TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை பகுதி 03

Makkalசிறீலங்கா தனது இராணுவ பலத்தைப் பெருக்கிக்கொண்டிருக்கும்போது, மறுதரப்பான விடுதலைப் புலிகள் அமைதியாக இருந்துவிட்டால், அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். சிறீலங்கா போர் ஒன்றைத் தொடுக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாத ஒரு நிலையை விடுதலைப் புலிகளுக்கு ஏற்படுத்திவிடும்.
இதனால்தான் ‘சமாதானத்துக்கான சரியான வழி, எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான்’ என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் வாசிங்டன் தெரிவித்தாரோ..? எனவே, சிறீலங்கா பலத்தை பெருக்கிக்கொண்டிருக்கும் போது விடுதலைப் புலிகள் மெளனமாக இருந்துவிட முடியாது.

அவர்களும் தமது படை வலுவை கட்டியயழுப்ப வேண்டியது சமாதான காலத்திலும் அவசியமாகியிருந்தது. இந்த நிலையில்தான், தலைவர் அவர்களால் பால்ராஜ் தலைநகர் திருமலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றார். 2004ம் ஆண்டின் ஆரம்பத்தில் திருகோணமலையில் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் கால் பதிக்கின்றார். வாகரையில் புதிய பயிற்சித் தளங்களை அவர் நிறுவுகின்றார். போராளிகளுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கிழக்குக்கு தேவையான ஆயுத தளவாடங்களை தரை வழியாக கொண்டு சென்று சேர்ப்பதைவிட கடல் வழியாக இறக்குவதே சுலபமாக இருந்தது.

எனவே, அந்த மாவட்டத்திற்கு தேவையான ஆயுதங்கள் கடல்வழியாக இறக்கப்படுகின்றன. பெருமளவு மோட்டார்கள் இறக்கப்பட்டு, அதனை இலக்குகளை நோக்கி வீசுவதற்கான பயிற்சிகள் போராளிகளுக்கு வழங்கப்படுகின்றது. புதிய குறிசூட்டு அணியினர் (சினைப்பர்) உருவாக்கப்படுகின்றார்கள். குறிப்பிட்டு கூறுவதானால் பால்ராஜ் அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதலைப் புலிகள் படையணிகள் அங்கு பலம் பெறத் தொடங்கியிருந்தன.

இதேவேளை, சமாதான காலமான இக்காலத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் கிழக்கு மாகாணத்தை பார்வையிட சிறீலங்காப் படையின் உலங்குவானுர்தியில் திருகோணமலை சேனையூரில் வந்து இறங்குகிறார். அவர் சம்பூர் தொடக்கம் வாகரை வரை சென்று பார்வையிட்டு பொறுப்பாளர், தளபதிகள் ஆகியோரைச் சந்தித்து மக்களுடன் கலந்துரையாடுகின்றார். இதேநேரம், சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் போராளிகள் கடல் வழியான பயணங்களை கிழக்கிற்கு மேற்கொண்டனர். இதற்கிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களும் வன்னியில் இருந்து காடு மற்றும் கடல் வழிகளூடாக இரகசிய பயணம் ஒன்றை திருமலைக்கு மேற்கொண்டார்.

அங்கு தளபதி சொர்ணம் அவர்களுடன் இணைந்து அங்குள்ள கள நிலைமைகளை ஆராய்கின்றார். அத்துடன், அங்குள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடிவிட்டு வன்னி திரும்புகின்றார். அன்று இது ஒரு இரகசியப் பயணமாகவே அமைந்திருந்தது. இதன்பின்னர், விடுதலைப் புலிகளின் ஒரு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் கல்லடி எனும் கிராமத்தில் வானொலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் தொலைத்தொடர்பு வான்படை, கடல்வழி அவதானிப்பு கருவிகளை இணைப்பதற்காக இரண்டு கோபுரங்கள் (ரவர்கள்) அமைக்கப்படுகின்றன. கடற்கரையை அண்மித்ததாக மலையில் 120 அடி உயரம், 200 அடி உயரம் உடையதுமான இரண்டு கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

இதனை அறிந்த சிறீலங்கா படை புலனாய்வாளர்கள், இதுகுறித்து ஆராய்கிறார்கள். பின்பு சிறீலங்கா வானொலி ஒன்றில் இது செய்தியாக வெளியிடப்படுகின்றது. திருமலையில் விடுதலைப் புலிகளின் விமானத் தளம் அமைப்பதற்கான கண்காணிப்புக் கோபுரம் வெருகல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றது என்ற செய்தி அங்கு பரபரப்பினை ஏற்படுத்துகின்றது. இந்தக் கோபுரம், அருகில் உள்ள சிங்கள கிராமங்களுக்கும் தெரிவதால் அங்குள்ள சிங்கள மக்களும் ஊர்காவல் படையினரின் மனதிலும் சிறு அச்சம் ஏற்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் 2004ம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஆயுத தளபாடங்கள் கடல்வழியாக வந்து இறக்கப்படுகின்றன.

கடற்புலிகளால் ஆயுதங்கள் பாதுகாப்பாக இறக்கப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட தளபதி பானுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. வன்னியில் இருந்த ஆயுத பயிற்சி ஆசிரியர்கள், நிர்வாக திறன்மிக்க போராளிகள், தாக்குதல் வியூகங்களை வகுக்கும் தளபதிகள், இரகசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு, மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். அங்குள்ள போராளிகளுக்கு கற்பிக்கின்றார்கள். மரபுவழி படையணிகள் கட்டி வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக ஜெயந்தன் படையணி, அன்பரசி படையணி, மோட்டார் படையணி என்பன சிறப்புற கட்டியமைக்கப்படுகின்றன.

இவற்கும் மத்தியில் சிறீலங்காப் படையினர் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்துகொண்டு செயற்படும் துரோகிகள் களையப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது. விடுதலைக்கு ஆதரவாகச் செயற்படுகின்றவர்களை படைப்புலனாய்வாளர்களும், துரோகிகளும் படுகொலை செய்துகொண்டிருந்தமையால் இதனைத் தடுத்து நிறுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு இறுக்கமான நிலை ஏற்படுகின்றது. இதனால், இதற்கான விசேட அணியன்று ‘பிஸ்ரல் குறுப்’ என்ற பெயரில் இரகசியமாக உருவாக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைக்காக துரோகத் தனங்களில் ஈடுபட்ட துரோகிகள், படைப் புலனாய்வாளர்கள் இக்குழுவினரின் இலக்கிற்குள் அகப்பட்டுக்கொள்கின்றார்கள்.

இரு பகுதிக்கும் இடையே ஒரு மறைமுக மோதலாக இது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில்தான், 2004ம் ஆண்டு 12ம் மாதம் 26ம் நாள் சுனாமி தமிழீழ கரையயங்கும் தாக்குகின்றது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூர் தொடக்கம் வாகரை மாங்கேணி கடற்கரைவரை தாக்கிய சுனாமியால் ஆயிரக் கணக்கான மக்கள் காவுகொள்ளப் படுகின்றார்கள். மக்களின் உடமைகள் அழிக்கப்படுகின்றன. இதன் போதும் வாகரையில் விடுதலைப் புலிகளின் சில தளங்கள் பாதிப்படைகின்றன. குறிப்பாக அங்கு இருந்த மோட்டார் தளங்களில் கடல் தாக்கம் ஏற்படுகின்றது. இந்தச் சுனாமிப் பாதிப்பிற்குள் தளபதி பால்ராஜ் அவர்களும் உள்ளாகின்றார்.

இதனைத் தொடர்ந்து திருமலையில் மக்களை மீள்கட்டுமானம் செய்யும் பணிகளில் விடுதலைப் புலிகளின் நிர்வாக அலகுகள் செயற்படுகின்றன. கொல்லப்பட்ட மக்களின் உடலங்களை எடுத்து அடக்கம் செய்யும் பணியும், மக்களுக்கான இருப்பிட வசதிகள், உணவு வசதிகள் என்பனவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றார்கள். இதேவேளை, இந்தச் சுனாமியினால் படையினரின் வளங்களும் பாதிக்கப்பட்டு அவர்களின் போர் முன்னெடுப்புக்கள் தாமதடைகின்றன. போர் ஒன்றை சிறீலங்கா இராணுவம் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையை இந்த சுனாமி ஏற்படுத்தியது.

தொடரும்…

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*