடைசெய்து கொடுமையானதோர் பொருளாதார யுத்தம் நடத்திய காலத்தில் அருட்தந்தை கருணரட்ணம், எமது வேரித்தாஸ் வானொலி, புலம்பெயர் தமிழர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், ரி.ஆர்.ரி வானொலி, கனடிய தமிழ் வானொலிகள் யாவும் இணைந்து இயக்கமொன்று வளர்த்து வன்னியில் 25,000-ற்கும் மேலான குழந்தைகளை, சிறு பிள்ளைகளை பட்டினிச் சாவினின்று காத்த காலம் எனது வாழ்வின் மிகவும் அர்த்தமுள்ள காலம்.

காலையில் ஓர் நகரம், மாலையில் பிறிதொரு நாடு என நாள் மறந்து, கண்ணுறக்கக் கவலை யின்றி வாரம் சராசரி பத்தாயிரம் கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்து பட்டினிச்சாவு எதிர்சமர் நடத்திய நாட்கள் உண்மையிலேயே கடவுள் அருகிருந்த, கடவுளுக்கு அருகிலிருந்த நாட்கள்.

அருட்தந்தை கருணரட்ணம் அவர்களுக்கு அப்போது வன்னியில் பக்கபலமாயும் உற்ற துணையாவும் இருந்தவர் ம.செ.பேதுருப்பிள்ளை. கல்வெட்டுப் போன்ற கையெழுத்துடன் வாரம் தவறாது ஒரு கடிதமேனும் இவரிடமிருந்து எனக்கு வந்துவிடும். பிந்தைய நாட்களில் “”அன்பு மகன் ஜெகத்…” என்றே வாஞ்சையுடன் எழுதுவார். அதற்கும் பின்னர் ஜெகத் என உரிமையுடன் தொடங்கியிருப்பார். அவ்வாறு விளித்து அவர் எழுதிய முதற் கடிதத்தில் அதற்கான காரணத்தை யும் குறிப்பிட்டிருந்தார். “”எனது ஒரே மகன் 22-ம் வயதில் இறக்கும்வரை எனக்குத் தோழனாகவே இருந்தார். மூளாதீ போல் என்னுள் கனன்று கொண்டிருக்கும் என் மகனது நினைப்பும் அன் பெனும் நெருப்பும் உங்கள் கடிதங்களைப் படிக்கும் போதும் குரலை கேட்கும்போதும் பற்றிக்கொள்கிறது. பயப்படவேண்டாம், எனது துன்பியலை உங்கள் மீது சுமத்தமாட்டேன்” என்ற அவரது வரிகள் அந்நாட்களில் என்னை நெகிழச் செய்தவை.

ம.செ.பேதுருப்பிள்ளையின் சொந்த ஊர் யாழ்ப்பாணம் பருத்தித் துறை. வன்னிக்கு அகதியாய் இடம் பெயர்ந்து, “”காட்டு வாழ்க்கை கடின மாகத்தான் இருக்கிறது. ஆயினும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நான் கொடுக்க வேண்டிய விலை இதுவென் றால் நான் காட்டுவாசியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்” என எழுதி தன் ஆத்ம பலம் காட்டி என்னை சிலிர்க்கச் செய்த தூரத்து மனிதர் இந்த ம.செ. பேதுருப்பிள்ளை.

வேரித்தாஸ் வானொலி முன் னெடுப்பில் உலகத் தமிழர் இணைந்து நடத்திய அந்த வன்னி பட்டினிச் சாவு தடுப்பு இயக்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து “”பசித்த வயிற்றில் பற்றி யெரிந்த தீ, பாசமுடன் அணைத்தீரே, நன்றி” எனத் தலைப்பிட்டு உலகத் தமிழ் உறவுகளுக்கு ம.செ.பேதுருப் பிள்ளை எழுதிய நன்றிக் கடிதம் மறக்க முடியாதது. அக்கடிதமும் அவரது வேறுசில கடிதங்களும் நக்கீரனில் நிச்சயம் பதிவாகும்.

அருட்தந்தை கருணரட்ணம் அவர்கள் படுகொலை செய்யப்படுவ தற்கு சில நாட்களுக்கு முன் அவ ருடன் தொலைபேசியபோது யதார்த்த மாகவும் நகைச்சுவையாகவும் அவ ரிடம் கேட்டேன். “”வன்னியில் என்ன தான் நடந்துகொண்டிருக்கிறது…? நிரந்தர சமாதானத்திற்குத் தயாராகி றீர்களா? இல்லை சண்டைக்குத் தயாராகி றீர்களா?” என்று.

மிகவும் இயல்பாக அதற்கு அவர் தந்த பதில், “”உண்மையில் நாங்கள் தமிழ் ஈழத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்”.

அருட்தந்தை கருணரட்ணம், ம.செ.பேதுருப் பிள்ளை இவர்களையெல்லாம் இங்கு நினைவுகூரக் காரணம் சஞ்சனாதேவி அவர்களை எதிர்பாராத விதமாய் சென்னையில் சந்தித்ததும், அச்சந்திப்பு எழுப்பிய பழைய என் வேரித்தாஸ் வானொலி நினைவுகளும்தான். இவர்களைப்போல் ஆனைவிழுந்தான் சதா, தனபாலசிங்கம், அங்கயற்கண்ணி, அகிலா பசுபதி, சிவசங்கரி, கீதாஞ்சலி ஆகிய உறவுகளையும் நெஞ்சில் நீர் பனிக்க நினைத்துக்கொள்கிறேன்.

அந்நாட்களில் வாரம்தோறும் எமக்குக் கடிதமெழுதும் சஞ்சனாதேவி அவர்களுக்கு 1999-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரே ஒரு பதிற்கடிதம் மட்டும் கைப்பட நான் எழுதியிருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளாய் அக்கடிதத்தை பத்திரமாய் பாதுகாத்து சென்னைக்கும் நினைவாக அவர் எடுத்து வந்துள்ளார். முல்லைத்தீவு இறுதி அழிவில் சகலத்தையும் இழந்த அந்நாளில் கூட இந்த வெறும் பத்து வரிக் கடிதத்தை இழப்பிற்குக் கொடுக்காமல் கொண்டு வந்த நேசம் உள்ளபடியே என்னை நெகிழச் செய்தது. இத்துணைக்கும் எனது அந்தக் கடிதத்தின் மொத்தமே இவ்வளவுதான்: “”அன்பினிய உழ்.சஞ்சனாதேவி அவர்களுக்கு, வணக்கம். மூன்றரை ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய முதற்கடிதம் தொட்டு, சமீபத் தில் எழுதிய நெஞ்சைப் பிழியும் அனுபவப் பதிவுவரை யாவற்றையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இத்துணை துன்பங்களி னூடேயும் உடைந்து நொறுங்கிப் போகாமல் மக்களோடு மக்களாய் நின்று பணிபுரிகிறீர்களென்பதை நினைக்க பிரமிப்பாய் இருக்கிறது.

அழிவுகளினூடேயும் வாழ்வின் மகத் துவங்களை இழக்காதிருப்பதே அழிவைத் தருகிறவர்களுக்கு நாம் திருப்பித் தருகிற உண்மையான பதிலடி. உங்களை வாழ்த்துகிறேன்” என்பதாக அக்கடிதத்தை நான் நிறைவு செய்திருந்தேன்.

சஞ்சனாதேவி போன்றவர்களெல்லாம் கடிதம் எழுதிய அந்நாட்களில் அவர்களுக்கும் எனக்கு மான இடைவெளி சுமார் 4000 கிலோமீட்டர்கள். இவர்களை நேரிலும் பார்த்ததில்லை, நிழற் படங்களிலும் பார்த்ததில்லை. நரைத்த தலையா, நாரிழந்த தேகமா, கறுத்த நிறமா, கழுத்து தனித்த உயரமா… எதுவுமே தெரியாது. ஆயினும் ஒருவருக்கொருவர் ஆழமாக அறிந்திருந்தோம். உணர்ந்திருந்தோம். ஆத்மாவின் விகாசத்திற்குள் ஒன்றறக் கலந்திருந்தோம். வேதங்கள் உச்ச ரிக்கப்படுமுன்னரே, ஆண்டவன் இவ்வுலகில் உயிர்களை ஆக்கியபோது நிறுவப்பட்ட உயிர் மொழியில் இணைந்திருந்தோம். காகங்கள் ஒரு பருக்கைச் சோற்றுக்காய் நோக்குவதையும், கருங்குருவி சோகத்தில் பாடுவதையும், நாய்க்குட்டி நன்றியால் குழை வதையும், வாய்பேசா மழலை களின் வதனத்து நுண்கோடு களையும் உணர்ந்து கொள்ள இயற்கை இன்றும் நமக்கு அருள் பாலிக் கிறதல்லவா… அதே உணர்வில்தான்.

அந்த உணர்வுதான் அங்கே தூரத்தில் நம் உறவுகளின் அழிவுக்காய் இன்றும் நம்மை அழ வைக்கிறது. எதுவும் எதிர்நோக்காமல் செயல்பட வைக்கிறது. கடந்த வாரம் நான் சந்தித்த உயர் அதிகாரி ஒருவர்,

“”மே-17 முதல் புலால் உணவு, மது, கடவுளைத் தொழுவது மூன்றையும் நிறுத்திவிட்டேன். ஈழம் கிடைக்கிறவரை இம் மூன்றும் என் வாழ் வில் இனி இல்லை” என்றார். இதே உணர்வுகளை இது வரை குறைந்தபட்சம் இருபது உயர் அதி காரிகளேனும் உரை யாடல்களின்போது வெளிப்படுத்தியிருக் கிறார்கள். அப்போ தெல்லாம் வியப்பாக இருக்கும். பரவா யில்லை, நாம் தனித்தவர்களாய் இல்லை. நம்மைப்போல் உணர்கிறவர்கள் பெரிய இடங்களிலெல்லாம் இருக்கி றார்கள் என்பதை நினைக்க ஆறுதலாயும், தெம்பாயும் இருக்கும். அழிவின் நாட்களிலும் இன்னும் நம்பிக்கை மிச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் சஞ்சனா தேவி குறிப்பிட்ட ஒரு விஷயம்தான் மனதிற்கு மிகவும் வலி தந்தது.

(நினைவுகள் சுழலும்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
  • N.JAYACHANDRAN says:

    DEAR BROTHER,

    WHEN I READ LETTERS FROM EELAM I REALY PROUD OF TAMIL PEOPLE THROUGH YOU AND SAY AS TAMIZER

    October 13, 2009 at 11:48

Your email address will not be published. Required fields are marked *

*