TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழன் சாகப் பிறந்தவன்… இந்தியனுக்கு இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டியைக் காக்கும் தலையாய கடமையிருக்கிறது!

SORAதலைநகர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் உணர்வாளர்கள் சிலர் நேற்று தாக்கியிருக்கிறார்கள். சின்ன சேதம்தான். எந்த சிங்கள உயிருக்கும் பாதிப்பில்லை.

ஆனாலும் விழுந்தடித்துக் கொண்டு தன் கவலையை, அக்கறையைத் தெரிவித்த இந்திய அரசு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இலங்கைத் தூதரகத்துக்கு காவல்துறைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியது.

நாம் இதைக் குற்றம் சொல்லவில்லை. செய்ய வேண்டியதுதான். ராஜாங்க உறவுகளைப் பேணிக் காக்க இந்த மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதான்.

INDIA-SRI LANKA-GANDHI-RAJAPAKSE

ஆனால், இந்திய எல்லையிலிருந்து வெறும் 16 கிலோமீட்டர் தொலைவில் சிங்களர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு இனம். ஒரே நாளில் இருபதாயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். இன்றும் தினம் தினம் வெளியில் தெரியாத தமிழர் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளன.
இந்த கொடூரத்தை கொஞ்சமாவது தடுத்து நிறுத்துமாறு தீக்குளித்து தங்கள் கோபத்தையும் ஆற்றாமையையும் காட்டினார்கள் இந்தியப் பிரஜைகளான தமிழர்கள்…

ஆனால் காதிருந்தும் செவிடாய் வேடிக்கை பார்த்ததோடு நில்லாமல், அந்த இனப் படுகொலைக்கு கிரியா ஊக்கியாக நின்று ஆயுதங்களும் ஆதரவும் வழங்கியது இந்தியா. இன்னும் கூட சிங்களவர்களின் தோன்றாத் துணையாக நின்று தமிழர்கள் கொடூர சித்திரவதைகளை அனுபவிக்கக் காரணமாக உள்ளது. நடந்த கொடுமைகளை மூடிமறைத்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாதத்தின் கயமைத்தனத்துக்கு ஐநா வரை பாதுகாப்பாய் போய் வருகிறது இந்த பாழாய் போன பாரத தேசம்.

இன்னொரு பக்கம் இந்தியர்களான தமிழக மீனவர்கள் கிட்டத்தட்ட தினசரி தாக்கப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கான மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலையில் அடைபட்டு மீண்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிக்குள் கூட மீன் பிடிக்க முடியாத அளவுக்கு இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இதை இதுவரை இந்திய அரசு உறுதியுடன் தடுத்து நிறுத்தவில்லை. மிகக் கடுமையான முறையில் ஒரு எச்சரிக்கையைக் கூட இதுவரை விடவில்லை. இந்திய தூதரகம் ஒப்புக்குக் கூட இலங்கையிடம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

அட அவ்வளவு ஏன், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்களான தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு இதுவரை- ஒரு உயிருக்குக் கூட – இந்திய அரசின் சார்பில் நிதியுதவியோ அல்லது வேறு வகையான உதவிகளோ செய்யப்படவில்லை – குறைந்தபட்சம் ஆறுதல் கூட தெரிவிக்கப்பட்டதில்லை.

ஆனால் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், போலீஸ் பாதுகாப்பு என்ன… தீவிர விசாரணை என்ன… வெளியுறவுத் துறைச் செயலாளரே வருத்தம் தெரிவிப்பதென்ன…பிரதமர் பேசுவதென்ன… அடடா.. புல்லரிக்குது இவர்கள் வேகம். ஆனால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது வெற்று ஆறுதல் வார்த்தைகளுக்குக் கூட பஞ்சமாகிவிட்டிருந்தது இந்திய அரசுக்கு.
IND02148B
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கடிதம் கடிதமாக எழுதினார்… எழுதிக் கொண்டிருக்கிறார். அந்தக் கடிதங்களை எடைபோட்டிருந்தால் கிடைத்த பணத்தில் பட்டினியால் தவிக்கும் ஒரு தமிழனின் ஒரு நாள் பொழுது கழிந்திருக்கும். ஆனால் அந்தக் கடிதங்களுக்கும் கூட ஒரு பதிலும் இல்லை, டெல்லி மகாராஜா / ராணியிடமிருந்து.

தமிழன் என்று வரும்போது மட்டும் இந்திய அரசுக்கு பேதமே தெரிவதில்லை போலும். ‘அது ஈழத் தமிழனோ… இந்தியத் தமிழனோ… உணர்வுகளைக் கொல்லுங்கள்… முடிந்தால் உயிரையும்’ என்பதுதான் சிங்கள – இந்திய கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் போலிருக்கிறது!

சாகப் பிறந்தவன் தமிழன்… கேவலம் அவன் உயிருக்காக இலங்கை தூதரகத்தின் பூத்தொட்டிகள் உடைவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியமா… அடிச்சுக் கொல்லுங்க அந்த ‘உணர்வாளர்களை’!

குறிப்பு: இருக்க இடம், உண்ண உணவு, பாதுகாப்பான சூழல்… இதைவிட என்ன வேண்டும் ஒரு குடிமகனுக்கு… உணர்வுகள் மதிக்கப்பட்டால் என்ன… காலில் போட்டு மிதிக்கப்பட்டால் என்ன என்ற சிந்தனை கொண்டவர்கள் இதைப் படிக்காமலேயே கூட விட்டுவிடலாம்!

-ஷங்கர்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*