TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த…எழுதாத கவிதைகள்..

fl“கண்மணி…கண்மணி…எடி பிள்ள கண்மணி…” வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். “எடி மோனை…சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு…” மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. “எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்…” சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய்மூடவில்லை .

“கண்மணியே…கண்மணியே…சொல்லுவதைக்கேளு…” முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். “செருப்பு பிய்யும்…” பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். “என் கண்மணிக்கு கோபம் வந்தால்…” மேலும் பாட, “பாருங்கோ அம்மா !… அப்புவுக்கு குடுக்கிற ஏச்சில எல்லாம் சரி வரும்…” எடுத்த கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு “நான் சாப்பாடு வாங்க போகமாட்டன்…” கண்மணி இருந்திட்டாள்.

சமையல் கூடம் தொடங்கி வீதி வரை வரிசையாக மக்கள். குஞ்சு குருமன் எல்லாம் வெள்ளிக்கிண்ணங்களுடன். கண்மணி வந்திட்டாளா? முருகேசர் உற்று நோக்குகிறார். அவள் தென்படவில்லை. எழுந்து வந்தார். சூரியன் சற்று விலகி விட்டான். கிண்ணங்களில் பட்டுத்தெறித்த கதிர்கள் முருகேசரின் முகத்தில் அடுத்தடுத்து விழுந்தன. பார்த்துக்கொண்டு நின்ற சிறிரங்கன் “என்னப்பு எல்லாரும் உங்களை போட்டோ எடுக்கிறாங்கள்…” கிண்டலாக. “ஓமடா மோனை போட்டோதானே…எடுக்கட்டும் எல்லாத்தையும் இழந்திட்டம் மிஞ்சியிருக்கிறது இந்த உடம்பு அதையாவது எடுத்து வைச்சா…இதுதான் முருகேசன்ட சொத்து எண்டு பேத்தியிட்ட குடுக்கலாமெல்லே…” கூறியவர் சிறிரங்கனுக்கு முன்பாக வரிசையில் நுழைந்தார். “இஞ்ச பாருங்கோ…நாங்களும் வெயிலுக்க வரிசையில்தான் நிக்கிறம் இடையில் நுழையிற சேட்டை இருக்கப்படாது…” பின்னால் இருந்து ஓர் குரல் ஒன்று மட்டுமல்ல அஞ்சிஞ்சி அடுத்தடுத்து வந்து வீழ்ந்து வெடித்ததைப்போல் பல குரல்கள் அண்ணாந்து பார்த்த முருகேசர் “பரந்தாமா !… பரமேஸ்வரா !… சீனிவாசா !… சிறிரங்கா !… என புலம்ப பின்புறம் நின்ற சிறிரங்கன், “என்னப்பு…”என்று வினாவ “நான் உன்னைக்கூப்பிடவில்லையப்பா கடவுளை கூப்பிடுறன்…” “அப்பு நீங்கள் பேசாமல் இருங்கோ நான் கதைக்கிறன்…”வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்து விட்டது.

am

கூடாரத்துக்குள் இருந்த கண்மணி எட்டிப்பார்த்தாள். சிறிரங்கனுக்கு இரண்டு பேர் சேர்ந்து கும்மாங்குத்து. “அப்படிப்போடு… போடு… அடிச்சுப்போடு கையால…” மெதுவாக பாடியவள் “நல்லாய் வாங்கிக் கட்டு உன்ர தொந்தரவு என்னால தாங்கவே ஏலாது…” தனக்குள் முணுமுணுத்தாள். இவ்வாறு இருக்க முகாம் தலைவர் அங்கே வந்தார். “என்ன பிரச்சனை ? தயவு செய்து சண்டையை நிறுத்துங்கோ…” குப்புறப்படுத்திருந்த சிறிரங்கன் எழுந்தான். வீங்கிய கன்னம், கிழிந்த சேட், முருகேசரை பார்க்கிறான். அவிழ்ந்த வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டிருந்தார். “இஞ்ச பாருங்கோ ! இனிமேலாவது வரிசை குழுப்பாது ஒழுங்காக வந்து சாப்பாடு வாங்கிப் போங்கோ. முதல் எங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கவேணும். அது இல்லாததால்தான் துண்டைக்காணோம், துணியைக்காணோம் எண்டு வந்து இந்த முகாங்களுக்க அடைபட்டு இருக்கிறம்…” தலைவர் சொல்ல முருகேசருக்கு முன்னால் நின்ற செல்லையா விம்மினார். “என்ன செல்லையா…? தடிமலே…? மூக்கு துடைக்கிறாய்…” “இல்ல அண்ண… ஓடி வந்தபோது நந்திக்கடலில்…கழண்டு போன சாரத்தையும், நான் வந்த கோலத்தையும் நினைக்க அழுகை வந்திட்டுது…” “சச்ச…கடந்ததுகளை நினைக்காதை, கவலை வரும் தலைவர் சொல்லுறதைக் கேள்…”என்றார் முருகேசர். “இன்னொரு விசயம் சொல்ல மறந்திட்டன் நாளைக்கு சமைக்கிறதுக்கு விறகில்ல. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கட்டை கொண்டு வந்தால் போதும்…” தலைவர் சொல்லி முடியவில்லை, இப்படி எண்டா.. எங்களுக்கு சாப்பாடு வேண்டாம், நிறுவனந்தானே விறகும் தாறது போய் நிறுவனத்தை கேளுங்கோ… விறகு எடுக்கிற இடத்தில கால் வைக்கலாம் எண்டால் பரவாயில்ல.. அங்க முழுதும் மிதிவெடி… “முருகேசர் சொல்ல எல்லாரும் சிரித்தனர்.

* * *
மிதிவெடி என்று சொல்ல சிரிக்கிறார்கள் என உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் அவர் சொன்னது வெடிக்கும் மிதிவெடியல்ல. மக்களின் மலங்கள். முருகேசர் வாழும் முகாமில் ஏறத்தாழ ஜம்பது வலயங்கள். ஒருவலயத்தில் குறைந்தது ஆயிரத்து ஜநூறு பேர் இருப்பார்கள். மக்களின் தொகைக்கேற்ப மலசல கூட வசதியில்லை. அதனால் பொழுது விடியும் முன்பே அழிக்கப்பட்ட காட்டு மரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் வரம்புகளில் மக்கள் குந்தி விடுவர். நீர் வசதியும் இதே போன்றுதான். குழாய்க்கிணறு, பவுசர் நீர், அதை விட குழாய் நீர் விநியோகம் இவை எல்லாம் நடைபெறினும் மக்கள் தண்ணீரை காசு போல கட்டு மட்டாகத்தான் பாவிக்கிறார்கள்.

* * *
மதியச் சாப்பாட்டு வேளை முடிந்தது. தண்ணி எடுக்கச் செல்பவர்கள் செல்ல… ஆங்காங்கே தெரியும் மர நிழல்களுக்குள் இளைப்பாறுவர் இளைப்பாற…. இவ்வாறு மக்கள். முருகேசர் அந்த வீர மரத்தை சென்றடைகிறார். குளித்தது போன்று வியர்வை. சால்வையி்ல் துடைத்துக்கொண்டு “ம்…என்ன கொடுமை.. தறப்பாளுக்க இருக்க ஏலாதப்பா… மா..அவியிற சூடு. ஏன்தான் இதுக்க எங்கள வேக வைக்கிறாங்களோ…? அது சரி. தெரியாமல்தான் கேட்கிறன். புலிகளை அழிச்சிட்டம் எண்டு சொல்லுகினம். பிறகு எதுக்கு எங்களை கம்பி போட்டு அடைச்சு வைச்சிருக்கினம்…” “முருகேசண்ண..! எங்கட பெடியள் கொஞ்சப்பேர் காட்டிலையும், இந்த முகாங்களுக்கையும் இருக்கிறாங்களாம். எல்லாரையும் களைஞ்சு போட்டுத்தானாம் மீள்குடியேற்றம்…” என்றார் செல்லையா. “என்னத்தை களையிறது…?” “அண்ண..! இதுக்குள்ளேயே புலிகள் அழியவில்லை. போராட்ட்ம தொடரும் எண்டு கக்கூஸ் கூடுகளில் எழுதுறவங்களை அங்க கொண்டு போனா… சொறியாமலே இருப்பாங்கள், இவ்வளவு காலமும் போரால பட்ட சீரழிவு போதுமண்ண…அவங்கள் தாறத வாங்கிக்கொண்டு பேசாமல் இருப்பம்…” “டே…டே…செல்லையா கொஞ்சம் பொறு. நாங்கள் சொன்னனாங்களே…? சண்டை செய். எங்களை இஞ்ச இழுத்து வா. முகாமுக்க அடைச்சு வை. சாப்பாடு தா. தண்ணி தா. கேட்டனாங்களே…? எது தந்தாலும் நாங்கள் திருப்தியடைய மாட்டம். தமிழருக்குரிய உ ரிமை தர வேணும்…”முருகேசர் உணர்ச்சிவசப்பட்டு பேச, ” அண்ண.!.. வேண்டாம்..அண்ண.. இதோட விட்டிடு… வேண்டாம் அண்ண…”செல்லையா நடுக்கத்தோடு சொல்லி முடித்தார். “ஓமடாப்பா !.. அந்த கதையை விடுவம். அங்க பார்…பெண்டுகள் பெடியள் எல்லாம் ஓடுதுகள்…” “லொறியில பிஸ்கட்டும் தண்ணிப்போத்தலும் குடுக்கிறாங்களாம்…” சிறுவன் ஒருவன் சொல்லிக்கொண்டு ஓடினான். “முருகேசண்ண !… வா…எங்களுக்கும் தருவாங்கள்…” செல்லையா சாரத்தை மடிச்சுக் கட்டினார்.
m* * *

இங்குள்ள நிலமை இதுதான். இந்த விடயத்தில் எவருக்கும் வெட்கம் வருவதில்லை. முதலாளி என்ன? சம்மாட்டி என்ன? யாராய் இருந்தாலும் நீ முதல், நான் முதல் என வரிசையில் நின்றுதான் வாங்க வேண்டு்ம. இதில் கைகலப்பு வாக்குவாதம் எல்லாமே வரும். இப்பொழுது ஓரளவு குறைவு. வியாபார நிலையங்கள் முகாங்களுக்குள் இருப்பதால் சமைத்த உணவு தவிர இலவச விநியோகம் குறைக்கப்பட்டுவிட்டது. முகாமுக்கு வந்த தொடக்கத்தில் சாப்பாடு வாங்கச் சென்ற முருகேசர் கால்களுக்குள் மிதிபட்டு மூச்செடுக்காமல் இருந்த சந்தர்ப்பமும் உண்டு. ஒருவன் வாங்கிய உணவுபொதியை கிடைக்காத இன்னொருவன் தட்டிப்பறித்த சம்பவமும் உண்டு. தத்தமக்கென சொந்தக்காணி, வீடு சாசல், தொழில், தோட்டம் துரவு என வைத்திருந்த இவர்கள் இன்று வெறுங்கையுடன் நின்று அரசு தொண்டு நிறுவனங்கள் போடும் பிச்சையை ஏந்திக்கொண்டிருக்கிறார்கள். வரலாறு காணாத வார்த்தையால் வடிக்க முடியாத இத்துயரச்சம்பவங்கள் இவர்கள் மனதை விட்டு என்றும் அகலாது.

* * *
“ம்…சிறிரங்கன் இண்டைக்கு இந்தப்பக்கமும் இல்ல. பாவம் பெடியன் காச்சலோட நல்ல அடி வாங்கிட்டான். சிறிரங்கா…சிறிரங்கா…” முருகேசர் அவன் இருக்கும் தறப்பாளுக்குள் நுழைந்தார். அவன் காச்சலால் உதறிக்கொண்டிருந்தான். கொழுத்தும் வெயில். காற்று வாரி இறைக்கும் தூசு. தறப்பாள் வெப்பம். சன நெரிசல். ஈக்களின் கொண்டாட்டம், கழிவு வாய்க்கால்களின் துர்நாற்றம் நோய் வராமல் என்ன செய்யும் ? சிறிரங்கனைப்போல் இன்னும் எத்தனையோ பேர். வாந்தி பேதி வேணுமா ? வயிற்றோட்டம் வேணுமா ? செங்கமாரியா ? மங்கமாரியா ? மூளைக்காய்ச்சலா ? மலேரியாக்காய்ச்சலா ? எது வேண்டும் முகாமில் எல்லாம் உண்டு. சிறிரங்கன் தனிநபர் பதினெட்டு வயது நிரம்பவில்லை. பெற்றோர் சகோதரர் செல்வீழ்ந்து பூண்டோடு கயிலாயம். “நான் எதற்கு தப்பி வந்தேன்…” அவன் இப்போது யோசிப்பதுண்டு. தனது கவலைகளை மறப்பதற்காக கண்மணியை நினைப்பதுண்டு. அவளுக்கு வயது பதினாறு. பொக்கணையில் பச்சைத்தண்ணியில் அவித்த பருப்பும் சோறுந்தான் சாப்பிட்டாள் என்றாலும் பரவாயில்லை பருவ வயது அவளில் களை கட்டியது. “அப்பு…அப்பு…ஓடி வாங்கோ…தண்ணிப்பவுசர் வந்திட்டுது. வரிசையில் நில்லுங்கோ. நான் டாசர் எடுத்துட்டு வாறன்…” முருகேசரை அழைத்தாள் கண்மணி . “நான் கூப்பிட வர ஏலாது.. நீ கூப்பிட்ட உடன நான் வேணுமே ! ..போய் வரிசையில் நில். வெயில் குளிச்சு தண்ணி எடு…” “நீங்கள் என்ட சொந்தப்பெயரை கூப்பிட்டிருந்தால் வந்திருப்பன். கண்மணி எண்டு ஏன் கூப்பிட்டனீங்கள்…? ” “எடி பிள்ள…கண்மணி அன்புப்பெயர் நான் சாகும் போதும் கண்மணி எண்டுதான் கூப்பிடுவன்…” முருகேசர் சொல்ல, “நானும் அப்படித்தான் கூப்பிடுவன்…”சிறிரங்கனும் சொன்னான். “மூக்கும் முழியும் ஆளைப்பாரன்…” சொன்னவள் டாசருடன் பவுசர் நிற்கும் இடம் சென்றாள்.

“அப்பு… ஆஸ்பத்திரியில டோக்கன் எடுத்து தாறீங்களே..? ஏலாம இருக்கு. எப்பிடி அதில போய் நிக்கிறது…?” “எட பொடியா…! இஞ்ச உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு போனால் பனடோல் மட்டுந்தான் தருவாங்கள். எந்த வருத்தம் எண்டு சொன்னாலும் அதுதான். மருந்துகள் இல்ல அதை விட ஆமியிட்ட அடி வாங்கினாலும் பரவாயில்ல குமாரசாமி முகாமில இருக்கிற இந்தியன் ஆஸ்பத்திரிக்கு போவம்…” “ஓமோம் விடிய ஜஞ்சு மணிக்கு வெளிக்குடுவம்…” குமாரசாமி முகாம் கூப்பிடு தூரத்தில்தான். இருந்தும் அங்கு போவதென்றால் இலகுவான காரியமல்ல. முட்கம்பி வேலி கடக்க வேண்டும். ஜம்பது மீற்றருக்கு
ஒரு காவலரண்கள். விடிய ஜந்து மணி இருவரும் வேலிக்கு அருகில் செல்கின்றனர். “தம்பி டேய்…! நேற்று ஆமிக்காரனுக்கு எங்கட சனம் கல் எறிஞ்சதுகள். கோபத்தில நிற்பாங்கள் கவனமாக பார்த்து வேலியுக்க நுழைஞ்சு போ…” முருகேசரின் ஆலோசனை அங்கும் இங்கும் பார்த்த சிறிரங்கன் தவழ்ந்து தவழ்ந்து ஒருவாறு நுழைந்து விட்டான். முருகேசரும் அப்படியே செல்ல இராணுவ வீரன் கண்டுவிட்டான். “அடோ..! எங்க போறது. புலி நல்ல றெயினிங் தந்திருக்கு. நீ கிழட்டு புலி அப்படித்தானே…!” என அதட்டினான். “இல்லை…ஜயா…மருந்து எடுக்கப்போறன்…” பயத்தால் முருகேசருக்கு வேட்டி கழன்றது. “சரி…சரி…அப்பு ஆச்சே…அதனால் விடுறன். இன்னைக்கு மட்டுந்தா…இனி மேல் டோக்கன் எடுத்து போக வேணும் சரியா…? “முருகேசர் தலையாட்டினார். தண்ணிக்கு டோக்கன், சாமான் வாங்க டோக்கன், ரெலிபோன் கதைக்க டோக்கன், குளிக்கிறதுக்கு டோக்கன்… கக்கூசுக்குத்தான் டோக்கன் இல்ல அதுவும் எப்பவோ…? நினைத்துக்கொண்டு வேகமாக நடக்கிறார்.

மருத்துவ மனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் நின்றும்..இருந்தும்..படுத்தும்..நிற்க இடமில்லாமலும்..அதைப்பார்த்ததும் சிறிரங்கனுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்தது. “தம்பி ஒன்பது மணிக்குத்தான் டாக்குத்தர்மார் வருவினம். இப்படி வரிசையில் நிண்டா…பின்நேரந்தான் முகாம் திரும்ப வேண்டி வரும் ஆஸ்பத்திரி கூட்டினால் டோக்கன் முதல் தருவாங்களாம். நீ இதில இரு நான் கூட்டியிட்டு டோக்கன் எடுக்கிறன்…” கூறிவிட்டு போகும் முருகேசரை அவன் பரிவோடு பார்க்கிறான். “எண்ட பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் கட்டாயம் வரவேணும்…” ஒருவன் அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டு வந்தான். சிலர் சிரித்தனர். பலர் அனுதாபப்பட்டனர். வேறு சிலர் சந்தேகப்பட்டனர். அவன் இருந்த இடம் பொக்கணை. திரிபோசா வாங்கச்சென்ற மனைவியும் இரு பிள்ளைகளும் வீடு திரும்பவில்லை. செல் வீ்ழ்ந்து சிதறியவர்களில் அவர்களும் அடங்குவர். அன்றில் இருந்து அவன் அப்படித்தான். இன்று அவனுக்கு பைத்தியம் என்று பெயர். இப்படி அவன் மட்டுமல்ல. முகாங்களுக்குள் இன்னும் பலர். முருகேசர் கூட்டித்துடைத்து ஒருவாறு டோக்கன் எடுத்திட்டார். சிறிரங்கனை மருத்துவர் பரிசோதித்தபோது அவனுக்கு செங்கமாரியுடன் மூளை மலேரியா. நோயாளர் காவு வண்டியில் வவுனியா அனுப்பி வைக்கப்பட்டான்.

vm

இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. சிறிரங்கன் முகாம் திரும்பவில்லை. அவன் கரைச்சல் தாங்காமல் ஏசியவள் இப்போ அவனை காண ஏங்குகிறாள். வைத்திய சாலையில் இருந்து வரும் நோயாளர் பேரூந்தை தினமும் பார்ப்பாள். அவன் வருவதில்லை. கடுமையான நோயாளர் சிலர் பிணமாக திரும்புவார்கள். கண்மணியின் தோழி பள்ளித்தோழி சுதர்சினி சென்ற ஞாயிற்றுக்கிழமை அவ்வாறே. ஞாபகம் வந்தது அவளுக்கு தனிமையை நாடுவாள். தன்னையறியாமல் நகம் கடிப்பாள். பொக்கணையில் இருந்து நீரேரி கடந்து வருகையில்தான் இருவரின் சந்திப்பு நடந்தது. கழுத்து வரை தண்ணீர் தலையில் ஒரு பை கண்மணி நடக்கிறாள் சனத்தோடு சனமாக. தவறி பள்ளம் ஒன்றில் கால் வைத்தவள் அமிழ்ந்து கொண்டு போனாள். “கடவுளே என்னைக்காப்பாற்று….”சத்தமிட்டாள். முன்பின் தெரியாதவள் என்றாலும் பரவாயில்ல. ஆபத்துக்கு உதவாதவன் மனிதனா? சிறிரங்கன் அவள் கையை பிடித்து தூக்கினான். அந்தக்காட்சி அவள் மனதில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது. “கண்மணி…” கூப்பிட்ட சத்தம் கேட்டு திடுக்குற்றாள். முன்னால் முருகேசர் “நான் வந்தது நிண்டதும் தெரியாமல் அப்பிடி என்ன யோசினை ? யு.என்.எச்.ஈ.ஆர் சாமான் குடுக்கிறாங்களாம், முதல் ஓடிப்போய் டோக்கன் எடு. நான் குடும்ப அட்டையோட பின்னால வாறன்…” “எப்ப பார்த்தாலும் ஓடு…ஓடு…டோக்கன் எடு. இதை விட அப்புவின்ட வாயில் வேற வார்த்தையே கிடையாது…” என்றபடி எழுந்து சென்றாள். அப்போது ஒலி பெருக்கியில் ஒரு அறிவித்தல். வீட்டு இலக்கம் பதின்மூன்று வலயம் முப்பதை சேர்ந்த சீனிவாசன் சிறிரங்கன் சாவடைந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் வவுனியா வைத்திய சாலையில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளது. எனவே இதே வலயத்தை கண்மணி மே.பா. தியாகராஜன். எமது கச்சேரி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அன்னாரின் உடலை பொறுப்பேற்கும் படி வேண்டப்படுகின்றனர். அவள் கண்கள் குளமாயின. அந்தச்செய்தி முருகேசரின் செவிட்டுக் காதிலும் விழுந்தது.

( யாவும் நிஜம் )

நன்றி ஈழநாதம்: யாழின்மொழி

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Poems
 • Pollachi Nasan says:

  your site is valuable
  you are giving latest information
  I appriciate your activity
  Visit my web and download kasi annna
  sirukathai – It is in naal oru nool
  1000 th upload/
  till now I have uploaded 1011 uploads
  in naal oru nool
  visit and downlaod
  yours
  pollachi nasan

  October 6, 2009 at 17:37

Your email address will not be published. Required fields are marked *

*