TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழம் – விடுதலைக்கான இறுதிக் கணக்கீடுகள் – பகுதி 02

Eela ஆரம்பம் முதலே இந்திய அணுகுமுறை என்பது ஒரு பிராந்திய வல்லாண்மை அணுகுமுறை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. தனது பிராந்திய நாடுகளின் அமைதியின்மையை அவர்களை பணிய வைக்க பயன்படுத்தி கொள்வது அவ்வளவுதான்.
எனவே இலங்கையில் அமைதியின்மை எப்போதுமே தொடரவேண்டும், இன ஒடுக்குமுறைதொடர வேண்டும் என்பது இலங்கை மீதான இந்திய தலையீட்டை அதிகப்படுத்திக்கொண்டே செல்ல அவசியமானது. இதனால்தான் படையெடுத்து சென்று போட்டு வந்த ராஜீவ் – ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு – கிழக்கு இணைப்பைக்கூட 22 ஆண்டுகளாக இந்தியா செய்யவில்லை.

வன்னி மக்களை மீளமைப்பது குறித்து இந்தியா பேசுவது அதன் உதடுகளோடு சம்பந்தப்பட்ட விடயம்தான். அது வணங்காமண் பொருட்களைக் கூட மக்களை சென்றடையச் செய்ய வைக்கவில்லை. சிங்கள அரசின் கொடுமைகள் தொடர்ந்தால்தான் அதன்மீதான தலையீட்டிற்கு அது வசதியாக இருக்கும் என்பது இந்தியாவிற்கு தெரியும்.

இந்நிலையில் இந்திய ஆதரவுடன் ஈழம் என்பது அரசியலற்ற அணுமுறை, ஈழநலனும், இந்திய நலனும் சந்திப்பதான ஒரு புள்ளி இப்போதைக்கு தெரிகிறதா? அப்படி ஒரு புள்ளி வரலாம், வராமலும் போகலாம். இப்படியே சில பல பத்தாண்டுகள் செல்லலாம். ஆருடத்தை நம்பி எந்த விடுதலையும் இருக்க முடியாது.

எனவே இப்படியரு புள்ளியை சாத்தியப்படுத்தி கொண்டு வருவதுதான் நமது வேலையாக இருக்கமுடியுமே தவிர, அதற்கான காத்திருப்பு அல்ல. அதே நேரம் இந்தியாவின் ஏற்பு இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை ஈழ ஏற்பு என்பது 2 நிலைமைகளில் ஏற்படலாம்.

1. அதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குதல்களிலிருந்து வரவேண்டும்.

2. வேறு அரங்குகளில் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து வரவேண்டும்.

இந்தியா குறித்த விடயத்தில் மேற்சொன்னவற்றை எப்படிச் செய்வது என்பது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எதிர்பார்த்து ஈழம் என்பது இந்தியா ஈழ இயக்கங்களை பயன்படுத்திக் கொள்வதாக இருக்க முடியுமே தவிர, இந்தியாவைப் பயன்படுத்திக்கொள்வதாக இருக்காது. இது கடந்தகால அனுபவமும் கூட.

ஈழமும் தமிழகமும்

தமிழகத்தில் 80களில் பெரும் எழுச்சியாக இருந்த ஈழ ஆதரவு தற்போது தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஈழ ஆதரவாளர்கள் மட்டுமே பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தரங்கு, தீக்குளிப்புகள் வரை நடத்தினர். இச்செயல்பாடுகளுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வித இணைப்பும் ஏற்படவில்லை.

தலைமுறை இடைவெளியால் தமிழக இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈழம் பற்றிய அறியாமையை இது நீக்கிவிடவில்லை. தமிழக அரசியல்களத்தில் ஈழம் முதன்மை இடத்தை பெற்றிருந்த போதிலும் பெரும்பான்மை மக்களிடம் அது முதன்மை இடத்தில் இல்லை. இங்கு செய்திகளை சேர்ப்பதில் தொலைக்காட்சி ஊடகமே பிரதானமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியுமே படுகொலைகளையும், தீக்குளிப்புகளையும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடவில்லை.

ஓரளவு செய்த மக்கள் தொலைக்காட்சி அனைத்து மக்களையும் சென்றடையும் நிலையில் இல்லை. முத்துக்குமார் மரணத்தை ஒட்டி அனைத்துக்கட்சிகளுக்கு எதிராக எழுந்த மாணவர் தன்னெழுச்சியை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தந்திரமாக அணைத்துவிட்டனர். இந்தியா அசைந்து கொடுக்காமல் அல்லது அதை அசைத்துப்பார்க்காமல் ஈழவிடுதலை சாத்தியமில்லை.

அதை உள்ளிருந்து அசைத்துப்பார்க்கும் ஆற்றல் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த நாட்களில் இருந்த அருமையான வாய்ப்புகளையெல்லாம் பதவி சுகத்திற்காக, தேர்தலுக்காக அரசியல் வாதிகள் பாழ்படுத்தினார்கள். இவர்களுக்கு வெளியே உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தமிழகத்தின் ஒரு சதவீத மக்களைத் திரட்டினாலே போதும்.

அதன் தொடர் சங்கிலி விளைவால் இந்தியா அசைக்கப்படமுடியும். அதற்கு இவ்வாற்றல்கள் முழுமையாக ஒன்றிணைவதும் மக்களை நோக்கிய வேலைத்திட்டங்களை அமைப்பதும் இல்லாமல் சாத்தியமில்லை.

ஈழமும், நாடுகடந்த தமிழீழ அரசும்

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு அமைப்பு வடிவம். இதன் குரலை ஈழமக்களின் ஒருமித்த குரலாக உலகம் ஏற்கமுடியும். எனினும் ஈழமக்களின் ஒருமித்த குரலாக இந்த அரசு என்ன செய்யப்போகிறது? என்பதைப்பொறுத்தே இது எத்தகைய அரசாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமான முக்கியத்துவத்தை விடுதலைக்கான அரசியல் பாதை என்ற உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த உள்ளடக்கம் இல்லை எனில் இது ஈழ விடுதலைக்கான அரசாக இல்லாமல் விண்ணப்பத்திற்கான அரசாக நீர்த்துப்போய்விடும். இதற்கான அபாயம் உண்டு என்பதை ஏற்க நாம் தயங்கக்கூடாது.

விடுதலைப் போராட்டத் தலைமை என்பது இயக்கத்தின் தலைமையாகவே எப்போதும் இருக்க வேண்டும். இவ்வரசு இயக்க தலைமைக்கு கட்டுப்பட்டே இயங்க வேண்டும். இயக்கதின் கீழ் பன்னாட்டு அரசு உறவுகளுக்கான உலகமக்களிடையேயான உறவுகளுக்கான ஒரு பிரிவாகவே இது செயல்பட வேண்டும். இதன் செயல்பாடுகளுக்கு அரசியல் ஆயுதப்போராட்டங்களுக்கான தேவையை இடையூறாகக் கருதக்கூடாது. இத்தகைய ஒரு அரசு இல்லாமல்கூட விடுதலையை அடைய முடியும்.

ஆனால் விடுதலைக்கான இயக்கம் இல்லாமல் ஒரு விடுதலையை அடைய முடியாது. இவ்வரசு விடுதலைப் புலிகளின் இடத்திற்கான தொடர்ச்சியாய் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இது பன்னாட்டு அரசுகளின் பணியவைப்புக்கு தொடர்ந்து உட்படுத்தப்படும் வாய்ப்புகளைக்கொண்டது. இதன் சட்ட வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளுக்கும் அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவு முரண்பட்டுப்போகும் வாய்ப்பும் உண்டு.

இயக்கமும் தலைமையும் பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் அரசியல் பாதை ஒன்றை உறுதிபடுத்தாத நிலையில் தனிஈழத்திற்கான உலக ஆதரவு இல்லாத நிலையில் இவ்வரசு வடிவத்தை முதன்மைப் படுத்துவதன் மூலம் பெரும் வெற்றிகரமான நகர்வுகளை ஏற்படுத்த முடியாது. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்தை பயன்படுத்திக்கொள்ள அதன் முழுபரிமாணங்களையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.

தீர்வுக்கான அணுகுமுறைகள்

இதுவரை பார்த்த தலைப்புகளின் தொகுப்பாக தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வரையறுக்கலாம்.

1. ஆயுதப்போராட்ட பின்னடைவின் இன்னொரு எதிர்நிலையாக உலக அரசுகளின் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் காந்திய அணுகுமுறை வெற்றியளிக்காது.

2. ஈழவிடுதலையை இந்தியா உள்ளிட்ட உலக அரசுகள் ஏற்கும் சூழலை எதிர்பார்ப்பது என்பது அந்த சூழலுக்கான சாத்தியமின்மையும் உண்டு என்ற எதார்த்தத்தை பார்க்க மறுப்பதாகும். எனவே அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்கான திட்டமிடலே விடுதலைக்கான அணுகுமுறையாக இருக்கமுடியும்.

3. தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையான பிரச்சனைக்குரிய தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனத்துடன் சேர்வது குறித்த அணுகுமுறை ஈழ நிலைமைகளுக்கு பொருந்துவது குறித்து விரிவான ஆய்வை உடன் மேற்கொள்ளவேண்டும்.

4. முதலாளித்துவ இயக்குவிசை கோட்பாட்டிற்கு இணைவாக 3வது வழி முறையை ஒரு கருவியாக பயன்படுத்த இயலும் வாய்ப்பை கண்டறிய வேண்டும்.

5. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தீர்வு அல்ல. தீர்விற்கான பாதையும் அல்ல. அது விடுதலை இயக்கத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டிய ஓர் அமைப்பு. இதன் பங்கு பாத்திரம் குறித்த மிகைப்படுத்தலும் எதிர்பார்ப்பும் கூடாது. இதன் மூலமான இராஜதந்திர நகர்வுகள் என்பதெல்லாம் உலகம் முழுவதுமான தமிழர்களின் அரசியல் போராட்ட வீச்சை சார்ந்த விடயம் தான். எனவே நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் என்பது அமைப்பு – தலைமை- அரசியல் பாதை- அரசியல் போராட்ட வீச்சு – இவற்றிற்கெல்லாம் அடுத்த படியானதாகவே இருக்கு முடியும்.

6. ஈழத்தில் ஆயுதப்போராட்டம் பழைய பொருளில் தொடரமுடியாது. சர்வதேச அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்யும் பொருளிலேயே அது தொடர முடியும். ஆயுதப்போராட்டத்திற்கான சமூக கருவை முடிந்தவரை காப்பாற்றி எப்போது அவசியப்படுகிறதோ அப்போது பயன்படுத்திக்கொள்ளும் அணுகுமுறைகளைக் கையாளவேண்டும்.

ஒரு விடுதலைப்பாதை

இத்தகைய அணுகுமுறைகளிலிருந்து ஒரு பாதையை வரையலாம். ஒரு பாதையை வரைய நாம் இருக்குமிடத்திலிருந்து இலக்கை நோக்கியும் செல்லலாம். நமது இலக்கிலிருந்து இருக்குமிடம் நோக்கி பின்னோக்கியும் வரலாம். இந்த இரண்டில் 2வது அணுகுமுறையே எளிதானதும் விரைவானதும் தெளிவானதுமான அணுகுமுறை எப்படி எனில் குழந்தைகள் புத்தகங்களில் ஒரு விளையாட்டு இருக்கும்.

ஒருபக்கம் ஆடு இன்னொரு பக்கம் புல்லுகட்டு, ஆடு புல்லுகட்டை அடையும் வழியை கண்டுபிடி பார்ப்போம் என போட்டிருப்பார்கள். ஆடு, புல்லுகட்டை அடைய அநேக வழிகளை வைத்து ஒன்றைத் தவிர மற்றவற்றையெல்லாம் அடைத்துப்போட்டிருப்பார்கள். இவ்வழியை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிவதற்கான முறை ஆட்டிலிருந்து புல்லைநோக்கி செல்வதை விட புல்லிலிருந்து ஆட்டை நோக்கி வருவதே.

இதில் தேவையற்ற தவறான பாதை தெரிவுகள் தவிர்க்கப்பட்டுவிடும். இதைப்போல ஈழவிடுதலைக்கான பாதையை இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி வரைவதே எளிதானதும் தெளிவானதுமாக இருக்கும். இலக்கை (ஈழத்தை) அடையும் உச்சக்கட்ட நிகழ்வு சிங்களத்தை வீழ்த்தியோ அதன் விட்டுக்கொடுத்தலிலோ ஏற்படுவது அல்ல. சர்வதேச தலையீட்டின் மூலமே அந்த உச்சகட்ட நிகழ்வு ஏற்பட முடியும்.

சரி அந்த சர்வதேச தலையீடு எப்படி இருக்க முடியும்? நேரடியாக ஈழத்தை அங்கீகரிப்பதாக இருக்கலாம் அல்லது இன்றைய உலகப்போக்கான ஐ.நா.சரத்துகளின் படியான பொதுவாக்கெடுப்பை நடத்துவதாகவும் இருக்கலாம். இவை இரண்டுமே கோரிக்கை வைத்து போராடி உலகை ஏற்க வைக்காமல் நடைபெறாது.

இவ்விரண்டில் ஈழத்தை அங்கீகரிக்க கோரி வெற்றியடைவதைவிட பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி வெற்றியடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. மேலும் நாம் ஏற்கனவே ஈழத்தை சர்வதேசம் அங்கீகரிக்க கோரி போராடி வருகிறோம். தென் ஆபிரிக்காவை தவிர்த்து ஒரு உலக நாட்டினால்கூட கொள்கையளவில் கூட ஈழத்தை ஏற்க வைக்க முடியவில்லை. ஏற்பதில் நாடுகளுக்கிடையேயும் பல்வேறு இராஜதந்திர சிரமங்கள் உள்ளது.

இத்தகைய சிரமங்கள் பொதுவாக்கெடுப்பை ஏற்பதில் மிக்குறைவு.ஆக இலக்கை அடைய பொதுவாக்கெடுப்பிற்கான சர்வதேச தலையீட்டை கோருவதே சாத்தியமான தேர்வாக உள்ளது. உலக தமிழர்களும் உலக சனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் உரத்துக்கோராமல் சர்வதேசம் இதை ஏற்க முன்வராது. எனவே இதற்கு பொதுவாக்கெடுப்பிற்கான உலகளாவிய கோரிக்கை இயக்கம் ஒன்று அவசியமாகிறது. இவ்வுலகளாவிய இயக்கத்திற்கு உலகத்தமிழர் அமைப்புகள், சனநாயக அமைப்புகள் இவற்றை அங்கத்தினர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு அரசியல் முன்னனி அவசியமாகிறது.

இதற்கு விடுதலைப் புலிகளின் உறுதியான இராணுவத்தலைமை போன்ற அரசியல் தலைமை அவசியமானது. இத்தகைய தலைமை உருவாக இப்பணிகளுக்கான உறுதியான முன்னெடுப்பு அவசியமாகிறது. இதுவே இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி பின்னோக்கி வரையும் பாதை.அடுத்து இந்தியாவைப் பொறுத்தவரை பொதுவாக்கெடுப்பை எதிர்க்குமேயானால் உலகிலும் தமிழக மக்களிடத்திலும் அது சனநாயகத்தின் எதிரியாக அம்பலப்பட்டு போகும். இந்தியாவின் இவ்வெதிர்ப்பை உலக அரங்கில் அதன் வீட்டோ பவர் முயற்சியை பாதிக்கும்படி செய்துவிட்டால், அது பொதுவாக்கெடுப்பு எதிர்ப்பை கைவிடும்படி செய்யமுடியும்.

ஏனெனில் இந்தியாவிற்கு வீட்டோ பவர் கனவை விட, பொதுவாக்கெடுப்பை மறுப்பது விட்டுக்கொடுக்கமுடியாத நலன் அல்ல.மேலும் தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையை அறிவித்தல் செய்து முன்னணி நாடு ஒன்று அல்லது சிவற்றின் மூலம் சர்வதேச ஆதரவை பெற முடியுமானால், அதை பொதுவாக்கெடுப்பிற்கான ஆதரவாக பெருக்குவோமேயானால் விடுதலை மிக நெருக்கத்தில் இருக்கும்.இறுதியாக, இதுவரை இக்கட்டுரையில் சொல்லப்படாத ஓர் முக்கிய கோட்பாடு ஒன்று உள்ளது.

அதையும் சொல்லி விடுவதே இக்கட்டுரையின் பொருளை முழுமைப்படுத்துவதாக அமையும். வலியது வெல்லும் என்பதே அக்கோட்பாடு. வலியது வெல்லும் என்பது மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் இருக்க கூடாது. இது மனிதரல்லாத உயிர்களுக்கிடையேயும் சடப்பொருள்களுக்கிடையேயும் இருந்து வருவது. விலங்குகளில் எதுவலியதோ அதுவே வெல்லும். சடப்பொருள்களில் எது வலியதோ அதுவே ஆதிக்கம் செய்யும். சூரிய மண்டலத்திற்குள் சூரியனே ஆதிக்க சக்தி. காட்டுக்குள் வலிய விலங்குகளே ஆதிக்க சக்தி. ஒரு புறம் மனித நேயம், மனித உரிமை, மனித சமத்துவம் இவையெல்லாம் பேசப்பட்டாலும் நடைமுறையில் வலியது வெல்லும் என்பதே மனித உறவுகளிலும் வியாபித்து இருக்கிறது.

இலங்கையில் சிங்களர்கள் வலியது வெல்லும் கோட்பாட்டையே ஆரம்பம் முதல் கையிலெடுத்துள்ளனர். தமிழர்கள் மனித உரிமைக் கோட்பாடுகளையே ஆரம்பம் முதல் கையிலெடுத்து போராடுகின்றனர். இருவருமே மனித உரிமைக் கோட்பாடுகளை கையிலெடுத்திருந்தால் பரஸ்பர புரிதலிலேயே ஏதோ ஒரு தீர்வு எட்டபட்டு அது அரைநூற்றாண்டு கடத்திருக்கும். இருவருமே வலியது வெல்லும் வெல்லும் கோட்பாட்டை கையில் எடுத்திருந்தால் சிங்களப் பகுதியிலும் 2 இலட்சம் பிணம் விழுந்து ஈழத்திற்கான சர்வதேச தலையீடு நடந்திருக்கலாம்.

அந்த 2 இலட்ச சிங்கள உயிர்களை காப்பாற்றியிருப்பது தமிழர்களின் மனித உரிமைக்கோட்பாடுதான். சிங்களத்தை விட சிறிய ஈழம் பதிலுக்கு சிங்களப் பகுதியிலும் தமக்கு ஏற்பட்டதைப்போன்ற இழப்பை ஏற்படுத்த முடியுமா எனில் முடியும்தான். ஒரு தேசிய இனத்தை அழிக்க அதைவிட பெரிய தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.மனித நேயமிக்க கோட்பாடுகளை துறந்துவிட்டால்.

ஹிரோஷிமா, நாகசாகியில் சுமார் 2 இலட்சம் மக்கள் கூட்டத்தை சொற்ப நிமிடங்களில் கொன்றொழிக்க அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது 4.5 நபர்களும் 2 விமானங்களும் தான். எனவே இதுவரை சிங்களப் பேரழிவு ஒன்று இல்லாதிருப்பது சிங்களத்தின் வலிமையால் இல்லை. தமிழர்கள் கடைப்பிடிக்கும் மனித நேயமிக்க கோட்பாடுகளால்தான் என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும்.

தமிழ் இனம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் பார்த்துவிட்ட இனம். எனவே மிருகங்களின் கோட்பாட்டை அவர்கள் தமது கோட்பாடாக ஏற்கமாட்டார்கள். இறுதிவரை மனித உரிமை கோட்பாடுகளாலேயே – சிங்களத்தை வீழ்த்துவது அல்ல – அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள்.

பிரபாகரன்

கருத்துக்கள், விவாதங்களுக்கு

[email protected]

நன்றி: ஈழமுரசு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*