TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அதிகாரப்பகிர்வுக்குக் குறுக்கே இருப்பவர்கள் யார்?

Maமாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு கடந்த மாதம் 18ம் திகதி ஹபரணவில் நடைபெற்றது. இந்த 26வது முதலமைச்சர்கள் மாநாட்டில் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றிருந்தனர்.அதிகாரப் பகிர்வு பற்றியே இந்த மாநாட்டில் மிக முக்கியமாக ஆராயப்பட்டது.

மாகாணசபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் அவ்வப்போது அதிகாரங்கள் பற்றிய இழுபறி நிலை ஏற்பட்டு வருகின்றது. அனைத்து மாகாணசபைகளுமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செல்வாக்குக்கு உட்பட்டதாக இருக்கின்ற போதும் இத்தகைய இழுபறிகள் இருக்கவே செய்கின்றன.கிழக்கு மாகாணசபையும் கூட ஆளும்கட்சியின் கைகளில் தான் இருக்கிறது.

ஆனால் அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வசம் இருப்பது தான் சிறிய வித்தியாசம். கிழக்கு மாகாணசபைக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் அவ்வப்போது அதிகாரம் பற்றிய முறுகல் நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றன. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் நீண்ட காலமாகவே மாகாணசபைகளுக்குப் போதிய அதிகாரங்கள் இல்லை என்றும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் கோரி வந்துள்ளார்.அதேவேளை, அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக முன்னர், தென் மாகாண முதலமைச்சராக இருந்த சான் விஜேலால் டி சில்வாவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஏனைய மாகாண முதமைச்சர்கள் பெரும்பாலும் அது பற்றி வாய் திறப்பதில்லை.காரணம் அப்படி வாய் திறப்பது தமது பதவிக்கு ஆபத்தானது என்று கருதுவதும், கட்சியின் தலைமைக்கு விரோதமானது என்று கருதுவதும் தான்.ஆனால் கிழக்கு மாகாணசபையில் இருந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுப்பதாகவே தெரியவில்லை.இதனால், அதிகாரப்பகிர்வு விடயத்தில் கிழக்கு மாகாண முதமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் அவ்வப்போது முரண்பாடுகள் தோன்றுவதும் பின்னர் அவை தீர்க்கப்படுவதும் வழக்கமாகி விட்டது. கிழக்கில் காணிகளை ஆளுனர் தன்னிச்சையாக வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கிய விவகாரம், மாகாண பிரதம செயலாளருக்கு சேவை நீடிப்பு வழங்கிய விவகாரம் என்பன இரு தரப்பு உறவுகளில் கீறல்களை ஏற்படுத்தின.

அதுபோன்றே மாகாண ஆளுனர் அதிகளவில் நிர்வாக விடயங்களில் தலையிடுவதாகவும் கிழக்கு முதமைச்சர் கூறி வருகிறார்.
ஏனைய மாகாண ஆளுனர்கள் இப்படி மாகாண நிர்வாகங்களில் அதிகளவு தலையிடுவதாகத் தெரிய வில்லை. ஆனால் கிழக்கு மற்றும் வடக்கு ஆளுனர்கள் நிர்வாகத்தில் தலையிடுவது வழக்கமானதொன்றாகவே இருந்து வருகிறது. இது மாகாணங்களுக்கு வழங்கபபட்ட அதிகாரங்களை மட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சியாகும். இதனால் தான் ஆளுனர் தொடர்பாக கிழக்கு முதலமைச்சர் அடிக்கடி குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் நிலை காணப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் எண்ணம் அரசாங்கத்துக்கு இருக்கிறதா- அது எந்தளவுக்குச் சாத்தியமானது என்பன போன்ற கேள்விகளும் இருக்கவே செய்கின்றன. போருக்குப் பின்னர் அரசியல் தீர்வு என்று கூறியது அரசாங்கம். ஆனால் அரசாங்கம் அது பற்றிய எந்த முடிவையும் இதுவரையில் எடுக்கவில்லை. அரசாங்கத்தின் அரசியல் தீர்வு என்பது இப்போதைய மாகாணசபை முறைமைக்கு அப்பாற்பட்டதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. மாகாணசபைகளுக்கு 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அதகாரங்கள் பல கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது.

13வது திருத்தத்தில் பொலிஸ், காணி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு உரியதாக கூறப்பட்டிருப்பினும்- அதை மத்திய அரசு வழங்கவில்லை.இதைவிட வேறு பல அதிகாரங்களையும் மத்திய அரசு, ஆளுனர் மூலம் பிடுங்கி வைத்திருக்கிறது. இவையே முரண்பாடுகளுக்கான காரணமாகவும் அமைந்துள்ளன. இப்போது அரசாங்கம் 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றை வழங்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் 13வது திருத்தத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களையும் பிடுங்கும் முயற்சியில் அரசு இறங்கியிருப்பது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.குறிப்பாக பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்குவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விரும்பவில்லை என்பது வெளிப்படையாகியிருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ விரும்பிய போதும் அதற்கு அமைச்சர்கள் சிலரே எதிர்ப்புத் தெரிவித்ததாக, முதலமைச்சர்கள் மாநாட்டில் வடமத்திய மாகாண முதல்வர் பேர்டி பிறேமலால் திசநாயக்க கூறியிருந்தார். இது எந்தளவுக்கு உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டம். ஆனால் அதிகாரப்பகிர்வு விடயத்தில் அமைச்சர்களுக்குக் கட்டுப்படுபவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது அவரது கருத்து.

அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்ற கருத்து உலகெங்கும் வலுப் பெற்றிருக்கும் போது- அதிகாரங்களை மட்டுப்படுத்துவதன் மூலம் பிரச்சனைகளைத் தீர்க்க முற்படுகின்றனர் இங்குள்ள அரசியல்வாதிகள். ஆரசாங்கம் அதிகாரங்களைப் பகிர விரும்பினால் அதை வெளிப்படையாக கூறுவதுடன் நிற்காமல்- நடைமுறைப்படுத்தவும் முனைய வேண்டும்.

அதுவே அதிகாரப்பகிர்வுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைவதுடன்- மத்திய மாகாண அரசுகளுக்கு இடையிலான முரண்பாடுகளையும் குறைக்கும்.

சத்திரியன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*