TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சஞ்சனா அனுபவம்! – ஜெகத் கஸ்பர்

Dreamsசஞ்சனாதேவிஎன்ற ஈழத்துச் சகோதரியை கடந்த புதன்கிழமை சந்தித்தேன். யாழ்ப்பாணத்துக் காரர். ஊர் குறித்துச் சொல்வ தெனில் கொக்குவில் மேற்கு. திருமணமாகாதவர். வயது சுமார் 50 இருக்கலாம். சித்த-ஆயுர்வேத மருத்துவம் படித்தவராம். இந்திய அமைதிப்படை யாழ்குடாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில் ராணுவத்திலிருந்த தமிழக- கேரள வீரர்கள் பலருக்கு இவர் வைத்தியம் செய்ததுண்டாம்.

“”இந்திய ராணுவம் எங்கட சனத்துக்கு கன கஷ்டங்கள் தந்த போதும் தமிழக வீரர்கள் வரேக்கெ மனசுக்கு சந்தோஷமா இருக்கும். எங்கட துன்பங்களெ உரிமையோடெ சொல்லவேனும் முடியும். சில நேரம் அண்ணன், தம்பி உரிமை எடுத்துக் கொண்டு அவையளிடம் சண்டையும் பிடிப்பம்” என்று உரையாடலினூடே குறிப்பிட்டார் சஞ்சனா.

1995 அக்டோபர் இடப் பெயர்வின் போது வன்னிக்கு வந்து, 2009-ல் ராஜபக்சே கும்பலின் இறுதிக் கட்ட கொலைவெறித் தாண்டவக்கூத்தில் அலைக்கழிக்கப்பட்டு, முல்லைத் தீவின் கடைசிநாள் காட்சிகள் வரை கண்டு, உணர்வுகளெல்லாம் செத்துப் போனவராய் வவுனியா வதை முகாமுக்கு வந்து படாத பாடுகளெல்லாம் பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்தபோது சேர்த்த தங்க நகைகளையெல்லாம் விற்று சிங்கள ராணுவத்தினருக்குக் கப்பம் கட்டி, தனது மருத்துவ சிகிச்சைக்காகவென உறவினர் சிலருடன் இந்தியா வந்துள்ளார்.

sweetdreams

சென்னை விமான நிலையத்தில் குடிவரவுப் பிரிவினர் (ஒம்ம்ண்ஞ்ழ்ஹற்ண்ர்ய்) கருணை யுடன் தம்மை நடத்தியதாய் குறிப்பிட்டார். முன்பெல்லாம் ஈழத்தமிழர் எங்கிருந்து வந்தாலும் அத்தனைபேரையும் குற்றவாளி களாய், பயங்கரவாதிகளாய், பார்க்கிற மனப்போக்கு குடிவரவுத் துறையினரிடமும் உளவுப் பிரிவினரிடமும் இருந்து வந்தது. சிதைந்து போன வாழ்வும், இறக்க முடியா நினைவுச்சிலுவைகளும் எதிர்காலம் பற்றின சூன்ய இருளுமாய் வரும் இம்மக்களை நம் குடிவரவுத்துறை இப்போதேனும் இரக்கத்துடன் பார்க்கிறதென்பது உண்மையில் ஆறுதல் தருகிறது. இன்றைய நடுவணரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நன்றிக் குரியவர்.

கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாய் இங்கு வாழ்ந்து வரும் ஈழத்து அகதி மக்களை எண்ணுகிறபோதெல்லாம் “”நீண்ட தூரப் பயணிகளுக்கும் அகதிகளுக்கும் உன் வீட்டு வாயில்களை எப்போதும் திறந்து வை” என்ற பைபிளின் வரிகள் என் நினைவுக்கு வரும். அடையாளம், அடிப்படை உரிமைகள் இன்றி நெடுநாள் வாழ்ந்துவிட்ட இம்மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானமும், ஓர் தீர்க்கமான முன் நகர்வு, பாராட்டி வரவேற்கத்தக்கது. கலைஞர் அவர்களின் இந்த முயற்சிக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடன்துணையாய் இருப்பாரெனில் நிச்சயம் இவ்வாண்டு நிறையுமுன் லட்சம் ஈழ மக்களுக்கு இங்கு குடியுரிமை கிடைக்கும். அடையாளமின்றி அகதி என்ற முத்திரையோடு ஆடு, மாடுகள் போல் வாழும் வாழ்க்கை முடிவுக்கு வரும்.

ப.சிதம்பரம் அவர்கள் இது விஷயத்தில் உறுதியான துணையாய் கலைஞர் அவர்களுக்கு இருப்பார் என நம்புகிறோம், விரும்புகிறோம், உண்மையில் கடைசிக் கட்ட சண்டைகளை நிறுத்தி ஓர் முறையான யுத்த நிறுத்தம் வருவதற்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கும் நிஜமான சாத்தியப்பாடுகள் கொண்டிருந்த ஓர் வாய்ப்பினை, ஒரே ஒரு வாய்ப்பினை உருவாக்கியவர் ப.சிதம்பரம் அவர்கள்தான். பெரும் மானுட அழிவொன்று தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதில் அவர் காட்டிய அக்கறையை நான் அறிவேன். ஆனால் யுத்த நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான அந்த இறுதி வாய்ப்பினை நாசம் செய்தவர்கள் இரு தரப்பினர். எங்கோ இருந்துகொண்டு “அமெரிக்கா உதவிக்கு வரும்’ என தவறான நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தவர்களும், இங்கே தமிழகத்தில் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தாங்களே மொத்த குத்தகைதாரர்கள் என்பதாகத் தங்களை நடத்திக் கொண்டு வரும் சில தலைவர்களும் தான். நடந்தது என்னவென்பது ஓரிரு வாரங்களில் இதே பகுதியில் பதிவாகும். தமிழர் இன அழித்தல் யுத்தத்தில் இந்தியா பங்கெடுத்ததென்ற உண்மை ஒரு புறமிருக்க, ப.சிதம்பரம் அவர்கள் யுத்த நிறுத்தம் கொணர பாடுபட்டார் எனச் சொல்வது முரண்பாடில்லையா என்ற கேள்வி நிச்சயம் எழும். அதுவும் விளக்கப்படும்.

சஞ்சனாதேவியும் உறவினர்களும் சென்னை வந்து சேர்ந்தது நவராத்திரி நாளன்று. வடபழனி பக்கம் தெரிந்தவர்கள் மூலம் வாடகைக்கு வீடு எடுத்திருக் கிறார்கள். பாத்திர பண்டங்கள் வாங்கி பால் வைக்க பானையை தூக்கிய நேரம் தெருவில் பட்டாசு வெடித் திருக்கிறது. கணப்பொழுதில் நரம்பு மண்டலத்தை முல்லைத்தீவின் நினைவுகள் கவ்விச் சுழற்ற அருகில் ஷெல் குண்டுகள் விழுந்து வெடிக்கும் பீதியில் அலறிக் கொண்டே பால் பானையை கீழே விட்டிருக்கிறார். சஞ்சனாதேவி படிக்காத இல்லத்துப் பெண் ணல்ல, சித்த-ஆயுர்வேத மருத் துவர். சஞ்சனாதேவியுடன் வந்திருப்பவர்களில் அவரது அக்கா மகன் சபேசனும் ஒருவர். வயது 18. ஆறு வயது குழந்தையாக வேரித்தாஸ் வானொலி முகவரியிட்டு 1997-ம் ஆண்டு எனக்கு எழுதிய மறக்க முடியாத கடிதத்தை சஞ்சனாதேவி எனக்கு நினைவுபடுத்தினார். மழலையாய் சபேசன் எழுதிய அக்கடிதத்தின் உயிரைப்பிழியும் வலியை அண்ணன் அறிவுமதி அவர்களும் நானுமாய் “”உயிரைப்பிழியும் உண்மைகள்” என்ற மறக்க முடியுமா ஒலிநாடாவில் பதிவு செய்திருந்தோம். ஆறுவயது குழந்தை சபேசன் கோணல் மாணலாய் அன்று எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இது: “”விமானம் வந்து சுற்றிச் சுற்றி குண்டு குண்டா வீசுறாங்கள். சந்திரிகா என்ற அம்மையார்தான் இதை செய்யிறவையாம். அவையளுக்கு நாங்கள் பிழையொண்டும் செய்யையிலெதானே…? எப்பவும் எனக்கு பயமா கிடக்கு. நித்திரை வரையில்லே. நீங்கள் ரேடியோவிலெ கதைக்கிற பெரியவர்தானே… சந்திரிகா அம்மையாரிடம் போன்லெ கதச்சு குண்டு வீசுறதெ நிறுத்தச் சொல்லுவியளா?

குழந்தையாய் யுத்தத்தின் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்த சபேசன் இன்று 18 வயது வாலிபன். மன அழுத்த நோய்க்கு ஆளாகியிருப்பதாய் வேதனையுடன் கூறினார் சஞ்சனா. இன அழித்தல் யுத்தத்தின் கோர விளைவுகளை எத்தனை தலைமுறைகளுக்கு சபிக்கப்பட்ட நம் இனம் சுமக்கப் போகிறதோ?

இறுதிகட்ட அழிவுகளை நினைவுகூர்ந்த அவர், “”இந்தியா எங்களைக் காப்பாற்றும் என கடைசிவரை நம்பியிருந்தோம். தமிழகம் எங்களை கைவிடாது… சண்டை நிறுத்தம் வரும் என்ற நம்பிக்கை மே 15-ம் தேதிவரைக்கும் எல்லா சனத்துக்கும் இருந்தது” என்றார். வேலுப்பிள்ளை பிரபாகரன்கூட “”முற்றான அழிவை இந்தியா நிச்சயம் அனுமதிக்காது” என்றே நம்பியிருக்கிறார். கிடைக்கிற உள்வட்டத் தகவல்களின்படி “”இந்தியா, இலங்கை ராணுவத்திற்கு அதிநவீன தொழில்நுட்ப உதவிகளை செய்கிறது. நம்மை பலவீனப்படுத்தவேண்டுமென்பதில் தெளிவாகச் செயல்படுகிறது. ஆனால் கிளிநொச்சியைத் தாண்டி இலங்கை ராணுவம் நகர இந்தியா அனுமதிக்காது” என்று பலமுறை குறிப்பிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஊடகங்கள் இங்கு கட்டமைப்பு செய்ததுபோல் பிரபாகரன் இந்தியாவை எதிரியாகப் பார்த்தவரே அல்ல. எனது நேர்காணலின் போது “”தமிழ் ஈழம் மலர்ந்தால் அதன் வெளியுறவுக் கொள்கை எவ்வாறு இருக்கும்?” என கேட்டேன். அதற்கு அவர் ஒளிப் பதிவுக்கருவியை அணைக்கக் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே சொன்னார் : “”எங்களுக்கு ஏது ஃபாதர் வெளியுறவுக் கொள்கை? இந்தியாவின்ற வெளியுறவுக் கொள்கைதான் ஈழத்தின்ற வெளியுறவுக் கொள்கையும் அப்படித்தான் இருக்க முடியும்.”

தொடர்ந்தும் பேசிய பிரபாகரன் சொன்னார், “”யாழ்ப்பாணம் ஆறு கூட இல்லாத பூமி. பெட்ரோல் டீசலெல்லாம் எங்களுக்கு இல்லெ. இருப்பதெல்லாம் திரிகோணமலையும் அதைச் சுற்றின கடலும்தான். உலகத்திலெ வேற யாரோ வந்து அங்கெ ஆளுமை செலுத்துறதிலும் பார்க்க இந்தியாவின்ற கட்டுப்பாட்டிலெ அது இருக்கட்டுமே” என்றார்.

பிரபாகரனின் எண்ணத்தில் மிகத்தெளிவாக இருந்த இந்நிலைப்பாடுகளை இந்திய அதிகார வர்க்கம் அறிந்திருந்ததா, இல்லை முறையாகத் தெரிவிக்க விடுதலைப்புலிகள் தவறிவிட்டார்களா என்ற கேள்விகள் இன்று நம்மை வாட்டு கின்றன. இல்லை பிரபாகரனை பழி தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு இன அழித்தலுக்கே பங்காளியான பாவத்தை இந்திய அதிகாரவர்க்கம் செய்ததா என்பதெல்லாம் தவிர்க்க முடியாத கேள்விகள். சரியான விடைகளும் நீதியும் பெறப்படும்வரை மீண்டும் மீண்டும் இக்கேள்விகள் கேட்கப்படும்.

(நினைவுகள் சுழலும்)

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*