TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது!

Uravugal11 செப்ரம்பருக்குப் பின்னரான ‘பயங்கரவாதம்’ குறித்த அமெரிக்கக் கோட்பாடு தமிழீழ மக்களின் தலைவிதியை மாற்றி அமைத்துள்ளது. விடுதலைப் புலிகள்மீது பல்வேறு அழுத்தங்களையும், தடைகளையும் ஏற்படுத்தி, சிறிலங்கா அரசின் யுத்தகள வெற்றிக்குத் துணை நின்றதால், தமிழீழ மக்களுக்கு இருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கவசமும் தகர்த்து எறியப்பட்டுள்ளது.

சிங்கள தேசத்தின் இறையாண்மை பற்றிய கவலையுடன், விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு முண்டு கொடுத்த அத்தனை சக்திகளும் தொடரும் சிங்கள இனவெறிப் பழிவாங்கல் நடவடிக்கைகளினால் விரக்தி அடைந்துள்ளன. சிங்கள தேசத்தின் தமிழின அழிப்பு யுத்தத்திற்கு இறுதிவரை துணைநின்ற இந்தியா, தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் சிங்கள இனவாத கோர முகத்திற்குத் தங்க முலாம் பூசிக் காப்பாற்ற முடியாமல் நெளிகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டம் மேற்குலக நாடுகளில் மனச்சாட்சி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள தேசத்தின் இனவெறிக் கொள்கையை மீறி, தமிழர்களுக்கான நியாயங்களைத் தமது மென்முறை அணுகுமுறையால் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், சிங்கள ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பது தவிர்க்க முடியாதது என்று மேற்குலகம் முடிவு செய்துவிட்டது.

தற்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் நிலையிலுள்ள சிறிலங்கா அரசு தனது இனவாதப் போக்கில் தொடர்ந்து செல்ல முற்பட்டால், இன்னமும் பல தடைகள் இந்த நாடுகளால் விதிக்கப்படலாம். பிரித்தானியா, கனடா நாடுகளைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகள் சிறிலங்கா அமைச்சர்கள், படையதிகாரிகள் மீது பயண அனுமதிக் கட்டுப்பாட்டை இறுக்கி வருகின்றன.

Uravugal1

மேற்குலகின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடப் போவதில்லை என்று மகிந்த அரச சகாக்கள் வாய்ச் சவடால் விட்டாலும், சீனா, பாக்கிஸ்தான், ஈரான் என்ற புதிய நட்பு நாடுகளுடன் இணைந்து அதிக தூரம் பயணிக்க முடியாது என்ற யதார்த்தம் புரியாதவர்கள் அல்ல. மேற்குலகைப் பகைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு தன் எதிரிகளுடன் மேலும் இறுக்கமடைவதை இந்தியாவும் விரும்பப் போவதில்லை.

விடுதலைப் புலிகளைக் களமுனையில் தோற்கடித்த சிங்கள அரசு, அமெரிக்க பாணியில் கே.பி.யைக் கடத்தியிருந்தாலும், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் பலமும் அணிதிரளல்களும் சிங்கள தேசத்திற்கு நெருங்க முடியாத அச்சுறுத்தலாகவே உள்ளது. புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அந்த ஒருமித்த பலத்தைச் சிதறடிக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டாலும், புலம்பெயர் தமிழர்களது பலம் தாயக தேசத்து மக்களுக்கா ஒருமுகப் பட்டே நிற்பது சிங்கள தேசத்திற்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

‘விடுதலைப் புலிகளின் பலம் புலம்பெயர் தேசங்களில் சிதைவுறாமல் அப்படியே உள்ளது’ என்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலேசகர் எம்.கே. நாராயணனின் கவலையும் அதனை உறுதிப்படுத்துகின்றது. புலம்பெயர் தமிழர்களின் உறுதி தளராத போராட்டமும், புலம்பெயர் தேச அரசுகளின் தமிழீழ மக்கள் பற்றிய அக்கறையும் வளர்ந்தே செல்வதால், மகிந்த ராஜபக்ஷவின் பார்வை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை குறி வைக்கத் தொடங்கியுள்ளது.

புலம்பெயர் தேசத்துத் தமிழர்களது தொடர் போராட்டங்கள் மேற்குலகில் மனமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், மாற்றுத் திட்டம் ஒன்றின் மூலம் தமிழீழ மக்களின் தோல்வியை நிரந்தரமாக்கும் சதி முயற்சியில் ராஜபக்ஷ சகோதரர்கள் முயற்சி செய்வது தெளிவாகி வருகின்றது. நோர்வே மூலமாக விடுதலைப் புலிகளைப் பேச்சுவார்த்தை சதிவலைக்குள் வீழ்த்தியது போலவே, இந்தியா மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்தும் முயற்சியில் சிங்கள தேசம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தப் பொறியில் வீழ்ந்துவிடாமல் இருப்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழீழ மக்களுக்கும் அந்த மண்ணுக்கும் செய்யும் மிகப் பெரிய தொண்டாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிங்கள தேசத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தி அபிப்பிராயங்கள் பெற்றிருக்க வேண்டும்.

அவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களும், இணைந்த முடிவும் எடுக்கப்படாவிட்டால் தெரிந்தே தமிழீழ மக்களைப் புதைகுழிக்கு அனுப்பும் பாவத்தின் சம்பளத்தை அறுவடை செய்யவேண்டிய நிலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்படும்.சிங்கள தேசத்தின் கைகளுக்கு எட்டாத் தொலைவில் தம்மை நிலைநிறுத்திக்கொண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணிவகுத்து நின்ற புலம்பெயர் தமிழர்களின் பலத்தையும் உறுதியையும் தமிழ்த் தேசிகக் கூட்டமைப்பு உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத சக்திகளாக இருந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் இணைந்து, அவர்களது பலத்துடன் களத்தில் நிற்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கான ஒரே தேர்வு. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலான தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற தமிழீழ மக்களின் அங்கீகாரம் பெற்ற கோட்பாடுடன் விடுதலைப் போராட்டத்தை புலம் பெயர் தேசங்களுக்கூடாக முன் நகர்த்திச் செல்லும் இன்றைய காலகட்டத்தில், பிரிக்க முடியாத இலங்கைக்குள் வரையறை செய்யப்பட்ட அதிகாரங்களுக்காகப் பேச முற்படுவது இதுவரை களப்பலியான மாவீரர்களுக்கும், மக்களுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகவே புலம் பெயர் தமிழர்களால் நோக்கப்படுகின்றது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டமும், சமகாலத்தில் ‘தமிழீழத் தாயகத்திற்கான’ அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் வரையறை செய்யப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலைப்பாட்டில் மாற்றமோ, சமரசமோ செய்வதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ மக்களின் ஆணையைப் பெற்றேயாகவேண்டும். அதை விடுத்து, சுயநல அரசியலுக்காகவோ, அயலுறவு வரவிற்காகவோ தமிழீழ மக்களது ஆணையினை அடகு வைக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.

நன்றி்: ஈழநாடு

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*