TamilSpy

பொழுது போக்கு இணையம்…

புலிகளுடனான போருக்குப் பின்னர்..?

sri_lanka_flaggeபுதிதாக முளைக்கும் பிரச்சினைகள்: இலங்கை அரசாங்கத்தினால் சமாளிக்க முடியுமா?

இலங்கை அரசின் முழுவீச்சான போரை எதிர்கொள்வதில் புலிகள் இயக்கம் எப்படி நெருக்கடிகளை சந்தித்ததோ, அதுபோன்றே சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இப்போது அடுக்கடுக்கான பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன. எங்கிருந்து, எப்படியெல்லாம் இந்தப் பிரச்சினைகள் முளைக்கின்றன என்றே தெரியாத வகையில் அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் வலுவடைந்து வருகின்றன.

புலிகளுக்கு எதிரான போரை நடத்துவதிலேயே குறியாக இருந்த அரசாங்கம் அதன் மறுபக்கம் எத்தகைய சிக்கல்களைக் கொண்டது என்பது பற்றிக் கவலைப்பட்டதாகத் தெயவில்லை.

உலகில் எந்த நாட்டில் போர் நடந்தாலும் அங்கெல்லாம் உயிரிழப்புக்கள், அங்க இழப்புகள், மனித உரிமை மீறல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அத்தகைய கோணத்தில்தான் புலிகளுக்கு எதிரான போரை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பிரசாரத்தின் ஊடாகக் கொண்டு நடத்தியது இலங்கை அரசாங்கம்.

இந்தப் போரின் கொடூரங்களில் இருந்து விடுபட முடியாதவர்களாக அதன் பாதிப்பிலிருந்து மீளமுடியாதவர்களாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இலங்கை அரசுக்கு புதிய புதிய வடிவங்களில் நெருக்கடிகள் முளைத்து வருகின்றன.

சனல் 4 விவகாரம், முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் சுதந்திரம் குறித்த சர்ச்சைகள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள், அமெரிக்காவின் போர்க்குற்ற அறிக்கை என்று வளர்ந்து வரும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கூறப்பட்டிருக்கும் மற்றொரு குற்றச்சாட்டும் கடுமையானது.

போரில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதே அந்தக் குற்றச்சாட்டு. இதைச் சுமத்தியிருப்பவர் சாதாரணமானவர் அல்ல. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளில் போரின் போது பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். அத்துடன் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

“ருவான்டாவாவில் 1990களில் ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். சியாராலியோனில் 64 ஆயிரம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர்.

இலங்கை மற்றும் பர்மாவில் யுத்தத்தின் போது ஓர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டது. ஆனால், இத்தகைய கொடுமைகளைப் புரிவோர் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை என்றும் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

இது இலங்கை அரசாங்கத்தைப் பெதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால், இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும். இலங்கை அரசுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தக் கூடியது. இலங்கை அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கப் பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பிரசாரங்களில் ஒன்று குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் அமைந்தது. அதேவேளை, இத்தகைய குற்றச்சாட்டை சுமத்த அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்ற தொனிப்பட எதிர் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

ஈராக்கில் கைது செய்யப்பட்டு குவான்டனாமோ சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளை அமெரிக்க பெண் சிப்பாய்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யும் படங்களையும் இணைத்து இத்தகைய பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

அதேவேளை, ஹிலாரி கிளின்டன் கூறிய குற்றச்சாட்டை மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க நிராகத்திருக்கிறார். “எனது அறிவுக்கு எட்டிய வரையில் இது பொய். அப்படிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒன்றும் தெரிவிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை’ என்று அவர் கூறியிருக்கிறார்.

அத்துடன் “ஹிலாரி கிளின்டன் பொதுப் படையான அறிக்கையை விடுத்திருக்கலாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியின்போது ஒபாமாவுக்கு எதிரான பரப்புரையில் அவர் இப்படி பொதுப்படையாகக் கூறி இருந்தார்.

ஒபாமாவின் புத்தகத்தில் அவற்றை நாங்கள் பார்த்தபோதும் ஹிலாரியை நாங்கள் மன்னித்து விட்டோம்” என்றும் ரஜீவ விஜயசிங்க கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்தக் குற்றச்சாட்டு இலங்கை அரசுக்கு புதிய தலைவலியாக அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கெனவே சிறார் படைச்சேர்ப்பு விவகாரத்தில் புலிகளைச் சிக்க வைத்த அரசாங்கம் சிறார் படைச் சேர்ப்புக்குத் துணை போனதென்ற குற்றச்சாட்டுக்கும் உள்ளாக நேரிட்டது.

புலிகளுக்கு எதிரான போரின்போது பெண்கள், சிறுவர்கள் மீது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதென்பது ஹிலாரியின் பொதுவான குற்றச்சாட்டாக இருக்கின்றபோதும் அதனை வெளிப்படையாக நிரூபிப்பது மிகவும் சிக்கலானது.

அதாவது, பாதிக்கப்பட்டவர்கள் தமக்கு ஏற்பட்ட அவலங்களை வெளியே சொல்லவும் முன்வரமாட்டார்கள். தமது சக அடையாளங்களை கட்டமைப்பைச் சிதைத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம். அதனால் பெண்கள் போல் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் இதுவரையில் பெருமளவில் வரவில்லை.

அதேவேளை சில சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக சர்வதேச அரங்கில் இத்தகைய குற்றச்சாட்டு வந்திருப்பதால் இலங்கை அரசுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கிறது.

ஹிலாரி கிளின்டன் யாரையும் குறிப்பிட்டு குற்றச்சாட்டைக் கூறாவிட்டாலும், இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகக் கூடிய தரப்பு எது என்பது அனைவருக்கும் வெளிப்படை யாகவே தெரியும்.

இதற்கிடையே, அரசாங்கம் இலங்கை மீதான எத்தகைய குற்றச்சாட்டு வந்தாலும் உடனடியாக அந்த தொப்பியைத் தனக்கு அணிந்து கொண்டு அளவு பார்க்க முனைகிறது. இதுவே அது யாருக்குப் பொருத்தமானது என்பதை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தி விடுகிறது.

புலிகளுடனான போருக்குப் பின்னர் அரசாங்கத்துக்கு இப்போதைய நாட்கள் கடினமானதாக மாறியுள்ளன.

சுபத்ரா

நன்றி: வீரகேசரி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*