TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அவலத்தை கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்

FLமுப்பதாண்டு விடுதலைப் போரின் தியாகங்களை சுமந்த மக்களின் கண்ணீரைக்கண்டும் நாம் கலங்காமல் இருக்கின்றோம்

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து விட்ட மகிழ்ச்சியில், பெரியளவிலான விழாக்களையும், களியாட்டங்களையும் நடத்திக் கொண்டிருகிறது சிங்கள அரசு. ஆனால், கண்ணுக்கு முன்னால் தமிழர் தாயகத்தில் இத்தனை கொடுமைகள் நடந்தும் தமிழர் தரப்பு இன்னமும் ஒரு வித மாயையில் இருந்து விடுபடாமல் நிற்கிறது.

தமிழரின் போராட்டம் இராணுவ ரீதியான தோல்வியை சந்தித்ததை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாதிருப்பது உண்மை. ஆனால், இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழ்மக்களால் நிரந்தரமாகத் தலையெடுக்க முடியாதபடி- நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதும் இதற்கு தமிழ்த் தேசியத்தின் வழிவந்தோரே காரணமாக அமைந்திருப்பதும் தான் வேதனையான விடயம்.

இந்த நிலையை உருவாக்கியதற்கு யார் பொறுப்பு?

முப்பதாண்டு விடுதலைப் போரின் தியாகங்களை சுமந்த மக்களின் கண்ணீரைக்கண்டும் நாம் கலங்காமல் இருக்கின்றோம்

இது சதியா- இல்லை விதியா?

இது தமிழினத்துக்கு மிக மோசமானதொரு சோதனைக் காலம் என்றே சொல்லாம். தமிழர்கள் தமது மக்களுக்கான தலைவிதியின் அடுத்து கட்டம் பற்றித் தீர்மானிக்க முடியாதவர்களாகத் தள்ளாடித் தடுமாறி நிற்கும் நிலை கண்டு சிங்களதேசம் வாய்விட்டுச் சிரிக்கிறது. இப்போது தான், தமிழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதல் பொறுப்பு வந்திருக்கிறது.

முப்பது வருடப் போர் எமக்குப் பல பாடங்களைத் தந்திருக்கிறது. அதில் ஒன்று ஆயுதப்போராட்டத்தின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க இந்த உலகம் அனுமதிக்காது என்பது. இதுபற்றிய மாற்றுக் கருத்துகள் பலருக்கு இருக்கலாம். ஆனாலும் காலத்தின் தேவைகளை கண்டறிந்து அதற்கேற்ப செயல்வடிவங்களை மாற்றியமைப்பதே இராயதந்திரமாகும். அது மாற்றப்பட முடியாதது.

களத்துக்கு வெளியே இருக்கின்றவர்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றாலும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது தாயகத்தில் உள்ள மக்கள் தான். தொடர்ச்சியான போரினாலும் அவலங்களாலும் அழிவின் மேல் அழிவைச் சந்தித்து நிற்கும் மக்களிடத்தில் இருந்து ஆயுதப் போரை முன்னெடுக்குமாறு கேட்க முடியாது.

அதைவிட, ஒப்பற்ற தலைவனாக இராணுவ விற்பன்னராக இருந்து ஆயுதப்போராட்டத்தை வழிநடத்திய தேசியத் தலைவராலேயே இந்தப் போராட்த்தற்கு முடிவு காண முடியாதபோது-தொடர்ந்தும் ஆயுதப்போர் நடத்தி வெற்றி காணமுடியும் என்ற நம்பிக்கையில் இருப்பது முட்டாள்த்தனம்.
விடுதலை கோரிய ஆயுதப் போராட்டங்கள் அனைத்துமே இன்றைய நவீன உலகில் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலை எப்போது உருவானதோ அப்போதே ஆயுதப் போராட்டங்களின் வெற்றிக்கு சாத்தியம் குறைந்து போய்விட்டது. ஆனாலும் ஈழத்தமிழினம் கடைசி வரை ஆயுதங்களோடு போராட்டிப் பார்த்து விட்டது. இன்னொரு ஆயுதப்போரை நடத்தும் அளவுக்கு தமிழ்மக்களிடம் பலம் இல்லை. அதற்கான தெம்பும் இல்லை.

1980 களின் தொடக்கத்தில் ஆயுதப்போர் தீவிரம் பெற்றபோது- புலிகள் இயக்கத்தில் நூறுக்கும் குறைவானோரே இருந்திருக்கலாம். அப்போது இராணுவத்தின் பலம் வெறும் 20,000 தான். ஆனால் இன்று 200,000 ஆக இருக்கின்ற படையை 300,000 ஆக அதிகரிக்க இலங்கை அரசு முனைகிறது. முன்னெப்போதும் இல்லாத பலத்துடன் இருக்கின்ற அரசபடைகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இதற்கு முன்னர் நாம் அரசபடைகளைக் குறைத்து மதிப்பிட்டதும் தமிழர் படைபலத்தை மிகைப்படுத்தியதும், வரலாற்றில் மிகமோசமான நிலைக்கு எம்மைக் கொண்டு சென்ற பாடத்;தை மறந்து விடக் கூடாது. இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பப் புள்ளியில் இருந்து தொடங்க நினைத்தால்- என்ன நிகழும் என்பதையும் அதன் பேரழிவுகளையும் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.

அதற்காக எமக்கு அவலங்களைக் கொடுத்தவனுக்கு அதையே பரிசளிக்காது விட்டு விட வேண்டும் என்று கூற வரவில்லை. நிச்சயமாக எமக்கு இந்த நிலையை ஏற்படுத்திய சிங்கள தேசத்துக்கு எமது வலிமையை உணர்த்த வேண்டும். ஆனால் அது சாத்தியமான வழிகளினூடாக செய்யப்பட வேண்டும். செய்ய முனைய வேண்டும். சிங்களத்தின் இறுமாப்பைச் சிதைக்க அரசியல் வழியில், பொருளாதார வழியில், இராஜதந்திர வழியில் போர்களை நடத்தும்; நிலைக்கு நாம் வளர வேண்டும். எமது விடுதலைப் போரின் வெற்றிக்கு தமிழகத்தின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஆனால் தமிழகத்தின் ஆதரவுத் தளம் இப்போது இல்லாமல் போயிருக்கிறது.
இதற்கு என்ன காரணம்?

யார் பொறுப்பு?

தமிழகத்தில் ஒரு சில மனிதர்களின் முடிவுகளால் எல்லோரும் முட்டாள்களாக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அது தான் உண்மை. போலியான கனவுகளுக்குள், ஈழத்தமிழரின் மரண ஓலத்தைப் புதைத்து விட்டு- உண்மையின் சமாதி மீது உட்காந்திருப்பவர்கள் தான் இந்த நிலைக்குப் பொறுப்பு.

முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ இருபதாயிரம் உயிர்களின் கொடிய சாவு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அச்சமடைந்து போயிருந்த இந்திய- இலங்கை அரசுகள் இப்போது பெரும் நிம்மதியோடு இருக்கின்றன. இப்படியொரு ஆறுதல் தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் மரணம் என்ற துன்பியல் நிகழ்வு தமிழகத்தில் ஏற்படுத்தக் கூடிய கொந்தளிப்பு- இலங்கை அரசை ஆட்டிப் படைக்கும் என்ற அச்ச உணர்வு வெறும் வார்த்தைகளோடு முடங்கிப் போயிருக்கிறது. நாம் தெளிவான முடிவை எடுத்திருந்தால்- எமக்கு இந்த நிலை வந்திருக்காது. அச்சத்தில் இருந்து சிங்கள அரசு இன்னும் விடுபடாமல் நின்றிருக்கும்.

அதேவேளை புலம்பெயர்நாடுகளில் நடத்தப்பட்ட- நடத்தப்படும் போராட்டங்கள் இன்று மெல்ல மெல்லச் செத்துக் கொண்டு போகிறது. புலிகளின் அழிவுக்குப் பின்னர் இன்னமும் வீரியம் பெற்றிருக்க வேண்டிய போராட்டங்கள் இப்போது மறுவளமாகப் பயணம் செய்கிறது.

புலம்பெயர் மக்கள் நடத்திய போராட்டங்கள் தமிழ் மக்களுக்காக நடத்தப்;பட்டதா அல்லது புலிகளுக்காக நடத்தப்பட்டதா என்று சிந்திக்கும் அளவுக்கு வெளிநாடுகள் வந்துவிட்டன. எமது போராட்டங்களின் வீரியம் குறைந்து இப்போது உலகில் மறக்கப்பட்ட இனமாக தமிழினம் மாறிக் கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் இருந்தவரை தமிழினத்தைப் பற்றிய செய்தி உலகெங்கும் எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. உலகில் எத்தனையோ சபிக்கப்பட்ட இனங்கள் உள்ளன. அத்தனையதோர் இனக்குழுமமாகத் தமிழினம் மாறி வருகின்றது.
இதற்கு நாமே பொறுப்பாளியாகி விடப் போகிறோமா?

எம் மீது அவலங்களைத் திணித்த எமது உறவுகளைப் பிரித்த எமது வளங்களை அழித்த கொடியவர்களைக் கூண்டில் ஏற்றும் சந்தர்ப்பத்தை இழந்து போய் நிற்கிறோம். இப்போது மட்டும் எல்லாம் முடிந்து விடவில்லை. போர்க்குற்றங்களுக்காக மகிந்தவைக் கூண்டிலேற்றும் போராட்டங்களை எப்படி முன்னெடுக்கலாம் என்று பார்க்க வேண்டும்.

இப்போதும் எமக்காக ஆதரவு தரும் நாடுகள் என்று கருதாவிட்டாலும் எமக்காக வருத்தப்படும் நாடுகளின் இராஜதந்தர உறவுகளைப் பலப்படுத்தி அவர்களின் ஆதரவுகளினூடாக இதனைச் சாதிக்க முனையலாம்.

மகிந்தவையும் அவரது அரசையும் சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலைகளின் அரசாகப் பிரகடனம் செய்வதற்கு- வலுவான சாட்சியங்களை முன்வைக்க வேண்டும். அதற்கு இன்று பல சர்வதேச ஊடகங்ககள் எமக்கு நன்கு துணை புரிகின்றன. சிங்களப் பேரினவாத அரசை அம்பலப்படுத்தி- அசிங்கமானதொரு அரசாக சர்வதேசத்தின் கண்களில் தெரிய வைப்பது முக்கியமானது.
மகிந்தவின் அரசு வன்னியில் எமது உறவுகளைக் கொன்று போட்ட சாட்சியங்கள் இந்த முயற்ச்சிக்கு சான்றாக கிடத்துள்ளன.

இந்தச் சாட்சிகள் வெளியாகி பல வாரங்களா விட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் உண்மையான மனிதப் படுகொலைகளை மறைக்கும் நடவடிக்கைகளிலும் சிங்கள அரசு தீவிரமாக செயல்படத்தொடங்கியுள்ளது. ஆனால் புலம்பெயர் தமிழர்கள் இதுவரை எதுவுமே செய்யவில்லை. போராட்டங்கள் நடத்தவில்லை. அப்படியானால் சிங்கள அரசின் இவ்வாறான செயற்பாடுகளை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் அங்கீகரிக்கப் போகிறதா?

வன்னியில் இனப்படுகொலைகளுக்குக் காரணமான ஒரு படையதிகாரியை ஜேர்மனியில் இராஜதந்திரப் பதவிக்கு நியமித்ததை எதிர்க்கும் வகையில் என்ன செய்யலாம்?

இனப்படுகொலைகளைச் செய்த சிறீலங்காவை இராஜதந்திரியாக எப்படி உலக அரங்கில் நிறுத்தலாம் என்று முயற்ச்சிகளை கூடி முடிவெடுத்து மனித உரிமை அமைப்புக்களைக் கோரலாம்.

இன்று விரும்பியோ விரும்பாமலோ இந்த உலகம் சிங்களம் சொல்லிவந்த பொய்களை உணரத்தொடங்கியுள்ளன. காரணம் சிங்கள பேரினவாத அரசு மீதான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தான்.

தமிழ்மக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்த பல இராயதந்திரிகளை இனங்காட்டும் பணியை இன்று சர்வதேசம் செய்யத்தொடங்கியுள்ளது இன்று சிங்களத்துக்கு எதிரான பிரசாரங்கள் சிங்களத்தின் இராணுவ வெற்றிக்குப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதோடு அது போர்காலத்தில் மேற்கொண்ட தமிழினப்படுகொலைலைகளையும். வதை முகங்களுக்குள் வைத்து கொடுமை புரியும் மனிதாபிமானமற்ற செயல்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இதை தமிழ்மக்கள் சரியான திட்டமிடல்கள் மூலம் கையில் எடுத்து புலத்தில் செயற்பட்டால் அவலங்களைக் கொடுத்தவன் முகத்தில் கரியைப் பூசும் நல்ல வாய்ப்பாகவும் அமையும். இது சர்வதேச கவனத்தையும் ஈர்க்கும்.

மேலும் வன்னிப் படுகொலைச் சூத்திரதாரிகளை வெளிநாடுகளில் தூதரகப் பணி இராஜதந்திர செயற்பாடு என்ற பெயரில் கௌரவப்படுத்தி- அவர்களின் படுகொலைப் பணிகளுக்குப் பரிசு கொடுக்க முனையும் இலங்கை அரசின் முகத்தில் அறைந்தது போலவும் இருக்கும். அதுமட்டுன்றி தொடர்ச்சியாக இந்தப் படையதிகாரிகளை மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப நினைக்கும் இலங்கை அரசுக்கு மரண அடியாகவும் இருக்கும்.

ஒரு நாடு இதுவிடையத்தில் அதிக கவனம் செலுத்தினால் ஏனைய நாடுகளும் அப்படிச் செய்யவே முயற்சிக்கும். இதற்க்கு அண்மைக்கால சம்பவங்கள் சில சாட்சியாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இப்படி அரசியல் ரீதியாக இராஜதந்திர ரீதியாக எமது பலத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

எமது பலம் வெறும் ஆயுதப்போராட்டத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதல்ல- அதற்கும் அப்பாற்பட்டதென்ற உண்மையை புரிய வைக்க வேண்டும். சாத்தியமான வழிகளினூடாகப் போராட்டத்தை நகர்த்தி உரிமைகளைப் பெறுவதே புத்திசாலித்தனமானது. அதைவிட்டு விட்டு சாத்தியமற்ற வழிகள் மீது நம்பிக்கை வைப்பதும், எம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதும் சேறு பூசிக் கொண்டிருப்பதும் தமிழினத்துக்கு விடிவைத் தரப்போவதில்லை. என்பதை உணர்ந்து உரிமைப்போருக்காய் உழைப்போம். வாரீர்.

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*