TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தல….! தலைவா….! தலைவன்….! தலைவரே….!

2285_1அரசியல் இம்சைகளில் சிக்கிக்கொள்ளாத அஜித் ‘தல வழி தனி வழி’ என போய்க்கொண்டிருக்கிறார். மன்றம் இருந்தாதானே ‘வா தல… அரசியலுக்கு வா தல!’ என நச்சரிப்புகள் இருக்கும் என்பதால் மன்றத்தையே கலைத்துவிட்டார் அஜித்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு ‘தல’ என பெயர் வைக்க ஏற்பாடுகள் நடந்தபோது கூட… ‘தற்புகழ்ச்சிபோல் இருக்கும்!’ எனச் சொல்லி மறுத்துவிட்டார். ‘என் படம் பிடிச்சிருந்தா ரசிகர்கள் பார்ப்பாங்க! பிடிக்கலேன்னா நிராகரிப்பாங்க!’ என்கிற உண்மையை உணர்ந்து செயல்படுகிறார் அஜித்.

‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு மக்கள் அபிமானம் பெற்ற நடிகர் அஜித்’ என சோ சொன்னபோதும்கூட ‘ஸோ அண்ட் ஸோவே சொல்லியாசே’ என குதிக்காமல் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். நாளையே அஜித் அரசியலுக்கு வரலாம். அது அவர் உரிமை.

இத்தனைக்கும் அ.தி.மு.க தலைமையின் அபிமானத்திற்குரியவராக இருந்தும் அலட்டல் இல்லை. அவ்வப்போது ரசிகர்மன்ற மாநாடு என்கிற பெயரில் ‘அரசியல் ட்ரெய்லர்’ விட்டுப்பார்ப்பதில்லை.

தல… அரசியல் ட்ரெய்லர் விடுறதில்லைங்கிறதுக்காக ‘தலைவா’ விஜய் ‘ட்ரெய்லர்’ விடக்கூடாதா? தாராளமா!

‘நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் மனதிருப்தி கிடைக்குது. அரசியலுக்கும் எனது மக்கள் இயக்க நற்பணிகளுக்கும் சம்பந்தமில்லை’ என விஜய் சொன்னாலும் அவரின் ரசிகர் மன்ற புள்ளிகள் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் விதமாகவே நடந்துகொள்கிறார்கள்.

கலைஞர் ஆட்சியில் ஈரோட்டில் ரசிகர் மன்றம் சார்பில் விஜய் ஏற்பாடு செய்திருந்த விழாவை போலீஸார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். உடனே ’அம்மா’ பக்கம் சாய்ந்தார். இப்போது சென்னை மீனம்பாக்கத்தில் விஜய் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவை போலீஸார் அனுமதிக்க
மறுத்துவிட்டனர்.

பெரும் புகழும் செல்வாக்கும் உள்ள விஜய் அரசியல் ட்ரெய்லர் வெளியிடும்போது இப்படி நெருக்கடிகள் வரத்தான் செய்யும். அதை சமாளிக்க வேண்டும். சினிமாவிலேயே ஒருவர் வளர்ச்சிக்கு எதிராக இன்னொருவர் மறைமுகமாக செயல்படும்போது அரசியலில் ஒருவர் மற்றவரை வளரவிடாதபடி இடைஞ்சல்கள் செய்வார்கள்.

‘தலைவா… வா’ன்னா வந்திட முடியாது. தடைகளைத் தாண்டித்தான் வரமுடியும்.

’தலைவன்’ மேட்டருக்கு வருவோமா?

பதவி இல்லாமல் பத்து நிமிஷம்கூட அரசியல்வாதிகளால் சும்மா இருக்கமுடியாது. ஒப்பனை போட்ட பத்தாம் நாளே ‘ஒரு தலைவன்… உருவாகிறான்’னு கோஷம் போட்டா சும்மா இருப்பாங்களா?

சசிகலாவின் சகோதரி மகனும், ஜெஜெ டிவி. நிர்வாக இயக்குநருமாக இருந்த பாஸ்கரன் தன் பெயரை ‘பாஸ்’ என சுருக்கிக்கொண்டு ‘தலைவன்’ படத்தில் நடித்துள்ளார். ‘என் மானசீக தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்’ என ‘தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவரை ஓகே.

’தொழிலாளர்களை வாழவைக்க இறைவன் அனுப்பிய தலைவன் எங்க பாஸ்’ என தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் உரச… ‘ஒரு தலைவர் உருவாகிறார் என்பதற்கு இந்த அரங்கமே சாட்சி. பாஸ் எதற்காக சினிமாவிற்கு வந்தாரோ… அந்த நோக்கம்(அதாவது அரசியல் நோக்கமாம்) நிறைவேறட்டும்.. என அமீர் பற்ற வைத்துவிட 10 வருஷத்துக்கு பழைய வழக்கு ஒன்றில் பாஸ் கைதாகியிருக்கிறார்.

அடுத்து ’தலைவரே…!’

ஃபெப்சி தலைவர், இயக்குநர் சங்க செயலாளர் என பல பதவிகளில் அமீர் இருந்தாலும் அந்தப் பதவி நாற்காலிகளின் அடியில் அமீரின் படைப்புத்திறன் நசுங்கிக்கொண்டிருந்த வேளையில் அமீர் சுதாரித்துவிட்டார்.

ஆதாம்பாவா தயாரிப்பில் ‘கொள்ளைக்காரன்’ சந்திரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்டார் அமீர்.‘பருத்திவீரன்’ திரைப்படத்தில் கார்த்தியின் தெனாவட்டான நடிப்பு முழுக்க அமீரின் பாடிலாங்வேஜ்படி அமைந்தது.

அதே பாடிலாங்வேஜுடன் அமீர் ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ படத்தில் நடிக்கவிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த லோக்கல் அலப்பரை இளைஞர் ஒருவன் அரசியலில் உயரும் கதை. வரும் 18-ஆம் தேதி தேனியில் படப்பிடிப்பு துவங்குகிறது.

-இரா.த.சக்திவேல்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*