TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆஸ்திரேலிய குடிவரவுக் கொள்கை இறுக்கம்: நாடு திருப்பப்பட்ட 9 சிங்களவர்கள்

sஆஸ்திரேலியாவினுள் சட்டவிரோதமாக நுழைந்து அகதிநிலை தஞ்சம் கோரிய ஒன்பது சிங்களவர்களை ஆஸ்திரேலிய அரசு சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரட்டினது புதிய அரசு பதவியேற்று அகதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் முதலாவது சம்பவம் இதுவாகும். சட்டவிரோதமாக நாடுகளுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்து கோருபவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவது நீண்ட படிமுறைகளின் கீழ் நடைபெறும் செயற்பாடாக இருந்துவரும் வேளையில், ஆஸ்திரேலிய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை ஆஸ்திரேலிய ஊடகங்களில் மட்டுமன்றி ஏனைய நாட்டு ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ள செய்தியாக மாறியுள்ளது.

அகதிகளாகத் தஞ்சம் கோரி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் வருபவர்களுக்குக் கருணை காட்டி அவர்களது உண்மையான பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கு புகலிடம் வழங்குவதில் மிகவும் நேர்த்தியான குடிவரவு கொள்கையைப் பேணிவரும் நாடு ஆஸ்திரேலியா என்று குறிப்பிட்டால் மிகையாகாது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா, இவ்வாறு தஞ்சம் கோரி வருபவர்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்லாமல் அதனை மிகவும் வேகமாக வழங்கி அவர்களையும் தனது நாட்டில் ஏனைய மக்களுக்குச் சரிசமமாக நடத்துவதில் பாரபட்சம் காட்டாத நாடு என்று கூட கூறலாம்.

இவ்வாறு ஆஸ்திரேலிய அரசு தனது குடிவரவுக் கொள்கையைப் பேணுவதில் அதற்கு பல்வேறு அரசியல் அழுத்தங்கள் உள்ளன என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்கள் விடயத்தில் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக கால காலமாக எதிர்க்கட்சிகளும் இடதுசாரிகளில் ஒரு பகுதியினரும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து, அரசு இது விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டைப் பின்பற்றவேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கிவருகின்றன.

Refugees_aus

ஆஸ்திரேலியாவின் முன்னாள் அரச அதிபர் ஜோன் ஹவார்ட் இந்த விடயத்தில் மிகக்கடுமையான கொள்கையைக் கடைப்பிடித்து ஆஸ்திரேலிய மக்கள் மத்தியில் ‘இரும்பு மனிதர்’ என்ற பெயரைப் பெற்றுக்கொண்டவர். நாட்டின் குடிவரவு கொள்கை உட்பட எந்த விடயத்திலும் கருணை காட்டாது வெட்டு ஒன்று துண்டு இரண்டாக முடிவெடுப்பவர் என்ற அடிப்படையில் அவரது ஆட்சியை ஆமோதித்த ஆஸ்திரேலிய மக்கள், நான்கு தடவைகள் அவரை பிரதமராகத் தெரிவு செய்திருந்தார்கள்.

இவரது ஆட்சிக்காலத்தில் – 2001 இல் – இடம்பெற்ற தம்பா விவகாரம் இதற்கு நல்ல உதாரணம்.

சுமார் 450 சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு வந்த தம்பா என்ற கப்பல் இந்து சமூத்திரத்தில் பழுதடைந்து கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வந்து அகதிகளை அங்கே தரையிறக்க முயன்றது. அப்போது அவுஸ்திரேலியப் பிரதமராக இருந்த ஜோன் ஹவார்ட் அதற்கு அனுமதியளிக்க மறுத்ததோடு தமது கடல் எல்லையை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் உத்தரவிட்டிருந்தார். இந்தச் சம்பவத்துக்கு உலகெங்கிலுமிருந்தும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. அதற்கெல்லாம் இம்மியும் அஞ்சாத ஜோன் ஹவார்ட் தன்னை ஓர் உறுதியான தலைவனாக தனது நாட்டு மக்களுக்குக் காண்பித்து அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். கால காலமாக அகதிகள் விடயத்தில் தனது அரசு நியாயமாக நடைபெற்று வருகிறது என்பதையும் நாட்டின் எல்லைப்பாதுகாப்பு மற்றும் கரையோர ஒழுங்கு விடயங்களில் இறுக்கமான கொள்கைகளைத் தமது அரசு கொண்டுள்ளது என்பதையும் ஜோன் ஹவார்ட் அரசு அடிக்கடி வெளிப்படுத்தி வந்தமை ஒன்றும் புதிய விடயமில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தொழிற்கட்சியைச் சேர்ந்த கெவின் ரட் பெருவெற்றி ஈட்டியதைத் தொடர்ந்து ஜோன் ஹவார்ட்டின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தற்போது ஆளும் கெவின் ரட் தலைமையிலான தொழிற்கட்சி அரசு நாட்டிற்குள் சட்டவிரோதமாக வருபவர்கள் விடயத்தில் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக பல மாதங்களாகவே விமர்சனம் தொடர்ந்துவந்தது. இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

கடந்த ஜனவரி மாதம் முதல் செம்பரம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவிற்கு 30 படகுகளில் சுமார் 1600 இற்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக வந்திருக்கிறார்கள் என்று குடிவரவு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளது. இவர்களில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் அடங்குவர். இவர்கள் 90 சதவீதமானவர்கள் மலேசியாவுக்குச் சென்று அங்கிருந்து ஒரு மணிநேரத்துக்கும் குறைவாக படகுப்பயணம் மூலம் இந்தோனேசியாவுக்கு சட்டவிரோதமாக வந்து அங்கிருந்து படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வருகிறார்கள் என்று அண்மையில் ஆஸ்திரேலிய ஊடகமொன்றில் வெளியான ஆய்வுகட்டுரை தெரிவித்திருந்தது.

aus_refugees_2

இவ்வாறு படகுகளில் வருபவர்கள் ஆஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வைத்து ஆஸ்திரேலிய கடற்படையினரால் மீட்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்படுவதோடு அங்குள்ள தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களது வருகைக்கான காரணம், அவர்களது உண்மையான பிரச்சனை என்ன, வந்த பாதை என்பவை உட்பட பல விடயங்கள் ஆஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளால் அறியப்படுகின்றன. இந்த விசாரணைகளின்போது, அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் ஆஸ்திரேலிய விதிமுறைகளை குறிப்பிட்ட அகதி திருப்திப்படுத்தினால், அவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படும். இதே நடைமுறை ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவதாக இருப்பினும், ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை மிக துரிதமாகவே இவை நடைபெறுகின்றமை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

இவ்வாறு இருக்கையில், ஆஸ்திரேலியாவுக்குள் இந்த வருடத்தில் சட்டவிரோதமாக வந்தவர்களில் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள் என்று தெரியவருகிறது. இவர்களில் பலர் ஈழத்தமிழர்கள். உண்மையாகவே சிறிலங்கா அரசின் கொடூர யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் ஒவ்வொருவருவரின் கதைகளும் சொல்லில் வடிக்க முடியாத துயர் நிறைந்தவை.

ஆனால், அதிர்ச்சி தரும் செய்தி யாதெனில், இவ்வாறு ஈழத்தமிழர்கள் என்ற போர்வையில் பல சிங்களவர்களும் ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக வந்து, தமது நாட்டில் விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று கூறி கடந்த காலங்களில் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். சிறுபான்மையின மக்களை துவம்சம் செய்து பொளத்த நாடு ஒன்றை வெற்றிகரமாக நிறுவுவதில் செல்வாக்குடன் கோலோச்சிவரும் இனவாத சிறிலங்கா நாட்டின் பிரஜை ஒருவருக்கு விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று இன்னமும் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பது ஒரு புறமிருக்க, அவ்வாறு கூறிக்கூட ஆஸ்திரேலியாவில் பல சிங்கள மக்கள் குடியுரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது அடுத்த விடயம்.

இது இவ்வாறு இருக்கையில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தற்போது கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்புமுகாமிலுள்ள சிங்களவர்கள் பலருக்குக் குடியுரிமை கோருவதற்கான காரணமாக இருந்துவந்த விடயம் தற்போது பாரிய சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. அதாவது, விடுதலைப்புலிகளால் ஆபத்து என்று இவ்வளவு காலமும் கூறிவந்த சிங்களவர்கள் தற்போது அந்த அமைப்பு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசினால் உலகெங்கும் அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், அதைக் காரணம் காண்பித்து ஆஸ்திரேலியாவினுள் மட்டுமல்ல எந்த நாட்டிற்குள்ளும் நுழையவும் முடியாதநிலையே காணப்படுகிறது.

நிலைமை இவ்வாறு இருக்கையில், இவர்களுக்கான ஒரே வழி தமது நாட்டின் பொருளாதார காரணிகளை காண்பித்து குடியுரிமை கோருவதாக மட்டுமே உள்ளது. ஆகவே, இந்த காரணத்தையே இவர்கள் தற்போது தம்மை விசாரிக்க வரும் குடிவரவு அதிகாரிகளிடம் கூற ஆரம்பித்துள்ளார்கள். இவ்வாறான பதில்களால் திருப்தியடையாத ஆஸ்திரேலியா குடிவரவு அதிகாரிகள் இவர்களை இவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளார்கள்.

ஏனெனில், உலகப் பொருளாதாரத்தின் ஈடாட்டம் எல்லா நாடுகளிலும்தான் தற்போது காணப்படுகிறது. அதிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வதற்கு குறிப்பாக சிறிலங்கா உலகெங்கும் பிச்சைப்பாத்திரத்துடன் போய் நின்று கடன்வாங்கி உயிர்வாழ்ந்து வருகிறது. கொலை மேல் கொலையாய் புரிந்து தமிழர்களை வேட்டையாடிவிட்டு, அதற்கு பரிசு போல உலகவங்கியின் கடனையும் வெற்றிகரமாகப் பெற்றுக்கொண்டது. சிறீலங்காவின் திறைசேரியை சீனா சீரும் சிறப்புடனும் பாதுகாத்துவருகிறது. இவையெல்லாம் ஆஸ்திரேலியாவுக்கு தெரியாதது அல்ல.

இவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்த ஆஸ்திரேலிய அரசு குடிவரவு கொள்கையில் மிகவும் கறாராக முடிவெடுத்து தமது நாட்டிற்குள் சட்டவிரோதமாகவரும் சிறிலங்காவை சேர்ந்த சிங்களவர்களை உள்ளே அனுமதிப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று தீர்மானித்தார்கள்.
(இவ்வாறு திருப்பு அனுப்ப முடிவுசெய்யப்பட்டவர்களில் 58 இந்தோனேஷியர்கள் அவர்களை கூட்டிவந்த நான்கு படகோட்டிகள் மற்றும் 12 இலங்கையர்கள் அடங்குவர். 58 இந்தோனேஷியர்களும் தாம் ஆஸ்திரேலியாவில் பழம்பிடுங்கும் வேலைக்காக வந்ததாக குடிவரவு அதிகாரிகளிடம் குறிப்பிட்டிருந்தார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.)

திருப்பி அனுப்ப முடிவுசெய்யப்பட்ட 12 இலங்கையர்களில் இருவர் தாமாகவே முன்வந்து தாம் தமது நாட்டுக்கு செல்ல தயார் என்று கூறி இலங்கைக்குச் சென்றுவிட்டார்கள். ஏனைய பத்துப் பேரில் ஒருவர் தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார். ஆகவே, இவரது மேன்முறையீட்டு மனு தொடர்பிலான தீர்ப்பு வரும்வரை இவரை தொடர்ந்து தடுப்புமுகாமில் வைத்திருப்பதாக குடிவரவுதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளர். மிகுதி ஒன்பது பேரும் கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து பேர்த் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டு (அந்த மாநிலத்துக்கு 800 கடல்மைல் தொலைவில்வைத்துத்தான் இவர்கள் கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய கடற்படையினரால் மீட்கப்பட்டார்கள்.) அங்கிருந்து விமானம் மூலம் சிறிலங்காவுக்கு அனுப்பிவைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒருவரான தென்னக்கோன் என்பவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியில் – தான் சிறிலங்கா விமானப்படை புலனாய்வுப்பிரிவில் முன்னர் பணிபுரிந்ததால் தனக்கு 2002 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளால் ஆபத்து இருந்துவந்ததாகவும் தற்போதும் தனது தனது மனைவிக்கு சிறிலங்காவில் இந்த ஆபத்து தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாக இருப்பினும், நாடு முற்றாக புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டது என்று அறிவித்து வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களையும் நாட்டுக்குத் திரும்புமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த அறிவிப்பு விடுத்துவரும் வேளையில், சிங்களவர்கள் ஏனைய நாடுகளில் புகலிடம் கோரும்போது அந்த நாடுகளிடமிருந்து அவர்கள் இவ்வாறான தீர்ப்பினை முகம்கொடுக்கவேண்டியது இனிவரும்கால நிர்ப்பந்தமாகவே இருக்கப்போகிறது.

நன்றி: நேசன்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*